
அகநக நட்பு
யாழொடும் கொள்ளா, பொழுதொடும் புணரா,
பொருள் அறிவாரா; ஆயினும் தந்தையர்க்கு
அருள் வந்தனவால்,புதல்வர்தம் மழலை:
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளன்மாறே
புறநானூறு: 92
பாடியவர்: ஔவையர்
பாட்டுடைத்தலைவன்: அதியமான் நெடுமான் அஞ்சி
திணை : பாடாண்திணை
துறை : இயன்மொழி
ஔவையார் அதியமானை பாட்டுடை தலைவனாக்கி ‘எண்தேர்செய்யும் தச்சன்’ [புறம் 87] போன்ற புகழ் பெற்ற பல பாடல்களை பாடியுள்ளார். உவமை அழகுகள் மிக்க பாடல்கள் அவை. தனக்கு கிடைத்த அரிய நெல்லிக்கனியை தான் உண்ணாமல் ஔவைக்கு கொடுத்ததை கூறும் பாடல் உள்ளது. புலால் நாற்றமடிக்கும் என் தலையை அவனுடைய நறுமணம் மிக்க கையால் தடவுவான் என்று ஒளவை ஒருபாடலில் சொல்கிறார்.
‘முழவுத்தோள் என் ஐயை’ [புறம் 89] என்ற வரியில் தலைவனாக, இறைவனாக, தந்தையாக அவனைப் பாடுகிறாள். அதியமானை ‘என் ஐயை’ என்று இன்னும் சில பாடல்களிலும் ஔவை கூறுகிறாள்.
‘நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை’ [ புறம் 94] என்ற பாடலில் அவன் எங்களுக்கு நீர்த்துறையில் சிறுவர்கள் ஏறி விளையாடும் பெருங்களிறு போன்றவன். எதிரிகளுக்கு மதம் கொண்ட களிறு என்கிறாள்.
‘சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே’ [புறம் 235] என்ற பாடலில் தலைவனின் விசாலமான மன இயல்பை பாடுகிறாள்.
‘இல்லாகியரோ காலை மாலை
அல்லாகியர் யான் வாழூம் நாளே’ [புறம் 232] என்று அதியனின் இறப்பிற்கு பின் பாடுகிறாள். இனி காலை மாலை இல்லாமல் போகட்டும், என் வாழ்நாளும் இல்லாமல் போகட்டும் என்று பதைத்து பாடும் ஔவை நம்மைக் கலங்க வைப்பவள்.
ஆனால், மேலே குறிப்பிட்டுள்ள ‘யாழொடும்’ என்ற பாடலில் தான் ஔவைக்கும் அதியமானுக்குமான நட்பின் இயல்புத் தன்மையை நம்மால் உணரமுடிகிறது. ‘முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பதே நட்பு’ என்ற வள்ளுவரின் திருக்குறளுடன் இணைத்துக் கொள்ளக்கூடிய பாடல் இது. மைந்தர்களின் மழலை மொழிகளை கேட்பதைப்போல என்னுடைய கவிதைகளைக் கேட்டு பரவசமடைபவன் அதியமான் என்று ஔவை சொல்கிறாள். கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பும், அதியமான் ஔவையார் நட்பும் இன்றுவரை நட்பிற்கு உதாரணமாகக் கூறப்படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே நம் பண்பாட்டில் அழகான ஆண் பெண் நட்பு இருந்தது என்பதை நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளலாம். [வெவ்வேறு காலகட்டங்களில் ஔவையார் பலர் இருந்ததாகக் கூறப்படுகிறது. அனைவரும் வயது முதிர்ந்தவர்களாக இருந்திருக்க வாய்ப்பில்லை. சங்ககால ஔவை வயதில் இளையவர் என்ற அனுமானமும் ஆய்வாளர்கள் மத்தியில் உள்ளது]
கல்வியியல் கல்லூரியில் துறைவாரியாக மாணவ மாணவியருக்கான வருகைப் பதிவேடு எழுதுவது வழக்கம். அதே வரிசையில் தான் கல்லூரியின் அன்றாடம் இயங்கும். நூறு மாணவர்களைக் கொண்ட வகுப்பறையில் ஒழுங்கைக் கொண்டு வருவதற்கும் இந்த வரிசை முறை அவசியம். கல்வியியல் கல்லூரிப் படிப்பு மற்ற கல்லூரி படிப்பிலிருந்து வேறுபட்டது. அனைத்து பொறுப்பும் மாணவர்களுடையதே. அங்கு மாணவர்கள் என்பவர்கள் ஆசிரிய மாணவர்கள்.
