
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் முதல் நாள் என்பது எனக்கு பதட்டம் நிறைந்த நாளே. அப்படித்தான், ஆறாம் வகுப்பு பாசாகி ஏழாம் வகுப்புக்குப் போன அன்று எனக்கு பள்ளியில் முதல் நாளென்றதால் ஒரு சின்ன பதட்டம். இந்த வருஷமும் நல்ல டீச்சர் யாராவது க்ளாஸ் டீச்சரா வரணும் சாமி. நானே க்ளாஸ் லீடர் ஆகணும். அப்பதான் போன வருசம் மாதிரி பசங்க என்னை கிண்டல் பண்ணாம இருப்பானுக. போன வருஷமே S. ஜெயச்சந்திரன் என்கிற என்னுடைய பெயர் ரொம்ப நீளமாக இருப்பதாக சொல்லி வகுப்பில் எல்லாரும் என்னை ‘ஜெயா’ என்றே அழைக்க ஆரம்பித்தனர். அப்பறம் அவனுகளே அதை பொண்ணு பேருன்னு சொல்லி அவ்வப்போது யாராவது கிண்டல் செய்யும்போது எனக்கு ரொம்ப கோபம் வரும். ஆரம்பத்திலிருந்தே அப்படிக் கூப்பிட்டு பழகி விட்டார்கள். அப்படிக் கூப்பிடாதீங்கடான்னு சொன்னால் அப்பதான், கூப்பிட்டா என்னடீ? ண்ணு இன்னும் அதிகமாக கேலி பண்ணுவாங்க. யாருமே காதுகொடுத்துக் கேட்டதில்லை.
ஆறாம் வகுப்புக்குப் போன அந்த முதல்நாள் இப்போதும் பசுமையாக நினைவில். முனிசிபல் ‘எலிமென்டரி ஸ்கூலி’லிருந்து முனிசிபல் ‘ஹை ஸ்கூலில்’ ஆறாம் வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். ஏற்கனவே படித்த பள்ளியைவிட இது பெரிய பள்ளி, பெரிய பெரிய கட்டிடங்கள். பழைய பள்ளியில் எல்லா வகுப்புகளுமே ஓட்டுக் கட்டிடங்கள்தான். ஆனால், இந்தப்பள்ளியில் ஒன்றிரண்டு கட்டிடங்கள் தவிர எல்லாம் தார்சு கட்டிடங்களாக இரண்டு அடுக்குகளிருந்தன. ஆறு முதல் ஒன்பது வரை கீழ் தளத்திலும், பத்து பதினொன்று வகுப்புகள் மட்டும் மேல் தளத்திலும். அதனாலேயே மேல் வகுப்பு பசங்க, கீழ்தள பசங்களை இளக்காரமாகப் பார்ப்பதுண்டு. அதுவும் திங்கள் வெள்ளி ‘ப்ரேயர்’ முடிந்து கலைந்து வகுப்புகளுக்கு மாடிப்படியேறிச் செல்லும்போது அவர்கள் முகத்தில் தெரியும் கர்வம் கீழ் வகுப்புப் பசங்களுக்கு எரிச்சலூட்டும். வாத்தியார்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏதாவதொரு வேலையாக யாராவது மேலே சென்றால்கூட ‘டேய்! இங்கென்னடா வேல ஒனக்கு?’ என்று எல்லாப் பையன்களும் மிரட்டுவார்கள். நல்லவேளை, அந்தப் பள்ளியில் திங்கள், வெள்ளி இரண்டு நாட்கள் மட்டும்தான் ‘ப்ரேயர்’ வைப்பார்கள், மற்ற சில பள்ளிகளைப் போல எல்லா நாட்களும் கிடையாது. அதனால், கீழ் தளப் பையன்களுக்கு வாரம் முழுவதும் வயிற்றெரிச்சல் பட வேண்டியிருக்கவில்லை. அன்று பள்ளி திறந்த முதல் நாளென்பதால் வகுப்புகள் சற்று தாமதமாகத்தான் தொடங்கின. இது பெரிய பள்ளிக்கூடம் என்பதால் வாத்தியார்கள் அதிகம் கண்டிப்பானவர்களாக இருப்பார்களோ என்று அச்சம். ‘பேபி க்ளாசி’லிருந்து அஞ்சு வரை நான் படிச்சதெல்லாமே டீச்சர்களிடம்தான். ஒரு வாத்தியார்கூட இல்லை. (இங்கு டீச்சர் என்றால் பெண் ஆசிரியர், வாத்தியார் என்றால் ஆண் ஆசிரியர் என்று புரிந்துகொள்ள வேண்டும்).
