
அய்யா ஆனைமுத்து, ஓர் ஆவண முத்து.
மண்டல் கமிஷன் பரிந்துரைகளைத் தகுந்த ஆதாரங்களுடன் அவர் நாடு முழுக்க கொண்டு சென்றது இந்திய நாடே கொண்டாட வேண்டிய அரும்பணி. எதையும் ஆணித்தரமாகப் புள்ளிவிவரங்களுடன் எடுத்துச் சொல்வது அவருடைய இயல்பு. அவருடைய அருமை இந்திய மக்களால் போதிய அளவு உணரப்படவில்லை. இட ஒதுக்கீட்டின் பயனை அனுபவிக்கும் அனைவருக்கும் அவர் பெருமை தெரிந்திருக்க வேண்டும். வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே பாடுபட்ட பலருக்கு அப்படி அமைவதில்லை என்பதே உலக நியதியாக இருக்கிறது. அந்தப் பலரில் ஒருவர்தான் நான் எழுதிய ‘ஞாலம்’ நாவலின் நாயகன், அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர்.
ஈவேரா சிந்தனைக் களஞ்சியம், பெரியாரின் அயல் நாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட அவருடைய தொகை நூல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு பணி தத்துவ விவேசினி நூல் தொகுப்பும் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் எழுதிய `பாயாரிகளுக்கும் மிராசுகளுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்’, `இந்துமத ஆசார ஆபாச தர்சினி’ நூல் பதிப்புகளும் அடங்கும்.
செங்கல்பட்டு மக்களின் நில உரிமைகள், வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டது 1760 முதல் 1790 வரையிலான காலகட்டம். அது யாரால் நிகழ்ந்தது, எப்படி நிகழ்ந்தது என்பதையெல்லாம் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகரின் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. நாயகரின் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்ததை விடவும் அதை ஒப்பு நோக்கி சரிபார்த்ததுதான் ஆனைமுத்து அய்யாவின் தனிச்சிறப்பு எனச் சொல்வேன்.

ஈவேரா சிந்தனை களஞ்சியம் தொகுத்தபோது, 1930 ல் குடியரசு இதழில் பெரியார் வெளியிட்ட ஓர் அறிவிப்பைக் காண்கிறார்.
1882இல் நாயகரால் வெளியிடப்பட்ட இந்து மத ஆசார ஆபாச தர்சினி 1930 பிப்ரவரியில் பெரியார் அவர்களுக்குக் கிடைத்தது. அந்த நூலின் சிறப்பை 16-2-1930, 23-2-1930 ஆகிய குடியரசு இதழ்களில் பெரியார் அவர்கள் எழுதியிருக்கிறார். ஆனால், அவருக்குக் கிடைத்த அந்த நூலில் சில பக்கங்கள் இல்லை என்பதையும் அதன் முழுமையான படி கிடைக்குமா என்பதையும் பெரியார் அவர்கள் அந்த இதழிலேயே அறிவிப்பாக வெளியிட்டார். அதாவது வேங்கடாசல நாயகர் இறந்து 30 ஆண்டுகளுக்குள் இப்படி ஓர் அறிவிப்பு. ஆனால், பெரியாருக்கு அந்தப் படி கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் உறவினர்களோ, வாரிசுகளோ இந்த அறிவிப்பைத் தவறவிட்டார்களா, வாரிசுகளே இல்லாத நிலையால் இந்த அவலம் ஏற்பட்டதா என்பது புரியவில்லை.
அதன் பிறகு 1946 ஆம் ஆண்டு திருப்பூர் குரு.ராமலிங்கம் என்பவர் இதன் முதல் பதிப்பு நூலைக் காண்கிறார். சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பணியாற்றிய அறிஞர் எஸ்.டி.சற்குணர் அவர்களிடமிருந்து அந்தப் பிரதியைப் பெற்று பெரியாரிடம் ஒப்படைக்கிறார்.
நூலின் இரண்டாவது பதிப்பு அப்படித்தான் உருவானது.
`நான் பெரிதும் தொண்டாற்றி வரும் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் இன்றைக்கு 60 – 70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிக துணிவோடு தெளிவாக செய்யுள் உருவாய் பாடப்பட்டிருப்பதைக் கூர்ந்து நோக்கினால் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் புதியன அல்ல என்பதோடு, பல அறிஞர்களால் போற்றப்பட்ட பழங்கருத்துக்கள் என்பதற்கு ஒரு சான்றாகும்’ எனப் போற்றி பாராட்டி அணிந்துரை வழங்குகிறார்.
