இணைய இதழ்இணைய இதழ் 72தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 19 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

கடுகின் பரிமாணம் உலகளவு!

முதல் முறை சந்திப்பில் கடுகு சார் கொடுத்த வேலையை முடித்துக் கொடுத்த பின்னர் ஒரு வாரம் கழித்து மறுபடி வந்து சந்திக்க அழைத்தார். போனேன். அடுத்து செய்ய வேண்டிய மற்றொரு வேலையைப் பற்றிப் பேசினார். கேட்டுக் கொண்டேன், செய்து தருவதாகச் சொல்லி பெற்றுக் கொண்டேன். கிளம்பும் சமயம் மெதுவாகக் கேட்டார். “அதுசரி… நான் கூப்ட்டு நீங்க இங்க வரதுக்கு ஒண்றை மணி நேரமாச்சே..? ஏன் அவ்வளவு டிலே..?”

“மவுண்ட் ரோடு வரைக்கும் நடந்து பஸ் பிடிச்சு, அடையார் டெர்மினஸ்ல எறங்கி, இங்க வரைக்கும் நடந்துவர அத்தனை நேரமாய்டுது சார்…”

“என்னது..? உங்ககிட்ட டூவீலர்கூடக் கிடையாதா..?“ என்று வியப்பாகப் பார்த்தவர், ஒரு கணம் தலையை அண்ணாந்து ஏதோ யோசித்தார். “நீங்க ஒண்ணு பண்ணுங்க. உங்க பேகைக் கீழ வைங்க. அடையார் மெயின் ரோட்ல ஒரு டூவீலர் சேல்ஸ் கம்பெனி இருக்கு. தெரியுமா..?”

“நல்லாவே தெரியும் சார். அதைத் தாண்டித்தானே வர்றேன்.”

“அங்க போய் எந்த டூவீலர் உங்களுக்குப் பிடிச்சிருக்கோ, அதோட ப்ரைஸ் கொட்டேஷன் வாங்கிட்டு வாங்க. நான் வாங்கித் தர்றேன்..”

பிரமிப்பில் ஒரு கணம் மூச்சு நின்று போனது எனக்கு. “சாஆஆர்… அதெல்லாம் ரொம்ப காஸ்ட் ஆகுமே. நான் சம்பாதிக்கற லட்சணத்துக்கு எந்தக் காலத்துலயும் வண்டில்லாம் வாங்க முடியாது சார்.”

“நான் வாங்கித் தர்றேன்னுதானே சொன்னேன். இலவசமாத் தரேன்னு நெனைச்சுட்டீங்களா..? கடனாத்தான் தரேன். அந்தக் கடனையும் நீங்க ஒட்டுமொத்தமாத் தீக்கணும்னு இல்லை. நீங்க சம்பாதிக்கறதுல மிச்சம் பிடிச்சுத் தாங்க. அந்தத் தொகை ஆயிரமோ, ஐநூறோ… நோ ப்ராப்ளம். அப்டியே கொஞ்சம் கொஞ்சமா கடனைத் திருப்பிடலாம் நீங்க.”

அப்போதும் மனம் சமாதானமாகவில்லை எனக்கு. அவர் பேச்சை முழுமையாக நம்பவும் முடியாத பிரமிப்பு. அத்துடனேயே போய் இருந்ததிலேயே விலை குறைவான, நிறைய மைலேஜ் தரக்கூடிய வண்டியாக எது இருக்கும் என்று ஆராய்ந்து டிவிஎஸ் எக்ஸெல் வண்டி ஒன்றுக்கான விலைப் பட்டியலை வாங்கி வந்தேன். இருபத்திரண்டாயிரம் ரூபாய் (அன்றைய விலை). வாங்கிப் பார்த்தவர் செக் ஒன்றை ஃபில்லப் செய்து கொடுத்தார். இருபத்தி மூன்றாயிரம் ரூபாய்!

“இதைக் கேஷாக்கி, வண்டியை புக் பண்ணிடுங்க. அடுத்த முறை வர்றப்ப புது வண்டியில வாங்க. ஆல் த பெஸ்ட்.” என்றார். ஏதோ கனவில் மிதப்பவன் போன்று உற்சாகத்துடன் கை குலுக்கிவிட்டு வெளியே வந்தேன்.

