இணைய இதழ்இணைய இதழ் 52சிறுகதைகள்

தேடி வந்த பாடல் – பிரசாத் மனோ

சிறுகதை | வாசகசாலை

10 மணி நேரம் கணிணியிடம் பறி கொடுத்திருந்த தனது மூளையை மீட்டெடுத்து நகரவாசிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே ஒரு வழியாக கனிமொழி தானே ரயில் நிலையத்தை வந்தடைந்தாள். இரவு ஏழு மணி, தானே ரயில் நிலையம் ரயில் என்ஜின்களின் சூட்டோடும் கும்பல் கும்பலாக ரயிலுக்கு முந்தியடிக்கும் பயணிகளின் மூச்சுக்காற்றின் சூட்டோடும் வெக்கை ஏறிக் கிடந்தது. மொத்த தானே ஜனத்தொகையும் ரயில் நிலையத்தில் இருப்பது போலவும் ரயில் பெட்டிகளே அவர்கள் வசிக்கும் வீடுகள் போலவும் தான் எப்போதுமே தானே ரயில் நிலையம் கனிமொழிக்குப் பட்டது. மும்பை பெருநகரத்தின் ரயில் நிலையங்களில் ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகள் அனைத்தும் அப்படித்தான் என்றாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் வேலை முடிந்து மாலை வீட்டிற்குச் செல்லும் இந்த ரயில் பாதை, அவளுக்கு அப்படிப்பட்ட ஒரு அதீத கற்பனையைத்தான் கொடுத்தது.

கொஞ்சம் கவனித்துப் பார்த்ததில், காலை வேலைக்குச் செல்லும்போதும் ஜனங்கள் இதே பரபரப்போடு தான் இருக்கிறார்கள். ஆனால், மாலையில் அவர்கள் முகத்தில் பரபரப்போடு ஒரு மகிழ்ச்சியும் அப்பிக்கொண்டுவிடுகிறது. கனிமொழியின் சிந்தனையில் இப்படி ஒரு எண்ண ஓட்டம் நெளிந்து கொண்டிருக்க, ரயில் நிலையத்தின் ஒலி பெருக்கியில், “விக்ரோலி, சயன் வழியாக சத்ரபதி சிவாஜி டெர்மினல் செல்லும் ரயில் முதலாம் ப்ளாட்ஃபாரத்திற்கு வந்துகொண்டிருக்கிறது” என ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் மாறி மாறி ஒலித்துக்கொண்டிருந்தது. ரயில் தூரத்தில் மெல்ல வருவதைப் பார்த்த பயணிகள், ரயிலின் மெல் வேகத்திற்கு ஏற்றாற்போல முன்னேறி நடந்தனர்.

கனிமொழி தனது இரு தோள்களின் வழியாக முதுகில் தொங்கிக்கொண்டிருந்த பேக்கை கழட்டி கைகளை மீண்டும் இரு பக்கமும் நுழைத்து பின்பக்கம் போடுகிற அதே பாணியில் முன்பக்கம் போட்டுக்கொண்டாள். திருடர்கள் அதிகம் என்பதால் மும்பை ரயில் பயணிகள் காலம் காலமாக செய்யும் முன் எச்சரிக்கை நடவடிக்கை இது. கனிமொழியும் அதற்கு விதிவிலக்காக ஆகவில்லை. ரயில் கீச்சிய குரலில் நின்ற நிமிடம், பெட்டிகளில் உள்ள பயணிகளை இறங்கவிடாமல் ஒவ்வொரு கும்பலும் முந்தியடித்து ஏறின. எந்த மெனக்கெடலும் இல்லாமல் அந்த கூட்டம் கனிமொழியையும் ரயிலுக்குள் ஏற்றிவிட்டது. இந்த இரண்டு வருடங்களாக ஓரிரு முறை மட்டுமே இருக்கையில் அமர இடம் கிடைத்திருக்கிறது. மும்பை ரயில்களில் இருக்கைகளில் அமர்ந்துக்கொண்டு வருவதை விட நின்று கொண்டு வருவதே இப்பெருநகருக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்கும் என்பதும், எந்த நாள் மும்பை ரயில்களில் தனக்கு இடம் கிடைக்கிறதோ அந்த நாள் இந்த நகரம் அதன் இயல்புத்தன்மையை இழந்து நிற்கிறது என்பதும் தான், இந்நகரத்தின் மீதுள்ள கனிமொழியின் மதிப்பீடு.

