இணைய இதழ் 113சிறுகதைகள்

விந்தை நியாயங்கள் – ஹேமா ஜெய்

சிறுகதை | வாசகசாலை

“பதினொன்னு ஆனாலும் குளிக்காம சுத்துவீங்க. இன்னிக்கென்ன அதிசயம் எட்டுக்கெல்லாம் குளிச்சு உடுத்தி நெத்தில பட்டை போட்டாச்சு” வேகமாகத் தயாராகிக் கொண்டிருந்த நவகீர்த்தனை விஜயா கேள்வியுடன் பார்த்தாள்.

“சுத்திலும் புல்லு மண்டிக்கிடக்குனு நீதானே புலம்புன. அதான் ஆளு சொல்லியிருக்கேன். அப்படியே மேலயும் ரூம் போடலாமானு யோசனை. நாளைப்பின்ன பேரன் பேத்தினு வந்தா இடம் பத்தாதுல்ல?”

“அடேங்கப்பா! நானும் எத்தனையோ முறை சொல்லியாச்சு. காதுலயே போட்டுக்கல. இப்பதான் ஐயாவுக்கு ஞானம் பிறந்திருக்காக்கும்” என்றாள் விஜயா நொடிப்புடன்.

“அட எவடா இவ? தோணாம என்ன? காசு செலவு பண்ண தயாராயிருந்தாலும் செய்றதுக்கு ஆள் அமைய வேண்டாமா? கூலி வேலைக்கு இப்ப எங்க ஆள் கிடைக்குறாங்க? நேத்து ரேஷன் கடைல பரசுவை பார்த்தேன். இன்சூரன்ஸ் வேலையோட இந்த மாதிரி ஆளு புடிச்சும் தர்றானாம். அவன்தான் நல்ல வேலைக்காரங்க இருக்காங்க, அனுப்புறேன்னான்”

“பரவால்லயே. ஏங்க, வர்ற ஆளுங்களை பிடிச்சு வச்சு ஒழுங்கா வேலை வாங்கப் பாருங்க, ஏதாவது குதர்க்கம் பேசி துரத்தி விடாம”

“அது எனக்குத் தெரியாது பாரு. போடி, போய் டிபன் எடுத்து வை. அவனுங்க வந்துட்டா கூட நின்னு கண்காணிக்கவே நேரம் சரியாயிருக்கும்” என்றவர், “ஆனா, வருவானுங்களோ என்னமோ? யாரு சொன்ன மாதிரி சொன்ன நேரத்துக்கு வர்றானுங்க?” என்றும் சொல்லிக் கொண்டார். ஆனால், அவருடைய சந்தேகத்திற்கு வேலை வைக்காமல் எட்டரைக்கே “சார்” என்ற குரல் கேட்டது வாசலில்.

பரசு சொன்னவிதத்தில் இருவர் நின்றிருந்தனர். “வேலைன்னு…..” என்றனர் இவர் பார்வை பட்டதும்.

“ம்”மென்ற உறுமலுடன் உள்ளே வருமாறு கைகாட்டினார் நவகீர்த்தன்.

கிரில் கதவு திறந்து அவரெதிரே வந்து நின்றவர்களைக் கண்கள் மேலும் கீழுமாக அளந்தன. ஒருவனுக்கு இளவயது. இன்னொரு ஆளுக்கு மத்திய வயதிருக்கும். அவர் எதிர்பார்த்தது போல அழுக்குச் சட்டையும், கழுவாத முகமும், வாயில் பான்பராக் கறையுமாக இல்லாமல், சுத்தமான பேண்ட் சட்டையில் நேர்த்தியாக உடையணிந்திருந்தனர்.

“தோட்டத்தை சுத்தம் பண்ணனும். செய்வீங்களா?” சுற்றிலும் சீர் கெட்டிருந்த நிலத்தைக் காட்டியவர், “அட! நான் வேற தமிழ்ல பேசுறேன். புரியுமா?” என்றார்.

“புரியுங்க சார்” என்றனர் ஒருமித்த குரலில்.

“பரவால்ல… வரும்போதே கத்துக்கிட்டு வந்திடுறீங்க” என்றார் நவகீர்த்தன் ஒருவித நக்கல் சிரிப்புடன்.

