இணைய இதழ்இணைய இதழ் 100மொழிபெயர்ப்பு சிறுகதைமொழிபெயர்ப்புகள்

நீங்க ஜெயிப்பீங்க… !

மொழிபெயர்ப்பு சிறுகதை | வாசகசாலை

தெலுங்கில்: தும்மல வெங்கடராமய்யா

தமிழில்: சாந்தா தத்

கிழக்கு வெளுக்கவில்லை. இருளின் ஆதிக்கம் இன்னும் மிச்சமிருந்தது. மல்லா ரெட்டி குடியிருப்புப் பகுதியில் போலீஸ்காரர்களும் சிப்பாய்களும் வந்திறங்கினார்கள். அவர்கள் ஊருக்குள் அடிவைத்ததுதான் தாமதம். ஊார் மக்கள் ஒன்று திரண்டு எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தார்கள். உடம்பில் கொஞ்சம் வலுவுள்ளவர்கள் ஆண் பெண் வித்தியாசமின்றி முன்னால் ஓடினார்கள். ஆக்ரோஷமாய்த் தாக்கிக் கொண்டார்கள். ஒருவரையொருவர் வெறி பிடித்தவர்கள் போல் அடித்துக் கொண்டார்கள். கடைசி மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த வயோதிகர்கள் மட்டும் வீட்டுக்குள் முடங்கியிருந்தார்கள்.

டாம் டாம் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம்..

அடிகள்.. உதைகள் மானபங்கங்கள்..!!

அழுகை. கூக்குரல். ஓலங்கள்… அவறல்கள்..!!! இத்தனை அமர்க்களத்தில் ரங்கமமாவின் பிரச்சனை குறித்து யாருக்கு அக்கறை? அவ பெண்ணுக்கு வியாதி வந்தால் என்ன, வலி வந்தால் என்ன…? யாருக்கென்ன போயிற்று?

டக் டக் டக்

போலீஸின் பூட்ஸ் சப்தம் கேட்க ரங்கம்மா பயத்துடன் தன் பெண் படுத்திருந்த கட்டிவருகே ஓடினாள்.

இம்முறை அடிகள் இன்னும் உரக்கக்கேட்டது. தன் வீட்டை நெருங்கிவிட்டது போலீஸ், விசில்கள்-கூச்சல்கள்.. “பிடி பிடி பிடிங்க. பிடித்துக் கொள்ளுங்க..”

வெடவெடவென நடுங்கிக்கொண்டிருந்த பெண்ணின் நடுக்கம் நின்றது. அவள் தலைமுதல் கால்வரை இழுத்துப் போர்த்திவிட்டு ‘ஓ’ வென அழ ஆரம்பித்தாள் ரங்கம்மா. போலீஸ் வீட்டிற்குள் வந்தேவிட்டது.

“ஐயோ… மவளே. என் தங்கமே.. நான் என்ன செய்வேன்.” வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதாள் ரங்கம்மா. “ஏய் கிழவி, எந்தக் கழுதையாவது இந்தப் பக்கம் வந்தானா?” அதிகாரமாய்க் கேட்டான் ஒரு போலீஸ்காரன்.

“அநியாயம் செஞ்சிட்டுப் போய்ட்டியேடி. நான் எங்க போவேன் என் தங்கமே.. ஐயோ.. எனக்கு வரக்கூடாதா இந்தச் சாவு?” பொங்கிப் பொங்கிக் கத்தினாள் ரங்கம்மா.

“ஏய் கிழவி.. ஒன்னதான் எவனாவது வந்தானா இங்க?” கைத்தடியைத் தரை மீது ஓங்கியடித்தான் இன்னொருவன். “எனக்குத் தெரியாதய்யா, தெய்வமே.. என்னை எடுத்திட்டுப் போகக் கூடாதா? என் தெய்வமே… அவ அப்பன் வந்து என் மக எங்கன்னு கேட்டா என்ன சொல்ல தெய்வமே..?” ரங்கம்மா ஒப்பாரி வைத்தாள்.

இண்டு இடுக்கு விடாமல் வீடெங்கும் தேடினார்கள்.

‘தரித்திரம் பிடித்த கிழவி வீட்டில் கொள்ளையடிக்கக்கூட எதுவுமில்லே.’ முணுமுணுத்தார்கள். “கொக்கரக்கோ..?”-கூடையின் கீழ் கோழி கூவிற்று.