முதல் மணியடித்தபோது மனசு ‘திக் திக்’கென்று அடித்துக் கொண்டது. ‘சாமீ கடவுளே! முருகா! நம்ம ‘க்ளாசு’க்கு எப்படியாவது டீச்சரா வந்துடணும், வாத்தியார் வரக்கூடாது.’ கண்களைமூடி மனமுருக சாமியை வேண்டிக் கொண்டிருந்தேன். அப்போது, கசமுசாவென்று ‘குட் மானிங்க் டீச்சர்’ என்று, தகர உண்டியலில் சில்லரைக்காசுகளைப் போட்டுக் குலுக்கின மாதிரி கலைந்துபோன பல குரல்கள் ஒன்றாகக் கூச்சலிட்டன. திடுக்கிட்டு கண்களைத் திறந்தவன் கூட்டத்தில் கடைசிக் குரலாக ‘குட் மார்னிங்க்’ சொன்னபடி எழுந்து நின்றேன். அதற்குள் டீச்சர் சேரில் உட்கார்ந்து விட்டார். எனக்கு மனசுக்குள்ள சந்தோஷமாக இருந்தது. அட நம்ம ‘தனாக்கா’. அவர் என் அம்மாவுக்கு நெருங்கின சொந்தம். அப்பப்ப வீட்டுக்கு வந்து அவரது கஷ்டங்களை அம்மாவிடம் புலம்பிக் கொண்டிருப்பார். குடிகாரக் கணவன், குழந்தைகள் இல்லை, கருப்பாக குண்டாக இருப்பார். எப்போதும் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கொண்டிருக்கும். அந்தப்பள்ளியில் அஞ்சாம் வகுப்பில் அவங்கதான் எனக்கு ‘க்ளாஸ் டீச்சராக’ இருந்தார்கள். என்னோடு சேர்ந்து அவர்களும் இந்த பள்ளிக்கு வந்ததில் சொல்ல முடியாத சந்தோஷம். ‘அட்டென்டென்ஸ்’ எடுக்கத் தொடங்கி ‘S.ஜெயச்சந்திரன்’ என்று அழைத்தபோது உற்சாக மிகுதியால் எழுந்து நின்று சத்தமாக ‘ப்ரசென்ட் டீச்சர்’ என்று கீச்சுக்குரலில் கத்தினேன். குனிந்து கொண்டிருந்த தனாக்கா நிமிர்ந்து பார்த்து, ‘அட! ஜெயா.. நீ இந்த க்ளாஸ்தானா?’ என்று கேட்டபோது ‘ஆமாங்க்கா’ என்றேன். எனக்குப் பெருமை பிடிபடவில்லை. ‘உக்காரு’ என்று சொல்லிவிட்டு, ’’இந்த வருசத்துக்கு நாந்தான் உங்களுக்கு க்ளாஸ் டீச்சர், இங்லீஷ்கும், சோசியல் ஸ்டடீசுக்கும் நான் வருவேன், மற்ற பாடங்களுக்கு வேற டீச்சர்ஸ் வருவாங்க. எலிமென்ட்ரி ஸ்கூல்ல எல்லா பாடங்களுக்கும் ஒரே டீச்சர்தான் வந்து சொல்லிக் குடுத்தாங்க, இது ஹை ஸ்கூல் இங்க ஒவ்வொரு பாடத்துக்கும் ஒவ்வொரு டீச்சர் வருவாங்க. இத்தனை நாளா சின்னப் பசங்களா இருந்தீங்க, இப்போ ‘ஹை ஸ்கூல்’ வந்தாச்சு, ஆகவே விளையாட்டு புத்தியெல்லாம் மூட்டை கட்டி வெச்சிட்டு பொறுப்பாப் படிக்கணும் என்ன” என்றதும் எல்லாம் கோரசாக “செரீங் டீச்சர்” என கூக்குரலிட்டனர். “சரி இப்ப க்ளாஸ் லீடரா யாரைப்போடலாம், (ஒரு சுற்று எல்லாரையும் பார்த்துவிட்டு) ஜெயச்சந்திரன போட்டுக்கலாமா? அவன் நல்லா படிப்பான், ஒழுங்கா இருப்பான், என்ன?” என்றதும் எல்லாம் கோரசாக “செரீங் டீச்சர்” என்று கத்தினர். வகுப்பு முடிந்து செல்லும்போது தனவல்லி டீச்சர் என்னை அருகில் அழைத்து எனக்கு மட்டும் கேட்கும்படியாக “நான் உங்க வீட்டுக்கு வரும்போது மட்டும்தான் என்னை அக்கான்னு கூப்பிடணும், இங்க வந்தா டீச்சர்னுதான் கூப்பிடணும்” என்றார். ‘செரிங் டீச்சர்’ என்றதும் என் முதுகைத்தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
சென்ற ஆண்டு முழுவதும் வகுப்பில் நான்தான் கதாநாயகன். ஜெயா பார்க்க லச்சணமா இருக்கான்னு பலரும் சொல்வது என் காதில் விழும்போது பெருமையா இருக்கும். எப்போதும் துருதுருவென்று சுறுசுறுப்பான பையன் என்பதைக் கேட்டால், சொல்லவே வேண்டாம், அப்படியொரு பூரிப்பு. இந்தப்பள்ளியில் ஆண்டு முழுவதும் யூனிபார்ம் அணிந்து வர வேண்டுமென்று கட்டாயமில்லை. சுதந்திர தினம், குடியரசு தினம் தவிர ஆண்டுக்கு ஒருமுறை மாவட்டக் கல்வி அதிகாரி வரும் நாட்களில் மட்டும் எல்லாரும் கட்டாயம் யூனிஃபார்ம் அணிந்து வரவேண்டும். ஆண்களுக்கு காக்கி டவுசர்-வெள்ளை சட்டை பெண்களுக்கு நீலப்பாவாடை, வெள்ளை ஜாக்கெட், இள நீல தாவணி. பையன்கள் எட்டாம் வகுப்புவரையில்தான் அரைக்கால் டவுசர் அணியலாம். ஒன்பது வந்தால் ஃபுல் பேன்ட்தான். இதற்காகவே சீக்கிரம் ஒன்பதாம் வகுப்புக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எனக்கு முகம் லட்சணமாக இருக்குமென்றாலும் நான் மெலிந்த உடல்வாகு கொண்டவன் என்பதால் கை, கால்கள் மட்டும் குச்சி குச்சியாக இருக்கும். பின்பக்கம் புஷ்டியாக இல்லாததால் எனக்கு டவுசர் இடுப்பிலேயே நிற்காது. அரனாக்கயிற்றை எடுத்து அதற்குள்ளே டவுசரைச் சொருகி வெளிப்பக்கமாக மடிச்சு விட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்வேன். ஒன்னுக்குப் போகும்போதுதான் கவனித்தேன், எல்லாப் பையன்களுமே அப்படித்தான் பண்றானுங்க. பருத்த தொடைகளும், திரட்சியான குண்டிகளும் கொண்ட பூசினமாதிரி இருக்கிற பையன்களைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கும். எனது குச்சிக் கால்களை மறைப்பதற்காகவே சீக்கிரமாக பேன்ட் போட்டுக் கொள்ள வேண்டுமென ஆசைப்படுவேன். எங்கள் வீட்டில் தீவாளிக்கு மட்டுந்தான் புதுத்துணி எடுக்கற பழக்கம். அப்ப பேன்ட் எடுத்துக் குடுங்கன்னு கேட்டா ‘இன்னும் பேண்டா ஒழுங்கா பொச்சு கழுவத்தெரியாது உனக்கு, அதுக்குள்ளாற பேன்ட் கேக்குதாக்கும் பேன்ட்’ என்று சொல்லி விடுவார்கள்.
