இணைய இதழ்இணைய இதழ் 70தொடர்கள்

பல’சரக்கு’க் கடை; 17 – பாலகணேஷ்

தொடர் | வாசகசாலை

நாவலாளருடன் இணைந்த படலம்!

ஜாலியின் அலுவலகத்தில் கிடைத்த வருமானம் ஓரளவு நிம்மதியைத் தந்தது என்றாலும், கைக்கும் வாய்க்குமே மிகஇழுபறியாகத்தான் இருந்தது நிலைமை. இதைப் புரிந்து கொள்ள ஜாலியாலும் முடிந்தது. “ஏதாவது ஒரு வேலைக்கு ட்ரை பண்ணலாம் கணேஷ். என் வொர்க்லாம் ஈவ்னிங் வந்துகூட நீங்க சுலபமாச் செஞ்சிடுவீங்க. நிலையா ஒரு வருமானம்னு அது இருக்கும்.” என்றும் அவரே சொன்னார்.

ஆக, வேலைதேடும் படலம் அவசரமின்றி ஆரம்பமானது. ஒன்றரை மாதங்கள் கடந்தும் சரியான வேலை கிடைக்கவில்லை. சரியில்லாத, கிடைத்த வேலைகளை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இப்படியாக நாட்கள் நகர்ந்த சமயம், ஓர் இனிய தினத்தின் மாலையில் அலுவலகம் வந்த ஜாலி இப்படிச் சொன்னார். “கணேஷ், உங்களுக்கு ஜி.அசோகன்ங்கறவரைத் தெரியுமா..?”

என்னது..? தெரியுமாவா..? பாமரர்களைப் படிக்க வைத்தவர் ஆதித்தனார் என்று சொல்வார்கள். அவர்களையெல்லாம் இழுத்துவந்து நாவல் படிக்க வைத்த ஆசிரியராயிற்றே. தெரியாமல் எப்படிப் போகும்..? ஜாலிக்குப் படிக்கிற பழக்கம் கிடையாது என்பது இங்கே நீங்கள் அறிய வேண்டியது. எனவே, அவருக்கு ஜீயே என்கிற ஜி.அசோகனைப் பற்றி விளக்கிவிட்டுக் கேட்டேன். “இப்ப எதுக்கு அவரைப் பத்தி திடீர்ன்னு..?”

ஜாலி, “இல்ல… இன்னிக்கு ஒரு வேலையா அவரோட ஆபீசுக்குப் போயிருந்தேன். பேச்சுவாக்குல ஒரு நல்ல டிசைனரைத் தேடிட்ருக்கறதா சொன்னாரு. நான் அனுப்பறதா சொல்லிட்டு வந்தேன். நீங்க அங்க போய் என் பேரைச் சொன்னீங்கன்னா போதும்…”

“ஆஹா… செமத்தியான இடம்யா. உன் பேரை எத்தனை தடவை வேணாலும் சொல்றேன். எங்கருக்கு அவரோட ஆபீசு..?”

எங்கே பஸ் பிடித்து, எங்கே இறங்க வேண்டும், அங்கிருந்து எப்படி, எந்த வழியில் நடந்து சென்றால் ஜீயேவின் அலுவலகம் வரும் என்பதைத் தெளிவாகப் படம் வரைந்து பாகங்களைக் குறித்தார் ஜாலி. மணி பார்த்தேன். ஐந்து ஆகியிருந்தது. “இப்பவே போய்ப் பாத்துட்றேன்யா. நாளைக்கு வந்து சொல்றேன் உனக்கு.” என்றுவிட்டு உடனே ஓடினேன்.

அவர் குறிப்பிட்டபடி ‘இதுதான் என் சாலை’ என்று கை காட்டிய அண்ணாவிற்கு வலதுபுறம் சேப்பாக்கம் மைதானம் நோக்கிச் செல்லும் சாலையைப் பிடித்து நடந்து, அங்கிருந்து இடதுபுறம் பிரிந்த திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையைக் கண்டுபிடித்து உள்நடந்து ஜீயே பப்ளிகேஷன்ஸ் ஆபீஸையும் கண்டுபிடித்தேன். உள்ளே போனதும் எதிர்ப்பட்ட மேஜையில் அமர்ந்திருந்தவரிடம் வினவினேன். “ஜீயே சார் இருக்காரா..? என் பேர் கணேஷ். நான் அவரைப் பாக்கணும்.”