போலீஸ்காரன் படீரெனக் கூடையை ஓர் உதைவிட்டுக் கோழியை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டான். “ஐயோ.. பெத்த குழந்தையாட்டம் வளர்த்தனே இந்தக் கோழிய.. அதுகூட இல்லாம போச்சே..ஐயோ..அம்மா..”மகள் முகம் மீது முகம் வைத்து அழுதாள் ரங்கம்மா.

“கோழி வேணும்.. பொண்ணும் வேணும்… ஐயோ..” – ஒரு போலீஸ்காரன் கேலி செய்தான். கிண்டலடித்துப் பொய்யாய் அழுதான்.

“நெஞ்சுல நெருப்பைக் கொட்டிட்டு போய்ட்டயே.. நான் என்ன செய்வேன்.. செல்வமே.!” மகள் மீது புரண்டு புரண்டு அழுதாள் ரங்கம்மா. “விட்டுடுங்க சனியன” கமாண்டர் ஆணையிட மீண்டும் கேலியாய்ச் சிரித்தபடி சென்றுவிட்டார்கள் போலீஸ்காரர்கள். ரங்கம்மா அழுதுகொண்டேயிருந்தாள்.

பூட்ஸ் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் தூரமாகி ஊராரின் அழுகை, அலறல்… கூக்குரல்… ஓலங்களிடை அடியோடு அடங்கிளிட்டது,

பொழுது புலர்ந்தது. பளிச்சென வெளிச்சம் பரவியது. ராஜா ரெட்டிக்குத் தெளிவு வந்தது. நினைவுத் திரையின் ஒவ்வொரு விஷயமும் இலேசாய் எட்டிப் பார்த்தது. மக்களுக்கும் போலீஸ் மற்றும் சிப்பாய்களுக்குமிடையே யுத்தம் நடந்தது. வீராவேசமாய்த் தன்னைச் சேர்ந்தவர்கள் எதிரிகளுடன் மோதியது… எல்லாம் நினைவுக்கு வந்தது. ஆனால், என்ன லாபம்? ஆயுதம் தாங்கியவர்கள் அவர்கள், நிராயுதபாணிகள் இவர்கள். ஆயுதங்கள் மட்டும் இருந்திருந்தால்..

துப்பாக்கிக் குண்டு துளைத்துச் சென்ற முழங்கையைப் பார்த்துக் கொண்டான் ராஜா ரெட்டி. இந்தக் காயம் மட்டும் ஏற்படாதிருந்தால் இந்தக் கைபலத்திற்கு இன்னும் எத்தனை பட்சிகள் வீழ்ந்திருக்குமோ? கண்கள் மூடியாடி யோசனையிலாழ்ந்தான். “அய்யா.. இத குடி”

கண்திறந்த ராஜா ரெட்டி நன்றியுடன் அவளைப் பார்த்தபடி இடது கையால் பாலை வாங்கிக் குடிக்கலானான். ஏதேதோ பச்சிலையெல்லாம் கொண்டுவந்து காயத்தில் வைத்துக் கட்டிவிட்டு அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

இருந்தாற்போலிருந்து ராஜா ரெட்டிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. நெஞ்சில் இனம் புரியாத கலவரம் மூண்டது.

“அம்மா!”

இதயத்தைத் துளைத்துக்கொண்டு போன அந்த அழைப்பில் மெய் மறந்தாள் ரங்கம்மா. அப்போது அந்த இளைஞன் அவன் பார்வை ஒரு சின்னக் குழந்தையாய்த் தெரிந்தாள். கசிந்த விழிகளைத் துடைத்துக் கொண்டபடி ஆதுரத்துடன் கேட்டாள். “என்னப்பா..?”

“நம்மவங்க எத்தனை பேர் செத்துப் போனாங்க? எத்தனை பேருக்குக் காயம் பட்டிருக்கு?”

ரங்கம்மா அதற்குப் பதில் கூறாமல் யோசனை செய்து கொண்டிருந்தாள்.

“அவுங்க பக்கம் எத்தனை பேர் செத்திருப்பாங்க?”