ரயில் மெதுவாக கிளம்பி வேகமெடுத்தவுடன் கனிமொழி தனக்கு மேலே கம்பியிலிருந்து விழுதுகள் போல் தொங்கிக்கொண்டிருக்கும் கைப்பிடிகளில் ஒன்றை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு ரயிலுக்குள் நிற்கும் பயணிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தன் வயதை ஒத்த யுவன் யுவதிகள் தன்னைப் போலவே பேக்கை முன்பக்கம் போட்டிருப்பதை பார்க்கும்போது குழந்தை பேம்பர்ஸ் மாட்டியிருப்பது போல அவளுக்குப் பட்டது. தானும் மற்றவர் கண்களுக்கு அப்படித்தான் தெரிவோம் என்பதை நினைக்கும்போது லேசாக சிரிப்பு வந்துவிட்டது. கனிமொழி லேசாக சிரித்ததைக் கேட்டு பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த ஒரு முதியவர் அவளை ஒருகணம் பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டார். கனிமொழி நின்று கொண்டிருந்த இடத்திற்கு சற்று தொலைவில் தன் வயதை ஒத்த பெண் ஒருத்தி ஒரு ஆணுடன் கொஞ்சலாக பேசிக்கொண்டிருந்தாள். இருவரின் தோல் நிறங்களைப் பார்க்கும் போது மராத்தியர்கள் எனத் தெரிந்தது. இரண்டு வருடங்களுக்கு முன்பு கனிமொழிக்கு தானேவில் ஒரு ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தது. தினமும் இதே ரயிலில் மாலை வீட்டிற்கு செல்வதை தன் கடமையாக வைத்திருக்கும் கனிமொழி, பல யுவன் யுவதிகள் நெருக்கமாக இருப்பதை பல முறை பார்த்து வந்தாலும் அந்த ஜோடியை பார்த்த போது ஒரு காலத்தில் தான் காதலித்த மராட்டி பையன் ஞாபகம் அவளுக்கு வந்தது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் இப்போது நினைத்து வருத்தப்பட இந்த மூளையில் தெம்பில்லை என்ற எண்ணத்துடன், ரயிலுக்கு வெளியே தன்னைக் கடந்து செல்லும் அப்பார்ட்டுமெண்ட்டுகளின் மின் விளக்குகளை கவனிக்கத் தொடங்கினாள். மூன்று ஸ்டேஷன்களை தாண்டி விக்ரோலியை நெருங்கும் போது அவளது மொபைல் ஃபோன் அவளை கூப்பிட, தனது முன்னால் மாட்டிக் கொண்டிருந்த பேக்கின் முன் ஜிப்பை அந்த கூட்டத்தில் யார் மீதும் தன் கை படாதவாறு கவனமாகத் திறந்து, அதில் இருந்த மொபைல் ஃபோனை எடுத்து அட்டெண்ட் செய்தாள்…

“ஹலோ.. எங்க வந்துட்டு இருக்க?”

“என்னம்மா, இப்பதான் விக்ரோலியே வருது”

“சரி, நீ வரும் போது காமராஜர் ஸ்கூல் எதுத்தாப்ல இருக்குற அண்ணன் கடைல ரெண்டு மாவு பாக்கெட் வாங்கிட்டு வந்துடுடி”

“ஏன், உன் பையன் அங்க என்ன நொட்டிட்டிருக்கான்?”

“நீ அந்த வழியாதானே வர்ற, அப்படியே வாங்கிட்டு வந்துடு”

“அதெல்லாம், முடியாது ஃபோன வை” என கடுப்பில் அதனை அணைத்து தன் ஜீன் பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள். தன் தம்பியின் மீதுதான் தன் பெற்றோருக்கு ரொம்ப பாசம் என நினைத்து மேலும் வெறுப்பை ஏற்றிக் கொண்டாள். தம்பியை கரித்துக் கொட்டியதும் ரயில் விக்ரோலி ஸ்டேஷனில் நின்றதும் சரியாக இருந்தது. நின்ற நிமிடத்தில் பயணிகள் ஏறவும் இறங்கவுமாக இருந்தனர். ரயிலுக்குள் கூட்டம் சற்று அதிகமாகி காற்று புகாதவாறு அவளை இறுக்கியது.