பேச்சுக்கு இல்லை… உண்மையாகவே அவர் சொன்னபடிதான் நடந்தது. எனக்கு வந்த வருமானத்தில் மிச்சம் பிடித்து ஆயிரம், இரண்டாயிரம், ஓவர்டைம் வேலை செய்து கிடைக்கிற உபரி வருமானத்தில் ஐநூறு, ஆயிரம் இப்படி ஏஏஏகப்பட்ட தவணைகளில்தான் பணத்தைக் கொடுத்துக் கடனை அடைத்தேன். என்னவொரு மகத்தான மனிதர்.

பா. ராகவன்

புதிய வாகனம் கைக்குக் கிடைத்தவுடனேயே அவர் வீட்டுக்கு ஓட்டிச் சென்று அவரிடமும், கமலாம்மாவிடமும் சாவியைக் கொடுத்து ஆசி பெற்ற பின்னர்தான் கோயிலுக்குச் சென்று வண்டிக்கு பூஜையே செய்தேன். அதன்பின் வேறு வண்டிகள் மாற்றிக் கொள்கிற வசதி வந்தாலும்கூடச் செய்யாமல் இன்றுவரை அதே வாகனத்தையேதான் பராமரித்து சவாரி செய்து கொண்டிருக்கிறேன். மானசீகமாக என் குருவானவர் என்னுடனிருக்கும் தெம்பைத் தந்துகொண்டிருக்கும் வாகனம் அது.

அதற்குப் பிறகு நிகழ்ந்ததுதான் அந்த மூன்றாவது சந்திப்பு. நகைச்சுவை எழுத்தின் சில நுட்பங்களை அவர் எனக்குப் போதித்தது. அது எனக்குப் பயன்பட்டது நான்கு ஆண்டுகளுக்குப் பிறகுதான். ஜீயே சாரிடமிருந்து விலகி, ‘கல்யாணமாலை’ என்றொரு மாத இதழில் வேலை பார்த்தேன் அடுத்த நான்காண்டுகள். என் வாழ்வில் நான் மிக வீணடித்த காலமாக நான் கருதுவது அந்த நான்காண்டுகளைத்தான். தேவையற்ற சில பிரச்சனைகளுக்குப் பிறகு அங்கிருந்து விலகி, கிழக்குப் பதிப்பகத்தில் வடிவமைப்பாளராக இணைந்தேன்.

கிழக்குப் பதிப்பகத்தில் நான் வேலை பார்த்தது சுமார் இரண்டாண்டுகள் இருக்கும். அங்கே சேர்ந்ததில் எனக்குக் கிடைத்த பல நன்மைகளில் பிரதானமான ஒன்று- பா.ரா. என்கிற பா.ராகவனின் அறிமுகம். அங்கே அப்போது எடிட்டராக இருந்தார் பாரா. இன்றெனக்கு உடன் பிறக்காத சகோதரராக விளங்கும் அவரை நான் கிழக்குப் பதிப்பகத்தில் சந்தித்தற்கும் ஒரு முன்கதை உண்டு.

முன்பு ஜீயே சாரிடம் வேலைக்கிருந்த சமயம், அவருடன் எனக்குப் பிணக்கொன்றும் இல்லாவிட்டாலும்கூட, அதிக வருமானம் தருகிற வேறு வேலைக்கு மாறலாம் என்கிற எண்ணம் தோன்றியிருந்தது. குடும்பச் சூழலும் அதற்கொரு காரணம். அப்படியான நேரத்தில் பாலா சார் (சுபா) எனக்கொரு தகவல் சொன்னார். “கிழக்குப் பதிப்பகத்துல வேலை காலியிருக்குன்னு கேள்விப்பட்டேன். நீங்க பாராவைப் போய்ப் பாருங்க. என் பேர் சொல்லி அறிமுகம் பண்ணிக்குங்க.” என்று சொல்லி, அட்ரஸ் தந்திருந்தார். 

போனேன். பாரா எழுதிய பாகிஸ்தானின் சரித்திரம் அப்போது எனக்கு மிகப் பிடித்தமான ஒரு புத்தகம். குமுதம், கல்கி என்று பத்திரிகைகளில் பணியாற்றியவர் என்பதை அறிந்திருந்தேன். அவரைக் கிழக்கு அலுவலகம் சென்று பார்த்தேன். (மைலாப்பூரில் என்று நினைவு). என்னை அறிமுகம் செய்து கொண்டு வேலை பற்றிக் கேட்டேன். “அதுக்கென்ன… எப்போ வேணா வேலைக்கு சேந்துக்கலாம் நீங்க. வெல்கம்” என்றார்.

