என் தவறுகளை
மன்னிக்க முடியாதவர்களை
என் குறைகளை
ஏற்றுக்கொள்ள முடியாதவர்களை
என் கோபங்களை
பொறுத்துக்கொள்ள முடியாதவர்களை
எனக்கு செய்தவற்றுக்கு
பதிலாய் நன்றிக்கடனை எதிர்பார்ப்பவர்களை
என்னை இன்னொருத்தருக்காக
இலகுவாய்
விட்டுவிடுபவர்களை
என்னை அதிவிரைவாக மறந்து விடுபவர்களை
என் அன்பை அத்தனை முக்கியமான
ஒன்றாகக் கருதாதவர்களை
சிறியதொரு மனக்கசப்பில்
மொத்தமாய் என்னை
மறுதலித்தவர்களை
இன்னும்
என் வாழ்நாள் முழுவதும்
தவிர்க்க முடியாமலும்
மறக்க முடியாமலும்
தள்ளாடிக்கொண்டிருப்பது
கடனாயென்றாலும் வேண்டி நிற்பது
எப்போதும்
எனக்கு உங்களால்
இலவசமாய்
தரமுடியாமல் போன
அன்பினைத்தான்
உங்கள் சாத்தப்பட்ட
கதவுக்குப் பின்னாலிருந்து
இன்னும் கேட்கும்
குரல் என் ஆன்மாவின்
பிரார்த்தனையேதான்
காது கொடுங்கள்…
****
வெகு விரைவில்
விடைபெறவே
வருகிறார்கள்
குழந்தையைப் போல் பிடிவாதமாய்
வழியனுப்ப மறுத்து கைககளை
விரித்து பாதையை மறித்து
நிற்கிறாய்
எத்தனை சங்கடமானது
உன் முட்டாள்தனம்
தீராத நேசங்களையெல்லாம்
தீர்த்துவிட முடியாமல்
நீ தடுமாறுவது
எவ்வளவு அபத்தமானது
நிறையவே சலிப்பூட்டுகின்றன
நிறையவே களைப்பூட்டுகின்றன
உன் புரியாமைகளும்
உன் அறியாமைகளும்
உடைந்து நொறுங்கி
அவர்கள் முன்னால்
குவிந்து கிடக்கும்
உன் சுயங்களை
ஒன்று சேர்த்து
உன்னிடமே ஒப்புவிக்க முடியாதவர்களை
வழியனுப்பிவிடேன்!
****
தனக்கு அதிஷ்டம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையில்
ஒவ்வொரு படிகளாய் முன்னேறிய
பின்னரும்
ஒவ்வோரு கதவுகளாய் தட்டிய
பின்னரும்
எல்லா முயற்சிக்குப் பின்னரும்
ஏமாற்றத்துடன்
வெறுங்கையுடன் திரும்பும்
ஒருவன்
தன் பிரார்த்தனைகளுக்கு செவிமடுக்காத
இறைனிடம் கண்ணீருடன்
விவாதிடுகிறான்
ஆற்றாமையில்
இனியாவது அதிர்ஷ்டம்
கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையில்
பெயரை மாற்றிப் பார்க்கிறான்
தானிருக்கும் இடத்திலிருந்து வெளியேறுகிறான்
தன் பிரார்த்தனை முறைகளை
நேர்ச்சை முறைகளை மாற்றிப் பார்க்கிறான்
ஒரு குருட்டு நம்பிக்கையையாய்
அதிர்ஷ்டக் கற்களை தன் மோதிரத்தில் பதித்து அணிகிறான்
அதிர்ஷ்டத்தின் கடவுளைத் தேடியலைகிறான்
எதுவுமே கைகூடாதபோது
கடவுளே இல்லையென சலிப்புறுகிறான்
அதிர்ஷ்டமோ
அற்புதமோ எப்போதாவது
தன் வாழ்விலும் நடக்குமென்ற
நம்பிக்கையில் முயற்சிகளின்
வழிமுறைகளை மாற்றிக்கொள்கிறான்
இருந்தும்
அதிர்ஷ்டமென்பது
வழி தவறிய ஆட்டுக்குட்டியைப் போல்
யாருக்கு எப்போது கிடைக்குமென்ற
உத்தரவாதங்களில்லை
****
அழ வேண்டிய சமயத்தில்
அழாமலும்
புன்னகைக்க வேண்டிய சமயத்தில்
புன்னகைக்காமலும்
கூச்சலிட்டுக் கொண்டாட வேண்டிய
ஒன்றை அமைதியாகவும்
கடல் நுரையாய் காலைத் தழுவி
நகரும் ஒன்றினை
பெரும் ஆர்ப்பாட்டமாயும்
கொண்டாடிவிடுகிறேன்
பல நேரங்களில்
இரண்டிற்குமிடையிலுமாக
ஸ்தம்பித்துவிடுகிறேன்
எதற்காக அழுவது
எதற்காக சிரிப்பது
எதைக்கொண்டாடுவது
யாரை சேர்த்துக்கொள்வது
யாரைக் கைவிடுவது
போன்ற எதுவித ஆராய்தல்களுமில்லை
எனக்குள்
சட்டென சிலர் அப்பிக்கொள்வார்கள்
என் தனிமை குலைக்கப்படுகிறது
சடாரென இல்லாமலாகிவிடுவார்கள்
அதனாலென்ன
நானென் வழமைக்குத் திரும்பிவிடுவேன்
எதுவித வருத்தங்களுமில்லாமல்
ஆனாலும்
மறுபடியும்
அவர்கள் என்னைத் தேடி
வரும் நாளில்
ஒருவேளை
நானில்லாதிருந்தால்
கலங்காதிருக்கட்டும்!
********