
எலும்புத்துண்டுகளின் இறைச்சித்துணுக்குகள்
கால் தேக்கரண்டி கருணை கூடக் கிடைப்பதில்லை
ஆனாலும் கைகள் விண்ணோக்கி இறைஞ்சியபடியே…
மறுக்கப்பட்ட உயிர்கள் எண் பூஜ்யத்தை அழுத்தவும்
பூஜ்யம் ஒரு எண்ணே இல்லையென்கிறார்களே?
இருக்கட்டும்…இவர்கள்கூட உதிரிகள்தானே.
0
0
0…..
காத்திருக்கும் நேரத்தில் கென்னிஜியின் பியானோ உங்களுக்காக…
உங்கள் கேவல் பதிவுசெய்யப்பட்டது.
கத்திரிக்காய் மழை பெய்யும் ஒரு குறைகேட்கும் நாளுக்கென
நீங்கள் காத்திருப்போர் பட்டியலில் இருக்கிறீர்கள்.
எச்சரிக்கை: அதுவரை கூப்பிய கைகளை இறக்கவேண்டாம்.
மனிதன் ஒரு சமூக விலங்கு
விழித்துக்கொண்டே உறங்குகின்றன
கைரேகைகளும் விழித்திரை விவரங்களும்.
ஏணிக்குக் கீழே நடப்பது போலல்ல
கண்காணிப்பு கேமிராவுக்குக்
கீழ்ப்படிவது நன்மையென அறியுங்கள்
ட்ரோன்கள் கிரகணம்போல
நேருக்கு நேர் பார்க்காதீர்கள்
சிறுவர்களின் பொம்மை விமானங்களென
நினைத்துக்கொள்ளுங்களேன்
உங்கள் உள்பெட்டித் தகவல்களை
நீங்கள் படிக்க விரும்பும் செய்திகளை
உங்களுக்குப் பிடித்த காணொலிகளை
தேர்ந்தெடுத்து வடிகட்டுவோம்
உங்கள் கட்டைவிரலைத் தந்தால் போதும்
என்ன உணர்கிறீர்கள்
நட்சத்திரங்கள் எத்தனை
எங்களைப் பரிந்துரைப்பீர்களா
நீங்கள் முக்கியமானவர்கள்
எண்களாகவும் தரவுகளாகவும் மாறியபின்னும்
நீண்ட வரிசையில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது
இது தடுப்பூசி, முதலில் வலிக்கும்தான்
இப்படி பயப்படுகிறீர்களே….
ரேகைப்பதிவு பொருந்தாமல்
இருப்பு நிராகரிக்கப்பட்டவன் கத்துகிறான்
“தாழம்பூவின் நறுமணம் சூழ்ந்தபின்
எல்லா நிழலும் அரவத்தின் நிழல்தானே!”