
அதிகம் பயன்பட்டிராத
சாலையின் கூடவே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது
பாலமற்ற சிறு நதி
வற்றா நதியினைத் தாண்டிய நிலப்பரப்பின்
நடுவே நாளெல்லாம்
தனித்தே இருக்கிறது
பாதைகளற்ற பங்களா
பாழடைந்த பங்களாவை
தினமும் கடக்கையில்
காணக் கிடைக்கும் பெயர் தெரியாத காட்டுமலர்கள்
காட்டுமலர்களைத் தாண்டி
என்றாவது ஒருநாள் ஜன்னலில்
ஒரு முகத்தைக் காணும்
ஆர்வம் மங்கியபாடில்லை
தைரியம் பெற்ற மாலையில்
நீந்தி அடைந்த பேய் பங்களாவினை
எட்டிப்பார்க்கும் தைரியம்
இன்னமும் இல்லை
பயமா விருப்பமா ஆர்வமா
என்று குழம்பித் தவித்த
யாத்திரைகள் இன்றும்
தீரவில்லை
பைத்தியம் என்றார்கள்
பார்த்தவர்கள், கேட்டவர்கள்
பரவாயில்லை அப்படியே இருக்கிறேன்
ஆழ் உறக்கத்தில் இருக்கும் அவர்களுக்குப் புரியாது
என் இரவின் விடியல்
எதுவென்று!
யாருக்கும் தெரியாது
என் பகலுக்கான வெளிச்சத்தை அந்தகார ஜன்னலின் வழியேதான் பெறுகின்றேன் என்று..!
***
ஆளற்ற பிராகரத்தைக் கடக்கையில்
களுக்கென்ற சிரிப்பினில்
சிலையானேன் சில கணங்கள்
அதிரூப அழகி ஒருத்தியை
தூணில் சாய்ந்தவண்ணம் கண்டேன்
இனம்புரியாத மணமா
இவள் சொரூபமா
இந்த சூழ்நிலையா
எதுவென்று புரியாத
மயக்கத்தில் நான்
செண்பகமலர்களின் வாசனை தனக்கு விருப்பம் என இலை மூக்குத்தி மின்னக் கூறினாள்
என்னிடமா பேசுகிறாள் என வியக்கையில்
களுக்கென சிரிப்பலை
காணாமல் போனாள்
அலைந்து திரிந்து செண்பக புஷ்பங்களோடு மறுநாள் காத்திருந்தேன்
அவளைக் கண்ட அதே தூணில் சாய்ந்த வண்ணம்
வந்தாளில்லை
வெகுநேரமாகியும்
பெருமூச்சின் வெப்பம் தகிக்க சுற்றும் முற்றும் தேடினேன்
யாரும் இல்லாத பிரகாரத்தில்
பெயர் தெரியாத
யாரையோ தேடி
பூவோடு நிற்கிறேன்
தாளமுடியாத ஒரு கணத்தில் போதுமென முடிவெடுத்து
தூணின் பக்கமாய்
இருந்த சிலைக்கு பூவைச் சாட்டினேன்
சிலையின் மூக்குத்தி இலை போல
மூக்கு லேசாக காற்றை இழுப்பது போன்ற பிரமை
சட்டென அங்கிருந்து அகன்றேன்
நேற்று அந்த இடத்தில் சிலை இருந்ததா என்னும் குழப்பம்
இன்னும் தீரவில்லை.
*******