“அடக்கடவுளே! என்னங்க படம் இது? சுத்தியால அடிச்சு கொல்றது, ஆசிட்ல மூழ்கடிச்சு கொல்றதுன்னு? பார்க்கவே முடியல! இதுக்கு எப்படி சென்சார் போர்ட் U/A சர்டிஃபிகேட் கொடுத்தாங்க? குழந்தைகளை அழைச்சுட்டு வேற போனோம்…. கொடுமை! நம்ம பசங்கள விட சிறுசுங்க கூட தியேட்டர்ல… நம்மள சொல்லணும்…” என்று புலம்பித் தள்ளினாள் சுமதி. அவள் ஒரு தனியார் பள்ளியின் தலைமையாசிரியை. அவளுக்கு பதின்பருவத்தில் இரு குழந்தைகள் உள்ளன. குடும்பத்துடன் சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்திற்குச் சென்றுதான் இத்தனை புலம்பல்.
“அய்யோ சுமதி! படத்தை ஒரு பொழுதுபோக்கா பாரு! படமுன்னா இத்தனை ஆக்க்ஷன் பிளாக் இல்லாட்டி எப்படி? அவரோட ரசிகர்களும் அதைத்தான் விரும்பறாங்க!” – என்று சுமதியை சமாதானம் செய்தான் கணவன் வேணு.
“நம்ம அப்பா காலம் தொடங்கி, நம்ம பசங்க வரைக்கும் அவரோட ஃபேன்ஸ்… கொஞ்சம் சமூகப் பொறுப்போட அவர் நடிக்க வேண்டாமா? இளம் தலைமுறையினர் ஏற்கனவே அதிக வன்முறைல ஈடுபடறாங்க! இதுல இந்த மாதிரி படங்களில் அவங்களோட கதாநாயகன் நடிக்கும்போது எந்த மாதிரி தாக்கத்தை அவங்க அடைவாங்க? நான் இத பத்தி அசெம்பிளியில் நாளைக்கு பேசப்போறேன்! பேரண்ட்ஸ்க்கு ‘இது மாதிரி சினிமாக்களுக்கு சின்னக் குழந்தைகளைக் கூட்டிட்டு போகாதீங்க’ன்னு பெரிய இ-மெயில் அனுப்பப்போறேன்,” என்று வேகமாக மடிக்கணினியை திறந்தாள் சுமதி.
“விடுப்பா.. இந்த அம்மாவ திருத்த முடியாது!” என்று சலித்துக் கொண்டான் அவர்களது மூத்த மகன் அருண். அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறான்.
“நாளைக்கு எங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் அம்மாவ அசெம்பிளி முடிஞ்சு கேலி பண்ணுவாங்க! பொறுமையா இருக்கணும்,” என்று கூறி நக்கலாக சிரித்தாள் அவர்கள் மகள் கவிதா.
மறுநாள் பள்ளி முடிந்து வீட்டில்,
“என்னடா அருண்! மூஞ்சி எல்லாம் வீங்கி இருக்கு? ஸ்கூல்ல பசங்களோட சண்டையா?” என்று பதறிப்போனாள் சுமதி.
“ஒண்ணும் இல்லம்மா!” என்று வேகமாக அவள் கையில் அகப்படாமல் எரிச்சலுடன் அவன் அறையில் சென்று தாளிட்டுக் கொண்டான் அருண்.
“நீ இன்னிக்கு வன்முறையைத் தூண்டும் படங்கள பார்க்கக் கூடாதுன்னு அசெம்பளில பேசினல்ல? அதான் பசங்க உன்ன ரொம்ப கேலி பண்ணி இருக்காங்க! என்னதான் இருந்தாலும் நீ அம்மாவா போயிட்டதால அருணுக்கு கொஞ்சம் கோபம் வந்துடுச்சு! அந்த பசங்க வச்சு செஞ்சுட்டானுங்க!” என்று மீதிக் கதையை சொல்லி முடித்தாள் கவிதா.
