கட்டுரைகள்

சுநீல் கங்கோபாத்தியாயின் “தன் வெளிப்பாடு” – நூல் விமர்சனம்.

முரளி ஜம்புலிங்கம்

ஹிந்தியில் ‘தில் சாத்தே ஹே’,  ‘ஜிந்தகி நா மிலேகி டொபரா” போன்ற படங்களை நீங்கள் பார்த்தது உண்டா?  படம் முழுக்க நண்பர்கள், காதல், பயணம், மது, போதை என்று கொண்டாட்டமாக இருக்கும். அதற்கு ஈடான நாவலை படித்திருக்கிறீர்களா ?  இல்லை என்றால் அந்த புது அனுபவத்திற்கும், பெரும் கொண்டாட்டத்திற்கும் இந்த நாவலை வாசியுங்கள். நான் வாசித்த வரையில் இந்திய மொழிகளில் இப்படி இலக்கற்ற  கொண்டாட்டத்தை கொடுத்த ஒரு சில படைப்புகளில்  ‘தன் வெளிப்பாடு’ மிக முக்கியமான ஒன்று.

கிராமத்திலிருந்து கல்கத்தாவிற்கு வந்து வேலை செய்யும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த சுநீலின் பார்வையில் கதை தொடங்குகிறது. வாழ்க்கையை முழுதாக உணர்ந்து கொள்ளவேண்டுமென்றால் அதன் ஒளிமிக்க பகுதிகளை மட்டுமல்ல, இருண்ட பகுதிகளையும் புரிந்து கொள்ளவேண்டும் என்பது அவனுடைய கொள்கை . ஓரளவுக்கு நல்ல பொருளாதார பின்புலத்தில் இருக்கும் அவன் கல்கத்தாவின் இருண்ட அல்லது கண்ணியமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் போகாத இடத்திற்கு தனக்கான அனுபவத்தைத் தேடி பயணிக்கிறான். இந்தப் பயணத்தில் சுநீலுடன் சேகர், அவினாஷ், சுவிமல் என்ற அரக்கர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் கல்கத்தாவின் ரஸ்தாக்கள், சந்து பொந்துகள், சூதாட்ட விடுதிகள், திருநங்கைகள் நடனமாடும் இடங்கள், விபச்சார விடுதிகள், மது விடுதிகள், போதை வெறிகொண்ட இரவுகள் என்று பயணிக்கிறார்கள். அதில் தான் எதிர்பார்த்த அனுபவம் கிடைக்காததால் ஒரு வேளை பெண்ணை காதலித்தால் அது கிடைக்குமோ என்று காதலிக்க தொடங்குகிறான். எதிலும் திருப்தி கிட்டாமல் கடைசியாக ஒரு முடிவுக்கு வருகிறான். அது மனிதர்கள் மேல் நம்பிக்கை வைக்காததுதான் தான் எதிர்பார்த்த அனுபவம் கிடைக்காததற்கான காரணம் என்று.

தன்னுடைய அண்ணன் சேகரை காணவில்லை என்று சுநீலை தேடிக்கொண்டு ஒரு இளைஞன் வருவதிலிருந்து கதை தொடங்குகிறது. முந்தைய இரவின் போதை தெளியாத சுநீல் நிறையத் தண்ணீர் குடிக்கிறான். இரவில் நிறைய மது அருந்திவிட்டு மறுநாள் காலையில் தண்ணீர் குடித்தால் அந்தத் தண்ணீரின் சுவையே சுவை! வாழ்க்கையில் மது அருந்தாதவர்கள் தண்ணீரின் உண்மையான சுவையை அறிய முடியாது என்கிறான். மதுவுக்கு இப்படி ஒரு அர்த்தம் சொல்லி நான் இது வரை கேட்டதில்லை. சாகச பிரியனான சேகர் ஏதாவது புது சாகசத்திற்குப் பயணப்பட்டிருப்பான். சீக்கிரம் வந்து விடுவான் என்று ஆறுதல் சொல்லி அனுப்புகிறான். ஆனால் சேகர் வீடு போய் சேரவில்லை என்று தெரிகிறது. அவனை அவினாஷ் மற்றும் சுவிமலின் துணை கொண்டு தேட ஆரம்பிக்கிறான்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் சேகர் சுநீலை அழைக்கிறான். நாம் வழக்கமாகச் செல்லும் பெண்ணின் வீட்டில் தான் இருப்பதாகவும் உடனே தன்னை வந்து சந்திக்குப்படியும் அழைக்கிறான். சுநீலுக்கு அங்குப் போவதில் விருப்பமில்லை. விபச்சார சூதாட்ட மது விடுதிகளில் அவனுக்குக் கிட்டிய அனுபவங்களில் அவன் சலிப்புற்றிருந்தான். யாரிடமாவது நிபந்தனையற்ற அன்பு செலுத்துவதின் மூலம் தான் எதிர்பார்க்கும் அனுபவம் கிட்டும் என்று எண்ணுகிறான். ஆனால் யாரை அன்பு செய்வது – தன்னையா அல்லது ஒரு பெண்ணையோ? தன்னையே நேசிக்கிறதைச் சரியா உணர முடியாது. அது காத்து மாதிரி. தண்ணியோட நிறம் மாதிரி. அந்த அன்பு வேற எதோடயாவது மோதவேண்டும். அந்த வேறொரு பெண்ணா இருந்தா நல்லது. ஆகையால் ஒரு பெண்ணை காதலிக்கலாம் என்று முடிவுக்கு வருகிறான். இருப்பினும் சேகரின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக அந்த விபச்சார விடுதிக்குச் செல்லுகிறான்.  அங்கு வழக்கமாக தாங்கள் சந்திக்கும் பெண்ணுடன், தன் மகனைத் தேடி வந்த வேறொரு புதிய பெண்ணைச் சந்திக்கிறான். தனக்கு சேகரும் சேகரின் நண்பர்களும் உதவ வேண்டும் என்று அந்தப் பெண் கோருகிறாள். இந்த உணர்ச்சி போராட்டம் சுநீலையும் அவன் நண்பர்களையும் காவல் நிலையம் வரை அழைத்துச் செல்கிறது.

