கவிதைகள்
Trending

கவிதை- நரன்

என் கதை

எலுமிச்சையின் பழமையான அம்மாவை போலிருந்தார்கள்
நர்த்தங்காயும், கடாரங்காயும்.

மண்ணுக்குள் சேனையையும், கருணைக்கிழங்கையும் போல் வளர்ந்தேன்
வெளியே வெற்றிலைக்  கொடிகளைப் போல் கூரையேறியும், மரமேறியும்

மீன்கள்- அழுக்குகளையும் திண்பவன்.

பசி- கனியென சொல்லி எனக்கு சில கற்களை வழங்கினார்கள்- அதனாலென்ன.

என் கனி- கற்கனி அதில் அழுகலில்லை
என் உணவு- மலைத்தேன். அதில் ஊசலில்லை
என் உலோகம்- தேனிரும்பு. அதில் துருக்களில்லை

எனக்கு வாய்த்தது கழிவு நீர் வளர்த்த ஒரு பருத்திச்  செடி
கழிவுப்  பஞ்சுகளிலிருந்து கொஞ்சம் நூல்; கழிவு நூல்களிலிருந்து கொஞ்சம் துணி;
கழிவுத்  துணியிலிருந்து ஒரு ஆடை; அக்கழிவு ஆடை போர்த்தவென என் நலிந்த உடல்

ஊரில்

மடியெல்லாம் நூற்றின் முலைக்காம்புகள் கொண்ட பன்றியொன்றிருந்தது.
அதன் ஒவ்வொரு முலையிலும் வெவ்வேறு வாய்கள்.
பட்சிகளும், ஆநிரைகளும், சர்ப்பங்களும், புள்ளினங்களும், புழுக்களும், மீன்களும்
……. என்னுடையதும்.
தெய்வத்தின் பிள்ளைகளும் கூட அதில் பாலருந்தின.

ஊரில்

மலையுச்சியிலிருந்து கீழிறங்குவது மாதிரியோ
மலையுச்சிக்கு மேலேறுவது மாதிரியோ ஒரு அருவி
மற்றும் அதே போலொரு மலைப்பாம்பு.

அவ்- வளைவு வளைவான பாதை
நானதன் மேலேறி- அல்லது அதன் வயிற்றுக்குள்ளேயே நடந்து செல்வேன்.
வழியில் சுனை உண்டு; மரநிழல் உண்டு; சில நேரம் பாம்புகளே கூட குறுக்கே செல்வதுமுண்டு
காலத்திற்குள் ஒளிந்திருக்கும் காலம் போல

ஒரே நேரத்தில்

பேதையாயும்
பெதும்பையாயும்
மங்கையாயும்
மடந்தையாயும்
அரிவையாயும்
தெரிவையாயும்
பேரிளம்பெண்ணாயும்

வாழ்ந்தவள் ஒருவளுண்டு

காதலிக்கும் போது எங்கள் இருவருக்குமிடையே ஒரு மின்சாரவேலி.
நாங்கள் மின்தடை காலங்களை நேசித்தோம்.

ஆட்டின் ஒவ்வொரு கால்களையும் ஒவ்வொரு மேய்ப்பன் மேய்த்தான்
நான் 92 கால்கள் கொண்ட ஒரே ஆட்டை மேய்த்து பொருளீட்டினேன்.

உலகின் அத்தனை அதிகாரமும் பொருந்திய ஒரு நாட்டில்
உலகத்தின் எல்லா சிங்கங்களையும் கணினியில் பார்த்து ஒருவன் மேய்கிறான்.
என் ஆட்டை சிங்கங்களிடமிருந்து காப்பேன்.

என்னிடம் உண்டிவில்லும், கருங்கல் மலையுமிருக்கிறது.
கருங்கற்கள் குலக் குரு.
அமைதியையும், ஆழ்ந்த மௌனத்தையும் அவை கற்பித்தன.
இருளறைகளில் வைத்து போராட்டங்களையும், முழக்கங்களையும் கூட கற்பித்தன

~இறுதியாய் அவர்கள் வந்தார்கள்~

எப்போதும் நிமிர்ந்தபடி திரியும் மனிதர்களை சம்மட்டியால் அடித்து வளைத்தார்கள்
முதுகில்லாமல் பாம்புகளைப் போல் வளைந்து சென்ற மனிதர்கள் நன்கு பிழைத்தார்கள்

அவர்களிடமிருந்த கடைசி தீக்குச்சியை எதற்காக உரசலாமென
முடிவெடுக்க முடியாமல் திணறினார்கள்.
1.நூலகம் 2.நூலகம் 3.நூலகம் மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னார்கள்.
உரசிய தீக்குச்சியின் நுனியில் ஒரு மஞ்சள் விதையை பார்த்தேன்
அதை சுடச் சுட விழுங்கிவிட்டு ஓடினேன்.