ஏழாம் வகுப்பு வந்தபோதும் முதல் நாள் அதே பதட்டம். தனவல்லி டீச்சர் சோஷியல் ஸ்டடீஸ் வகுப்புக்கு மட்டும்தான் வந்தார்கள். இந்த வருஷம் வெங்கட்ராமன் ‘க்ளாஸ் டீச்சர்’. ‘இங்லீஷு’க்கும், கணக்குக்கும் அவர்தான். குட்டையான உருவம்தான் என்றாலும் குரல் கம்பீரமாக இருக்கும். பெரிய காதுகள், பெரிய மூக்கு, எப்போதும் உரத்த குரலில்தான் பேசுவார். கோபம் வந்தால் ‘படவா ராஸ்கோலுகளா எவனாவது வாலாட்டின? புள்ளி வெச்சு தோலி உட்ருவன் ஜாக்ரதை’ என்று மிரட்டுவார். அதற்கு என்ன அர்த்தம் என்று எங்களில் யாருக்குமே தெரியாது. அவர் பாடம் நடத்தினால் பக்கத்து வகுப்புகளுக்கெல்லாம் கேட்கும். சமயத்தில் அடுத்த வகுப்பு ஆசிரியர்கள் பாதி கிண்டலாகவும், பாதி எரிச்சலோடும் சொல்லுவார்கள்.’’சார் உங்க சத்தம் எங்க ‘க்ளாஸ்’ வரைக்கும் கேக்குது, பேசாம ரெண்டு வகுப்புக்கும் சேர்த்து நீங்களே நடத்தலாம்” என்பார்கள். அதற்கு அவர் சிரித்துக் கொண்டே “முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பையங்களோடு கத்திக் கத்திப் பேசி என் தொண்டை ஸ்பீக்கர் தொண்டயாயிடுச்சு, நான் என்ன செய்ய?” என்பார். வகுப்புக்கு வரும்போது எப்போதும் கையில் பிரம்போடுதான் வருவார். காரணமில்லாமல் யாரையும் அடிக்க மாட்டார் என்றாலும் அந்த பிரம்பு அவருக்கு பலம் பொருந்திய ஒரு ஆயுதம். யானைப்பாகன் கையில் இருக்கும் அங்குசம் மாதிரி. அவர் வகுப்பு வந்தால் குறும்பு செய்கிற பையன்கள் கூட வாலை சுருட்டிக் கொண்டிருப்பார்கள். வந்த முதல் நாளிலிருந்தே பாடங்களை நடத்த ஆரம்பித்துவிட்டார். எனக்கு எப்போதும் கணக்கு கொஞ்சம் பிணக்குதான். என்றாலும் அந்தப் பிரம்பை பார்த்ததால் ஏற்பட்ட பயம், வீட்டில் அக்காக்களை கேட்டாவது எல்லா கணக்குகளையும் முதல்நாளே பார்த்துவிட்டுப் போய்விடுவேன். அவருக்கு மூக்குப்பொடி போடும் பழக்கம் இருந்தது. பல வருஷங்களாக மூக்குப்பொடி போட்டதாலோ என்னவோ? மூக்கு பெரியதாகவும் மூக்கு ஓட்டைகளும் பெரியதாகவும் இருக்கும். தலையை உயர்த்தி அவர் பேசும்போது மூக்கிற்குள் இருக்கும் கம்பிபோன்ற நீளமான நரைத்த முடிகள் வெளியே தெரியும். கோபமாக ஏதாவது பேசும்போது நரசிம்மம் போல இருப்பார். அவரிடம் அடி வாங்கின பசங்க எல்லாம் சேர்ந்து அவருக்கு ‘பீரங்கி மூக்கன்’ என்று பட்டப்பெயர் வைத்திருந்தார்கள். மொத்த பள்ளியிலுமே அன்பான ஒன்றிரண்டு ஆசிரியர்களைத் தவிர மற்ற எல்லாருக்குமே பட்டப்பெயர்கள் உண்டு. ஒவ்வொரு நாளும் காலை அட்டென்டென்ஸ் எடுத்தவுடன் பாடம் தொடங்குவதற்கு முன்பு கதவுக்கு வெளியே வராந்தாவில் போய் நின்றுகொண்டு ‘ஜர்ர்ர் ஜர்ர்ர்’ என்று இரண்டு இழுப்பு இழுத்துவிட்டு சிவந்த கண்களுடன் வந்துதான் ஆரம்பிப்பார்.. அன்றைக்கும் அதே போல வந்து நின்றவர், “ஏன்டா தடி மாடுகளா… ஒரு வாரமா ‘க்ளாஸ் லீடர்’ போடாமலே இருக்கு கேக்க மாட்டீங்களாடா? கொஞ்சம் கூட பொறுப்பில்லையாடா? ஆமாம், தினமும் ரெஜிஸ்டரை யாரு கொண்டுபோயி ஹெச்செம் ரூமுல வெய்க்கறீங்க?” என்று கேட்டார். எனக்கு அடி வயற்றில் புளியைக் கரைத்தது. அதற்குள் மற்ற பையன்கள். “சார்! ஜெயான்தான் சார் கொண்டுபோறான்” என்றார்கள் அதுவரை திருடனைத் தேள் கொட்டியதுபோல சத்தமில்லாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தவன் இரண்டு கைகளையும் கட்டிக்கொண்டு எழுந்து நின்று மிரள மிரள விழித்தேன். “உங்கிட்ட யாருடா அந்த வேலையை செய்யச் சொன்னாங்க?” என்றார். இன்று பிரம்பு அடி நிச்சயம் என்கிற பயத்தில் ‘டவுசரிலேயே’ ஒன்னுக்குப் போய்விடுவேன் போல இருந்தது. கண்கள் கலங்கின. தொண்டைக் குழிக்குள்ளிருந்து சத்தம் வெளிவர சிரமமாக இருந்தது. “மொதல் நாளு ‘ஃபஸ்ட் பீரியட்’ முடிஞ்சு யாரும் ரெஜிஸ்டர் கொண்டுபோயி வைக்கல சார், ‘ப்யூன்’ ரத்னம் வந்துதான் எடுத்துட்டுப் போனாரு. போகும்போது ‘தொரைகளுக்கு ரெஜிஸ்டர் கொண்டாந்து வெய்க்க முடியாதா? நாளைலிருந்து எவனாவது ஒருத்தன் கொண்டு வந்து வெய்யுங்கடா’ன்னு சொன்னாரு. போன வருஷம் நாந்தான் க்ளாஸ் லீடரா இதெல்லாம் செஞ்சிட்டிருந்தன் அதான் சார்” எப்படியோ தட்டுத் தடுமாறி சொல்லி முடித்தேன்.