நல்லவேளையாக இருந்தார். எதிரேயிருந்த அறையைக் கைகாட்டினார். காட்போர்ட் தடுப்புகள் வைத்துப் பிரிக்கப்பட்டு, குளிர்சாதனம் அமைக்கப்பட்டிருந்த சற்றே விசாலமான அறை அது. கதவை ‘டொக்’கிவிட்டு, அவர் கையசைத்ததும் உள்நுழைந்தேன் (ஒரு கண்ணாடிச் செவ்வகம் அறையினுள்ளிருப்பவரைக் காட்டும்படி அமைக்கப்பட்டிருந்தது.)

துப்பாக்கியிலிருந்து விடுதலை பெற்ற தோட்டா பாய்கிற வேகத்தில் படபடவென்று வார்த்தைகளைத் துப்பினேன். என்னைப் பற்றி, எனக்கும் தெரிந்தவை பற்றி சொல்லி முடித்துவிட்டுத்தான் ஓய்ந்தேன். மனிதரைப் பேசவே விடவில்லை. பொறுமையாகக் கேட்டார். சில கணங்கள் தலையை உயர்த்தி யோசித்தார். “சரிங்க கணேஷ். நீங்க போய்ட்டு நாளைக்குக் காலைல பத்தரை மணிக்கு இங்க வாங்க. சொல்றேன்” என்றார்.

‘ச்சே’ என்றாகிவிட்டது எனக்கு. ஏதோ சில கேள்விகள் கேட்பார், வேலை தெரியுமாவென்று ஏதாவது செய்து காட்டச் சொல்லி டெஸ்ட் வைப்பார், பிறகு வேலை கொடுப்பார் என்று நம்பியிருந்த எதுவும் நடக்காததில் மனத்திலோர் சலிப்பு அலையடித்தது. மெல்லத் திரும்பி வெளியேறினேன். அப்போதிருந்த காலகட்டம் செல்போன்கள் புழங்கிய காலம்தான். ஆனால் இன்கமிங்குக்கும் பணம், அவுட்கோயிங்குக்கும் பணம். இன்று நாம் ‘ச்சே’ என்று அலட்சியப்படுத்துகிற பேஸிக் மாடல்களே அன்றைக்கு ஐந்தாயிரம் பத்தாயிரம் என்று விற்ற காலம். எனவே, செல்போன் வைத்திருப்பதும் வசதிக்கான ஓர் அடையாளம் என்கிற நிலையில் என்னிடம் எப்படியிருக்க சாத்தியம்..? ஜாலியிடம் காலையில் ஆபீசில் சந்திக்கிற போது சொல்லிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் திருவள்ளூர் போய்விட்டேன்.

மறுதினம் காலை சென்ட்ரலுக்கு வந்ததுமே அதுதான் தோன்றியது. அசோகரின் அலுவலகத்துக்குப் படையெடுப்பதா, வேண்டாமா..? ‘அவர் ஒன்றும் வேலை கிடையாதுன்னு சொல்லலியே, காலைல வந்து பாருன்னுதானடா சொன்னார். ஒரு பெரிய மனுசன் சொன்னதுக்காகவாவது போய்த்தான் ஆகணும்’ என்றது மனஸ். சரி, அப்படியே செய்யலாம் என்று ஜீயே பப்ளிகேஷன்ஸ் ஆபீசுக்கே போனேன். பத்தே காலுக்கே போய்விட்டதால், சுற்றுப்புறத்தைக் கவனித்து சிறிது நேரத்தை வீணடித்துவிட்டு பத்தரைக்கு உள்ளே நுழைந்தேன். 

அறையில் இல்லாமல் வெளியிலேயே நின்றிருந்தார் அவர். அருகில் சென்று நேற்று மாலை வந்ததை நினைவுபடுத்தினேன். “என்கூட வாங்க..” என்றபடி உள்ளே நடந்தார். அவர் அறையைத் தாண்டி ஒரு ஹால். அதையும் தாண்டி மற்றொரு நீண்ட அறை. அதற்குள் சென்றபோது அங்கே பளீரென்ற நிறத்தில் பெரியவர் ஒருவர் அகல நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரருகே ஒரு பெண்மணி அமர்ந்து ஏதோ திருத்திக் கொண்டிருந்தார். பெண்மணிக்கடுத்து ஓர் ஆண்மணி அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தார். இவர்களுக்கு எதிர்ப்புறம் வரிசையாக நான்கைந்து கம்ப்யூட்டர்கள். ஒன்றில் மட்டும் ஓர் இளைஞன் வேலை செய்து கொண்டிருக்க, அவனுக்கு அருகிலிருந்த நாற்காலியைக் காட்டினார். “இதான் உங்க ஸீட். உக்காந்து வேலையைக் கவனிங்க.”

