
மலையாளத்தில் சமீபகாலமாக வெளிவந்து கொண்டிருக்கும் ‘புதிய அலை’ திரைப்படங்களின் வரிசையில் மற்றுமொரு படைப்பு ‘உயரே’. பல்லவி ரவீந்திரன் (பார்வதி) கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட கதை. சிறுவயது முதல் பைலட்டாக வேண்டும் என்ற பல்லவியின் கனவு பைலட் ஆவதற்கான பயிற்சிப்பள்ளியில்சேர்வதுவரை நீள்கிறது.
பல்லவியின் காதலன் கோவிந்த். கோவிந்திற்கு பல்லவி மீது ஒரு அதீத பொஸசிவ்னெஸ். பல்லவி கோவிந்தைக் காதலிக்க ஆரம்பிப்பதற்கான காரணம் மிகவும்உணர்ச்சிகரமானது. தாயை இழந்து தந்தையால் வளர்க்கப்படுகிற பல்லவியை அவள்பள்ளிக்காலத்தில் தற்காலிகமாக சிலநாட்களுக்கு ஒரு போர்டிங் ஸ்கூலில் சேர்க்கிறார்அப்பா. அங்கே பல்லவிக்கு ஏற்படுகிற ஒரு கசப்பான அனுபவம் அவளை நிலைகுலையச் செய்கிறது. சுற்றியிருக்கும் அனைவரும் அவளை ஏளனம் செய்ய, அச்சமயத்தில் அவளுக்குஆறுதலாக இருக்கும் ஒரே ஜீவன் கோவிந்த் மட்டுமே. “யாருமே இல்லாத இக்கட்டான அந்த தருணத்தில் எனக்குப் பக்கபலமாக இருந்தவன் கோவிந்த்” என்று பல்லவி அவள்தந்தையிடம் தனது காதலுக்கான காரணத்தை தெரிவிக்கிறாள். தந்தையும் மகளின் காதலைப் புரிந்து கொள்கிறார்.
ஆனாலும், தன் விருப்பப்படிதான் பல்லவி நடக்க வேண்டும் என்ற கோவிந்தின் எண்ணம்/செயல்கள் பல்லவிக்கு சங்கடத்தை ஏற்படுத்துகின்றன. ஒருநாள் இரவு பயிற்சிப்பள்ளிநண்பர்களுடன் வெளியே சென்று டின்னர் முடித்துவிட்டு பல்லவி விடுதிக்குத் திரும்பும்போது, விடுதி வாசலில் கோவிந்து காத்திருக்கிறான். தனக்கு ரியாத்தில் வேலைகிடைத்திருப்பதாகவும், பல்லவியும் அவனுடன் வரவேண்டும் என்றும் நிர்பந்திக்கிறான். பயிற்சிக்காலம் முடிய இன்னும் 2 மாதங்கள் இருப்பதால் தன்னால் வரஇயலாது என்றுபல்லவி மறுக்கிறாள். ஆவேசத்தில் பல்லவியை ‘தரக்குறைவாக’ பேசுகிறான் கோவிந்த். “Get lost from my life” என்று அவனிடமிருந்து தீர்மானமாக விலகிச் செல்கிறாள்.
மறுநாள் காலை, யாருமில்லாத சாலையில் பல்லவி தன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருக்கையில் கோவிந்த் அவளை வழிமறித்துப் பேச முயல்கிறான். பல்லவி அவனைக்கடந்து செல்லும் தருவாயில், பல்லவியின் முகத்தில் கோவிந்த் ஆசிட் வீசுகிறான். பல்லவியின் முகத்தோடு உயரப் பறக்கும் கனவும் சிதைந்துபோகிறது.
சிதைந்த முகத்துடன் அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாமல் இருக்கும் பல்லவியை ஒரு விமானப் பயணத்தில் விஷால் ராஜசேகரன் (டோவினோ தாமஸ்) என்ற ஒரு விமான நிறுவனமுதலாளியின் மகன் சந்திக்கிறான். விஷாலும் பல்லவியும் ஏற்கனவே பரிச்சயமானவர்கள். பல்லவி பயின்ற பயிற்சிப் பள்ளியில் விஷால் ஒருமுறை சென்று வகுப்பெடுத்திருக்கிறான். பல்லவியின் ‘கோலத்தை’க் கண்டு விஷால் அதிர்ச்சி அடைந்தாலும், பல்லவிக்காக ஏதாவது செய்யவேண்டும் என்று நினைக்கிறான். தனது தந்தை நடத்தும் விமான கம்பெனியில்பல்லவியை ஏர் ஹோஸ்டஸாக சேர்ப்பதற்கு பரிந்துரை செய்கிறான். சில எதிர்ப்புகளை மீறி இதற்கான சம்மதத்தைப் பெறுகிறான். பல்லவியையும் கன்வின்ஸ் செய்து பணியில்சேர்க்கிறான். பைலட்டாக வானில் பறக்க முடியாத பல்லவி ஏர் ஹோஸ்டஸாக பறக்க ஆரம்பிக்கிறாள். தனது முதல் பயணத்தில் துப்பட்டாவால் தனது முகத்தின் சிதைந்தபகுதியை மூடாமல் முழு முகத்துடன் கம்பீரமாக பயணிகளை பார்த்துப் புன்னகைக்கிறாள் பல்லவி . ஒரு முதியவர் பல்லவியைக் கூப்பிட்டு, ‘Can I gave a hug?’ என்று கேட்டு அவளை ஆறத்தழுவுகிறார். ஒருசில முனுமுனுப்புகளைத் தவிர, பல்லவியை பெரும்பாலும் முழுமனதுடனேயே அனைத்து பயணிகளும் ஏற்கின்றனர்.பிறகு நிகழும் நெகிழ்ச்சியான சம்பவங்கள் படத்தை வேறு தளத்திற்கு ’உயரே’ அழைத்துச் செல்கின்றன.