“வெரிகுட்! அப்படித்தான் பொறுப்பா இருக்கணும். சொன்னாவே செய்யாத தடிமாடுக நடுவில சொல்லாம பொறுப்பை எடுத்துக்கறது ரொம்ப நல்ல பழக்கம். சரி! அப்ப நீதான் இந்த வருஷம் ‘க்ளாஸ் லீடர்’ எல்லாம் கை தட்டுங்கடா” என்றார். கழுத்தில் விழுந்தது பாம்பு என்று பயந்து நடுங்கியபோது, இல்லை அது பூ மாலை என்று தெரிந்ததுபோல இருந்தது. என்னையறியாமல் கண்கள் கலங்கியது. முனிசிபல் பள்ளிகளில் ‘க்ளாஸ் லீடர்’ என்பது ஒரு கௌரவம். ஒரு வகுப்புக்கும் இன்னொரு வகுப்புக்கும் இடையில் அடுத்த ஆசிரியர் வருவதற்குள் பையன்கள் சப்தம் போடுவதும் ஒருவருக்கொருவர் வஞ்சம் தீர்த்துக் கொள்ளவும், அடித்துக் கொள்ளவும் வாய்ப்பான நேரம் அதுதான். அப்படி வகுப்பில் குறும்புசெய்யும் பையன்களின் பெயர்களை எழுதி வைத்து ஆசிரியரிடம் சொல்லும் அதிகாரம் லீடருக்கு உண்டு. அது மில் தொழிலாளர்கள் அதிகமாக வாழ்ந்த பகுதி. பள்ளியில் சேர்த்துவிடுவதோடு சரி. பொதுவாக பெற்றோர்கள் அதிகம் கண்டுகொள்ள மாட்டார்கள். பள்ளிக்கு வரவோ, பிள்ளைகளைப் பற்றி விசாரிப்பதோ? என்னவென்றே அவர்களுக்குத் தெரியாது. அதனால் பையன்கள் எல்லாம் எளிதாக ரௌடித்தனம் செய்வார்கள். யாருக்கும் பயப்படவோ, கட்டுப்படவோ மாட்டார்கள். ஆனால், ஏதாவது பிரச்னையென்றால் ‘க்ளாஸ் லீடர்’ கொடுக்கும் ரிப்போர்ட்தான் எடுபடும். சந்தோஷத்தில் ஒரு நிமிஷம் ராட்டினத்தில் மேலேயிருந்து கீழே இறங்கும்போது அடிவயிற்றில் ‘ஜிவ்’வென்று ஒரு கிளுகிளுப்பு ஏற்படுமே அப்படியிருந்தது.
நான் ஓரளவு நன்றாகப் படிப்பேன். பெரிய அறிவாளி என்றெல்லாம் சொல்ல முடியாது. ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரைங்கற கதைதான். பொதுவாக அந்தப் பள்ளியிலுள்ள வகுப்புகளில் நாற்பது பசங்களில் முப்பது பேரு பாஸ் பன்றதே பெரிய விஷயம். ஆசிரியர்களையோ தலைமை ஆசிரியரையோ யாரும் குற்றம் சொல்ல முடியாது. எந்த வகுப்பில் யார் வந்து எப்போது கேட்டாலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாணவனுக்கு நுழைவுத் தேர்வெல்லாம் வைக்கக் கூடாது. டீஸி மட்டுமே கொண்டுவந்தால் போதுமானது.
ஆறாம் வகுப்பிலும், இப்போது ஏழாம் வகுப்பிலும் மாணவர் தலைவனாக எல்லா ஆசிரியர்களுக்கும் செல்லப்பிள்ளையாக இருந்த எனக்கு திடீரென ஒரு நாள் வந்தது சோதனை. பள்ளி தொடங்கி மூன்று மாதம் கழிந்து, கால் பரீட்சைக்கு சற்று முன்பு வந்து சேர்ந்தான் அந்தப்பையன். ஏழாம் வகுப்பில் A,B,C,D என்று நான்கு பிரிவுகள் இருந்தும் நான் இருந்த A வகுப்பிற்கே அவன் வந்தான். இதுபோல இடையில் புதிதாக வந்து சேரும் பையன் வகுப்பிலுள்ள எல்லாருக்கும் வில்லன்தான். அவ்வளவு சீக்கிரமாக அங்கீகரித்து தங்கள் நட்பு வட்டாரத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். முதலில் தானாக வந்து உன் பெயரென்ன என்றுகூடக் கேட்க மாட்டார்கள். ஆசிரியர் யாராவது பெயர் கேட்கும்போதுதான் மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். அன்று காலை முதல் வகுப்பு தமிழ். கிருஷ்ணசாமி பண்டிதர் என்பவர்தான் தமிழுக்கு. அப்போதுதான் ப்யூன் ரத்தினம் வந்து “ஐயா! புதுப்பையனுங்க!” என்று சொல்லி அவனைக் கொண்டு வந்து விட்டுப் போனார். தமிழய்யா “பேரென்னடா?” என்றார். “K. பாலகிருஷ்ணன் சார்!” என்றவனிடம் “உள்ள போயி எங்காவது உக்காருடா” என்றார். எங்களுக்கெல்லாம் சிரிப்பு அவருக்கு ‘சார்’ என்று கூப்பிட்டால் பிடிக்காது. “ஏன்னடா சாரு மோருன்னு, ஐயான்னு சொல்லுடா!” என்பார். ஆனால், முதல் நாள் என்பதால் அவனை ஒன்றும் சொல்லவிலை. கடைசி பெஞ்சில் ஒரு ஓரத்தில்தான் பாலகிருஷ்ணனுக்கு இடம் கிடைத்தது. வகுப்பிலேயே தருதலைகளான C.பழனிச்சாமி, K. நாகராஜ் பக்கத்தில்தான் உட்கார்ந்தான். நல்ல நிறம், தலைக்கு எண்ணெயும் தண்ணீரும் கலந்து படிய தலை சீவியிருந்தான், நீல நிறக் கட்டங்கள் போட்ட சட்டையும் கடும் நீல நிறத்தில் டவுசரும் போட்டிருந்தான். முகத்தில் ஒரு தெளிவு, சிரிக்கும்போது ரெண்டு கன்னத்திலும் குழி வேறு விழுந்தது. முகத்தில் ஒரு அமைதி, பேச்சில் ஒரு நிதானம். மொத்த வகுப்பிலும் அவன் மட்டும் தனியாக, இருட்டில் ஒளிரும் சுடர் மாதிரி பளிச்சென்று தெரிந்தான்.