பாலு கணிதத்துறை, நான் நுண்ணுயிரியல் துறை என்பதால் அவனுக்குப் பிறகு என் பெயர் அமைந்தது. ஓர் ஆண்டு படிப்பு என்பதால் இந்த வரிசையில் விரட்டிக் கொண்டே இருப்பார்கள். நான் எட்டாம் வகுப்பிற்கு பிறகு மகளிர் கல்வி நிலையங்களிலேயே படித்ததால் பையன்களுடன் பேசிப்பழக தயக்கம் இருந்தது. அவன் அரியலூர் அரசுக் கல்லூரியில் பயின்றவன். மேலும் கல்லூரியில் படிக்கும் போதே உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தனிப்பயிற்சியில் [Tution] கணிதம் பயிற்றுவித்ததால் இயல்பாக பழகக்கூடியவனாக இருந்திருக்கலாம். நாங்கள் பயிற்சிக்காக இருமாதங்கள் பள்ளிக்குச் சென்ற போதும், கல்லூரியில் மாதிரி வகுப்புகள் எடுக்கும் போதும் அருகில் அமர்ந்திருக்கும் அவன், ஆசிரியர் போல எனக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பான்.
பகல் முழுவதும் கல்லூரியில் படித்துவிட்டு, வீட்டிற்குச் சென்று கணித ஆசிரியராக இரண்டு மணி நேரம் பாடம் நடத்திவிட்டு, மறுபடி அவன் மாணவனாக மாறி படிக்க வேண்டிருக்கும். ஆனால், கல்லூரியில் உற்சாகமாகவே இருப்பான். மாணவர் தலைவனாக இருந்தான். ஆசிரியர்களுக்கு இணையாக அவன் வராண்டாவில் நின்று கம்பீரமாக பேசிக்கொண்டிருக்கும் சித்திரம் இன்னும் என் மனதில் உள்ளது.
அவனுக்குள்ளும் அம்மா இல்லாத பிள்ளையின் தனிப்பட்ட பதட்டங்கள் உண்டு. சித்தியிடம் எப்போதும் முரட்டுப் பிடிவாதம் செய்யும் குணங்கள் இருந்தன. ஆனால், என்னிடம் முதல் நாள் வாக்குவாதம் செய்தான் என்றால், அடுத்த நாள் காலைக்கூட்டத்திற்கு மைதானத்தில் நிற்கும் போது இயல்பாக பேசிவிடுவான்.
களப் பயணம் என்ற பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாதம் ஒரு இடத்திற்கு சென்று கட்டுரை எழுத வேண்டும். கங்கை கொண்ட சோழ புரம், தாராசுரம், தஞ்சாவூர், எசனை, மயிலூத்து போன்ற இடங்களுக்குச் செல்லும் போது பேசுவதற்கு நிறைய நேரம் கிடைக்கும். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் சிங்கமுகக்கிணறு அருகில் அமர்ந்து அவனுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவில் வருகிறது.
