![baranitharan](https://vasagasalai.com/wp-content/uploads/2020/07/baranitharan-1.jpg)
திக்கற்று திரிந்துகொண்டிருந்தேன்
மூதாயின் மலர்த்தோட்டம் என்னை வரவேற்றது
ஆயிரமாயிரம் மலர்களுக்கு மத்தியில்
பவளமல்லிக் கன்றொன்றைக் கண்டடைந்தேன்
என் மூன்று காலங்களும் மலரும்படி
அஃது ஒருமுறை பூத்தது
அதன் மணத்தில்
சன்னதம் கொண்டு
காலவெளி கடந்து கூத்தாடிய நான்
குப்புற கவிழுமாறு
ஏதோ தவறிழைத்துவிட்ட பாவனையில்,
சட்டென உதிர்ந்தது அப்பூ
*****
அவன்
அவளை தனித்துவிட்டு
எங்கோ போய்விட்டான்
அவனில்லாமல்
நேற்றுவரை அவள்
நலிந்து, வெடித்து
உயிர்மங்கி கிடந்தாள்
இன்று
அவன் வந்துவிட்டான்
ஊடலுவகை அறியா மங்கை
முதல் சிலதுளி முத்தங்களுக்கே
முகம் மலர்ந்து
மணம் வீசுகிறாள்…
மழை
மண்வாசனை
*****
என் கொட்டிலில் இருந்து
காணாமல் போன
கன்றினை தேடி
வடதிசையில் நடக்கலானேன்
முந்திய இரவில்
இமயச் சாரலும்
நரந்தைப் புல்வெளியும்
கனவில் வந்ததாய்
என்னிடம் சொல்லியிருந்தது
அங்கே
என் வரவை நோக்கியிருந்த அது
புல்வெளியின் மீது
என்னை முட்டித்தள்ளியது
நரந்தையை மேய்ந்துவிட்டு
களைப்புடன் நான்
கவரிமாக் கூட்டமொன்றின் நடுவே
உறங்கிக்கொண்டிருந்தேன்
கனவிலே
கன்றுக்குட்டி
மீண்டும் எங்கோ ஓடிக்கொண்டிருந்தது
*****
சிவம்
அது எங்கே இருக்கும்?
ஆவலாய் அப்பாவிடம் கேட்டேன்
அவர் கோயிலுக்கு போகச்சொன்னார்
கருவறையுள் லிங்கம் ஒன்று இருந்தது
திருநீறு பூசிக்கொண்டேன்
வரும் வழியில்
‘சேக்கு பாய்’ கடையில்
புரோட்டா வாங்கினேன்
“அப்பா சௌக்கியமா?” என்றபடி
அவர் வைத்த கூடுதல் புரோட்டா
சிவமாய் சுவைத்தது…