அப்போது கூட்டத்தின் ஊடாக ஒரு பாடல் மெல்ல மேலேறி வருவதை உணர்ந்தாள். மிகவும் சன்னமாக மிகவும் தொலைவில் இருந்தும் அப்பாடல் வருவதாக உணர்ந்தாள். அப்பாடலின் வரிகள் அவள் காதுகளுக்கு சரியாக கிட்டவில்லை என்றாலும் அதன் இசைக் கோர்வைகள் அவ்வெப்பக் காற்றில் கலந்து அவள் காதுகளுக்கு அருகிலும் சற்று தொலைவிலும் வந்து வந்து சென்றது. அதன் பின் ஒரு திசையில் அப்பாடல் தூரத்தில் சென்று கொண்டே இருந்தது. ஆனாலும், அவள் கவனத்தில் அந்த இசைக்கோர்வை அப்படியே நின்றுவிட்டிருந்தது. அவள் தன்னையும், அந்த ரயிலையும், அந்த ஜன நெரிசலையும் மறந்தாள். தன் உணர்வுகளற்ற ஏதோ ஒரு வெளியில் பறப்பது போன்று அவள் உடல் எடையிழந்து போனது. எந்த ஒரு காரணமும் அற்ற நிலையில் ஒரு லேசான புன்னகை அவள் உதட்டில் விரிந்தது. அவள் முக்காலத்தில் இருந்தும் விலகி நின்று கொண்டிருந்தாள். அந்த சில வினாடிகள் இல்லாமைக்கு பின் சட்டென ரயில் விக்ரோலி ஸ்டேஷனில் இருந்து கிளம்பியது. உணர்வற்று கிடந்த பிணம் மீண்டும் உயிர்பெற்று எழுந்தது போன்ற விழிப்பை அவள் அடைந்தாள். எங்கே இருக்கிறோம் என்ற நினைவு மீண்டது.

ரயில் “கீச்ச்ச்” என்ற ஒலி எழுப்பி மெல்ல நகர்ந்து வேகம் கொண்டது. பெட்டியின் நுழைவு வாயிலை பார்த்தாள். இரவில் பிளாட்ஃபார்ம் மின் விளக்குகள் பரப்பி விழுந்த ஒளியில் பல தலைகள் சென்று மறைந்தன. ரயில் அதிவேகம் கொண்டதும் பல வீடுகளும், உயர நிமிர்ந்து நின்ற அப்பார்ட்மெண்டுகளும் எண்ணற்ற மின்விளக்குகளை ஒளிரவிட்டு மறைந்து சென்றன. கனிமொழிக்கோ தன் கண்களில் இருந்து மறையும் அனைத்தும் அந்தப் பாடலாகவே தெரிந்தன. ரயில் பெட்டி முழுவதும் அப்பாடல் காற்றினூடே நிறைந்து கொண்டிருந்தது. ரயிலுக்கு வெளியில் கடந்து போன ஒவ்வொரு மின் விளக்கும் அப்பாடல் வந்த தருணத்தையே காதில் அறைந்துவிட்டு சென்று கொண்டிருந்தது. அப்பாடல் நிச்சயமாக ஹிந்தி பாடலாகத்தான் இருக்கவேண்டும் என யூகித்தாள். பாடலின் வரிகள் தெளிவாக எட்டவில்லை என்றாலும் காதுக்கு கேட்டவரையான அந்த இசையின் தரம் தன் வாழ்வில் கடந்து போன ஹிந்தி பாடல்களின் சாயலில் இருந்ததாகவே அவளுக்குப் பட்டது.

இந்த “கடந்து போன” என்ற வார்த்தை அவளுக்கு சரியான ஒன்றாகவே தெரிந்தது. கனிமொழி பாடல் கேட்பதே அபூர்வமான ஒரு விஷயம். அப்படி கேட்டாலும் தமிழ் பாடல்கள் தான். மிகவும் பழைய பாடல்கள் என்றால் அசூயை. அந்த பக்கமே காது கொடுக்க மாட்டாள். இந்த இசையமைப்பாளர் அந்த பாடகர் என்றெல்லாம் தேர்ந்தெடுத்து கேட்கும் வழக்கம் அவளுக்கு இருந்ததில்லை. யாராவது பரிந்துரைத்தாலோ அல்லது அவளுக்கு பிடித்திருந்தாலோ கேட்பது வழக்கம். அதே போல் ராகத்தைப் பற்றியும் தாளத்தைப் பற்றியும் அவளுக்கு எந்த அறிவும் கிடையாது. அவளுக்கு அப்படி ஒன்று இருப்பதே கூடத் தெரியாது.