“டீச்சர் வேலையை சரியா செய்யனுண்டா,” என்று சொல்லியபடி கோபுரத்தை பார்த்துக் கொண்டிருந்தான். வழக்கம்போல நான் கட்டுரை எழுதுவதற்கு குறிப்பு எழுதிக்கொண்டிருந்தேன். அவனுக்கும் சேர்த்து நான் எழுதுவேன். அவனுக்கு கட்டுரை எழுதத் தெரியவில்லை என்பதால்தான் இப்படி பேசிக் கொண்டிருந்தான்.
“நீ ஒரு அக்மார்க் வாத்தியார்.. அதெல்லாம் சரியா பண்ணுவ,”என்றேன்.
“எதையும் சரியா செய்யனுன்னு தாத்தா சொல்வார்…”
“காந்தி காலத்து ஆளுங்கக்கூட சகவாசம் வச்சிக்கிட்டா இப்படித்தான்… எது சரியா நடக்கலேன்னாலும் முதல்ல நம்ம மேல தான் தப்புன்னு தோணும்,” என்று சிரித்தேன்.
அவனுடைய கொள்ளுத்தாத்தா சுதந்திர போராட்ட காலத்துக்காரர். பனிரெண்டு வயது வரை அவரிடம்தான் அவன் வளர்ந்தான். அன்று அவனை கட்டுரை எழுத வைத்தேன். அதற்காக அவன் அடைந்த பரவசத்தில் எனக்கு பெரிய டெய்ரிமில்க் சாக்லெட் கிடைத்தது. இருவருக்குமே அதிகமாக சாக்லெட் சாப்பிடும் பழக்கம் உண்டு. அவனிடம் பெண் என நான் எந்த சங்கடத்தையும் எதிர் கொண்டதில்லை. அவனிடம் இருந்தே நண்பர்களின் தோளைத் தொட்டுப் பேசும் பழக்கம் எனக்கு வந்தது. அவன் சமூகத்தின் நடைமுறைகளில் சிரமப்படுவான் என்ற பதட்டம் எனக்குண்டு.
அவன் கணிதத்துறை என்பதால் கல்வியியல் துறை சார்ந்த கோட்பாட்டுத் தேர்வுகளை [Theory paper] விரைவாக எழுத முடியாமல் சிரமப்படுவான். தேர்வறையில் வேகமாக எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். உளவியல் அனைவருக்குமே சிக்கலான பாடம். கல்லூரி வராண்டாவில் நீண்ட நேரம் அமர்ந்து படிப்போம்.
கல்லூரியில் ‘அம்பி செட் தோசை’ என்று நண்பர்கள் எங்களை சிரிப்புடன் குறிப்பிடுவார்கள். வகுப்பு தோழிகளும், நண்பர்களும், ஆசிரியர்களும் எங்கள் நட்பை ஒரே நேரத்தில் கிண்டலடிப்பதுடன், ‘சரியா அமையுது பாரு‘ என்றும் ஆற்றாமையுடனும் சொல்லவும் செய்வார்கள். தேர்வுகள் முடிந்து சான்றிதழ் வந்ததும் பதிவு செய்வதற்காக சென்னை சாந்தோம் அருகில் இருந்த வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நண்பர்களுடன் சேர்ந்து சென்றோம். மதியம் வேலை முடிந்துவிட்டது. இரவில் பயணம் செய்து காலையில் பெரம்பலூரில் இறங்கி அவரவர் ஊர்களுக்குச் செல்வதாகத் திட்டம். கடலில் ஆடியபின் கடற்கரையில் அமர்ந்து பேசும்போது பாலு மிகவும் சோர்வாக இருந்தான்.
“பள்ளிக்கூடத்துல வேலைப் பாக்கறது நம்ம நினச்ச மாதிரி ஈசி இல்ல,” என்று பாவமாகச் சொன்னான். கல்லூரியில் இருந்து வெளியேறும் முதல் சில ஆண்டுகளில் அனைவரும் எதிர்கொள்ளும் சிக்கல்தான் இது. அவனுக்குக் கொஞ்சம் அதிகமாக இருந்தது. அன்று கடற்கரையிலும், இரவு உணவகத்தில் சாப்பிடும் போதும், அறியாத அந்த ஊரின் இருளில், நண்பர்கள் மாற்றி மாற்றி அவனுக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார்கள். பேருந்து பயணம் முழுவதும் அவன் எனக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான்.
