
மனத்தடாகம்
ஆயிரமாயிரம் தாமரைகள்
என் மனத்தடாகத்தில் மலர்ந்தாலும்
ஒரேயொரு தாமைரைக்குத்தான்
அவ்வளவு வாசமும்
அவ்வளவு அவ்வளவு நேசமும்
கரையோரத்தில் தலையாட்டுபவைக்கு
தலை சாய்க்காமல்
முக்குளித்து நீந்தித் திரியும்
பைத்தியக்காரி நான்
ஆகையால்தான்
எப்போதும் நீ
நடுக்குளத்தில் மட்டுமே மலர்கிறாய்
என் பேரன்பே!
****
உடலெங்கும் காலுள்ள மழை
வறண்ட பிரபஞ்சமெங்கும்
மனிதர்களின் பாதச் சுவடுகள்
பறவைகளின் ரீங்காரம்
விலங்குகளின் விரக்திக் குரல் ஒரு பக்கம்
தாமரை பூத்த நடுக்கண்மாய்
கிரிக்கெட்டுக்கான மைதானமானது மறுபக்கம்
வெயிலில் மட்டுமே நனைந்த பூமி
புழுதியெழுப்பிக் கலைக்கிறது
மழையின் மௌனத்தை
மனமிறங்கி தரை வரக் காத்திருக்கிறது
உடலெங்கும் கால் முளைத்த மழை!
****
நீங்கா நினைவு
அதுதான் நமக்கிடையேயான பிணக்கங்களின்
ஆகக் கடைசியென்று தெரிந்திருந்தால்
நான் என்னுடைய கோபத்தை
வேரோடு புடுங்கி வீசியிருப்பேன்
நீயென்னவோ பட்டாம்பூச்சி
தன் இயல்பு நிலைக்குத்
திரும்புவது போல
சிறகசைத்துச் சென்றுவிட்டாய்
நான்தான் வெய்யிலிலும் மழையிலும் கிடக்கும்
அறுந்த செருப்பாய்
அங்கேயே கிடக்கிறேன்!
*****