அவ்வளவுதான். அத்தனை எளிதாக வேலையில் சேர்ந்துவிட்டேன் என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. அவருக்குத் தினமலருடன் நெருக்கம் அதிகமென்பதும், ஒருவேளை அங்கே என்னைப் பற்றி விசாரித்திருக்கக் கூடும் என்பதும் பின்னாளில் நான் செய்துகொண்ட ஊகங்கள். மற்றபடி, எது என்னை இப்படி நேரடி அப்பாயிண்ட்மெண்ட் செய்யத் தூண்டியது என்பதை இன்றுவரை நான் கேட்டதுமில்லை, அவர் சொன்னதுமில்லை.

சேரில் உட்கார்ந்து என் பேகைக் கீழே வைத்ததும், மற்றவர்களை அறிமுகப்படுத்தினார். அந்த பளீர் மனிதரைக் காட்டி, “இவர் விவேகா அண்ணன். சுபயோகம்ன்னு நாம ஒரு ஜோசிய மாதஇதழ் நடத்தறோம். அதோட எடிட்டர்.” வணக்கம் சொன்னேன். “இவங்க விஜயலட்சுமி, ப்ரூஃப் ரீடர். இவர் முத்துக்குமரவேல் சப் எடிட்டர்.” கைகாட்டியவர், என்னருகில் இருந்த இளைஞனைக் காட்டி, “இவர் முத்துக்குமார். உங்களை மாதிரி தினமலர் தயாரிப்புத்தான் இவரும்.” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சுபயோகம், பாக்கெட் நாவல், க்ரைம் நாவல், ப்ரைம் நாவல், குடும்ப நாவல் இரண்டு இதழ்கள்- இவையெல்லாம் அவர் நடத்தி வந்ததால் எப்போதும் வேலையிருக்கும். வேலையென்று எப்படிச் சொல்ல..? அங்கே சேர்வதற்கு முன்பே பரிச்சயமாகியிருந்த என் இனிய நண்பர்கள் ராஜேஷ்குமார் க்ரைம் நாவலிலும், இ.சௌ.ராஜன் பாக்கெட் நாவலிலும் தொடர்ந்து எழுதி வந்த தருணம். எனவே அவர்கள் கையெழுத்தில் நாவலை கம்போஸ் செய்கையிலேயே முதல் வாசகராய்ப் படித்துவிட முடிவதில் தனி சந்தோஷம். இந்திராஜி, நாவலை முடித்து அனுப்பியவுடன் போன் செய்து கருத்துக் கேட்பார் முதல் வாசகனான என்னிடம். அந்தக் கதையின் ப்ளஸ், மைனஸ்களை அலசுவேன். சிலசமயம் இப்படிப் பேசியதன் விளைவாக மைனஸ்களை நீக்கவும் செய்வார். இப்படி சுவாரஸ்யமான வேலை தவிர, அங்கே குவிந்திருந்த புத்தகங்களை வேலை இல்லாத சமயத்திலும் (சிலசமயம் வேலை இருந்தாலும் சற்றே நேரம் ஒதுக்கி) படித்துத் தள்ளினேன். எந்த அளவுக்கு..? ஒருசமயம் ஜீயே ஸாரே ஜாலியாக, “இவருக்கு இங்க நான் வேலை குடுத்தது எப்டின்னா, சாப்பாட்டு ராமனுக்கு ஹோட்டல்ல வேலை குடுத்த மாதிரி” என்று கமெண்ட் அடித்துச் சிரிக்கும் அளவுக்கு.

அவர் எனக்குத் தந்த சம்பளம் கேட்டதும் ஆஹா என்று புருவத்தை உயர்த்த வைக்கிற அளவிலானது அல்ல. அதேநேரம் ‘ப்பூ, இவ்ளவுதானா’ என்று உதட்டைச் சுழிக்க வைக்கிற அளவிலானதுமல்ல. என்றாலும் எனக்கு அது போதுமானதாகவே இருந்தது.

