சிறார் இலக்கியம்
Trending

புதிய சின்ரெல்லா கதை

ஜான்ஸி ராணி

ஒரு சிற்றூரில் ஒரு வணிகர் வசித்து வந்தார். வெளிநாடுகளுக்குப் பயணம் புரிந்து பலவித வியாபாரங்கள் செய்து பெரும் செல்வந்தராய் வாழ்ந்தார்.அவருக்கு அழகும் அறிவும் நிறைந்த ஒரு செல்ல மகள் இருந்தாள். அவள் பெயர் எல்லா.
அவள் குழந்தையாக இருந்தபோதே எல்லாவின் தாய் இறந்துவிட்டாள். எனவே அந்த வணிகர் மறுமணம் புரிந்திருந்தார்.அந்த பெண்மணிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். அவர்களின் மீதும் பாசம் பொழிந்தாரென்றாலும் அவர் எல்லாவின் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்தார். அந்த இரண்டாவது மனைவிக்கு இதனால் பொறாமை ஏற்பட்டதெனினும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் எல்லாவின் மேல் பாசமாய் இருப்பது போல் நடித்துக் கொண்டிருந்தாள்.

ஒரு துரதிஷ்டமான நாளில் இடி போல் அந்த செய்தி வந்தது.ஆம்,ஒரு வெளிநாட்டுப் பயணத்தில் இருந்த அந்த வணிகர் நோய்வாய்பட்டு இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. துக்கத்தில் அழுதழுது சோர்ந்து விட்டாள் எல்லா.

இப்போதுதான் அந்த இரண்டாவது மனைவி தன் சுயரூபத்தை வெளிக்காட்ட ஆரம்பித்தாள். அவ்வீட்டின் சொத்துக்களை தனதாக்கிக் கொண்டாள்.

வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் எல்லாவின் தலையில் கட்டினாள்.அழகான “எல்லா” எந்நேரமும் கரியும் அழுக்குமாய் இருக்க நேர்ந்தது. வஞ்சகமாக அவள் பெயரை “சின்ரெல்லா” என பெயரிட்டு அழைத்தனர் அவர்கள்..(cinder என்றால் சாம்பல், கரி என அர்த்தம்) அவள் அடுப்பறையில் சிறை வைக்கப்பட்டாள் என்றே சொல்ல வேண்டும். தன் வாழ்க்கை இப்படியே வீணாகி விடுமோ என்று கழிவிரக்கம் தோன்றும் போதெல்லாம் அவள் தனக்குத்தானே பாஸிட்டிவாகப் பேச ஆரம்பித்தாள். தன் தந்தை தனக்கு அறிவுரைத்ததை நினைத்துக் கொண்டாள். “மகளே அறிவும் மனத்திடமும் அதிசயங்களை நிகழ்த்தும் என்பதை  எப்போதும் நினைவில் கொள்..” என்று அவர் (கடைசி) பயணம் போகும் முன்பும் அன்போடு வலியுறுத்தி இருந்தார்.

அந்த கொடுமைக்காரியோ வீட்டு வேலைகள் செய்ய படிப்பு எதற்கு என்று தடை செய்திருந்தாள்.எல்லாவின் வயதொத்த அவள் மகள்களுக்கு வீட்டிற்கு வந்து கற்பிக்கும் ஆசிரியரை நியமித்திருந்தாள். அந்த நேரங்களில் எல்லாவின் கைகள் வீட்டு வேலை செய்தாலும், மனமும் காதுகளும் அந்த ஆசிரியர் கற்பிக்கும் பாடங்களில் குவிந்திருக்கும். பிறகு வீட்டில் அனைவரும் தூங்கிய பின் அவர்களின் பாட புத்தகங்களைப் படித்து தன் அறிவுத் திறனை வளர்த்துக் கொண்டாள்.

ஒரு நாள் அந்த ஊரின் சிற்றரசன் கோலாகலமான சுயம்வர விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். மணவயதில் இருந்த பெண்கள் அனைவரும் தங்களை சிறப்பாக அலங்கரித்துக் கொண்டு விழாவிற்குப் புறப்பட்டனர்.

சமையலறையில் இருந்த சின்ரெல்லாவிற்கு,” இப்போது எனக்கு உதவ ஒரு தேவதை இருந்தாள் நன்றாய் இருக்குமே” என வருத்தத்துடன் எண்ணிக் கொண்டிருந்தாள்.

அங்கே ஒரு அதிசயம் நடந்தது.அவளின் முன்னே ஒரு தேவதை தோன்றினாள்.

.”மகளே எல்லா! வருந்தாதே.. உனக்கு வரம் அளித்து உதவவே வந்தேன்.,என கூறியபடி அங்கிருந்த பூசணியை அழகான பறக்கும் ரதமாக மாற்றினார்,எலியை குதிரையாக்கிவிட்டு..
எல்லா,உன் உடைகளையும்..”

எல்லா இப்போது புன்னகையுடன் இடைமறித்தாள், “சற்றுப் பொறுங்கள் தேவதையே,நான் அரச விருந்துக்கு போகப் போவதில்லை,எனவே பளபள அழகான உடைகளும் அந்த கண்ணாடி ஷுக்களும் தேவையில்லை.
விழாவில் கலந்து கொள்ளவில்லையே என்றா வருந்தினேன் நான்?!. இளவரசனை மணந்து கொள்வதென்பது இந்த இரும்புக் கூண்டிலிருந்து தங்கக் கூண்டிற்கு மாறுவது போன்றது. என் கனவு அதுவல்ல.

நான் இந்த சிற்றூருக்கு அருகில் இருக்கும் நகரத்திற்கு இந்த ரதத்தில் போய்விட்டால் போதும். என் அறிவுத்திறனால் ஒரு வணிகம் புரிந்து செல்வம் சேர்த்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.மூன்றாவது வரமாக என் பாதுகாப்பிற்கு ஒரு உடைவாள் அளியுங்கள்.”

“எத்தனை புத்திசாலி இந்த நவீன சின்ரெல்லா” என வியந்தபடி வரம் அளிக்க,

“தக்க நேரத்தில் நீங்க செய்த இவ்வுதவியை என்றென்றும் மறக்க மாட்டேன் . மிக்க நன்றி” என்று கூறி அந்த ரதத்தில் பறந்தாள் எல்லா.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button