வகுப்பில் சேர்ந்து இரண்டொரு நாளிலேயே அவனை எல்லாரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். ஆசிரியர்கள் ஏதாவது கேள்வி கேட்கும்போது தனக்கு பதில் தெரிந்தால்கூட என்னைப்போல முந்திரிக் கொட்டை மாதிரி நான் சொல்கிறேன் என்று எழுந்து நிற்க மாட்டான். அவனைக் குறிப்பிட்டுக் கேட்டால் மட்டுமே பதில் சொல்வான். அந்த பதில் தெளிவானதாக இருக்கும். எனக்கு அவனைப் பிடித்திருந்தது. அதே நேரத்தில் அவனது வசீகரிக்கும் தோற்றமும் புத்திசாலித்தனமும் எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இதுவரை வகுப்பில் எல்லாவற்றிலும் முதலாக, படிப்பிலும் முதலாக எனக்குப் போட்டியாக இவன் வந்து விடுவானோ என்கிற அச்சம் தலைதூக்கியது. வகுப்பில் சில நாட்களில் கடைசி ‘பீரியட்’ நீதிபோதனை வகுப்பும், ‘ட்ரில் க்ளாசு’ம்தான் வரும். எங்களது பள்ளி நகரத்தின் மையத்தில் இருந்ததாலும் இட நெருக்கடி அதிகம் என்பதாலும் விளையாட்டு மைதானம் கிடையாது. அதனால், டைம் டேபிளில் மட்டுமே ‘ட்ரில் க்ளாஸ்’ வரும். எனவே அந்த வகுப்புகளுக்கு வழக்கமாக வரும் ஆசிரியர்கள் வராமல் புதிய ஆசிரியர் யாராவது வருவார்கள். நீதிக் கதைகள் சொல்லுவார்கள் அதன்பிறகு குரல் நன்றாக இருப்பவர்களைப் பாடச் சொல்லுவார்கள். வழக்கமாக எங்கள் வகுப்பில் எப்போதும் நான் மட்டும்தான் பாடுவேன். இதற்காகவே இரண்டு மூன்று சினிமாப் பாடல்களை தெரிந்து வைத்திருந்தேன். அதேபோல அன்று வெள்ளிக்கிழமை கடைசி வகுப்பு. நீதிபோதனை. வழக்கம்போல என்னை பாடச் சொன்னபோது உயர்ந்த மனிதன் படத்தில் ‘பால் போலவே’ என்கிற பாடலை (எனக்கு அப்போது குரல் உடையாத வயது என்பதால்) கீச்சுக்குரலில் பாடி கைதட்டல் வாங்கினேன். “வேற யாருக்காவது பாடத்தெரியுமா?” என்று ஆசிரியர் கேட்டபோது யாருமே வாயை திறக்கவில்லை. அந்த சபையில் நான் ஏமநாத பாகவதர்போல கர்வமாக உட்கார்ந்திருந்தேன். ஆசிரியர் வகுப்பு முழுவதும் நோட்டமிட்டவர் கடைசி பெஞ்சில் பயந்த பூனைக்குட்டிபோல அமைதியாக உட்கார்ந்திருந்தவனிடம் “நீ புதுப்பையனா? உன் பெயரென்ன?” என்றார். எழுந்து நின்று “K. பாலகிருஷ்ணன் சார்” என்று பணிவான குரலில் சொன்னான். “உனக்குப் பாடத்தெரியுமா?” என்றபோது தெரியும் என்று தலையை ஆட்டினான். “சரி பாடு” என்று சொன்னபோது நின்றுகொண்டே இரண்டு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு பாட ஆரம்பித்தான். ஆசிரியர் “டேய் உக்காந்து பாடு, எதுக்கு நின்னுகிட்டுப் பாடற?” என்றபோது “உக்காந்தா எனக்கு பாட்டு வராதுங்க சார்” என்றான். “சரி பாடு’’ என்றதும் கண்களை மூடிக் கொண்டு பாசமலர் படத்திலிருந்து “மலர்ந்தும் மலராத பாதி மலர் போல” பாடலைப் மிக நன்றாகப் பாடி முடித்தான். கைதட்டல் அடங்க நெடுநேரம் ஆனது. ஆசிரியரும் மகிழ்ந்து கைதட்டினார். “வெரிகுட், ரொம்ப நல்லா பாடறயே. சங்கீதம் படிச்சிருக்கியா?” என்று கேட்டார். “ஆமாங்க சார், கேரளாவில இருக்கும்போது மூனு வருசம் படிச்சேன்.” என்றான். “இப்ப?” என்று கேட்டதற்கு “ரெண்டு வருஷம் முன்னாடி நாங்க மெட்ராஸ் போயிட்டோம். அதுனால எல்லாம் நின்னுடிச்சு சார்” என்றான். “அடடா! அப்டியா…. உனக்கு நல்ல குரல் இருக்கு பாடறத நிறுத்திடாத” என்றவர், “இன்னொரு பாட்டு பாடு” என்றார். உடனே, “கண்ணா கருமை நிறக் கண்ணா..” பாடலைப்பாடி மீண்டும் கூடுதல் கைதட்டல்களை அள்ளினான். வழக்கமாகப் பள்ளி முடிந்துபோகும் போது எப்போதும் தனியாக வீட்டுக்குப் போகும் அவனோடு இன்று நான்கைந்து பையன்கள் அவனது தோள் மீது கைபோட்டுக் கொண்டு சேர்ந்து போனார்கள்.
