மனிதர்கள் எப்பொழுதுமே கதைகளைச் சுற்றியும், கதைகளாகவும் வாழ்கின்றனர். பெரும்பாலான கதைகள் இறந்த காலத்திலே கேட்டதாக ஞாபகம். சில கதைகள் உண்மை கதையாகவும் சில கதைகள் உவமையாகவும் இருக்கின்றன.
இந்தத் தொடர் The Railway Men: The Untold Story of Bhopal 1984 ஒரு உண்மைச் சம்பவத்தை, வரலாற்றை ஒரு கதையாக எடுத்துரைக்கிறது. இந்தத் தொடர் ஒரு உணர்வு பெருக்கை ஏற்படுத்தியது என்று சொன்னால் அது மிகையாகாது.
முதன்முதலில் போபால் பேரழிவு பற்றி எனக்கு பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கூறிய பின்பு அதனை பற்றி வீட்டில் பேசிய ஞாபகம் இருக்கின்றது. இன்று அது எவ்வாறு நிகழ்ந்தது என்று ஒரு தொடராகப் பார்க்கையில் நிச்சயம் பயமாக இருக்கின்றது.
நிறைய தொடர்களில் கூட்டம் கூட்டமாக மக்கள் நடித்து இருக்கிறார்கள். ஆனால் இந்தத் தொடரை பொறுத்தவரை முக்கிய கதாபாத்திரங்களைத் தாண்டி நடித்திருந்த பலரின் முகங்கள் மனதில் ஆழமாக பதிந்திருந்தன. அதில் கமருதீன், பாட்டு பாடிய சிறுவன், சலிமாவும் குழந்தைகளும், இரயிலில் இருவரை காப்பாற்றிய காவலர், காத்திருப்பு அறையில் இருந்த மாணவிகள், பென்னிடிக், விஜயாவும் மகளும் என பலரை இன்னும் அடுக்கி கொண்டே போகலாம்.
இந்த மனிதர்களைத் தாண்டி இத்தொடரில் இந்த உண்மைச் சம்பவத்தை, வரலாற்றை அப்படியே கண்முன் கொண்டு வருவதற்கு இப்திகார் சித்திக் (கே கே மேனன்), இமாது ரியாஸ் (பாபில் கான்), கான்ஸ்டபிள் (திவ்யேந்து ஷர்மா) ரட்டி பாண்டே ( மாதவன்).
இதில் இப்திகார் சித்திக் கதாபாத்திரம் மிகவும் பாதித்தது. இப்பொழுது உள்ள சூழலில் வழக்கமான வாழ்வில் இருந்து ஒரு விடுதலையோ அல்லது ஒரு இடைவேளையோ தேவைப்படுகிறது. ஆனால் ஒரு சில துறைகளிலோ, வேலைகளிலோ வழக்கமான, பெரிதும் புத்துணர்வில்லாத வேலையை விடாமல் தொய்வின்றி இவர் செய்து வருகிறார். அதற்கு அவருக்கு இருக்கின்ற PTSD ( Post traumatic Stress Disorder) ஒரு முக்கிய காரணம். அவருக்கு பின் இத்தொடர் முழுவதும் நம்பிக்கையை விதைத்துக் கொண்டிருந்தது இமாது ரியாஸ். இந்த கடினமான சூழலிலும் இறுக்கமான மனதைத் தளர்ந்துவதற்கு கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் தோன்றிய திவ்யேந்து ஷர்மா உதவினார்.
இத்தொடரின் முக்கிய முகமாக மாதவன் நடித்திருக்கிறார். ஒரு இரயில்வே ஊழியரைத் தாண்டி உறவுக்கும் வேலைக்கும் உள்ள இடைவெளியை நன்றாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு பத்திரிகையாளரின் தேவையும், அவரின் உழைப்பையும் குமாவத் என்னும் கதாபாத்திரம் உணர வைத்தது. நிஜ வாழ்வில் இப்படி ஒரு பத்திரிக்கையாளர் இருந்தார் என்பதை சொல்லவது மிகவும் முக்கியமாக உள்ளது.
இந்தத் தொடர் தொழில்நுட்ப காரணங்கள், நடிகர்கள், பிண்ணி இசை இதெல்லாம் தாண்டி மக்களின் வலி, அழுகை, பரிதாபம், ஏமாற்றம், அன்பு, இரக்கம், பிரிவு, காதலைச் சுமந்து வந்து மக்களிடம் வந்து சேர்த்து இருக்கிறது. அந்தப் பேரழிவின் தாக்கங்களையும் அந்த சம்பவத்தில் நிகழ்ந்த நிஜ ஆவணங்களையும் இத்தொடரின் முடிவில் இணைத்துள்ளது நிகழ்வை மேலும் பாதிப்படையச் செய்கிறது.
மனிதனுக்கு வரலாற்றில் உள்ள வலியைக் கடத்துவது மிகவும் முக்கியம். வலியுடன் அதிலிருந்து மீண்டு வந்த கதையையும் சேர்த்து கடத்தவது வாழ்தல் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். அந்த வகையில் இந்த பேரழிவில் இத்தனை இழப்புகளும் தாண்டி போபால் நகரம் வந்தது போல உலகம் மீளும். சில மனிதர்கள் ஏற்படுத்திய அழிவை, தவறை பல மனிதர்கள் பல வருடங்களாக சரி செய்கின்றனர். சரியும் தவறும் உலகத்தில் மனிதர்கள் உள்ளவரை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
******