வாள்கள், துப்பாக்கிகள், பீரங்கிகள், தோட்டாக்கள், குண்டுகள் (விதைக்கொட்டைகள்)
அதிகாரத்திற்கு உட்பட்டவை எல்லாமே ஏன் ஆணுறுப்பை போலவேயிருக்கிறது?
எனக் கேட்டேன்.

என் உதடுகள் பூட்டப்பட்டு அரக்கு வைத்து அரசாங்க முத்திரையிடப்பட்டு விட்டது

ஒரு புறம் துப்பாக்கித்  தொழிற்சாலைகள் இயங்கின
வேறொரு புறம் விரல்களின் தொழிற்சாலைகள்

மனிதர்கள் பிறந்துகொண்டேயிருந்தார்கள்
துப்பாக்கிகள் இயங்கிக்கொண்டேயிருந்தன.
இருவரும் போட்டியிட்டார்கள்..

தவறாய் எழுதிவிட்ட வார்த்தைகளை அழி ரப்பரால்
அழித்துக் கொண்டிருந்த சிறுகுழந்தையை வளர்த்து அழைத்து வந்தார்கள்.
அவன்…. ”சங்ககால ஊர்” என்பது எவ்வளவு சிறிய வார்த்தை என்றான்.

மறுநாளே

எல்லா மனிதர்களும் வெயிலில் கரைந்தார்கள்
சிலர் விளைநிலத்தில் புதைந்தார்கள். சிலர் மரங்களைப்  போல் திடீரென பற்றி எரிந்தார்கள்
கலைஞர்கள் காற்றில் ஆவியானார்கள்.
Paint brush– யை நீரில் கழுவி வைப்பவர்கள் போல் ஓவியர்கள் தங்களை நீரில் கரைத்தார்கள்,
கவிதைகளை விரும்பி உண்ணும் கரையான் புற்றுக்குள் கவிஞர்கள் இறங்கினார்கள்.

அவ்வளவு சிறிய யுத்தம்-
எல்லோரும் வாளை உறையிலிருந்து எடுப்பதற்குள் முடிந்து விட்டது.

– சில கப்பலின், வீடுகளின், ரயில்களின், மரங்களின், சூரியனின், நிலவின் எலும்பு கூடுகள்-

-ஒரு திசையில் அல்ல நான் பல துண்டுகளாய் உடைந்த கப்பலைப் போல் எங்கெங்கோ நகர்ந்தேன்-

-எனக்கு சொந்தமாய் ஒரு துக்கம்கூட இல்லை-

எந்த மனிதரும் இல்லாத இந்த ஊரில் நான் பொய்யுரைப்பதில்லை
திருடுவதில்லை; யாரையும் வெறுப்பதில்லை, நேசிப்பதுமில்லை
எப்போதாவது என்னை நானே அடிப்பேன, உதைப்பேன், கழுத்தை நெரிப்பேன்.
என் கால்களையே கட்டிக்கொண்டு என்னை விட்டு போகாதே… போகாதே என்று கதறி அழுவேன்,
முத்தமிடுவேன், என்னையே நறுக்கி ஊட்டுவேன், துயிலாற்றுவேன்.
பிரசவத்திலும் கூட என்னையே நான் பிரசவித்தேன்.

ஊரில்

குள்ளமாய்ப்  பிறந்துவிட்ட மனிதனைப் போல் ஒரு குட்டி மலை

குரலிட்டால் எதிர் சொல்லால் எதிரொலிக்கும்
களிறென்றால் பிடி என்று கத்தும்
கனியென்றால் அழுகல் என்று கத்தும்
மகிழ்ச்சியென்றால் துக்கம் என்று கத்தும்
மணப்பந்தல் என்றால் சாவுபந்தல் என்று கத்தும்
அமைதி என்றால் ஓலமென்று கத்தும்
சும்மா இருந்தால் இரைச்சலிடும்.
நான் இரைச்சலிட்டால் அமைதியாகி விடும்

என்னால் நெடுநாட்கள் இரைச்சலிட முடியாது

நான் முதுமை அடைந்துவிட்டேன்: இனி முதுமையின் மீதே மேலும் மேலும் முதுமையடைவேன்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

3 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button