“தெரியாதுப்பா, சவங்களை அவங்களே லாரில ஏத்திட்டுப் போனாங்களாம். எத்தனை பேருன்னு சரியா தெரியாது. நம்மவங்க விஷயமும் அப்படித்தான்” ரங்கம்மா திடீரென பேச்சை நிறுத்திவிட்டாள். ஏதோ சொல்ல வேண்டும் போல் ஒரு துடிப்பும் பதட்டமும் வேதனையும் தெரிந்தது, அவள் முகத்தில்.

வைத்த விழி வாங்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா ரெட்டி, தாய் மடியில் படுத்திருக்கும் குழந்தைப் பருவம் ஞாபகம் வந்தது. அவளுக்கு எப்படி நன்றி தெரிவிப்பதெனத் தெரியவில்லை. வார்த்தைகள் எழவில்வை. பொங்கும் நன்றியுணர்வையும் பாசத்தையும் விழிகளில் தேக்கி அவளைப் பார்த்தான்.

“என்னைப் பிழைக்க வைத்து உன் கடனை எப்படித் தீர்க்கப் போறம்மா?”

“பெரிய வார்த்தையெல்லாம் பேசாதப்பா. அப்படி நான் என்ன செஞ்சிட்டேன்?”

“அவங்களுக்குத் தெரிஞ்சா உன்னை சித்ரவதை செய்வாங்க பாவிங்க..”

“என்ன செஞ்சாலும் பயமில்லை. நாலு பேரோட நான் கடைசி மூச்சுல நிக்கற என்னைப் பத்தி என்னப்பா. நீங்கள்லாம் நல்லா இருக்கணும். எங்களைப் போன்ற ஏழை பாழைகளுக்கோசரம் எவ்வளவு கஷ்டப்படறிங்க நீங்கள்லாம்.. ஒரு ஜில்லா ஒரு ஊர்னு இல்லாம ராத்திரி பகல் பார்க்காம போராடறிங்க. எந்த நேரத்துல அந்தப் பாவிங்க கையில் சிக்கிடப் போறிங்களோங்கற பயம்தான் பெரிசா இருக்கு.. “ ரங்கம்மாவின் குரல் நடுங்கிற்று, கண்களைத் துடைத்துக் கொண்டு வாசல் பக்கம் பார்த்தாள். மடியில் இருந்த ராஜா ரெட்டி நெற்றியை ஆதுரமாய் வருடிவிட அவன் தன்னையும்மறியாது உறக்கத்திலாழ்ந்தான்.

எத்தனை பேர் மடிந்தார்களோ, இதுபோல் எத்தளை தாய்மார்கள் பலியானார்களோ.. அந்த ராட்சசன் கையில் சிக்கி எத்தனை பேர் எப்படிப்பட்ட அவமானங்களுக்கெல்லாம் பலியானார்களோ..? யுத்தம் முடித்துவிட்டது. ஏராளமான மரணக் கணக்குடன் எதிரிகள் தாற்காலிக வெற்றி அடைந்துள்ளார்கள். தன்னைப் போலவே தன் சகாக்கள் காயங்களுடன் தப்பித்திருக்கிறார்கள். மக்கள் பயத்துடன் சிதறி ஓடியிருக்கிறார்கள். தோல்வியைத் தழுவியிருந்தாலும் அவர்களுக்குள் எத்தனை தன்மானம்.. எவ்வளவு வீராவேசம்..! இந்தப் பெண்கள் நம்மை வீழ்த்த முனைந்த பிசாசுகளுடன் எவ்வளவு தைரியமாய்ப் போராடினார்கள்? ஒருத்தனுக்குக் கன்னம் வீங்கியது. இன்னொருவனுக்குப் பார்வையே போய்விட்டது. அந்தக் கயவர்கள் பிடியிலிருந்து தப்பி ஓடி ஓடி ஓடி முடியாது பலிவீனமடைந்து… கடைசியில் நடக்கக் கூட சக்தியற்று.. பாவம். கீழே விழுந்தால் பலமாய் அடிபட்டிருக்கும். அவள் நிலைமை எப்படி இருக்கிறதோ? எதுவுமே தெரியவில்லை. கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போலிருக்கிறது. எவ்வளவு சாகசத்துடன் போராடினாள் அந்தப் பெண்! உம்.. தன் துப்பாக்கியில் தோட்டாக்கள் தீர்ந்துவிட்டன. கை எதற்கும் உதவாததாகிவிட்டது. இல்லையென்றால் அந்தப் பாவிகளை…

ஆத்திரத்துடன் பற்களைக் கடித்துக்கொண்டான் ராஜா ரெட்டி மெல்ல கண் திறந்து பார்த்தான். ரங்கம்மா இன்னும் தன் பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பது மங்கலாய்த் தெரிய மறுபடி கண் மூடி… சில கணங்கள் கழித்து மீண்டும் திறந்தான்.

