
வெயிலின் நாணயம்
அதிகாலைச் சூரியனிடம்
சூரிய நமஸ்காரத்தோடு
கேட்டுக் கொண்டேன்
அவ்வப்பொழுது
மேகங்களுக்குள்
ஒளிந்து கொள் என்று
ஒப்புதல் கொடுப்பது போல
காலை உணவுப் பொழுதில்
மேகங்களுக்கு இடையில்
சென்றவனை அங்கேயே
கட்டி வைக்க முடியுமா?
விழுந்து புரண்டு நின்று
யோசித்துக் கொண்டிருந்தேன்
ஏனோ அன்று மட்டும்
நண்பகலுக்கு முன்னரே
பக்தர் கூட்டத்தைக்
காணப் பதறியோடி
வெளிவந்து விட்டான்
வியர்வையில் குளித்து
முடித்துக் கேட்டேன்,
“இதுவா உன் நாணயம்?”
வெயில் புன்னகையோடு கேட்டது,
“நான் எப்பொழுது
ஒத்துக் கொண்டேன்?”
***
நிலவற்ற தனிமை
விரும்பிய சில்லறைக்கு
எங்கோ சுற்றுலாவில்
வாங்கிய இரு கண்ணோக்கி
அவளது கைகளில் இன்று!
இருளூட்டப்பட்ட வானத்தில்
நிலவற்ற தனிமையில்
விண்மீன்களை
அவதானிக்க
முற்பட்டவள்
அவ்விருளுக்கு
முதலில்
கண்களைப் பழக்கிக்
கொண்டாள்
இருளுக்குப் பழகியிராத
இவளது கண்களுக்குத்
தூரத்தில் ஒளிர்ந்த
எல்லாம்
நட்சத்திரங்களாகவே
தெரிகின்றன
புரிந்து கொண்டது
இரு கண்ணோக்கி
தயாராய் முணுமுணுத்தது
“இன்னும் கொஞ்சம்
அருகில் சென்று பார்”
விமானங்கள்
கோள்கள்
செயற்கைக்கோள்கள்
விண்கற்கள்
நடுவில்
அங்கங்கு பிரகாசமாய்
அவள் கண்களுக்கு மிகவருகில்
தெரிய ஆரம்பித்தன
மின்னிடும் நட்சத்திரங்கள்!
***
சிறுநாய்க்குட்டி
வாலாட்டித் தெருவில்
சுற்றிக் கொண்டிருந்த
சிறுநாய்க்குட்டிக்கு
இன்புற்று வரவேற்று
நட்பு பாலூட்டினார்கள் சிலர்
அது சிறியதாக இருக்கும் வரை!
செய்வதறியாது
சண்டையிட்டு
கடிவாங்கி அடிபட்டு
சற்றே விகாரமாய்
மாறிய பின்னர்
அதே நாய்க்குட்டியை
தெருவில் இருந்தே
துரத்தி விட்டனர்
பழகிய இடமென்று
அவ்வப்பொழுதுகளில்
திரும்பி வந்தாலும்
அந்நியமாக்கித்
துரத்தியே விடுகின்றனர்
மறுபடியும்!
*******