இணைய இதழ்இணைய இதழ் 91தொடர்கள்

நுனிப்புல் – சுரேஷ் பிரதீப் – பகுதி 01

தொடர் | வாசகசாலை

காலிகிராபி – வரவணை செந்தில்

ரவணை செந்திலின் ‘காலிகிராபி’ ஆறு சிறுகதைகள் மட்டுமே கொண்ட சிறிய சிறுகதைத் தொகுப்பு. சால்ட் பதிப்பகம் இந்நூலினை வெளியிட்டு இருக்கிறது. சென்ற வருடம் எழுத்தாளர் கே.என்.செந்தில் இளம் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்புகளை முன்வைத்து ஒரு உரையாற்றினார். அவ்வுரையில் இந்நூலினைப் பற்றிய ஆச்சரியத்தை வெளிப்படுத்தி இருந்தார். கறாரான விமர்சன நோக்கு இலக்கிய விமர்சகர்கள் பலரிடமும் இருந்தாலும் அதை எழுத்தில் முன்வைக்கத் தயங்குகிறார்கள். கே.என்.செந்தில் அத்தகயை தயக்கங்கள் எதுவுமில்லாமல் பேசவும் எழுதவும் செய்கிறார். ஆகவே, இந்நூலினை சந்தேகம் எதுவும் இன்றியே அணுகினேன். 

எழுத்தாளர் வரவணை செந்தில்

நூலின் முதல் கதையான ‘காலிகிராபி’ பத்திரப்பதிவு எழுத்தரான பூலோகம் பிள்ளையை மையமிட்டு நடக்கிறது. இக்கதையின் தொடக்கத்தில் பத்திரப்பதிவு அலுவலகத்தை விவரிக்கும் மொழியில் ஒரு தேர்ந்த எழுத்தாளன் வெளிப்படுவதைக் கண்டு கொள்ள முடிகிறது. பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து பத்திரமெழுதுகிறவர்கள் பற்றிய சித்திரத்தை இப்படி அளிக்கிறார்.

“அந்த அலுவலக வாசல்களில் உள்ள தரைதான் அவர்களின் அலுவலகங்கள். அதைக் கூட்டிப் பெருக்கி, சாணி தெளித்து வைத்திருப்பார்கள். சாணியின் டிகிரி கலவை ஆளாளுக்கு மாறுபடும். தெளிந்த சதுரங்களில் நிறம் கூடக்குறைய இருப்பதைக் கொண்டு அடையாளம் காணலாம்.”

மருமகள் தன் தகுதிக்கு இணையானவளாக இல்லாததால் மலத்தினை அவள் இலையோரம் வைத்து தின்னச் சொல்லும் பூலோகம் பிள்ளை யாரென்றே தெரியாத, ஒரு வட இந்தியனின் குழந்தையை ஈன்ற பெண்ணிடம் காட்டும் பரிவே கதையாகிறது. மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் இக்கதையை செந்தில் வனைந்திருக்கிறார். முதல் கதையை இத்தகைய எதிர்பார்ப்பை உருவாக்குவது ஒரு வகையில் நல்லதென்றாலும்கூட அடுத்தடுத்த கதைகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படி அமையாதுபோக வாய்ப்புண்டு. 

சாதியத்தின் குரூரங்களை அழுத்தமாகப் பேசும் கதை ‘மூங்கைப் பெருந்தவம்’. கூத்து கட்டும் பெத்தவாண்டு, அவன் தங்கை அனுசியா, அவள் வளர்க்கும் கரியன், கரியன் வளர்க்கும் சலுப்பை என்று நகரும் கதையில் கரியனின் ஒரு “எதிர்செயல்” பெரும் மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது. கதை முடிவில் கரியனிடம் உருவாகும் மௌனம் கதையின் அடர்த்தியைக் கூட்டி விடுகிறது. 

‘செல்லக்கிறுக்கி’ என்ற கதை இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்றே நினைக்கிறேன். 

செல்லக்கிறுக்கி கதையைப் போன்றே பகடி தொனிக்க எழுதப்பட்டிருக்கும் ‘ஆதியிலே ஒரு வார்த்தை இருந்தது’ வலுவான அதேநேரம் புன்னகைக்க வைக்கும் முடிவினால் நல்ல கதையாகிறது. கதை சொல்லி ரயிலில் ஏற முண்டியடிக்கிறான். அந்த அவசரத்தில் ஒரு கிழவருடன் சண்டைபோட நேர்ந்து அவரை அறைந்து விடுகிறான். கிழவரின் மொத்த குடும்பமும் ரயிலில் இருக்கிறது. கதைசொல்லியின் மனைவி வழக்கமான ஒருத்தியாக சித்தரிக்கப்படவில்லை. யார் குடும்பத்துடன் இவன் பிரச்சினை பண்ணினானோ அவர்கள் முன்னே இருக்கவே தன் கணவனை குறைபட்டுக் கொள்கிறாள். கிழவரின் குடும்பம் உருவாக்கும் சங்கடங்களுக்கு இணையாகவே அவன் மனைவியும் தொல்லையைக் கூட்டுகிறாள். கதையின் போக்கும் முடிவும் நன்றாகவே இருந்தாலும் இடையிடையே இடம்பெறும் சினிமா வசனங்களை தவிர்த்திருக்க வேண்டும். ஒரு படைப்பாளி உணர்வினைக் கடத்துவதற்கு தன் மொழிக்கு அப்பாற்பட்ட ஒன்றை “அப்படியே” எடுத்துப் பயன்படுத்துவது எவ்வகையிலும் கதைக்கு வலு சேர்க்காது. 

