கவிதைகள்
Trending

கவிதைகள் – ம.இல.நடராசன்

ம.இல.நடராசன்

இழக்காதது

வனாந்திரம் நிறைந்த
ஜீவன்கள் அற்ற
ஒரு பெருமலையின்
கும்மிருட்டு
சிறு குகைக்குள்ளேயே
தனிமையோடு
தினமும் என் பொழுதுகள்
நகர்கின்றன.
ஆம்,
உணர்தலைத் தவிர
மற்ற அனைத்தையும்
இழந்து விட்டேன்
என்றே தோன்றுகிறது…
அனைத்தையும்.
மழைத்துளி வானம்
பூக்கள் உங்கள் நட்பு
சேர்ந்திருந்தப் பொழுதுகள்
கண்ணாடிக் கோப்பை தேநீர்
காதலின் அழகியல்
கவிதைகள் புத்தகங்கள்
சிகரெட்கள் போதை
எனக்கான யோனி,
கலவி, காமம்
காலம், குடும்பம்
முடியாமைகள்
அழுத்தம் முதலான
வாழ்க்கையையும்.
இன்னும் சிறிது நாழிகையில்
என்னுடைய உணர்தலையும்,
உங்களனைவரின் ஞாபகங்களையும்
இழந்து விடுவேன்
போலிருக்கிறது.
பிறகென்ன,
அந்தப் பெருமலையின்
கும்மிருட்டு
சிறு குகைக்குள்
ஜென்ம ஜென்மத்திலும்
இழக்க முடியாத
வெறுமையோடு மரணத்தை
எதிர்நோக்கி
இருக்கப் போகிறேன்.

 

இன்மையில் இருப்பவை

யாருக்கும் தெரியாவண்ணம் தான்

வீட்டினுள் நுழைகிறது சூரியனின்

முதல் ஒளிக்கீற்று.

யாரும் உணராமல் தான் நடந்து

கொண்டிருக்கிறது சுவாசம்.

எவர் கவனமும் பெறாமல் தான்

மாறுகிறது இராவும் பகலும்.

இருப்பதை விடவும் இல்லாதவையாலே

நிறைந்திருக்கிறது உலகம்.

இல்லாதவற்றிலே தான் இருந்துகொண்டு

இருக்கிறோம் நாமும்.

அவ்வாறே நீ

நிகழ்த்தாமலே நிகழ்ந்து கொண்டிருக்கிறது

என் மீதான உந்தன் காதல்.

நீ அறியாமலே குறைகிறது

உனக்கும் எனக்குமிடையான பெருவெளி.

 

எழுப்பி விடாதீர்கள்

ஆழ்ந்து கனவுளோடு
உறங்கிக் கொண்டிருக்கும்
பெண்களை அறிந்தோ

அறியாமலோ
எழுப்பி விடாதீர்கள்.

கனவுகளிலாவது அவர்கள்,

விருப்பமான ஆடைகளை அணிந்து
கொள்ளட்டும்
காதலனை மணம் முடித்து பிடித்த

வாழ்க்கையை வாழட்டும்
நடுநிசியில் நாய்களின் தொந்தரவின்றி
சுற்றட்டும்
ஆண் நண்பர்களுடன் பயமின்றி அரட்டை
அடிக்கட்டும்
தன் இச்சைகள் அனைத்தையும்
நிறைவேற்றட்டும்.

கனவுகளில் மட்டுமே ‘அவர்களாக’ வாழும்
அவர்களை மறந்தும் எழுப்பி,
மகிழ்ச்சியை பிடுங்கி விடாதீர்கள்.
உறங்கட்டும் அவர்கள்
கனவு முடியும் மட்டுமாவது.

 

தேவை

உங்கள் ஒவ்வொருவரிடமிருந்தும்
எனக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.
அதேபோல் என்னிடம் இருந்து
உங்கள் ஒவ்வொருவருக்கும்
ஏதோ ஒன்று தேவைப்படுகிறது.
அதற்கு

உருவமோ பெயரோ உணர்வோ

கொடுத்து நாம்
கொச்சைப்படுத்த தேவையில்லை.
அது எப்போதும் போல
சிறுமியின் காரணமற்ற புன்னகையாக
ஏதோ ஒன்றாகவே
நமக்கிடையே நடக்கட்டும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button