“உங்க ஆளுங்கதானே ரயிலு முழுக்க அடைச்சுட்டு வந்து இறங்குறீங்க. இப்பல்லாம் எதிர்ல பார்க்குற பத்துல நாலு உங்க மூஞ்சிதான். தெருவுக்கு நாலு பானிப்பூரி கடை வந்துடுச்சு. ஹோட்டலு, ஒர்க்ஷாப்னு எல்லா இடத்துலயும் உங்க ராஜ்ஜியம். ஹ… போறபோக்கை பார்த்தா வீடு நிலம்னு வாங்கி நீங்க இங்க டேரா போட, நாங்கதான் ஊரை காலி செஞ்சுட்டு போகணுமாட்டம் இருக்கு”

அவர் கீழ்ப்பார்வையும் ஏளன சிரிப்புமாகப் பேச, அத்தொனி பழகியதுதான் என்பது போல இருவரும் சலனமேயில்லாமல் நின்றிருந்தனர்.

“சரி, முதல்ல தோட்டத்தை சுத்தம் பண்ணுங்க. புதரெல்லாம் வெட்டி சமப்படுத்தணும். செடிங்களை ஒழுங்கு பண்ணி தண்ணியோடற பாதை கட்டணும். மேல ரூம் போடுற ஐடியா வேற இருக்கு. இருக்குற வாட்டர் டேங்க் தண்ணி போதல. இன்னொரு சின்டெக்ஸ் ஏத்தணும். கொத்தனார் வேலை, பிளம்பிங்கெல்லாம் தெரியுமா?”

“தெரியுங்க”

“இப்ப தலையாட்டிட்டு வேலை தெரியாம முழிச்சா தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு”

“இல்லைங்க சார். எல்லா வேலையும் செய்வங்க”

‘அப்பாடா! தனித்தனியாக ஆள் தேடி அல்லாட வேண்டாம்’ நிம்மதி பெருமூச்சுக்கிடையிலும் அவருடைய இடக்கு அடங்கவில்லை.

“அது சரி. காசு சொளையா கிடைக்குதுனா ஏன்பா செய்ய மாட்டீங்க? நமக்குதான் அங்க மவுசுனு எல்லாத்தையும் தெரிஞ்சுகிட்டு வந்துடுறீங்க, சாமர்த்தியம்தான்யா. சரி, வேலையை ஆரம்பிச்சிட்டு பாதில ஓடிடக்கூடாது. சாப்பிடுறதுக்கு ஒரு மணிநேரம், டீ குடிக்க ஒரு மணிநேரம்னு பொழுதைக் கழிக்காம வேலையை சட்டுபுட்டுனு முடிக்கணும். சரியா?”

“சரிங்க சார்”

“இருங்க. பரசுட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வந்துடறேன்” அவர் உள்ளே போய்விட்டு வெளியே வருவதற்குள் சட்டையைக் கழற்றி வைத்து இருவரும் தோட்டத்தில் இறங்கியிருந்தனர். ‘பரவாயில்லையே! முன்பணம் வேணும். டூல்ஸ் எடுத்துட்டு வரணும், நாளைக்கு வரேன்னு சாக்கு போக்கு சொல்லாம சட்டுனு இறங்கிட்டானுங்க. இவனுங்கள வெச்சே எல்லாத்தையும் முடிச்சுக்கணும்’ என்று கணக்கிட்டவர், “ஏய் விஜயா, வேறென்னென்ன சில்லறை வேலை இருக்குனு யோசிச்சு சொல்லு. அப்புறம் சிங்க் ஒழுகுது. பாத்ரூம் குழாய்ல தண்ணி வரலனு நாளைக்கு குறை படிக்காத” என்றார்.

எட்டிப்பார்த்த விஜயாவின் முகத்திலும் மெச்சுதல் வந்து போனது. “அட! அதுக்குள்ள பசங்க வேலைய ஆரம்பிச்சிட்டாங்க”

“பஞ்சம் பொழைக்க வர்றவனுங்க… கிடைக்குற வேலையைத் தக்க வச்சிக்கிட்டா தான் உண்டுனு மடமடனு இறங்கிட்டானுங்க. சரி, கொஞ்சம் டீ வச்சு கொடேன். தாகமா இருக்கு. அடியேய்! நீ வேற அவனுகளுக்கும் சேர்த்து போடாத… பேசின காசை கொடுத்தா போதும். அதுக்கே சலாம் போட்டு வாங்கிட்டு போவானுங்க, புரியுதா?”

“புரியுது சாமி. புரியுது” விஜயா முனகிக்கொண்டே உள்ளே சென்றாள்.

அடுத்தவிரு மணி நேரங்களிலேயே புல்புதர்கள் அகற்றி செப்பனிடப்பட்டு, பாத்ரூமில் இருந்து வரும் தண்ணீர் வரத்து சரி செய்யப்பட்டு, ஓரமாய்க் கிடந்த செம்மண்ணை வெட்டி செடி கொடிகளுக்குப் பரத்தி எனத் தோட்டம் பளிச்சென்றானது. விஜயாவால் நம்பவே முடியவில்லை. “அட, நம்ம தோட்டமா இது?” என்று சுற்றிச் சுற்றி வந்தாள்.