வீட்டிற்குச் சென்ற பிறகும் எனக்கு பயங்கரமான மனச்சோர்வு இருந்தது. இவ்வளவு நாள் வகுப்பில் எல்லாரது கவனத்தையும் கவர்ந்தவனாக இருந்த எனது இடத்தை, புதிதாக வந்த ஒருவனிடம் நான்கே நாட்களில் பறிகொடுப்பதா? என்று நினைத்தபோது அவன் மீது கடுமையான வெறுப்பும் கோபமும் வந்தது. அவன் சரியான பசப்புக்காரன், எல்லாரையும் கவருவதற்காக மிகவும் அமைதியானவனாக நடிக்கிறான். எப்படியாவது அவனது முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
வெங்கட்ராமன் சார் வாராவாரம் வெள்ளிக்கிழமை கணக்கு டெஸ்ட் வைப்பார். திங்கட்கிழமை காலை வந்தவுடனே திருத்திக் கொண்டு வந்த பேப்பரையும் தருவார். அவர் வகுப்பில் ஒரு பையன் கூட கணக்கில் ஃபெயில் ஆகக்கூடாது என்பதில் அவருக்கு பிடிவாதம். அதனால்தான் அவ்வளவு கண்டிப்பும், அடிகளும். அந்த திங்கட்கிழமை வந்ததும் பேப்பர் கொடுத்தார். கொடுக்கும் போது பெயரை உரக்கப் படித்துவிட்டு மார்க்கையும் சொல்லிவிட்டுத்தான் கையில் கொடுப்பார். ஃபெயில் ஆனவர்களுக்கு கடைசியில் தனியாக பிரம்பால் சிறப்பு மரியாதை நடக்கும். நான் எப்போதும்போல என்பத்தைந்து வாங்கியிருந்தேன். வழக்கமாக கடைசியில் எனது பேப்பரைக் கொடுப்பவர் அன்றைக்கு முதலிலேயே கொடுத்துவிட்டார். வழக்கமாகச் சொல்லும் ‘குட்’ கூட சொல்லவில்லை. கடைசியாக K. பாலகிருஷ்ணன் என்று பெயரைச் சொல்லிவிட்டு ஒரு நிமிஷம் அமைதியானார். எனக்கு மனசு ‘திக் திக்’கென்று அடித்துக் கொண்டது. எழுந்து நின்ற பாலகிருஷ்ணனை அருகே அழைத்து “எல்லாரும் ஒரு தடவை பலமா கைதட்டுங்கடா” என்று சொல்லிவிட்டு அவனது கைகளைப்பிடித்து குலுக்கிவிட்டு, “இவன் சென்டம் வாங்கியிருக்கான். ஆமாண்டா! நூத்துக்கு நூறு மார்க்” என்று சொன்னார். அமைதியாக அவனது இடத்துக்கு திரும்பியதும், “உன் கையெழுத்து ரொம்ப அழகாயிருக்கு. அது மட்டுமில்ல, மொத்தப் பேப்பர்லயும் ஒரு எடத்துலகூட ஒரு சின்ன அடித்தல் திருத்தல்கூட இல்ல. அந்த ரகசியம் என்னன்னு நல்லா சத்தமா எல்லாருக்கும் சொல்லு” என்றார்.
“தினமும் சாயந்தரம் வீட்டுக்குப் போனதும் அன்றைக்கு ‘க்ளாஸ்’ல நடத்தின கணக்குகளை திரும்பவும் போட்டுப் பார்ப்பேன் சார். அதோட பரீட்சையென்றால் மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்து எல்லாக் கணக்குகளையும் ஒரு தடவை போட்டுப்பார்ப்பேன். வீட்ல சும்மா இருக்கும் போதெல்லாம் பழைய நோட்டுகளை எடுத்து கஷ்டமான கணக்குகளை திரும்பத் திரும்ப போட்டுப் பார்ப்பேன் சார். ஏற்கனவே படிச்ச ஸ்கூல் கணக்கு டீச்சர்தான் இந்த ஐடியா சொல்லிக்குடுத்தார் சார்” என்றான் பாலா.
“டேய் தடிமாடுகளா!. எல்லாரும் கேட்டுக்கோங்க. இதோ இவன் மூன்றாம் வகுப்பு வரை கேரளாவிலயும், அப்பறம் மெட்ராஸ்ல நல்ல பெரிய ஸ்கூல்லயும் படிச்சிட்டிருந்த பையன், இப்படி வேற வேற ஸ்கூல்ல மாறி மாறி படிச்சும் கூட இவ்வளவு சின்ன வயசில எவ்வளவு பொறுப்பா இருக்கான் பாருங்க. அப்பறம், இந்த ஸ்கூலுக்கு வந்து ஒரு மாசம்கூட ஆகலை. மத்த எல்லா சப்ஜெக்ட்கள்லையும் நல்லா படிக்கிறான்னு ஸ்டாஃப் ரூம்ல டீச்சர்ஸ் எங்கிட்ட சொன்னாங்க. அதுனால முதல் தடவையா இந்த க்ளாஸ்ல சென்டம் வாங்கினதுக்கு அவனுக்கு நாம ஏதாவது ஒரு பரிசு குடுக்கணுமில்ல. அதுனால இனிமே நம்ம க்ளாசுக்கு பாலாதான் லீடர். என்னடா ஜெயா! நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணணும், செரியா?”
கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த பாலா முதல் பெஞ்சுக்கு வந்தான். அதுவும் என்னை முதல் வரிசையிலிருந்து இரண்டாவது வரிசைக்கு மாற்றிவிட்டு நான் அமர்ந்திருந்த இடத்தில் பாலா. வகுப்பில் நுழைந்ததும் இருக்கும் முதல் இடம் அவனுக்கு. கண்மூடித் திறப்பதற்குள் ஒரு மாதம் ஓடிப்போயிற்று. எல்லாமே சரிதான். பாலா எல்லாவற்றுக்கும் தகுதியானவன்தான். தனக்கு போட்டியாக அவன் வராமல் இருந்திருந்தால் நிச்சயமாக நானும் பாலாவைக் கொண்டாடியிருப்பேன். அவன் வேறு வகுப்புக்குப் போயிருக்கக்கூடாதா?. ஏன் என்னோட எடத்துல வந்து உக்காரணும். நான் பாட்டுக்கு சந்தோஷமா இருந்தவனை இம்சை பண்றதுக்குன்னே வந்து சேர்ந்திருக்கிறானே? என்று நினைத்து குமைந்தேன். வகுப்புல மட்டுமில்ல வீட்டுக்கு வந்தாலும், எத்தன விரட்டினாலும் காதுகிட்டயே சுத்தற குளவி மாதிரி அவனோட நெனப்புதான் சுத்தி சுத்தி வந்தது. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை ஊமத்தம் தழையும் அடுப்புக்கரியும் சேத்து சந்தனமாட்ட அரைச்சு போர்டுக்கு போடுவேன். தினசரி காலைல வகுப்புக்குப் போனதும் மொத வேலையா போர்டை சுத்தமாத் தொடைச்சு வைப்பேன். தினமும் போர்டுல Roll: 40, Present: 37 ன்னு எழுதி வைப்பேன். ‘ஃப்ரீ க்ளாஸ்’ல, ‘ட்ரில் க்ளாஸ்’லயெல்லாம் வழக்கமா நான்தான் பாட்டுப்பாடுவேன். ஆனா, பாலா வந்த யாருமே என்னை பாட்டுப்பாடச் சொல்லறதில்ல. முன்னயெல்லாம் எல்லா டீச்சர்களும் எது ஒன்னுன்னாலும் ‘ஜெயா.. ஜெயா..’ன்னு என்னைத்தான் கூப்பிடுவாங்க. திடீர்னு அது அப்படியே மாறிப்போய்.. இப்ப எல்லாரும் ‘பாலா….பாலா..’ன்னு அவனைத்தான் கூப்பிடத் தொடங்கினாங்க. தினசரி காலையில ஸ்கூலுக்குள்ள நுழைஞ்ச ஒடனே ஹெச்செம் ரூமுக்குப்போயி அட்டென்டன்ஸ் ரெஜிஸ்டரை எடுத்துகிட்டுத்தான் ‘க்ளாஸ்’கே போவேன். மொத பீரியட் முடிஞ்சவுடனே அதைக் கொண்டுபோயி ஹேச்செம் ரூமில நான்தான் வைப்பேன். திரும்ப மதியமும் அதேபோல. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் வரலாம். பசங்க சத்தம் போடாம வகுப்பை பார்த்துகிறது, டீச்சர்ஸ்கு ஏதாவது வேணுமின்னா கடைக்குப்போயி வாங்கிக்கொண்டு வந்து தருவது என்று தன்னிச்சையான தலைவனாக இருந்த என்னை எங்கிருந்தோ வந்தவன் செல்லாக் காசாக்கி விட்டானே என்று நினைக்கும்போது எனக்கு ஆத்திரம் பொங்கிப் பொங்கி வந்தது. எனது கூட்டாளிகள்கூட மெல்ல மெல்ல என்னைவிட்டு விலகி, அந்த நடிகன் பாலா பக்கம் சாய்ந்துவிட்டார்கள். ‘சேப்புத்தோலையும் மைபோட்ட மாதிரி இருக்குற கண்ணையும் வெச்சுகிட்டு, எப்பவும் எல்லாருகிட்டயும் சிரிச்சுப் பேசி, எல்லாரையும் மயக்கி கைக்குள்ள போட்டு வெச்சிருக்கான்’ என்று குமைந்து குமைந்து எனக்கு உடம்பு சரியில்லாமலே போய்விட்டது. அவனது அம்மா டெய்லர் என்பதால் விதம் விதமாக கைகுட்டைகள் தைத்துக் கொண்டு வந்து சாருக்கு கொடுத்தான். போர்டு அழிப்பதற்கு அழகழகா குட்டி தலகாணி மாதிரி ‘டஸ்டர்’ தெச்சுக் கொண்டாந்து கொடுத்தான்.
பள்ளியில், வருஷா வருஷம். சுதந்திர தின விழாவுக்கு வகுப்பை சிறப்பாக அலங்கரிப்பவர்களுக்கு கேடயம் வழங்குவார்கள். என் அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வீட்டில் பொம்மைக்கொலுவில் வைக்கப்படும், பாரத மாதா, காந்தி, நேரு பொம்மைகளெல்லாம் கொண்டுபோய் மற்ற எல்லா வகுப்புகளைவிடவும் வித்தியாசமாக வகுப்பை அலங்கரித்து ஆறாம் வகுப்பில் வாங்கினதைப்போலவே ஏழாம் வகுப்பிலும் முதல் பரிசுக்கான கேடயம் வாங்கிக் கொடுத்திருந்தேன். இப்படியெல்லாம் எல்லாவற்றையும் உற்சாகமாக செய்துகொண்டிருந்த என்னை சட்டென துடைத்து வெளியே தூக்கிப்போட்டு விட்டார்களே என்று நினைத்து நினைத்து அந்த ஆற்றாமை அழுகையாக, கோபமாக வந்தது. அந்தக் கோபம் இதற்கெல்லாம் காரணமான பாலா மீது அடக்கமுடியாத வெறுப்பாக வளர்ந்து வந்தது. பல நேரங்களில் என்னுடைய அறிவு, அது தவறு என்று சொன்னபோதும் என்னோட மனசு ரொம்ப நொந்துபோய் சில சமயம் எனக்கு கண்ணீர் வந்துவிடும்.
அடுத்த திங்கட்கிழமை பள்ளியில் நடந்த ‘ப்ரேயரில்” பாலாதான் கடவுள் வாழ்த்தும், தேசீய கீதமும் பாடினான். எப்போதும் வழக்கமாக இரண்டு பெண்கள் சேர்ந்து ‘வெள்ளைத் தாமரைப் பூவிலிருப்பாய்’ பாடலைப் பாடுவார்கள். பாலா நன்றாகப் பாடுகிறான் என்று தெரிந்து பள்ளியின் பாட்டு டீச்சர் அவனை அழைத்து பாடச்சொல்லிக் கேட்டுவிட்டு “இனிமேல் எல்லா நாளும் ப்ரேயரில் நீயே பாடு” என்று சொல்லிவிட்டார்களாம். அவனும் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய பக்தி பாடல்களை பாடியதால், வகுப்பில் மட்டும் பிரபலமாயிருந்த அவன் இப்போது பள்ளி முழுவதும் பிரபலம் ஆகிவிட்டான். ஆறாம் வகுப்பில் ஆண்டுவிழாவுக்கு முன்பு வழக்கமாக நடக்கும் போட்டிகளில் 6,7,8 க்கான பாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு இரண்டாம் பரிசு வாங்கினேன். ஏழாம் வகுப்பில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால், போட்டிக்கு பெயர் கொடுக்கும்போது எல்லாரும் சேர்ந்து பாலாவின் பெயரோடு சேர்த்து என் பெயரையும் எழுதிக் கொடுத்து விட்டார்கள். அதிலும் பாரதியாரின் ‘எங்கிருந்தோ வந்தான்…’ பாடலைப்பாடி அவனே முதல் பரிசு வாங்கிவிட்டான். எனக்கு மூன்றாம் பரிசுகூட கிடைக்கவில்லை.