பல்லவியுடைய கதாபாத்திரம் துணிச்சல், வீரம், கம்பீரம், திறமை இவையோடு சேர்ந்து தனது சுயத்தை எந்த தருணத்திலும் இழக்காத ஒன்றாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. பல்லவியாகவே மாறி தனது முழுமையான பங்களிப்பின் மூலம் நம் மனதில் உயர்வாகப் பதிந்து போகிறார் பார்வதி. ஆசிப் அலி, டோவினோ தாமஸ், சித்திக் மற்றும் பிறகதாபாத்திரங்களின் தேர்ந்த நடிப்பும் குறிப்பிடத்தக்கது.
வலுவான கதையும், திரைக்கதையும் இருந்தால் ஒரு திரைப்படம் சிறப்பாக அமையும் என்பதற்கு ‘உயரே’ ஒரு சாட்சி. நோட்புக், டிராபிக் உள்ளிட்ட திரைப்படங்களின்கதாசிரியர்களான பாபி- சஞ்சய் இரட்டையர் கூட்டணிதான் ‘உயரே’விற்கும் கதாசிரியர்கள். மனு அசோகன் இயக்கிய முதல் படம் இது என்று நம்பமுடியாத அளவிற்கு அவ்வளவுநேர்த்தியான இயக்கம்.
படத்தின் திரைக்கதை மட்டுமல்லாது, வசனங்களும் கனகச்சிதம். முத்தாய்ப்பாய் ஒரு காட்சியைக் கூறலாம். பல்லவி கோவிந்திற்கு குட் பை சொல்லும் காட்சியில் பல்லவிகோவிந்தைப் பார்த்து பேசும் வசனம் – “நான் விரும்புகிற நானாகவே இருக்க விழைகிறேன். நீ விரும்புகிற நானாக அல்ல”. அவரவர்கள் விரும்புகிற வாழ்க்கையை வாழாமல், ‘பிறரின்’ எண்ணம்போல் வாழ நிர்பந்திக்கப்படுவது ஒருவிதமான வன்முறைதான். காதலனாகவே இருந்தாலும், தனது சுயம்தான் பிரதானம் என்று பல்லவி உணரும் தருணம் அது.
“ஒரு பெண்ணின் புற அழகை சிதைத்துவிட்டால், அவளுக்கு எந்த மதிப்பும் இல்லை என்ற பொதுக் கருத்தை உடைப்பதுதான் எங்கள் நோக்கம். இதுவே ‘உயரே’ கதையைஉருவாக்க காரணம்” என்று ஒரு பேட்டியில் சஞ்சய் கூறியுள்ளார். ‘உயரே’ திரைப்படத்திற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. முதன்முதலாக ஒரு மலையாள படத்தை ஷெனுகு, ஷெக்னா, ஷ்ரேகா என்ற மூன்று சகோதரிகள் தயாரித்துள்ளனர்.
பொதுவாக ஒரு திரைப்படத்தை உருவாக்கும் முன் அக்கதையில் வரும் நிலப்பரப்பு, கதை மாந்தர்கள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள். ஆசிட் வீச்சு தாக்குதலால்பாதிக்கப்பட்டவர்கள் குறித்த கள ஆய்வோடு ‘உயரே’ படக்குழு நிற்கவில்லை. ஆசிட்வீச்சு தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து ஆக்ராவில் “ஷெரோஸ்ஹாங்கவுட்” என்ற காஃபி ஷாப் ஒன்றை நடத்துகிறார்கள். அந்த காஃபி ஷாப்பிலேயே சில காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. “உண்மையாக இப்பெண்கள் அனுபவிக்கும்அகச்சிக்கல்களை அவர்களுடன் பழகினாலும் நம்மால் உணர முடியாது. அனுபவிப்பவர்களால் மட்டுமே உணரக்கூடிய வலியும் வேதனையும் மிக்க வாழ்க்கை அவர்களுடையது” என்று பார்வதி ஒரு நேர்காணலில் கூறியிருப்பார்.
பெண்களின் அக அழகைப் போற்றும் ‘உயரே’ தவறவிடக்கூடாத ஒரு திரைப்படம்.