“என்னாச்சுப்பா.. ஏன் ஒரு மாதிரி இருக்க..?”

ஆமாம்.. ரங்கம்மா இன்னும் அங்குதான் இருக்கிறாள்.

“அம்மா உனக்குக் குழந்தைகள் இருக்காங்களா?”

“இருக்கு..”

ஆணா, பெண்ணா? எத்தனை பேர்!”

நெஞ்சு படபடவென அடித்துக்கொள்ள ஆவலுடன் பதிலுக்காக அவள் முகம் பார்த்தான் ராஜா ரெட்டி

“ஒரே பொண்ணு..” பொங்கியெழுந்த துக்கத்தைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டாள் ரங்கம்மா விழிகள் பணிக்க வாசற்பக்கம் பார்த்தபடி பதுமையாய் உட்கார்ந்திருந்தாள்.

ஏதோ இனம் புரியாத வேதனையிலாழ்ந்திருந்தான் ராஜா ரெட்டி திரும்பத் திரும்ப அதே உருவம் அவன் கண் முன் நிழலாடியது. நெருப்புக் கோளம் போன்ற கண்கள்.. பற்களை அழுத்திக் கடித்துக் கொண்டாளோ என்னவோ, ரத்தம் கசியும் இதழ்கள். சினம் கொந்தளிக்கும் அந்த முகம். அச்சாக இந்த அன்னையைப் போலவே.

“அவங்க உன் மகளா..?” வந்த வேகத்தில் அந்தக் கேள்வி வாய்க்குள்ளேயே சென்றுவிட்டது. அதற்கான துணிச்சலின்றி, “அவங்க உன் மக இல்லையே!” என்று கேள்வியும் பதிலுமாய்ச் சொன்னான். அதுகூட முணுமுணுப்பாக இருந்ததே தவிர நிச்சயம் ரங்கம்மா காது வரை சென்றிருக்காது.

“சரி.. உன் வேலையைக் கவனிச்சுக்க அம்மா. இதோ எங்காளுங்க வந்துடுவாங்க..”

“என்ன வேலை கொட்டி வச்சிருக்கய்யா. சரி.. இருக்குன்னே வச்சுக்குவம். நீங்க நல்லா இருந்தாத்தான எங்க பொழப்பு நடக்கும். பாட்டன் முப்பாட்டன் காலத்திலேருந்து படற அவஸ்தை இதோடு தீர்ந்துடுமா அய்யா, நீங்க ஜெயிப்பீங்க. என்னிக்காவது ஒருநாள் நீங்க ஜெயிப்பது நிச்சயம். அது எதிர்ப்பார்க்கறத விட்டா எனக்கு வேற வேலை என்ன இருக்குப்பா..”

நெஞ்சின் அடியினின்று வந்த அந்த சொற்கள் அவனுக்கு ஏராளமான உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தந்தது.

ரங்கம்மா இன்னும் வாசற் பக்கமே பார்த்துக்கொண்டிருந்தாள். ஊர் ஜனங்கள் ஒவ்வொருவராய் வந்து கொண்டிருந்தனர். சோகத்தாலும் அவமானத்தாலும் தலைகுனிந்தபடி வந்தார்கள். மடிந்து போன குழந்தைகளையும் காயம்பட்டு வீழ்ந்த பிள்ளைகளையும் நினைத்துக் குமுறும் முகங்கள்… நடந்து முடிந்த அதர்மப் போரை நினைத்து ஆவேசத்துடன் பற்கள் நெறித்தபடி சிலர்

