இணைய இதழ்இணைய இதழ் 73தொடர்கள்

பறவைகளுக்கான வாழ்விடச் சிக்கல்கள்; 8 – கிருபாநந்தினி

தொடர் | வாசகசாலை

Red Knot – பெரிய மடுவு

பெரிய மடுவு – அறிவியல் பெயர் Calidris canutus. இப்பறவை 23–26 செ.மீ (9.1–10.2 in) நீளமும் 47–53 cm (19–21 in) அகலமும் கொண்டது. அதிக தூரம் வலசை செல்லும் பறவைகளில் இதுவும் ஒன்று. இப்பறவை 9300 கி.மீ வடக்கிலிருந்து வசந்த காலத்தில் (spring) தெற்கு நோக்கிப் பறந்து அதே வழியில் (autumn) இலையுதிர் காலத்தில் திரும்புகிறது.

கோடை காலம் முழுவதும் ஆர்டிக் கடற்கரைப் பகுதிகள், கிரீன்லாந்து மற்றும் ரஷ்யாவில் வாழ்கிறது. ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மேயன் தீவுகள், வெனிசுலா பகுதிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. தென் அமெரிக்காவில் உள்ள டியர்ரா டெல் ஃபியூகோ வழியாக வலசை செல்கிறது. இந்த நீண்ட பயணத்தின்போது 1500 மைல்கள் தொலைவிற்கு ஒருமுறை தகுந்த இடங்களில் ஓய்வெடுக்கிறது. அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ், வர்ஜீனியா, தென் கரோலினா மற்றும் ஜார்ஜியா தீவுகளையும், தெற்கு கனடாவில் சில பகுதிகளையும் ஓய்வெடுக்கப் பயன்படுத்துகிறது. 

இப்பறவையின் முக்கிய உணவு குதிரைக் கால் நண்டின் முட்டைகள். இந்த நண்டு இதில் டெலாவேர் விரிகுடா (The Delaware Bay) பகுதியில் இனப்பெருக்கம் செய்கிறது. குதிரைக் கால் நண்டு முட்டையிடும் காலமும் (horseshoe crab eggs) இப்பறவையின் வலசைக் காலமும் ஒன்றாக இருப்பதால் இப்பகுதியில் உணவிற்காக அதிக நேரம் செலவிடுகிறது.

நண்டின் இனப்பெருக்க காலமும், இப்பறவையின் வலசைக் காலமும் ஒரே நேரத்தில் அமைவது பரிணாமத்தின் ஒரு முக்கியப் பகுதியாக கருதப்படுகிறது. இந்த நண்டின் எண்ணிக்கையும் வளமும் அதிகரிக்க அதிகரிக்க இப்பறவையின் எண்ணிக்கையும் சரியான விகிதத்தில் இருந்தது. 

Map of red knot migration routes

இத்தகைய சிறப்பு மிகு இயற்கைச் சூழலை விழுங்க மிகப்பெரும் பூதமாக 20ஆம் நூற்றாண்டில் மீன் தொழிற்சாலை உருவெடுத்தது. ஆம், அமெரிக்க மீன் தொழிற்சாலைகள் இந்த நண்டுகளைச் சேகரித்து மற்ற உயிரனங்களுக்கு உணவாகவும், நிலத்திற்கு உரமாகவும் பயன்படுத்தத் தொடங்கினர். பிறகு அளவுக்கு அதிகமாக சுரண்டப்பட்டதன் விளைவாக நண்டுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இதனால் பெரிய மடுவு பறவையின் எண்ணிக்கை 1985 ஆம் ஆண்டு 300, 1993 ல் 85, 2001 ல் 90 ஆகக் குறைந்து 2007ல் 50க்கும் குறைவான பறவைகளே இருந்தன. 1980 முதல் 2000 வரையிலான காலங்களில் 75% குறைந்துவிட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் 2014 ஆம் ஆண்டு இருப்பதாக அறிவித்தது.  தமிழ்நாட்டில் புலிகாட் ஏரியில் 2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு யாரும் இதனைப் பார்த்தாகப் பதிவுகள் இல்லை.  

காலநிலை மாற்றம் இப்பறவையையும் விட்டுவைக்கவில்லை. அதுவும் இதன் வாழ்விடமும், இனப்பெருக்கம் செய்யும் இடமும் ஆர்டிக் பெருங்கடல் என்பதால் காலநிலை மாற்றத்தால் இனப்பெருக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பறவை அலகின் அளவில் மாற்றம் ஏற்பட்டு சிறியதாக மாறியுள்ளதால் கடற்கரை மணலின் ஆழத்தில் வாழும் மெல்லுடலிளை உண்ண முடியாமல் உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. 

ஆப்பிரிக்க-யூரேசிய புலம்பெயர்ந்த நீர்ப்பறவைகளின் பாதுகாப்புக்கான ஒப்பந்தம் (AEWA) கையெழுத்திடப்பட்டது. இப்பறவைகள் உள்ள இடங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. நண்டு சேகரிப்பதிலும் இரண்டு வருடங்களுக்கு முற்றிலும் தடை விதித்து, சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதன் எண்ணிக்கையைக் கணக்கிடவும் வேட்டையாடப்படுவதைத் தடுக்கவும் இந்த ஒப்பந்தம் உதவியது. அதன் பிறகு இப்பறவையின் எண்ணிக்கை நிலையாக இருப்பதாக பறவை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

(தொடரும்…)

kirubhanandhini@yahoo.in

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button