மும்பையில் தமிழ்க் குடும்பத்தில் பிறந்த இந்த 25 வருட வாழ்வில் அவள் ஒரு ஹிந்தித் திரைப்படத்தை கூட முழுதாகப் பார்த்ததில்லை. ஹிந்தி நடிகர்கள் யாரும் அவள் கனவில் வந்து அவள் தூக்கத்தை கெடுத்ததும் இல்லை. ஹிந்திப் பாடல்களை பொருத்தவரை அவளது தோழிகளின் திருமணத்திலோ, கணபதி சதுர்த்தி விழாவிலோ, அல்லது அவளது தம்பி ஜித்தின் எதாவது ஹிந்திப் பாடல்களை விரும்பி எப்போதாவது ஸ்பீக்கரை அலற விட்டு கேட்கும்போதோ கேட்டது தான். கேட்டது என்று கூட சொல்வது சரியாக இருக்காது. அவள் காதில் வந்து விழும், அவ்வளவுதான். அவள் அப்பாடல்களை ஒரு பொருட்டாக கண்டு கொண்டதே இல்லை. இதையெல்லாம் தான் நினைத்து பார்க்கும்போது அவள் கேட்ட பாடல் ஒரு ஹிந்திப் பாடல் என முடிவெடுத்துக் கொண்டது அவளுக்கு சற்று வியப்பே அளித்தது.

மனதில் இது போன்ற நினைவலைகளின் உரையாடல்கள் உருண்டு கொண்டிருக்கும்போது கட்கோபார் ஸ்டேஷனில் ரயில் நின்றது. சயன் ஸ்டேஷனில் இறங்கி தாராவி பகுதிக்கு நடந்து செல்ல வேண்டிய கனிமொழி தற்போது கட்கோபர் ஸ்டேஷனில் இறங்கி நின்றாள். ரயில் அவளை அப்படியே விட்டு விட்டு கடந்து சென்று கொண்டிருந்தது. அவளுக்கு இப்போது தேவை அந்தப் பாடல் மட்டும் தான் என அவளுக்கு தோன்றியது. இப்போது எதற்கு இங்கே இறங்கினோம் என்று கூடத் தெரியாமல் அவள் சித்தம் கலங்கியிருந்தது. “இந்த சோர்வுற்ற மூளைக்கு ஒரு ஆறுதல் தேவைப்படுகிறதா என்ன? அப்படி அந்தப் பாடலில் என்ன இருக்கிறது. அந்த பாடல் வரிகளை கூட நாம் தெளிவாக கேட்கவில்லையே. யாரோ தூரத்தில் ஐந்து வினாடிகள் ஒலிக்க விட்டுச் சென்ற பாடல் அது. அது அப்படியே போய் விட்டது அது என் கைகளில் இனி அகப்படாது. அய்யோ! இனி அந்தப் பாடலை நான் எப்படி கண்டுபிடிப்பேன். அது என்ன பாடலாக இருக்கும்?” – என அவளது மூளைக்குள் பிரளயமே நடந்து கொண்டிருந்த வேளையில், தற்போது மீண்டும் தானே செல்லும் வேறு ஒரு ரயிலைப் பிடித்திருந்தாள்.

நாம் இப்போது செய்து கொண்டிருப்பது ஒரு பைத்தியக்காரத் தனம் தெரியுமா? என்று அவளுள்ளே எழுந்த கேள்வியை அவளே புறக்கணித்து விட்டு விக்ரோலி ஸ்டேஷனில் இறங்கினாள். முன்னால் தொங்கிக் கொண்டிருந்த பேக்கை கழட்டி தோள்களுக்கு பின்னால் போட்டுக்கொண்டு படிகளில் மெல்ல ஏறி பாலத்தில் நடந்து சத்ரபதி சிவாஜி டெர்மினல் செல்லும் ரயிலின் நடைபாதைக்கு வந்தாள். அங்கே உள்ள ஒரு பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு, “இங்கே தான் அந்தப் பாடல் கேட்டது. இங்கே இத்தனை கடைகள் இருக்கிறதே. எதாவது ரேடியோவில் இப்பாடல் ஒலித்திருக்குமா? இல்லை, இல்லை ரேடியோவில் ஒலித்திருந்தால் ரயில் நின்று கொண்டிருக்கும் போதே அது என்னைக் கடந்து சென்றிருக்க முடியாது. யாரோ மொபைல் ஃபோனில் ஸ்பீக்கரில் வைத்து கேட்டுக் கொண்டே ரயில் நடைபாதையில் நடந்து சென்றிருக்கிறார்கள். ஹெட் ஃபோன் இல்லாத ஒரு நவீன மனிதனை தேடிக்கொண்டிருக்கிறோமா? விளங்கும்.. நாம் தேடிக் கொண்டிருப்பது மனிதனையா அல்லது அந்தப் பாடலையா?, என்ன இது? எனக்கு ஏதோ ஆகி விட்டது?” என அவளுக்குள் பல குரல்கள் கேட்ட வண்ணம் இருந்தது.