ரங்கம்மா வீட்டு முன் நின்றார்கள் ஜனங்கள். சவத்தைக் கீழே இறக்கினார்கள். அக்கம்பக்கத்து வீட்டாரெல்லாம் ரூழ்ந்து கொண்டார்கள். அழுதார்கள். ஒரே எட்டில் தன் மகளின் உடலருகே சென்றாள் ரங்கம்மா. விழுந்தும் எழுந்தும் தள்ளாடியபடி அங்கு சென்றான் ராஜா ரெட்டி,

“அந்தப் பொண்ணுதான் இது” பேச்சு குழறியது ராஜா ரெட்டிக்கு’

“நீங்க இங்க வரதுக்கு முன்னதான் நோயாளிப் பெண்களைப் படுக்கையிலிருந்து எழுப்பி வெளியே அனுப்பி வச்சா ரங்கம்மா. இதுக்குள்ள போலீஸ் வந்துட்டது. நெனவு தப்பி விழுந்துட்ட ஓங்களை நல்லா போர்த்திட்டு அவங்க முன்னால் அழுதாங்க.” – நடந்ததையெல்லாம் யாரோ சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

“அந்தப் பொண்ணு ரொம்பவும் பலஹீனமா இருந்தது. எங்கேருந்து வந்ததோ அவ்வளவு பலம். ஒரே அடில அந்த நாசகாரப் பாவியின் கன்னம் வீங்கிக் கண்ல குழி விழுந்துட்டது. மூணாவது தடவையா அடிக்கக் கை ஒங்கினப்ப துப்பாக்கிக் குண்டுபட்டு விழுந்துட்டாங்க. பாவம் ரங்கம்மாவுக்கு எப்படித் தெரியும் தன்னோட மக நெஜமாகவே செத்துட்டான்னு..” அவள் வீரப்பிரதாபங்களை ஒருவர் பின் ஒருவராய்ப் போட்டி போட்டுக் கொண்டு சொல்லலானார்கள்.

“நிஜம்மா நீ வீரமாதா தாயி.. உன் கடன்..”ராஜா ரெட்டியால் தொடர்ந்து பேசமுடியவில்லை. இவ்வளவு நேரமாய்த் தான் உருவகித்திருந்த… தன் கண்ணில் விடாது நிழலாடிய பெண் ரங்கம்மாவின் மகள்தான் என்று அறிந்ததும் வேதனையும் பெருமிதமும் ஒரு சேர ஏற்பட்டது.

“தெரியாம என்ன.. நல்லாத் தெரியும்.. இப்படி நடப்பது தப்பாதென நல்லாத் தெரியும். நம்ம பொழைப்புக்கு வேறவழி இல்லேன்னு தெரியும்..” ரங்கம்மா திரும்பத் திரும்ப அரற்றிக் கொண்டிருந்தாள். சவத்தின் முகத்தை மறைத்திருந்த துணியை விலக்கி

நடுங்கும் கையால் மெல்லத் தொட்டான். ரத்தம் காய்ந்து உறைந்ததால் கருமை படர்ந்திருந்த இதழ்களைப் பரிவுடன் துடைத்துவிட்டான்.

“எனக்குத் தெரியும் இப்படி நடக்கும்னு..”

அவள் விழிகளில் பாதாள ஆழம் தெரிந்தது. ரங்கம்மா இப்போது அழவில்லை, அரற்றவில்லை. எரிந்து எரிந்து சாம்பலாகி உதிர்ந்த கதிர்க் குப்பையெனச் சரிந்து கிடந்தாள்.

**********

(ஜனவரி 1948 அப்தபா இதழில் வெளியானது)

[அறுபதாண்டு கால நீண்ட  போராடத்திற்குப் பின்  2013ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தினின்று பிரிந்து தெலங்கானா மாநிலம் உருவானது. இந்த தெலங்கானாப் போராட்டத்திற்கும் முன்னர் தெலங்கானா விவவசாயிகளின் எழுச்சிப் போராட்டம் வெகு தீவிரமாக நடைபெற்றது. வெகு உக்கிரமான இப் போராட்டத்தில் பங்கேற்றவர்களும் பார்த்தவர்களும் அக்காலகட்டத்தில் உடனுக்குடன் எழுதிய வீர வரலாற்றுக் கதைகளின் தொகுப்பில் இடம் பெற்ற ஏராளமான கதைகளுள் இன்றுதான் இது.]

shanthadutt@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button