குரு.ராமலிங்கம் வெளியிட்ட நூலில் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி, பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், அ.கி.பரந்தாமனார், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகரின் நூலை வியந்து போற்றி முன்னுரைகள் எழுதுகிறார்கள்.
30-4-1948 இல் குரு.ராமலிங்கம் வெளியிட்ட இந்த நூலின் இரண்டாம் பதிப்புதான் அதன் பிறகு 2008இல் பேராசிரியர் கெ.சிவராமலிங்கம் அவர்களும், 2013இல் பேராசிரியர் வீ.அரசு அவர்களும் மறு வெளியீடு செய்ய உதவியது. இந்த நேரத்தில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. 1872-இல் நாயகர் எழுதிய இந்துமத ஆசார ஆபாச தர்சினி நூலின் மூலப் பிரதி- அதாவது அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் பதிப்பித்த நூல் சுமார் 140 ஆண்டுகள் கழித்துக் கிடைத்தது. பேராசிரியர் வாலாசா ப. வெங்கடேசன் என்பார் மூலம் கிடைத்த அந்த நூலிலும் அட்டைப் படம் இல்லாமல் இருந்தது. எனினும் 1948, 2008, 2013 ஆகிய பதிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்க உதவியாக இருந்த பொக்கிஷம் என்றே அதைச் சொல்ல வேண்டும். அறிஞர் செந்தலை ந.கவுதமன் அவர்கள் ஒத்துழைப்போடு பாடல்களைச் சீர் பிரித்து, பிழை திருத்தி வெளியிட்டதை தன் உயிரனைய பணி என்று குறிப்பிடுகிறார் வே. ஆனைமுத்து. அப்படியே பாயக்காரி நூலின் மூலப் பிரதியும் அ. பெரியசாமி என்பவர் மூலம் அய்யாவுக்குக் கிடைத்தது. இரண்டு நூல்களின் முதல் பதிப்பு முகப்புகளையும் அய்யா தன் நூலில் பிரசுரித்திருப்பது சிறப்பு. அத்திப்பாக்கம் வேங்கடாசலத்தின் ஊர் எது, உறவு எது எனத் தெரியாத நிலையில் அவருடைய புகைப்படத்தைக் கண்டெடுத்துக் கொடுத்த திரு. காவிரி நாடன் போற்றுதலுக்கு உரியவர்.
1872ஆம் ஆண்டில் நாயகரால் எழுதப்பட்ட பாயாரிகளுக்கும் ரத்தனம் அவர்களால் கண்டெடுக்கப்பட்டு இரண்டாம் பதிப்பு பெற்றது. ஐந்திணைப் பதிப்பக நிறுவனர், கவிஞர் குழ.கதிரேசன் அவர்கள் அதனை அச்சிட்டார்.
இந்த இரண்டு நூல்களையும் அதன் முதல் பிரதிகளை ஒப்பு நோக்கி நூற்றுக்கு மேற்பட்ட பிழைகளைத் திருத்தி மறுப்பிரசுரம் செய்தவர் ஆனைமுத்து ஐயா.
ஆனைமுத்து ஐயா திரட்டி தந்த அத்தனை தகவல்களையும் வைத்துதான் `ஞாலம்’ என்ற ஒரு நாவலையே எழுத முடிந்தது.

பாயக்காரி நூலோ, இந்து மத ஆசார தர்சினி நூலோ மட்டும் கிடைத்திருக்குமாயின் இந்த நாவலை எழுதியிருக்க முடியாது.
நாயகருக்கு சமூகம், அன்றைய நில பொருளாதார நிலைமை, ஆட்சி மாற்றங்களால் ஏற்பட்ட குழப்பங்கள், இந்தியா முழுவதும் இருந்த மடங்கள், அந்த மடங்களில் இருந்த நடைமுறைகள், இந்து சட்டங்கள் உருவாக்கப்பட்ட வரலாறு அனைத்தும் அத்துபடியாக இருந்தது. அதனால்தான் அவர் பிரிட்டிஷ் கலெக்டர்களிடம் தொடர்ந்து வாதிட முடிந்தது. அன்றைய ஆங்கில நாளிதழில் அவரால் கட்டுரைகள் எழுத முடிந்தது. மிகப்பெரிய போராளியாக அவரைப் பற்றிய ஒரு உருவம் கிடைத்தது ஆனைமுத்து அவர்கள் எழுதிய விவரங்களின் அடிப்படையில்தான்.