இந்த குரல்களை அடக்க இப்போது நமக்கு தெம்பில்லை எனத் தெரிந்ததால், தனது மொபைல் ஃபோனை எடுத்து ஹெட் ஃபோனை சொருகி யூட்யூப்புக்குள் புகுந்து தன்னால் முடிந்த அளவுக்கு பழைய ஹிந்திப் பாடல்களை தேடத் தொடங்கினாள். எல்லாமே அந்தப் பாடலாகத் தெரிந்தது. அவள் அந்தப் பாடலின் ராகத்தையாவது சரியாக முணுமுணுத்து பிறரிடம் கேட்டால் கண்டுபிடித்து விடலாம் என நினைத்தாள். அவள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அத்தனை பேரும் ஹிந்திக் காரர்கள் தானே, அப்பாடலை சரியான ராகத்தில் முணுமுணுத்து காட்டினால் அவர்கள் நிச்சயமாக கண்டுபிடித்து விடுவார்கள். நினைவில் அப்பாடலைக் கொண்டுவந்து அதை நினைவிருந்த வரை ஓடவிட்டு அதனூடாகவே முணுமுணுத்து பார்த்தாள். அவளைப் பொருத்தவரை அது சரியாகவே இருந்தது. ஆனால், இந்த முணுமுணுப்பை யாராலும் கண்டுபிடிக்கவே முடியாது என்று அவளுக்குத் தோன்றி ஒரு பெரும் ஏமாற்றத்தை தந்தது. இந்த ஏமாற்றத்தோடும் யூட்யூப்பில் ஒவ்வொரு பாடலாக விரைவுபடுத்தினாள். ஒவ்வொன்றாக கடந்தாள். அவளது வலது கை கட்டை விரலுக்கு கண்களும் காதுகளும் முளைத்து ஒவ்வொரு பாடலையும் சொடுக்கி சிறிது கவனித்து இதுவல்ல என நிராகரித்து கடந்து சென்றது. பெரும் களைப்போடு அப்படியே கண்களை மூடினாள். 

அவளுக்கு தெரிந்த ஹிந்தி வார்த்தைகள் எல்லாம் உயிர்பெற்று ஒரு குகை முகடு போல் ஆகின. கனிமொழி அக்குகையை நோக்கி நடந்து சென்று சிறிது நெருங்கியவுடன் ஒரு இளவயதுடையவன் அந்த குகைக்குள் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தான். அவன் முகம் மராட்டிய முகமாக இருந்தது. கனிமொழி அக்குகைக்குள் சென்றவுடன் அவன் லேசாக தலையைத் திருப்பி கனிமொழியை பார்த்தான். “என்னையதான் தேடிட்டு இருக்கியா?” என அவன் தமிழில் கேட்டவுடன் திடுக்கிட்டாள். 

அவள் அதிர்ந்து கொஞ்சம் நிதானித்து, “இல்ல, நான் ஒரு பாட்டு தான் தேடிட்ருக்கேன்”

“நான் தான் அந்தப் பாட்டுன்னு வச்சிகோவேன்”

கனிமொழி கொஞ்சம் வியப்பாக பார்த்து, “அப்படின்னா உனக்கு அந்த பாட்டு எந்த பாட்டுன்னு தெரியுமா? எனக்கு கொஞ்சம் சொல்லேன்” என கெஞ்சலாக கேட்டாள்.

“நீ தினமும் போற அதே ரயில் பாதையில தான் நானும் போறேன். இத்தன நாளா நீ என்னைய கண்டுக்கவே இல்லையே”

“பொய் சொல்லாத, ரெண்டு வருஷமா அதே ரயில் பாதைல தான் போயிட்டு இருக்கேன். நேத்து தான் அப்படி ஒரு பாட்டையே கேட்டேன்”

“அப்படி அந்த பாட்டுல என்ன இருக்கு? அது உன் தாய் மொழி கூட கிடையாது”

“எனக்கு சத்தியமா சொல்லத் தெரில, ஆனா, இந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமா தேட வைக்குது. அந்தப் பாட்டு கிடைக்குற வரைக்கும் நான் ஓயமாட்டேன்னு நினைக்கிறேன்”

அந்த இளைஞன் லேசாகச் சிரித்தான். “அந்தப் பாட்ட நீ அஞ்சு செகண்டு தான் கேட்ட. உனக்கு அந்தப் பாட்டோட முதலும் தெரியாது, முடிவும் தெரியாது, அது வெறும் பாட்டு”

“ஒரு வேள அந்தப் பாட்டு என்னோட வாழ்க்கைய முழுங்கப்போகுது ன்னு நினைக்கிறேன்”

“இது யதார்த்தத்துக்கு மீறுன சிந்தனை”

“ஹ்ம், இருந்துட்டு போகட்டும், சரி, நீ யாரு ன்னு சொல்லவே இல்லையே”

“என்னைய பத்தி நீ தெரிஞ்சிக்க எதுவும் கிடையாது. உன் வாழ்க்கையில் நான் ஒரு சின்ன பகுதி கூட கிடையாது”

“அப்றம் ஏன் இங்க இருக்க?”