மதிய உணவுக்குக் கூட அவர்கள் நேரம் எடுக்கவில்லை. பத்தே நிமிடத்தில் கொண்டு வந்த உணவை வேகமாகக் கொத்தி தின்றுவிட்டு, “அடுத்த வேலைங்க சார்” என்று வந்து நின்றனர்.

மாலை நான்கு மணிக்குள் விஜயா சொன்ன சமையலறைக் குழாய் அடைப்பு, காரை பெயர்ந்த இடங்களைப் பூசுவது, நெடுநாட்களாக ஒழுகிக் கொண்டிருந்த பைப்பை சரி செய்வது என்று நிறைய சில்லறை வேலைகளும் நடந்துவிட்டன. வேலை நேரம் முடிந்தும் செல்லாமல் மாடிக்குச் சென்று ரூம் அளவுகளை அளந்து குறித்து விட்டுதான் இருவரும் கிளம்பினார்கள்.

“மாடா உழைக்கிறானுங்க. ஒரு டம்ளர் டீ தர உங்களுக்கு மனசு வரல” விஜயா முனக, “கடைசியாக போகும்போது அஞ்சு பத்து சேர்த்து கொடுக்கலாம். நீ சும்மா இழுத்து விடாதே. அப்புறம் அதுவே வழக்கமாகிடும்” என்றார் நவகீர்த்தன்.

“சரியான கஞ்சமகாப்பிரபு!” நவகீர்த்தன் அவளைச் சட்டை செய்யாமல் சட்டையைப் போட்டிக் கொண்டவர்களிடம் சென்றார்.

“நாளைக்கு காலைல சீக்கிரம் வந்துடணும். வெயிலுக்கு முன்னாடி ஆரம்பிச்சாதான் வேலை ஒழுங்கா நடக்கும், புரியுதா? இப்ப கிளம்புங்க”


தலையாட்டியவர்கள் தயங்கி நின்றனர்.

“என்ன?”

“இன்னிக்கி கூலி…”

“பரசுட்ட கொடுக்கிறதாதானே பேச்சு. அவன்கிட்ட வாங்கிக்குங்க”

“சார்” அப்போதும் கிளம்பாமல் நின்றபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டவர்கள், அவருடைய கறார் முகம் கண்டு வேறுவழியின்றி புறப்பட்டனர்.

“பாதிக்குப் பாதி கொடுத்தா என்ன? ரொம்ப பண்றீங்க”

“உனக்கொன்னும் தெரியாது, சும்மா இரு. ஊர் பேர் தெரியாதவனுங்க யார் எப்படினு சொல்ல முடியாது. வாங்கிட்டு அப்படியே கழண்டுகிட்டா? நாமதான் ஜாக்கிரதையா இருக்கணும்” விஜயாவிடம் வள்ளென்று விழுந்தவர், தூரத்தில் வரும் பழகிய ஸ்கூட்டர் சத்தத்தில் புன்னகைத்தார்.

“நம்ம கணேசன் வர்றான் போல”.

வந்தது அவர் நினைத்தது போலவே அவருடைய பால்ய நண்பர் கணேசன்தான். பணி ஓய்வுக்குப்பின் இந்த ஏரியாவிலேயே கணேசனும் அபார்ட்மெண்ட் வாங்கி வந்துவிட, வாரமொருமுறையாவது சந்தித்து விடுவார்கள்.

“எப்படி இருக்கப்பா?” நல விசாரிப்புகளுக்கு இடையே விஜயா தந்த காபியை அருந்தி அளவளாவியவர்கள் அப்படியே வாசலில் அமர்ந்துவிட்டார்கள்.

“இடம் ஜோராகிடுச்சே” செம்மையாகத் தெரிந்த சுற்றுப்புறத்தைக் காட்டிக் கேட்டார் கணேசன்.

“ஆளுங்க வந்தாங்க சுத்தம் பண்ண” என்ற நவகீர்த்தன், மாடியில் செய்யவிருக்கும் வேலைகள் பற்றியும் சொன்னார்.

“நல்லதுதான். கையோட செஞ்சுடு. பையனும் மருமகளும் நல்லா இருக்காங்களா? பாஸ்டன் எப்படி இருக்காம்?” என்றார் கணேசன்.

நவகீர்த்தன் சுரத்தில்லாமல் “ம்ம்”மென்றார்.

“லீவுக்கு வர்றாங்களா?”