சிறிது நேரத்தில் அறையிலிருந்து வெளியில் வந்த அருணிடம் கனிவாகப் பேசி அவனுக்கு முதலுதவி செய்தாள் சுமதி.
“அந்த தினேஷும் அவன் ப்ரெண்ட்ஸ்சும்தானே உன்ன அடிச்சாங்க? நாளைக்கு அவங்க அம்மா அப்பாவ கூப்பிட்டு எச்சரிக்கறேன்!”
“இதான் வேண்டாம்னு சொல்றது. அம்மா, எல்லா விஷயத்துலயும் நீ வந்து தீர்வு தர வேண்டாம். நானே பார்த்துக்கறேன்.”
“என்ன பார்த்துப்ப? இப்படி அடி வாங்கிட்டு வந்து நிக்குற… ஒண்ணு அவங்க என்ன சொன்னாலும் கண்டுக்காம வரணும். இல்ல, அவங்க நாலு அடி அடிச்சா, பதிலுக்கு ஒரு அடியாவது கொடுக்கணும். உன்ன நினைச்சா பயமா இருக்குடா…”
“அம்மா அவனுங்க நாலு பேரு, நா ஒருத்தன்… என்ன பண்ண சொல்ற? நீ வேற அடிதடில இறங்க கூடாதுன்னு சொல்ற…” என்று கூறி சுமதியை பாவமாகப் பார்த்தான் அருண்.
அந்த நிலையிலும் அவளுக்கு குபீர் என சிரிப்பு வந்தது. “உன் அம்மாவா இல்லாட்டி கூட, ஒரு பிரின்சிபாலா அந்த பசங்கள கண்டிக்க எனக்கு பொறுப்பு இருக்கு… அதில் நீ தலையிடாத. கிளாஸ்ல ஜாக்கிரதையா இரு…” என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் சுமதி.
போர்ட் எக்ஸாம் நெருங்க நெருங்க, தேர்வுகள், பயிற்சி, ஸ்பெஷல் கிளாஸ் என்று நாட்கள் வேகமாக நகர்ந்தன. ஒரு நாள் காலை நெற்றியில் இரத்தம் வழிய பிரின்சிபால் அறையினுள் நுழைந்தாள் பத்தாம் வகுப்பு ஆசிரியை துளசி.
“துளசி, என்னது இது? முதலுதவி கூட எடுக்காம இங்க என்னம்மா பண்ணறீங்க?” என்று பதறினாள் சுமதி.
“இல்ல மேம்! அந்த தினேஷ் அட்டூழியம் வர வர ரொம்ப அதிகமா போச்சு! அவன் செஞ்ச காரியத்த அப்படியே சொல்லணும்னு வந்தேன். காயம் என்ன மேம் பெரிசு? அவனைப் போல அடங்காத பசங்க இருக்காங்க அப்டிங்குரதுதான் கஷ்டமா இருக்கு. இன்னிக்கு அந்தப் பையன் எக்ஸாம்ல பிட் வெச்சு காப்பி அடிச்சான். கையும் களவுமா பிடிச்சுட்டேன். ‘இன்னும் ஒரு மாசத்துல பொதுத் தேர்வு இருக்கு? என்ன பழக்கம் இது?’ அப்டின்னு கொஞ்சம் சத்தம் போட்டேன்… ‘நீ தேர்வு இன்னிக்கு எழுத வேண்டாம், உன் பேரண்ட்ஸ கூட்டிட்டு மதியம் வா’ன்னு சொல்லி கிளாசுக்கு வெளில அனுப்பிட்டேன்.
வெளியில் கொஞ்ச நேரம் காத்திருந்தவன், ஆவேசம் வந்தவன் மாதிரி என்ன நோக்கி வந்து விடைத்தாளை கேட்டான். நான் கொடுக்க மறுத்தேன். உடனே கையில் வைச்சிருந்த ஜாமெட்ரி பாக்ஸ என் தலையில ஓங்கி அடிச்சுட்டான். எனக்கு பொறி கலங்கிருச்சு… நா சுதாரிக்கவும், அதுக்குள்ள மத்த பசங்க அவன பிடிச்சிட்டாங்க… இல்லாட்டி எனக்கு என்ன நேர்ந்திருக்குமோ தெரியல” என்ற துளசி தலையைப் பிடித்தபடி அங்கு போட்டிருந்த மர நாற்காலியில் அமர்ந்தாள்.