“உனக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்”

“ஏன்னு தெரிஞ்சிக்கலாமா?”

“உனக்கு கொடுக்குறதுக்காக நான் ஒரு பரிசு வச்சிருக்கேன். அது உனக்காக நான் வாங்குன பரிசு கிடையாது. அது பல நாட்களா என் கிட்ட ஒட்டிக்கிட்டு இருக்கிற பரிசு, இனி அது உனக்கு தான் தேவைப்படும்னு நினைக்கிறேன்”

“ஏன் எனக்கு அந்தப் பரிசு?”

“நீ தான் அதை தேடிட்டு இருக்கியே”

“ஓஹோ, அந்தப் பாட்டையே எனக்குப் பரிசா கொடுக்க போறியா? என்னமோ நீயே அந்த பாட்ட வடிவமைச்ச மாதிரி பேசுற?”

“நான் வடிவமைக்கலைனாலும் என் கிட்ட இருந்து தான் உனக்கு அந்தப் பாட்டு அறிமுகமாச்சுன்னு மறந்துடாத”

“நீ என்ன சொல்ற? அப்போ நீ தான் அந்த ரயில்வே ஸ்டேஷன்ல….?”

“ஆமா, நான் தான். ரெண்டு வருஷமா எனக்கு உன்னைய நல்லா தெரியும். நீயும் என்னைய பாத்துருக்க. நீ மட்டும் இல்ல, இந்த நகரத்துல இருக்குற ரயில் வழித்தடங்கள்ல தினமும் பயணிக்கிற எல்லாரும் என்னைய பாத்திருக்காங்க. ஆனா, என்னைய யாரும் ஞாபகம் வச்சிக்கிறது இல்ல. இப்போ நீ மட்டும் தான் என்னைய தேடிட்டு இருக்க. அதுவும் இந்தப் பாட்டு மூலமா தேடிட்டு இருக்க.”

கண்களை விழித்தபடியே கனிமொழி அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். அந்த இளைஞன் மெதுவாக கனிமொழி அருகினில் வந்து அவளின் கண்களையே கூர்ந்து கவனித்தான். பின்பு அவளின் இரு தோள்களையும் தனது இரு கைகளால் பிடித்து, “இந்த அற்புதமான நாளை கொஞ்சம் நினைச்சிப் பாரு, இந்த பைத்தியக்காரத் தனமான காதலைப் பாரு, நீயும் நானும் தனியா இருக்குறது, ரொம்பவும் வேடிக்கையா இருக்குல” என சிரித்தான்.

கனிமொழி திடுக்கிட்டு எழுந்தாள். எழுந்த போது அவள் தனது வீட்டுப் படுக்கையறையில் இருந்தாள். அவளுக்கு வந்த கனவு அவளின் நெஞ்சுக்குள் எரிந்து கொண்டிருந்த தீயை மேலும் தூபம் போட்டு மூட்டியது போல் இருந்தது. உடல் வேர்வையால் நனைந்திருந்தது. அவளின் பல நாள் தூக்கத்தில் முதலும் இல்லாமல் முடிவும் இல்லாமல் பல கனவுகள் வந்திருக்கின்றன. காலையில் எழுந்ததும் அக்கனவுகளை அவள் பொருட்படுத்தியதே இல்லை. ஆனால், இந்தக் கனவு தன்னிடம் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டுப் போனதாக உணர்ந்தாள். இங்கே என்ன மாயாஜாலமா நடக்கிறது என சிரித்து விட்டு மணியைப் பார்த்தால். மணி ஏழு எனக் காட்டியது. எதுவும் யோசிக்காமல் சீக்கிரம் அலுவலகத்துக்கு கிளம்பினாள். இப்போது அவளின் சிந்தனை அந்தப் பாடலில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தது. ஆனாலும், கனவில் வந்த அந்த இளைஞனைப் பற்றியே சுழன்றுக் கொண்டிருந்தது.