“எவ்ளவு ஸார் ஸாலரி கிடைக்கும்..?”

“……………… கிடைக்கும்.”

அவர் குறிப்பிட்ட தொகையானது அப்போது நான் வாங்கிக் கொண்டிருந்த சம்பளத்தைக் காட்டிலும் ஆயிரம் ரூபாய் குறைவு. இதற்கெதற்கு வேலை மாற வேண்டும்? என்று மனம் நினைத்ததை வாய் மறைக்காமல் கொட்டிவிட்டது. (ஓட்ட வாய்டா முதலி உனக்கு என்று மணிவண்ணன் ‘அவ்வை சண்முகி’யில் புலம்புவாரே, எனக்கு முழுப் பொருத்தமான வசனம்).

பாரா என்னை ஏறயிறங்கப் பார்த்தார். “நோ ப்ராப்ளம் ஸார். ஆல் த பெஸ்ட்” என்றார். கை குலுக்கிவிட்டு வந்துவிட்டேன்.

அன்றைக்கு சேலையை மறுத்த, மன்னிக்க, வேலையை மறுத்த அதே கிழக்கில் இப்போது வேலைக்குச் சேர்ந்து முதல்நாள் அவரைப் பார்த்தபோது இந்தப் பழைய சம்பவம் மனதில் நிழலாட, புன்னகைத்தேன். நீண்ட நாட்களானதால் அவர் மறந்திருக்கக் கூடும், அல்லது பெருந்தன்மையாக காட்டிக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்… ஏதோ ஒன்று. வாழ்த்தி, நான் வேலை பார்க்க வேண்டிய வடிவமைப்புப் பிரிவுக்கு வழிநடத்தினார்.

அங்கே வேலையில் சேர்ந்து கொஞ்ச நாளிலேயே இன்றுவரை என்னுடன் நல்ல தொடர்பிலிருக்கும் நல்ல நண்பர்கள் பலர் பரிச்சயமானார்கள். அவர்களோடு சேர்ந்து இன்னொன்றும் புதிதாகப் பரிசசயமாகியது. Blog Reading. எனக்கு நேர் பின்னால் சீட்டிலிருந்த ஒரு ஆசாமி (பெயர் சொல்லக் கூடாது) வேலை போக மிச்சமிருக்கும் நேரத்தில் ப்ளாக்குகளை ஓப்பன் செய்து படித்துக் கொண்டிருப்பதைக் கவனித்தேன். அது என்னவென்று விசாரித்துத் தெரிந்து கொண்டு நானும், ப்ளாகில் எழுதப்படுபவற்றைப் படிக்க ஆரம்பித்தேன்.

எத்தனை விதமான எழுத்துக்கள் அச்சிதழ்களைத் தாண்டியும் இருப்பது அப்போதுதான் அறிமுகமானது, பிரமிப்பைத் தந்தது. படித்தவற்றில் எனக்கு மிகவும் பிடித்தது ‘சேட்டைக்காரன்’ என்றொருவரின் ப்ளாக் எழுத்துக்கள். ப்ளாகரில் மிகச்சிறந்த நகைச்சுவையாளராகப் பரிமளித்துக் கொண்டிருந்தார் அவர். அவரது நகைச்சுவை எழுத்துக்களை விரும்பிப் படித்து வரலானேன். அவர் மூலம்தான் ப்ளாக் ஆரம்பித்து எழுதுவது எப்படி என்பதை நான் கற்றுக் கொண்டதும், கடுகு சாரின் பாணியைப் பின்பற்றி, சேட்டைக்காரனின் எழுத்துக்களை வழிகாட்டியாகக் கொண்டு நான் நகைச்சுவை எழுத்தாளனாகப் பரிமளித்ததும் நடந்தது.

அது நடந்த விதத்தைச் சொல்வதற்கும் ஒரு முன்கதைச் சுருக்கத்தைச் சொல்லித்தானாக வேண்டும். அலுவலக வேலை தவிரவும், சுபாவிற்கான எழுத்துப் பணிகளில் உதவியதைச் சொன்னேனில்லையா..? அது நாவல்களிலிருந்து சுபா தொலைக்காட்சித் தொடர்களுக்கு மாறியபோதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்படிச் சென்று கொண்டிருந்த சமயத்தில் ஒருநாள் பட்டுக்கோட்டை பிரபாகர் சார் என்னை அழைத்தார். “நாம சேர்ந்து ஒர்க் பண்றதுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு கணேஷ். என் ஆபீஸ் வாங்க.” என்று சொல்லி, அவரது திருவான்மியூர் அலுவலக முகவரியைச் சொன்னார்.