‘மம்மூதன்’ ஒரு அழகிய தொன்மத்துடன் தொடங்குகிறது. அத்தொன்மத்தின் உணர்வுக்கு மாறான மற்றொரு கதை இரண்டாவதாகச் சொல்லப்படுகிறது. காதலை இவ்விரு கதைகளும் எவ்வாறு அணுகி இருக்கின்றன என்பதைக் காட்டுவதே கதையின் நோக்கமாக இருக்கிறது. முதல் கதையில் காதலைவிட வீரமும் மானமும் பெரிதாகின்றன. இரண்டாவது கதையில் காதலே பிரதானமாகிறது. முதல் கதையை சொல்வது ஆண் என்பதும் இரண்டாவது கதையைச் சொல்வது பெண் என்பதும் கூட இந்த நிறமாற்றத்துக்கு காரணமாக இருக்கலாம்!

தொகுப்பின் இறுதிக்கதை ‘வாட்போக்கி’. காலிகிராபி, வாட்போக்கி என்ற இரு கதைகளிலும் செந்திலிடம் ஒரு நாவலாசிரியரை அடையாளம் காணமுடிகிறது. சிக்கனமான சொற்களின் வழியே சூழலை வலுவாகக் கட்டமைக்கிறார். தேநீர் கடையில் பேருந்து எப்போது வரும் என்று நேரடியாகக் கேட்கக் கூச்சப்பட்டு பத்து ரூபாய் கொடுத்து தேநீர் வாங்கி “உரிமையுடன்” அதைக் கேட்கும் நாகம்மாவை அறிமுகம் செய்வதிலேயே நாகம்மாளின் வாழ்க்கை நம்மிடம் சொல்லப்பட்டு விடுகிறது. நாகம்மாள் சிறுமியாகத் திரிந்ததில் இருந்து வாழ்க்கையில் எண்ணற்ற இன்னல்களை சந்தித்ததுவரை, ஒரு மினிபஸ் பயணத்தில் மகளுடன் தன் பேரனை ஒரு சாமியாரிடம் நாகம்மாள் அழைத்துப்போகும் இடைவெளியில் சொல்லப்படுகிறது. கதையின் முடிவு ஏறத்தாழ யூகிக்கக்கூடியதாக இருந்தாலும்கூட நாகம்மாளுக்கும் சாமியாருக்குமான எதிர்வின் வழியாக இக்கதையில் ஒரு மர்மம் நுழைகிறது. மனைவியின் தவறான நடத்தை காரணமாக சாமியாராகும் ஆண். தன்னால் எவ்வகையிலும் கட்டுப்படுத்த முடியாத சூழலால் ஒழுக்கங்கெட்டவள் என்று அறியப்படும் பெண். இருவருக்கும் இடையேயான தூரத்தை ஒரு தரப்பைச் சொல்லாமலேயே சித்தரித்து இருப்பது இக்கதையின் பலம்.

வரவணை செந்தில் தமிழ்ச்சூழலுக்கு ஒரு நல்வரவு. ஆனால், நல்வரவு கூறும்போது நல்லதை மட்டுமே சொல்ல வேண்டுமா என்ன! இக்கதைகளில் தொனியில் ஒரு சிறிய இடர்பாடு இருக்கிறது. ஒருவகையில் எதிர்காலத்தில் செந்திலின் பலமே அதுவென்றாகவும் வாய்ப்பிருக்கிறது. சிறுகதைகள் இலக்கு நோக்கிப் பாயும் அம்புபோல இருக்க வேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. தற்போதையை சிறுகதைகள் சொற்களின் எண்ணிக்கை கூடியவையாக இருக்கின்றன. அது சிக்கல் இல்லை. ஆனால், எவ்வளவு விரிந்து செல்லும்போதும் சிறுகதை தான் விவாதிக்க விரும்பும் மையத்துடன் பலகீனமாகவேனும் கதையுடல் தன்னை பிணைத்துக் கொண்டிருக்கும். அதுவே இயல்பும்கூட. ஆசிரியரின் பிரக்ஞை படைப்பினுள் வலுவாகச் செயல்பட்டிருப்பதற்கான தடயம் அது. 

ஆனால், இத்தொகுப்பில் உள்ள கதைகள் நோக்கம் சார்ந்த தெளிவினைக் கொண்டிருப்பது போலத் தெரியவில்லை. மூங்கைப் பெருந்தவம் என்ற கதை நீங்கலாக மற்ற அனைத்து கதைகளிலும் கதையின் குவிமையம் மாறிக்கொண்டே இருக்கிறது. உதாரணமாக காலிகிராபி கதையில் பூலோகம் பிள்ளை அவருடைய அப்பா என்று செல்லும் கதையில் இருக்கும் ஒருமை, அவருடைய மகனை உள்ளே நுழைக்கும்போது சிதறுகிறது. நிறைய சொல்லிவிட வேண்டும் என்று அவசரமே இத்தகைய தன்மையை கதைகளில் உருவாக்குவதாகத் தோன்றுகிறது. இந்த அலைச்சல் நாவலாசிரியர்களின் குணம். இத்தொகுப்பில் இது பலவீனமாகத் தெரிந்தாலும்கூட, நீண்டகால நோக்கில் இதையொரு நேர்மறை அம்சமாக மாற்றிக் கொள்ள ஆசிரியரால் இயலும் என்றே நினைக்கிறேன்.

இக்குறைபாட்டினை தவிர்த்துப் பார்க்கும்போது காலிகிராபி வாசிக்கப்பட வேண்டிய நல்லதொரு தொகுப்பு. 

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்

(தொடரும்…) 

*******

sureshpradheep@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button