இந்துக்களுக்கான சட்டத்தை எழுதியவர் ஜெகநாத பஞ்சனனா என்ற தகவலை, பாயக்காரி நூலில் சொல்கிறார் நாயகர். ஆனால், ஜெகநாத பஞ்சனனாவின் சரித்திரத்தையே தேடிக் கண்டெடுத்துத் தருகிறார் ஆனைமுத்து அய்யா.
இந்தியா முழுக்க இருந்த மனிதர்களின் நம்பிக்கைகள், நடைமுறைகள், உரிமைகள் குறித்தெல்லாம் ஆங்கிலேயர்களுக்கு ஏகப்பட்டக் குழப்பங்கள் இருந்தன. இந்து என அவர்களால் பொதுப் பெயரிட்டு அழைக்கப்பட்ட மக்களுக்கான சட்டம் இயற்றப்பட வேண்டிய அவசியத்தை உணர்ந்தனர். இந்துக்களுக்கான சட்டத்தை எழுதியவர் ஜெகநாத பஞ்சனனா. அவருடைய ஊர், அவருடைய வயது, அவருடைய மாணவர்கள் என்ற முழு விவரத்தையும் தருகிறார் ஆனைமுத்து. பாயக்காரி நூலில் ஜெகநாத பஞ்சனனா பற்றி ஒரு வரி வருகிறது என்றால் ஆனைமுத்து ஐயா அவரைப் பற்றிய முழு வரலாற்றையும் சொல்லுகிறார். ஜெகநாத பஞ்சனனா எழுதிய அந்த நூலை கோல்புர்க் என்ற பிரிட்டீஷ் அதிகாரி, ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். நிலம் யாருக்கு எந்த முறைகளில் பாத்தியதையாக இருந்தது என்ற விவரத்தை நாயகர் அந்த சட்டங்களால் உணர்ந்து, நியாயமான முறையில் வாதிட்டார் என்பதை ஆனைமுத்து தரும் தகவல் மூலம் அறிய முடிகிறது.
எனுகுல வீராசாமி எழுதிய `காசி யாத்திரை’ என்ற பயண நூல் குறித்து நாயகர் சில வரிகள் சொல்கிறார். ஆனைமுத்து அவர்கள் எனுகுல வீராசாமியின் பயண அனுபவத்தையும் அதன் மூலம் இந்திய சரித்திரத்தையும் நமக்கு ஆவணமாக அள்ளித் தருகிறார். நிலத்தின் உரிமையாளருக்கும் அரசனுக்குமான உறவு எத்தகையது என்பதை நாயகர் அந்த காசி யாத்திரை நூலின் மூலமே பெறுகிறார். செங்கல்பட்டில் இருந்த உழவு நிலங்கள் யாருக்கெல்லாம் உரிமையாக இருந்தது என்பதை கல்வெட்டு ஆதாரங்களுடன் நாயகர் எடுத்துரைப்பதற்கு அந்த நூல் அடிப்படையாக இருந்தது. வன்னியர்கள், வெள்ளாளர்கள், பிராமணர்கள் உள்ளிட்ட பிரிவினருக்கு அவை எத்தனை விழுக்காடு என்ற அளவில் இருந்தது என்ற விவரம் முக்கியமானது. ஆனால், தெலுங்கு ரெட்டியார்களுக்கும் கொண்டுவிட்ட வெள்ளாளர்களுக்கும் பிராமணர்களுக்குமாக அவை நவாபுகளின் மிகக் குறுகிய ஆட்சிக்காலத்தில் மாறிவிட்டதைப் பதிவு செய்கிறார் நாயகர். உண்மையான நில உரிமையாளர்கள் கூலிக்கு மாரடிப்பவர்களாகவும் ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் அல்லும் பகலும் பாடுபட்டாலும் கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வழி இல்லாமல் செத்து மடிகிறவர்களாகவும் இருப்பதைக் கண்ணீரோடு எடுத்துரைக்கிறார் நாயகர். அவர் வாழ்நாளில் பெரும்பகுதியை ஆங்கிலேயர்களிடம் நீதி கேட்டுப் போராடவும் ஆதாரங்களைத் திரட்டவுமே செலவிட்டதை ஆனைமுத்து தரும் விளக்கங்கள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. நாயகரின் வாழ்வும் அய்யாவின் வாழ்வும் இந்த விதத்தில் மிகுந்த ஒற்றுமை நிறைந்ததாக உள்ளது. அதனாலேயே என்னுடைய நாவலை ஆனைமுத்து அய்யாவுக்கு உரித்தாக்கினேன்.