பட்டுக்கோட்டை பிரபாகர்

அவர் நடத்திவந்த ‘ரம்யாப்ரியா க்ரியேஷன்ஸ்’ பதிப்பகத்துக்கு ஓரிரு புத்தகங்கள் வடிவமைத்துத் தந்திருந்தேன். அதுபோல் ஏதேனுமொரு புத்தக வேலையாகத்தான் இருக்கும் என்று எண்ணித்தான் சென்றேன். காத்திருந்தது புத்தக வேலைதான். ஆனால் நான் நினைத்தது போன்றது அல்ல. அது வேறு.

“என்னோட நாவல்களை பப்ளிஷ் பண்றதுக்காக ‘ஊஞ்சல்’ன்னு ஒரு புது மாதநாவல் வரப் போகுது. (உல்லாச ஊஞ்சல் அல்ல. அது சுபாவும் பிகேபியும் சேர்ந்து நடத்தியது, ஒரு கட்டத்தில் நின்றுபோனது.) 144 பக்கம் தரலாம்ன்னு ப்ளான் பண்ணிருக்கோம். அதுல ஒரு எழுபது, எழுபத்தைஞ்சு பக்கம் என் நாவல் வந்துடும்னு வெச்சுக்கலாம். மிச்சமிருக்கற எழுபது பக்கத்துல வெரைட்டியா மேட்டர்ஸ் தரணும். புக் வாங்கற வாசகருக்கு ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்ட்ட திருப்தி கிடைக்கணும். அதான் ப்ளான். நீங்க லேஅவுட் பண்ணித் தரணும்.”

ஆஹா… கூலியுடன் சேர்த்துக் கரும்புமல்லவா கிடைக்கப் போகிறது. படுவேகமாகத் தலையை ஆட்டினேன். உடனிருந்த இரண்டு இளைஞர்களை அறிமுகப்படுத்தினார். “இவங்க என்னோட உதவியாளர்கள். மேட்டர்ஸை உங்ககிட்ட குடுத்து வாங்கறது இவங்க பாத்துப்பாங்க. லேஅவுட் ஐடியாசுக்கும் நீங்க இவங்களோட டிஸ்கஸ் பண்ணிக்கலாம்.”

-இப்படியாகத்தான் ஆரம்பித்தது பிகேபி சாருடனான கூட்டணி. வார இதழ் போன்றதொரு வடிவமைப்பில் மாத இதழ் வரவேண்டும் என்பது சவாலான வேலையாகவே இருந்தது. திறம்படச் சமாளித்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் இரண்டு இதழ்களிலேயே சிறப்பான வரவேற்பு வாசக உலகத்திடமிருந்து கிடைத்தது என்பதே அதற்குச் சாட்சி. வடிவமைப்பாளனாக மட்டுமே அதற்கு முன்வரை பல சந்தர்ப்பங்களில் புறந்தள்ளப்பட்ட, அவமானத்தைச் சந்தித்த என்னை, வடிவமைப்பாளனாக மட்டுமில்லாது, இதழில் பங்களிப்பவனாகவும் ஆக்கினார் பிகேபி ஸார். (பின்னாளில் உதவி ஆசிரியராகவும் ஆனேன்.) எப்படியென்றால், எழுத்தாளர்களைப் பேட்டி எடுக்கையில் நானும் உடன் போவேன், கேள்விகள் தயாரிப்பதில் உதவுவேன். -இதுபோன்று சின்னச் சின்ன வேலைகள்.

அந்த இதழுக்கான பணிகளில் இப்படிப் பங்களித்தபோதுதான் ப்ளாக்கர் சேட்டைக்காரனைச் சந்திக்கிற வாய்ப்பு ஏற்பட்டது, அது என்னை ப்ளாக்கராகவும், எழுத்தாளனாகவும் உருமாற்றியது. அவற்றைப் பற்றி…

-கொஞ்சம் ஓய்வெடுத்துவிட்டுச் சொல்கிறேன்.

balaganessh32@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button