முன்பொரு முறை பத்திரிகைத் துறையிலிருந்தபோதே சுபாவின் நாவல்களை டிஜிட்டலைஸ் செய்து தந்தது பற்றிச் சொல்லியிருந்தேன், நினைவிலிருக்கும் என்று நம்புகிறேன். இப்போது சென்னைவாசியாக இருக்கிற காரணத்தால் அவ்வப்போது சுபாவைச் சந்தித்து வருவது வழக்கமாகிப் போயிருந்தது. சுபா குடியிருந்தது(ப்பது) மேல் ப்ளாட்களில். கிரவுண்ட் ப்ளாட்டின் சொந்தக்காரர் பட்டுக்கோட்டை பிரபாகர் என்கிற பிகேபி. அவரின் ஆரம்பச் சிறுகதை தொடங்கி, அப்போது எழுதியிருந்த மாதநாவல்கள் அத்தனையையும் படித்திருந்தேன், அவை பற்றி விவாதிக்கவும் முடியும் என்றாலும் ஒருமுறைகூட அவருக்கு வாசகர் கடிதம் எழுதியதில்லை. அது ஏனென்று இப்போதும் எனக்குப் புரியவில்லை. சொல்லவந்தது… சுபாவைச் சந்திக்கச் செல்கிற சந்தர்ப்பங்களில் அவரையும் பரிச்சயம் செய்து கொண்டிருந்தேன் என்கிற விஷயம்தான்.

இப்படி வேலை போய்க் கொண்டிருந்த சமயம், ஒருநாள் சுரேஷ் சார் போன் செய்தார். சொல்ல மறந்துட்டேனே… ஜாலி பாதி, ஜீயே சார் தந்த சம்பளத்தில் மிச்சப்படுத்தியது பாதி என்று செலவிட்டு ஒரு பேஸிக் மாடல் மொபைல் வாங்கியிருந்தேன் நான் இச்சமயம். ஏர்டெல் ஸிம் போட்டு அதன் எண்ணைப் பெருமையாக சென்னையில் என்னையறிந்த சொற்ப நபர்களுக்குத் தந்திருந்தேன். போன் செய்த சுரேஷ் சார் கேட்டார் இப்படி : “சுபாவின் ஒரு நாவல் எப்படி உருவாகிறது என்பதை அருகிலிருந்து பார்க்க விருப்பமா உங்களுக்கு..?” என்னவென்று சொல்வது..? “திருநெல்வேலி அல்வாவைக் கிண்டி இறக்கியதும் அரைக்கிலோ தின்று பார்க்க விருப்பமா” என்பது போன்றதான கேள்வியாயிற்றே என்று மனதினுள் ஓட, சுருக்கமாக, “மிக விருப்பம் சார். என்ன செய்யணும்..?” என்றேன்.

“நாளைக்கு மார்னிங் வீட்டுக்கு வாங்க. சொல்றேன்…” என்று சட்டென்று சொல்லிவிட்டு, பட்டென்று கட் செய்துவிட்டார். எனக்குள்ளேதான் கேள்வி மீன்கள் மனக்குட்டையில் நீந்த ஆரம்பித்தன. எப்படி.? நாவலை அவர்கள் டிஸ்கஸ் செய்யும்போதிருந்து உடனிருந்து பார்க்கச் சொல்கிறாரா..? இல்லை, எழுதியதை திருத்தித்தர வேண்டுமா..? ஒரு முழு நாவல் ப்ராசஸையும் உடனிருந்து கவனிப்பதென்றால் என்ன பொருள்..? விடைதான் கிடைக்கவில்லை. 

விடை கிடைத்த விதத்தையும், நாவல் உருவாகிற விதத்தை உணர்ந்தது பின்னாளில் விதிவசத்தால் நானும் எழுத்தாளனாக மாறிய சமயத்தில் எப்படி உதவிகரமாக இருந்தது என்பதையும் என்னுடன் பயணிக்கும் உங்களுக்குச் சொல்லத்தானே இதை இக்கணம் எழுதிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் மூச்சுவாங்கிக்கிட்டு பிறகு சொல்கிறேன். ஸீயு.

(இன்னும் வரும்…)

balaganessh32@gmail.com – 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button