பட்டமளிப்பு விழா முடிந்த நாளில் நான் அய்யாவிடம், “இவன் பாலமுருகன்..மேத்ஸ் டீச்சர்,” என்று அறிமுகப்படுத்தும் போது இனிமேல் இந்த நட்பு தொடர வாய்ப்பில்லை என்பது புரிந்தது. நாம் நல்ல நட்புகளைக் கூட தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பில்லாத சூழலில்தான் வாழ்கிறோம். அப்போது எங்களிடம் அலைபேசி இல்லை. கல்லூரியில் அலைபேசி வைத்திருக்கூடாது. ஸ்மார்ட் போன் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் அப்போதுதான் தலைக்காட்டத் தொடங்கியிருந்து என்று நினைக்கிறேன்.
சரியான வயதில் எனக்கு எதிர்பாலினத்தவர் மீது நேர்மறை எண்ணங்களை விதைத்தவன் அவன் தான். நம் சொந்த ஊரை வைத்துதான் நம் மனம் உலகின் எந்த இடத்தையும் கற்பனை செய்யும் அல்லது விரிவாக்கிக் கொள்ளும் என்கிறார்கள். அதே போல நான் அவனை வைத்துதான் எனக்குப் புதிதாக அறிமுகமாகும் ஆண்களை பார்க்கத் தொடங்குகிறேன். அவன் தொடக்கநாட்களில் ஒரு முறை சொல்லிய வாக்கியம் இன்று வரை மனதில் இருக்கிறது. “என்னைப் பாத்தா ஏலியன் மாதிரியா இருக்கு…ஃபரெண்டா பாக்கனும்,” என்று என் தோளில் தட்டினான்.
அவனுடனான நட்பினால் அதுவரை என்னுள் இருந்த எதிர்மனநிலை விலகிச் சென்றது என்று நினைக்கிறேன். இன்று எங்கோ ஒரு பள்ளியின் ஆளுமைமிக்க ஆசிரியராக, ஒரு பெண்ணின் பொறுப்பான கணவனாக, பிள்ளைகளின் தகப்பனாக, நடைமுறை தெரிந்தவனாக இருப்பான் என்றே நம்புகிறேன். ஔவையின் பாடல்களை வாசிக்கும் போது எனக்கு பாலுவே மனதில் வந்து கொண்டிருந்தான்.
ஒரு பெண் தன் வாழ்வில் காதலன், கணவன், உடன்பிறந்தார்கள் உட்பட பல ஆண்களை அன்றாடம் கடக்கிறாள். அவர்களின் குறைபாடுகளை, ஆதிக்கங்களை புரிந்து கொண்டு கடந்து செல்ல ஒரே ஒரு நல்ல நண்பனின் நினைவு உறுதுணையாக இருக்கும் நினைக்கிறேன். [மேலும் அவர்களின் மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும் கூட].
இதுபோலவே ஔவை – அதியமானின் நட்பு நம் மொத்த இலக்கியத்தின், பண்பாட்டின் அழகிய நினைவுகளில் ஒன்று.
மழலை மொழிக்கு…
யாழின் இனிமை இல்லை,
தாள ஒழுக்கில்லை,
பொருளில்லை.
ஆனால்
அதுவே தந்தையர்க்கு
இனிய இசையாகிறது.
கடுமையான மதில் பல கடந்து
வெற்றி கொள்ளும்
மன்னவன் நெடுமான் அஞ்சியே..
என் சொற்களுக்காக
நீ எனக்கருளும் அன்பும்
அத்தகையதே.
(தொடரும்…)