****
“துளசி, மிஸ்ஸுக்கு நடந்த விஷயம் வேற யாருக்கும் நடக்கக் கூடாது. உங்க பையன ஸ்கூல்ல வெச்சு இருக்கிறது எல்லாருக்கும் ஆபத்து. உங்களுக்கு ரெண்டு ஆப்ஷன் தரேன்… ஒண்ணு, எங்க ஸ்கூல் மனநல கவுன்சிலர் பரிந்துரைத்தபடி அவனுக்கு கோபத்தைக் கட்டுப்படுத்தி தினமும் பயிற்சிகள் மற்றும் அறிவுரைகள் மூலமா அவனை நல்வழிப்படுத்துற ஒரு குழந்தைகள் மனநல ஆலோசனை கூடத்துல சேர்த்து விடுங்க. அவன் நல்லா தேறிட்டான், இனிமேல் அவனால யாருக்கும் ஆபத்து இல்லன்னு அவங்க சான்று கொடுத்ததும், தினேஷ மறுபடி எங்க பள்ளியில சேர்த்துக்கிட்டு, அடுத்த வருஷம் பத்தாவது பரிக்ஷை எழுத விடரோம்….
இல்ல, நாங்க போலீஸ் கம்பிளைன்ட் கொடுத்துடுவோம். அப்பறம் அவங்க சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில சேர்ப்பாங்க. மீடியாவுக்கு எல்லாம் இந்த செய்தி தெரிஞ்சு போயிடும். அப்பறம் உங்க மகனோட எதிர்காலம் ரொம்ப பாதிக்கப்படும். என்ன செய்யலாம்னு நீங்களே முடிவு பண்ணுங்க!” என்றாள் சுமதி தினேஷின் பெற்றோரிடம்.
“என்ன ஸ்கூல் நடத்துறீங்க? காப்பி அடிச்சா அந்த மிஸ்ஸு அப்படித்தான் எல்லாருக்கு நேராவும் என் புள்ளைய அவமானப்படுத்துவாங்களா? அதான் அவனுக்கு கோபம். நீங்க காப்பியே அடிச்சது இல்லியா மிஸ்? எவ்வளவு தைரியம் இருந்தா என் புள்ளைய மென்டல் ஆஸ்பத்திரியில சேர்க்கச் சொல்வீங்க? வாடா போலாம், உனக்கு மட்டும்தான் போலீஸ் தெரியுமா? நா எவ்வளவு பெரிய ஆளு தெரியுமா?” என்று சுமதியை மிரட்டிவிட்டு மகனுடன் எழுந்து சென்றார் தினேஷின் அப்பா மற்றும் அந்த ஏரியா கவுன்சிலரான கன்னியப்பன்.
மறுநாள் சுமதி பள்ளியில் அவளது அறையில் அமர்ந்து தனது அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மதிய உணவு நேரத்தில், அவள் எதிர்பாராத விதமாக தினேஷ் அவள் அறையினுள் கையில் கத்தியுடன் வேகமாக நுழைந்தான்.
“தினேஷ்! என்னடா இது? வா பேசலாம், இந்த ஆவேசம் தேவையில்லப்பா… நீ செய்யப்போற காரியத்தோட பின் விளைவுகள் பத்தி யோசிச்சியா? எதுவாயிருந்தாலும் என்கிட்ட மனம் விட்டுப் பேசு, உனக்கு என்ன பிரச்சினை?” என்று நிதானமாகப் பேசினாள் சுமதி.
“நீதான் பிரச்சினை! உன்னால கிளாசுல எனக்கு மரியாதை போச்சு, வீட்டுலயும் என் பேரு ரிப்பேரு ஆயிடுச்சு! உன்ன ஒரே போடா போட்டுட்டா என் பிரச்சினை எல்லாம் க்ளோஸ்!” என்றபடி அருகில் வந்தான் தினேஷ்.
