
கழிவறை கவிதைகள்
கழிவறையில் மலர்ந்த மலர்
கழிவறை பீங்கானின் விளிம்பில்
கிளிமூக்கென வளைந்த வாயுடை புட்டியிலிருந்து
கோலம் இடுவது போல
கரண்டியிலிருந்து தோசை மாவைச் சுழற்றி ஊற்றுவது போல
லாகவமாய் சுத்திகரிப்பு திரவத்தைப் பரத்தி சுழற்றினேன்
தொடர்பற்ற துளிகள் விழ விழ
புள்ளியிலிருந்து கோடாகி வரிவரியாய்
அடர்ந்த நீலம் மேலிருந்து கீழாய் இறங்கியது
நீல வரிகளுக்கு இடைப்பட்ட வெண்மை
வெறும் வெள்ளை இல்லை
அங்கே சிறுபிள்ளை கிறுக்கிய
சித்திரப்பூ ஆயிரம் மலர்ந்திருந்தன
நீலம் இணைந்த புள்ளிகள்
மடலாகிக் கீழ்நோக்கி மலர்ந்தன
அந்த மலரை நீங்கள் எந்தச் செடியிலும் பார்க்க முடியாது
அது ஆண்டவன் என் கை கொண்டு பூக்கச் செய்த அழகு மலர்.
*****
நிறங்களின் அரசி
கழிவறையில் நீல திரவம்
பீங்கான் வெண்மையில் இறங்கும் திரையென
அப்போது அத்திரை சூடும் வெளிர் நீலம்
நீலம் பார்த்த மனம் இத்தனை இளகுவதாலோ
நீலம் அத்தனை நீலமாய் இருப்பதாலோ
நீலம் என்பது நிறம் மட்டும் இல்லாததாலோ
நீலம் என்பது நிறங்களின் அரசி
அங்கே நீலமா விட்டுக் கொடுக்கிறது
இல்லையில்லை
அந்த நீலம் அவ்வளவு திடமானது
அது வெண்மையை வெளிர் நீலமாக்கக் கூடியது.
****
தூமையும் நீலமும்
விரைந்து இறங்கிய திடமான நீல
கழிவறை குழிநீரில் கலக்கவில்லை கலங்கவில்லை
கம்பீர நீலமாய் நின்றிருந்தது
அது எனது தூமை சிவப்பைப் போலவே
நீரில் கலக்க யோசித்து நின்றிருந்ததோ
பிள்ளையாகாத கருவறையின் கண்ணீருக்கு
பிடிவாத குணமென்றிருக்கும்
அது விரைந்து எந்த நீர்மையோடும் கலக்காது
கலந்தாலும் தனித்தே தெரியும்.
ஏனென்றால் அது ஆண்டவனின் அத்தனை கருணையாலும்
பரிபூரண ஆசிர்வாதத்தாலும்
பிறப்பில்லா பெருவாழ்வாலும்
உலகத்திலிருக்கும் எல்லா அ-துன்பங்களாலும்
கலந்து செய்யப்பட்டது அது.
*********