“யார் அவன்? அந்த முகத்தை இதற்கு முன் பார்த்ததாக நியாபகமே இல்லையே?” என தனது நினைவுகளை புரட்டிக்கொண்டே இருந்தாள். குளித்துவிட்டு சர்ட்டும் ஜீனும் அணிந்து பேக்கை எடுத்துக் கொண்டாள். ஹாலில் அம்மா இருந்ததைப் பார்த்து விட்டு, “போயிட்டு வரேன்மா” எனக் கூறினாள். அவளின் தம்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவன் தலையில் ஒரு தட்டு தட்டி, “போயிட்டு வரேண்டா” எனக் கூறினாள். அவன் அவளை “போடி இவளே” என திட்டினான். “தெனமும் இப்படி சாப்புடாம போறியே, உடம்பு என்னத்துக்காகும்” என செல்லமாகத் திட்டிய அம்மாவை கண்டுகொள்ளாமல், வெளியே சென்று ஷூக்களை மாட்டிக் கொண்டு தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினாள்.

காலை வெயில் அவளை அள்ளி அணைத்தது. நேற்று இரவு வந்த வழியிலேயே அவள் கால்கள் பறந்தன. அவ்வேளையில் அச்சாலை எந்த பரபரப்பும் இல்லாமல் இருந்தது. கடைகள் எல்லாம் அடைத்திருந்தன. ரோட்டோரத்தில் முந்தைய நாள் எரித்த சிறிதளவிலான குப்பைகளில் இருந்து மெல்லிய புகை மேலெழுந்து வந்துகொண்டிருந்தது. பலவாறாக ஆங்காங்கே பரவிக் கிடந்த குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் நீண்ட துடைப்பத்தால் பெருக்கிக்கொண்டு இருந்தனர். நேற்று இதே பாதையில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அந்தப் பாடலின் ஞாபகத்தில் ஸ்தம்பித்திருந்ததை நினைத்துப் பார்த்தாள். நேற்று நமக்குள் ஏதோ பேய் புகுந்து விட்டது போல என நினைத்து சிரித்துக் கொண்டாள். எனினும் கனவில் வந்த இளைஞனின் முகமும் அவன் கூறிய சம்பந்தமற்ற வார்த்தைகளும் அவள் நினைவில் வந்து கொண்டே இருந்தது. “இந்த அற்புதமான நாளை கொஞ்சம் நினைச்சிப் பாரு, இந்த பைத்தியக்காரத் தனமான காதலை பாரு, நீயும் நானும் தனியா இருக்குறது, ரொம்பவும் வேடிக்கையா இருக்குல” – இதற்கு என்ன அர்த்தம்? ஏன் அவன் என் கனவில் வந்து இதனைச் சொல்ல வேண்டும்? சம்பந்தம் இல்லாத கனவில் சில சம்பந்தமில்லா வார்த்தைகள் என அவளே நினைத்து சிரித்துக் கொண்டாள்.

மக்கள் நடமாட்டம் சொற்பமாகவே இருந்தது. கனிமொழியின் கால்கள் விறுவிறுவென நடந்து சயன் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது. அவள் உள்ளே நுழைந்த நேரத்தில் தானே செல்லும் நகர்ப்புற ரயில் ப்ளாட்ஃபாரத்தில் வந்து நிற்க அதில் ஏறிக்கொண்டாள். ரயில் விக்ரோலி ஸ்டேஷனில் நின்றதும், நேற்று இந்த இடத்தில்தான் அப்பாடல் ஒலித்தது என அவளுக்கு நியாபகம் வந்தது. ரயில் மீண்டும் கிளம்பப்போகும் நேரத்தில் திடீரென அவள் ஸ்டேஷனில் இறங்கினாள். சிறிது நேரம் இந்த ஸ்டேஷனில் உட்கார்ந்து விட்டு போகலாம் எனத் தோன்றியது. “அந்த பாடலை நாம் மீண்டும் கேட்போம் என்ற நம்பிக்கையில் இங்கே காத்திருக்கிறோமா?” அவளுக்குள் அவளே கேட்டுக் கொண்டாள்.

