
‘செல்ல முட்டாள்’ என்றுதான் என் கணவர் என்னை அழைக்கிறார். நான் அவருக்கு எத்தனை செல்லம் தெரியுமா? திரையரங்குகளில் இடைவேளைக்குப் பிறகு நான் மெல்லிய குறட்டையுடன் தூங்கிவிடுவதில் தொடங்கி, பொருத்தமில்லாத மார்க்கச்சையைத் தேர்வு செய்து அணிந்து கொள்வது வரைக்கும் என்னுடைய செல்ல முட்டாள்தனங்களின் பட்டியல் என் கணவரது நாட்குறிப்பில் இருக்கிறது. ஒன்றுவிடாமல் அத்தனையும் எழுதி வைக்கிறாரில்லையா, அதைப் படித்துதான் தெரிந்து கொண்டேன்.
என்னிடம் ரொம்பவும் பிரியம் அவருக்கு. மரிக்கொழுந்து சென்ட், இலந்தைப்பழம், கனகாம்பரப் பூ என்று எனக்குப் பிடித்த எல்லாவற்றையும் எத்தனை முறை கேட்டாலும் வாங்கித் தந்துவிடுவார். எங்கள் கிராமத்தில் இவையெல்லாம் எளிதாகக் கிடைக்கும். இந்தப் பட்டணத்தில் தேடித்தான் வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் எனக்காக அலையும்போது சிரமம் தெரிவதில்லை என்று சொல்லிச் சிரிப்பார். இவ்வளவு அன்பைக் கண்டிருக்கிறீர்களா நீங்கள்?
எங்களுக்குக் குழந்தைகள் இல்லை. இனி பிறக்கவும் வழியில்லை என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள். மூன்று வருடங்களுக்கு முன் என்னுடைய கர்ப்பப்பையை நீக்க வேண்டி இருந்தது. அந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு என் உடல் எடை மிகவும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் நான் எப்போதுமே அழகுதான் என்று அவர் சொல்கிறார். எத்தனை பிரியம் பார்த்தீர்களா..?
என்னுடைய சமையல் அவருக்கு மிகவும் பிடிக்கும். நான் செய்த அத்தனை பதார்த்தங்களையும் ரசித்துச் சாப்பிடுவார். சமையலை முடித்த கையோடு, வழியும் வியர்வை நெடியுடன் நான் பரிமாறத் தொடங்கும்போது என்னைத் தடுத்து நிறுத்தி, மிகவும் அன்புடன், நான் சிரமப்பட வேண்டாம் என்று சொல்லிவிட்டு தானே பரிமாறிக்கொண்டு சாப்பிடுவார். என் மேல் அத்தனை கரிசனம்..
எனக்கு இரவு நேரங்களில் சட்டென்று உறக்கம் வருவதில்லை. “சுவர் பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொள், நன்றாக உறக்கம் வரும்” என்று என் கணவர் சொன்ன யோசனைப்படி அதையும் முயற்சித்துப் பார்த்தேன். ஆனாலும் உறக்கம் வரவில்லை. நான் என்ன செய்வது? எனக்கு ஏதோ ஹார்மோன் கோளாறு என்கிறார்கள்.
சென்ற மாதம் ஒருநாள் அவர் என்னை அணைத்துக்கொண்டு முத்தமிட நெருங்கினார். நான் வாயில் மென்று கொண்டிருந்த பூண்டுப் பற்களை அவசரமாக தண்ணீர் ஊற்றி விழுங்கி விட்டு வந்தேன். ஆனால் அதன் பிறகு ஏனோ அவர் என்னை முத்தமிடவில்லை. என் முகத்தை சிறிது நேரம் பார்த்துக்கொண்டே இருந்தவர் இனிமையாகப் புன்னகை செய்தார். பிறகு, செல்லமாக என் கன்னத்தில் தட்டிவிட்டு எப்போதும் போல் சுவர் பக்கமாக திரும்பிப் படுத்துக் கொண்டார்.
பச்சைப் பூண்டு, மூட்டு வலிக்கு நல்லதல்லவா! இது போன்ற மருத்துவக் குறிப்புகள் எனக்கு நிறைய தெரியும். அவருக்கு அலுவலகம் தவிர எதுவும் தெரிவதில்லை. அவர் பெரிய பதவியில் இருப்பதால் அவருடைய கைபேசியை நான் தொடக் கூடாது என்று சொல்லியிருக்கிறார். பின்னிரவுகளில் அது, ’மினுக் மினுக்’ என்று ஒளிரும். ’பீப் பீப்’ என்று ஒலி எழுப்பும். என் தூக்கம் கெட்டுவிடக் கூடாதே என்று பதற்றத்தோடு என்னை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு ஏதோ டைப் செய்யத் தொடங்குவார். என்ன முக்கியமான செய்தியோ. பாவம்… எந்நேரமும் வேலை பற்றிய சிந்தனைதான்.
நேற்று அவருடைய உடுப்புகளைத் துவைக்க எடுத்துச் செல்லும்போது சட்டையின் உள்ளறையில் அரை நிர்வாணப் படம் தரித்த சின்ன அட்டைப் பெட்டி ஒன்றைக் கண்டெடுத்தேன். திறந்து பார்த்ததில் மெல்லிய ரப்பர் போல ஏதோ ஒன்று இருந்தது. அது என்னவென்று புரியவில்லை. அவர் எப்போதுமே இப்படித்தான். பேனா, ரூபாய் நோட்டுகள், அலுவலகக் குறிப்புகள் என்று ஏதாவது ஒன்றை சட்டைப் பையில் மறந்து வைத்து விடுவார். நான் பத்திரமாக எடுத்து வைப்பேன். பாவம், முக்கியமான பதவியில் இருப்பவர்களுக்கு மறதி சகஜம்தானே…
அன்றைக்கு சாயங்காலம் என் தோழி என்னைப் பார்க்க வந்திருந்தாள். ரொம்பவும் ஆர்வமாக இருந்ததால் அவளிடம் அந்தப் பாக்கெட்டைக் காட்டி அது என்னவென்று கேட்டேன்.
என்னுடைய கர்ப்பப்பை நீக்கப்பட்டு விட்டதால் அந்த உறை எனக்குத் தேவைப்படாதென்று கூறினாள். மேலும் அவள் நிதானமாக என்னைப் பார்த்து, “நீ ஒரு வடிகட்டிய முட்டாள்” என்று சொன்னாள்.
அப்படியென்றால் நான் செல்ல முட்டாள் இல்லையா…?
***