முனுசாமி நாயகர் ஆசிரியராக இருந்து நடத்திய தத்துவ விவேசினி பிரதிகளை அந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த அண்ணாசாமி நாயகரின் பெயரன் சிவசங்கரனைக் கண்டு இதழ்களைப் பெற்று, தொகுப்பு நூலாக சிறப்பாகப் பதிப்பித்தது அய்யாவின் மாபெரும் தொண்டு. வாசாலா வெங்கடேசன் என்பவரிடமிருந்து பாயக்காரி நூலின் முதல் பிரதியைப் பெற்று மறுபதிப்பு செய்தது அய்யாவின் பாதம் தொட்டு வணங்க வேண்டிய பணி.
இத்தகைய தகவல்கள்தான் நாவலின் ஆதாரம். நான் நாவல் எழுதுவதற்கான அத்தனைத் தகவல்களையும் எனக்குத் தட்டில் வைத்துக் கொடுத்துவிட்டார் ஆனைமுத்து. அய்யா ஏறத்தாழ நாவலை எழுதிவிட்டார் என்றே சொல்ல வேண்டும். நாவலில் வேங்கடாசல நாயகரின் காலத்து சென்னையைப் பின்னணியாக்குவதும் அவருடைய குடும்பம், நண்பர்கள், அன்றாடம் அவர் எதிர்கொண்ட சவால்கள் குறித்து கற்பனை செய்வது மட்டுமே எழுத்தாளானாக என்னுடைய வேலையாக இருந்தது.
ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு நில மோசடியை, பல லட்சம் பேரை வாட்டி வதைத்த கொடுமையைத் தன் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர் அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர். மிகத் துணிச்சலான பகுத்தறிவுவாதி. அன்றைய நாத்திக சங்கத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றியவர். 98 ஆண்டுகள் அவருடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களைப் புனைவாக எழுதுவது கத்தி மேல் நடக்கிற கவனத்துடன் செயல்பட வேண்டி இருந்தது.
பாயக்காரிகள் நூலை முதலில் ஆங்கிலத்தில் எழுதிய நாயகர், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தலைமை இடங்கள் அனைத்துக்கும் அனுப்பி வைத்தார். பிறகு அவரே அதைத் தமிழில் எழுதினார். இது 1872இல் நடந்தது. அதன் பிறகு பத்து ஆண்டுகள் கழித்து இந்து மத ஆசார ஆபாச தர்சினி எழுதினார். செங்கல்பட்டு மக்களின் நில உரிமைக்காகக் குரல் எழுப்பியவர், ஒட்டுமொத்த தமிழ் மக்களின், ஏன் இந்திய மக்களின் மூடநம்பிக்கையை ஒழிக்க மிகத் துணிச்சலாகக் களமிறங்குவதை அறிய முடிகிறது.
ஒரு மாமேதையாகவும் சமூகப் போராளியாகவும் நாடே கொண்டாட வேண்டிய நாயகர் அவர்கள் அவர் இறந்த மிகச் சில ஆண்டுகளிலேயே மறக்கப்பட்டது காலத்தின் கொடுமை. பெரியாரும், ஆனைமுத்துவும், குரு.ராமலிங்கமும், `ஐந்திணை’ குழ.கதிரேசனும், முனைவர் க.ரத்தினமும், முனைவர் வீ.அரசுவும் அவருடைய நினைவைத் தக்கவைத்த பெரும்பணியை செம்மையாகச் செய்தவர்கள். அந்த வரிசையில் நாயகரின் வாழ்வை நாவலாகப் பதிவு செய்த அரும்பணி எனக்கும் வாய்த்தது எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.