காதலிலும் சுநீலால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. அவனை விரும்பும் ஒரு பெண்ணின் மீது அவனுக்கு காதல் வர மாட்டேன் என்கிறது. அவன் விரும்பும் ஒரு பெண்ணோ அவனைத் தொடர்ந்து அலைக்கழிக்கிறாள். ஒரு பெண்ணின் உள்ளேயிருந்து அவளது பெண்மையை வெளிக்கொணர முயற்சிக்கிறான். அவனால் முடியவில்லை. எப்படி வெளிக்கொணர்வது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறான். இதயம் கிதயம் என்பதெல்லாம் வெறும் பேச்சு, ஒரு பெண்ணின் உள்ளிருக்கும் பெண்மையை பார்க்காமல் தன்னால் இருக்க முடியாது. அந்தப் பெண் அதைக் காண்பிக்காவிட்டால் அதை தன்னால் பார்க்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறான்.

சுநீலின் இந்தத் தேடலுக்கு மிக முக்கிய காரணம் நாவலின் முதல் பத்தியில் அண்ணனைக் காணவில்லை என்று ஒருவன் முறையிட்டானே, அந்த காணாமல் போன சேகர்தான். நம் எல்லாருக்குமே சிறு வயதில் இருந்தே ஒரு நண்பன் இருப்பான். அவன்தான் திருட, குடிக்க, புகைபிடிக்க, ஆபாசப் படங்கள் பார்க்க, கெட்ட வார்த்தைகள் கற்றுக்கொடுக்க என்று பெரும்பாலானவற்றை அறிமுகப் படுத்துவான். அவர்களை நம்மால் முற்றிலும் அரவணைக்கவோ அல்லது முற்றிலும் புறக்கணிக்கவோ முடியாது. அவர்களில் ஒருவன்தான் இந்த சேகரும். ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் மீற அவன்தான் சுநீலுக்கு கற்று தருகிறான். ஒரு இரவு முழுக்க பிளாட்பாரத்தில் படுத்துக்கொள்ள, ஆற்றின் கரையோரத்தில் படுத்துக்கொண்டு நடு இரவில் வீட்டிற்குப் போக, ஊரை விட்டு ஓடிப் போக, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்காமல் சாப்பிடாமல் இருக்க, நடுநடுவிலே வழக்கத்துக்கு மாறா நடந்துக்க, வாழ்க்கையின் மீது சலிப்பு தட்டாமல் இருக்க இதை எல்லாம் செய்ய சொல்கிறான். உண்மையில் வாழ்க்கையின் சுவாரசியத்தை கூட்டுகிறவர்கள் இவர்கள்தான். இந்த நாவலிலும் சுவாரசியம் தருகிறவன் சேகர்தான்.

கிட்டத்தட்ட 50 வருடங்களுக்கு முன் வெளியான படைப்பு. இப்போதைய காலத்துக்கும் அப்படியே பொருந்தக்கூடியது. இது இந்தியில் அல்லது வங்காளத்தில் திரைப்படமாய் வந்ததா என்று தெரியவில்லை. தமிழில் திரைப்படமாய் எடுக்க ஆகச்சிறந்த படைப்பு. இப்புத்தகத்தைப் பரிசளித்த நண்பர் எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமாருக்கு நன்றி.

இதை எல்லாம் மீறி இந்த நாவலைப் படிக்க ஒரு வலுவான காரணம் இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்த சு.கிருஷ்ணமூர்த்தி. இவர் மொழி பெயர்த்த “நீலகண்ட பறவையை தேடி” யும் நிச்சயம் படிக்க வேண்டிய வங்காள நாவல்.

நேஷனல் புக் டிரஸ்ட் இப்புத்தகத்தைத் தமிழில் வெளியிட்டு இருக்கிறார்கள். இப்புத்தகத்தின் பழைய பதிப்பு மட்டுமே தற்போது கிடைக்கிறது. அதுவும் வரும் நாட்களில் கிடைக்காமல் போகலாம். விலை 38 ரூபாய் மட்டுமே. எங்கு இந்தப் புத்தகத்தை பார்த்தாலும் வாங்கிவிடவும். நிச்சயம் படிக்கவேண்டிய நாவல்.


நூல்: தன் வெளிப்பாடு – மொழிபெயர்ப்பு நாவல்
ஆசிரியர்: சுநீல் கங்கோபாத்யாய்
தமிழில்: சு. கிருஷ்ண மூர்த்தி
பதிப்பகம் : நேஷனல் புக் டிரஸ்ட்

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button