அப்போது சற்று தூரத்தில் ரயில் பயணப்படாத ஒரு தண்டவாளத்தில் அழுக்கு சட்டையுடன் முட்டி வரை கிழிந்த பேண்ட் அணிந்துகொண்டு பிசுபிசுப்பான சடை முடியில் தொப்பி அணிந்துகொண்டு மனநிலை பிறழ்ந்தது போன்ற தோற்றம் கொண்ட ஒருவன் உட்கார்ந்திருந்தான். அம்முகத்தின் சாயல் நேற்று கனவில் வந்த இளைஞனின் சாயல் போன்று இருந்தததைக் கண்டு கனிமொழி சற்று திகைத்தாள். “இல்லை, அவன் இல்லை” என அவளது வாய் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், கனிமொழியின் மூளை அவனின் பிம்பத்தை காட்டிக்கொண்டிருந்தது. ப்ளாட்ஃபாரத்தில் இருந்து அவன் அருகே மெதுவாக நடந்து போனாள். அருகில் செல்லச் செல்ல அந்த இளைஞனின் முகம் கனவில் வந்த இளைஞனின் அசல் முகம் போல் மாறிக்கொண்டே வருவதை கவனித்தாள். அவன் அருகில் நெருங்கும்போது தான் அவன் கையில் ஒரு சிறிய டேப்ரெக்கார்டர் இருந்ததை கவனித்தாள்.

கனிமொழி சற்று தயங்கி அங்கேயே நின்றுவிட்டாள். கனிமொழியை பார்த்ததும் அவன் எழுந்து நின்று அவளையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். பின்பு தொப்பியை கழட்டி பிசுபிசுப்பாகிய அழுக்கேறி புழு போல் விழுந்துகொண்டிருந்த அவனது சடைமுடியை ஒரு கையால் சொறிந்துகொண்டே எக்களித்துச் சிரித்தான். பின்பு தனது கையில் வைத்திருந்த டேப் ரெக்கார்டரை அவளிடம் நீட்டினான். அவள் அதனை மிகுந்த தயக்கத்தோடு வாங்கி கொண்டாள். பின்பு அவன் சிரித்துக்கொண்டே தண்டவாளங்களுக்கு இடையில் ஓடி ப்ளாட்ஃபாரத்தில் ஏறி கூட்டத்துக்குள்ளே மறைந்தான். அவளுக்கு பெரும் வியப்பாக இருந்தது. “நாம் இன்னமும் கனவில் தான் இருக்கிறோமா? இங்கே என்ன நடக்கிறது. அலுவலகத்திற்கு செல்லும் நான் ஏன் இந்த ஸ்டேஷனில் இறங்கினேன்? இவன் ஏன் நம் கனவில் வரவேண்டும். இவனை நான் பார்த்தது கூட இல்லையே, இப்போது இந்த பழைய டேப்ரெக்கார்டரை ஏன் என் கையில் திணித்துவிட்டு செல்கிறான்” என எண்ணங்களை ஒடவிட்டு, “சம்பந்தமில்லாத மனிதன், சம்பந்தமில்லாத கனவு” என தனக்கு தானே சொல்லிக் கொண்டு லேசாகச் சிரித்துக் கொண்டாள். தன்னை அந்தப் பாடல் ஆக்ரமித்து இங்கே கொண்டு வந்து விட்டிருக்கிறது என அமானுஷ்யமாக நினைத்துக் கொண்டாள்.

அச்சிறிய டேப்ரெக்கார்டரை திறந்து பார்த்த கனிமொழி உள்ளே ஒரு கேஸட் இருந்ததைக் கண்டாள். டேப் ரெக்கார்டர் மிகவும் பழையது போல பல பகுதிகளில் சிராய்ப்புகளுடன் இருந்தது. தான் சிறு வயதில் பார்த்த டேப் ரெக்கார்டரை மீண்டும் பார்த்தில் அவள் மனதில் ஒரு சிறு நினைவேக்கத்தையும் கிளப்பிவிட்டது. கேஸட்டை எடுத்த எடுப்பிலேயே உள்ளே சொருகி ப்ளே பட்டனை அமுக்கினாள்.

நீண்ட மெல்லிய காற்று போன்ற ஒரு ஆரம்ப இசை தொடங்கியது. சற்று விநாடியில் ஒரு பெண் குரல் “கசப் கா ஹை தின், சோச்சோ ஜரா, யே தீவானாபன், தேகோ ஜரா” என ஹிந்தியில் பாட ஆரம்பித்தது. அவள் அந்த ஹிந்தி வரிகளுக்கு தமிழ் அர்த்தங்களை ஓடவிட்டுப் பார்த்து திடுக்கிட்டு நின்றாள்.

“இந்த அற்புதமான நாளை கொஞ்சம் நினைச்சிப் பாரு, இந்த பைத்தியக்காரத் தனமான காதலைப் பாரு, நீயும் நானும் தனியா இருக்குறது, ரொம்பவும் வேடிக்கையா இருக்குல”

******

arun.nimmy5@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button