“இல்லப்பா. இருக்குற விசா பிரச்சனைல அவன் வர்றது கஷ்டம். பார்க்கணும்னா நாங்கதான் போகணும் போல. அவனும் வர சொல்றான். போனமுறை எங்களுக்கு எடுத்த விசா காலாவதியாகாம இருக்குல்ல”

“சந்தோசமா போய்ட்டு வாங்களேன். என்னப்பா ஏதாவது விசேஷமா?”

“விசேஷமொன்னுமில்ல கணேசா. இப்பதான் குழந்தை பிறந்தாலும் அந்த ஊரு சிட்டிசன் இல்லன்னு சொல்றாங்களே. அதுவொரு கொடுமைனா இவன் வேலைலயும் சங்கடமான நிலைமை. போன வாரம் ரொம்ப மனசு கஷ்டப்பட்டு பேசினான். நீ ஒன்னும் கவலைப்படாத. எல்லாம் சரியாகும். நானும் அம்மாவும் வந்து கொஞ்ச நாள் இருக்கோம்னு தைரியம் சொன்னேன்”

“ஏன், என்னாச்சு? பிரமோஷன் வரப்போகுதுனு அன்னைக்கு சந்தோசமா சொல்லிட்டுருந்தியே?”

“அதுலதான்பா பிரச்சனையே. கடைசி நிமிஷத்துல அந்த ஊரு ஆளுக்கே குடுத்துட்டானுங்க போல. நம்ம பசங்களுக்கு என்ன திறமை இருந்தாலும்… ப்ச்.. நிறம் இருக்குது பாரு, நிறம். அதுதான் முன்ன வந்து பேசுது. இதெல்லாம் வெளில தெரியாதுப்பா. உள்ளுக்குள்ளயே ஊறுற விஷம். ப்ச்..எவ்வளவு உழைச்சாலும் அதுக்குரிய மதிப்பு கிடைக்கலையேன்னு ரொம்ப கவலை பையனுக்கு”

“என்னப்பா இது? அமெரிக்கானாலே ஆயிரத்தெட்டு பிரச்சினையா இருக்கு இப்ப”

“அதையேன் கேட்குற? இஷ்டத்துக்கு எல்லாத்துலயும் கைவச்சு மாத்த அமெரிக்கா என்ன இவனுங்க அப்பன் வீட்டு சொத்தா? எங்கெங்க இருந்தோ வந்த ஜனங்க கட்டமைச்ச நாடுதானே அது. வந்தேறிகள் உருவாக்கிய நாடுனு தான் சொல்வாங்களே. என்னமோ இவனுங்கதான் பூர்வக்குடி மாதிரியும், வெளிலருந்து வந்தவங்க அகதி மாதிரியும் தள்ளிவைக்கிறது என்ன மாதிரியான மனநிலை பாரு… சொல்லப்போனா ஆதிகுடிகளா இருந்த செவ்விந்தியர்களை விரட்டிட்டு முகாம் போட்டவங்கதான் இப்ப இருக்குறவங்க. இதுல அடுத்தவனுக்கு மட்டும் ஆயிரம் சட்டதிட்டம் சொல்லிட்டு…”

“அதைச் சொல்லு” கணேசன் ஆமோதித்ததில் நவகீர்த்தனின் ஆவேசம் அதிகரித்தது.

“சொல்லப்போனா இந்தப் பூமிக்கு யாருப்பா எல்லைக்கோடு விதிக்க முடியும்? காத்தும், மண்ணும், மழையும், கடலும் எல்லாருக்கும்தானே சொந்தம். யாரும் எங்கயும் போய் பிழைக்கலாம். திறமையிருந்தா பெரிய இடத்துக்கு வரலாம். அதுதானே நியாயம். தர்மம். இவனுங்க யாரு இஷ்டத்துக்கு கோடு வரைஞ்சு ‘நீ வா, நீ வராதே, நீ கீழ போ, நீ மேல வா’னு சொல்ல? என்னவொரு அதர்மம் பாரு. நாள் போகப்போக மனுஷ புத்தி முன்னேறிப் போகாம பின்னாடிதான் இழுத்துட்டுப் போகுது. உலகமே பிற்போக்கா ஓடுற மாதிரியிருக்கு” அவர் பொரிந்து தள்ள…

வீட்டுக்குள்ளிருந்த விஜயா மட்டுமல்ல, அவரது பேச்சை வியப்புடன் கவனித்துக் கொண்டிருந்த மண்ணும், காற்றும், மரங்களும், அகன்ற ஆகாயமும் கூட, ‘அட! என்ன அறம்! இதுவல்லவோ அறம்!’ என்று தங்களுக்குள் தலையாட்டிச் சிரித்துக் கொண்டன.

hemajaywrites@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button