“என்ன கொன்னுட்டா உன் பிரச்சினை தீர்ந்துடுமா? என்ன தினேஷ் சொல்ற? நீயும் எனக்கு அருண் மாதிரிதான். உனக்கு என்ன, எக்ஸாம் எழுதணும் அவ்வளவுதானே? உனக்கு ஸ்பெஷல் கோச்சிங் கொடுத்து அந்த கோபத்துக்கான ட்ரீட்மெண்ட் சென்டர்ல இருந்தே எக்ஸாம் எழுத ஏற்பாடு பண்ணறேன்!” என்று அவனிடம் ஆதரவாகப் பேசியபடி அறையின் முகப்பை நோக்கி நகர்ந்தாள் சுமதி.
“சும்மா அருண் மாதிரின்னு சொல்லி சீன் போடாத. உன்ன மாதிரி பொம்பளைங்கள வேலைக்கு அனுப்பினதே தப்பு. உன் புருஷன் சரியான பயந்தாங்கோளி, உன் புள்ள அதுக்கு மேல, அதான் நீ இப்படி பயம் இல்லாம ஆம்பளை மாதிரி ரவுடித்தனம் பண்ற! உன்ன… ” என்று கத்தியபடி சுமதியை நோக்கிப் பாய்ந்தான் தினேஷ்.
நொடிப் பொழுதில் அவர்கள் இருவர் நடுவில் பாய்ந்து தினேஷ் கண்ணில் மிளகுக் கலவையை தெளித்தான் அருண். தினேஷ் தடுமாறிய நேரம் அவன் கையில் இருந்த கத்தியை பத்திரமாக அகற்றினாள் சுமதி. அதற்குள் பள்ளி வளாக காவலர்கள் இருவர் வந்து தினேஷை பிடித்தனர்.
“அம்மா, இவன்கிட்ட அடி வாங்கின நாளிலிருந்து இந்த பெப்பர் ஸ்ப்ரே தயார் செய்து பேகுல வச்சிருந்தேன், இன்னிக்கு யூஸ் ஆச்சு,” என்று பெருமையாக கூறிப் புன்னகைத்தான் அருண்.
அருண் தலையை ஒருமுறை செல்லமாக வருடிவிட்டு, அவள் கவனத்தை தினேஷின் பக்கம் திருப்பினாள். அவனை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தாள். அதற்குள் மற்ற ஆசிரியர்கள் போலீஸிடம் புகார் அளிக்க, அந்த பகுதி இன்ஸ்பெக்டர் மருத்துவமனைக்கு விஜயம் செய்தார். தினேஷின் கண்களை சுத்தம் செய்து, அவன் கோபம் அடங்க மயக்க ஊசியை போட்டிருந்தார் மருத்துவர்.
“நான் கேஸ் கொடுக்கறதா இருந்தா பல பேரு மேல கொடுக்கணும் சார்! வன்முறைய தூண்டுற சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் ஆரம்பிச்சு, பெண்கள மரியாதை குறைவா நடத்துற அனைத்து ஆண்கள் வரை… எந்த குழந்தையும் பொறக்கும் போது நல்ல குழந்தைதான் சார். தினேஷ் மேல FIR எல்லாம் போடாதீங்க. அவனுக்கும், அவன் பெற்றோருக்கும் மன ரீதியான ஆலோசனை கண்டிப்பா தேவை.
அத ஊர்ஜூதப்படுத்த அவன் பெற்றோர் மேல நிச்சயம் கேஸ் போடறேன்.
அவங்களா ஆலோசனைக்கு போகலைன்னா, சட்ட ரீதியா அந்த ஆலோசனை அவங்க குடும்பத்துக்கு கிடைச்சாகணும். அந்த குழந்தை வாழ்க்கைல சிறப்பா இருக்கணும் சார்! அதுக்கு என்னால ஆன எல்லா முயற்சியையும் செய்வேன்!” என்று கூறி தினேஷின் மறுவாழ்வுக்கு வழிவகுத்தாள் சுமதி.