எனக்கு பள்ளிக்கு போகவே பிடிக்காமல் போனது. வயிற்று வலி, தலை வலி என்று பொய்சொல்லி அடிக்கடி லீவு எடுத்துக் கொண்டேன். வகுப்பிலும், வீட்டிலும் முன்னைப்போல உற்சாகமாக இருக்க முடியவில்லை. அம்மா மட்டும் “என்னடா ஆச்சு உனக்கு? மந்திரிச்சுவிட்ட கோழி மாதிரி சோர்ந்து சோர்ந்து உட்கார்ந்துக்கிற?”. என்று கேட்டார். ஆனால், பள்ளியிலோ, வீட்டிலோ மற்ற யாரும் அதைப் பற்றியெல்லாம் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.. பள்ளிக்கு மட்டம்போடும் நாட்களில் அம்மா மட்டும் ஒன்றிரண்டுமுறை “ஏன்டா இப்படி என்னத்தையோ பறிகொடுத்தவன் மாதிரி இருக்கற? முன்னாடியெல்லாம் காலைல பள்ளிக்கோடம் போறப்போ திருவிழாவுக்குப்போற மாதிரி குதியாட்டம் போட்டுட்டுப் போவ, இப்ப என்னடான்னா எழவு ஊட்டுக்குப் போற மாதிரி போறே?” ன்னு கேட்டபோது, “ஒன்னுமில்ல போ” என்று சொல்லிவிட்டேன். அரைப் பரீட்சையில் மார்க்குகள் குறைந்தன. ஒவ்வொரு முறையும் கணக்கில் அந்தப் பாதகன் பாலா, நூத்துக்கு நூறும் மற்ற பாடங்களில் எழுபதும் என்பதுமாக மார்க்குகள் வாங்கி யாரும் நெருங்க முடியாத சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்துவிட்டான். யாருக்கெல்லாம் கணக்குத் தெரியவில்லையோ அவர்களெல்லாம் மதியம் சாப்பாட்டு நேரத்தில் அவனிடம் சந்தேகம் கேட்கத் தொடங்கிவிட்டனர். சில நேரம் அப்படியே அவனை கழுத்தைப்பிடித்து நெருக்கி விடலாமா என்று தோன்றும். நான் எனது இஷ்ட தெய்வமான பிள்ளையாரிடம் பாலா இந்த ஸ்கூலிலிருந்து போக வேண்டும் இல்லாவிட்டால் ஏதாவது வந்து அவன் செத்துப் போக வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். லஞ்சமாக மூன்று தேங்காய் உடைப்பதாகவும், அதோடு ஐநூறு தோப்புக் கரணம் போடுவதாகவும் வேண்டிக் கொண்டேன்.
எதுவுமே நடக்கவில்லை. எனக்கு அவன் மீது ஏற்படும் அசிங்கமான பொறாமையில் கொஞ்சமும் நியாயமில்லை என்று அவ்வப்போது தோன்றினாலும், எனது கவலைகளும், கோபமும், முட்டாள்தனமானது என்று எனக்குத் தோன்றினாலும் சொல்லி வைத்ததுபோல அன்றைக்குப் பார்த்து வகுப்பில் ஏதாவது அவமானமாக நடக்கும். அடுத்த நிமிஷம் வக்கிரம் பிடித்த எனது மனசு, என்னுடைய இத்தனை கவலைகளுக்கும், என்னை எல்லாரும் புறக்கணிப்பதற்கும் அவன்தானே காரணம் என்று நினைக்கும்போது மீண்டும் அதைவிட அதிகமாக வெறுப்பு பொங்கி வரும். அந்த வெறுப்பு எனக்குத் தெரிந்தே ஒவ்வொரு நாளும் பெருநெருப்பாக உள்ளே கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
முழுப்பரீட்சை வந்தது. நான் வெறி வெறியாகப் படித்தேன். நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கிப் பாசாவதோடு எப்படியாவது இந்த முறை கணக்கில் நூத்துக்கு நூறு வாங்கி, விட்ட இடத்தைப் பிடித்துவிட வேண்டும். எப்படியாவது எனது பரம விரோதியான பாலாவைவிட அதிக மதிப்பெண்கள் வாங்கி அவனைத் தாண்டிச் செல்ல வேண்டும் என்கிற பொறாமை உணர்ச்சி மனசு முழுக்க நிறைஞ்சிருந்தது. முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்று எத்தனை நீதிபோதனைக் கதைகளில் கேட்டிருந்தேன்.
இரவும் பகலும் இதே யோசனையாக இருந்தேன். கடைசிப் பரீட்சை கணக்குப் பரீட்சை. முதல் நாள் இரவு முழுவதும் யோசனை செய்தபடியே திட்டம் போட்டு திரும்பத் திரும்ப கணக்குகளைப் போட்டுப் பார்த்தேன். அன்றுதான் கடைசிப் பரீட்சை. அடுத்த நாள் முதல் ஆண்டு விடுமுறை. எல்லாக் கணக்குகளும் நன்றாகப் போட்டிருந்தாலும் முன் பெஞ்சில் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த பாலாவைப் பார்த்தபோது எனது நம்பிக்கையெல்லாம் நொடியில் வடிந்துபோனது. இல்லை, அவனை பீட் பண்ணமுடியாது என்று நினைத்தபோது அழுகையும் ஆத்திரமும் பொங்கி வந்தது. வகுப்பில் நான்கு பேர் மட்டுமே உட்கார்ந்திருந்தார்கள். பாலா எழுதி முடித்து பேப்பரை வெங்கட்ராமன் சாரின் கையில் கொடுத்துவிட்டு பையை எடுத்துக்கொண்டு வெளியேறினான். திடீரென்று தலைக்குள் ஒரு மின்னல் வெட்டியது. எனது எதிரியை ஒழிக்க இதைவிட வேறு வாய்ப்பே கிடைக்காது. நேருக்கு நேர் மோதி அவனை ஜெயிக்கவே முடியாது.
நான் பரீட்சை எழுதி முடித்திருந்தாலும், சும்மாவாவது எழுதுவதுபோல பாவ்லா பண்ணிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். இன்னும் பத்து நிமிஷம்தான் இருக்கு. என்று சொல்லிவிட்டு சார் மூக்குப்பொடி போடுவதற்காக கதவுக்கு வெளியே சென்றார். எப்படி அந்த எண்ணம் வந்ததென்று தெரியவில்லை. மின்னல் வேகத்தில் மேசையினருகே சென்று மேலேயிருந்த பாலாவின் பேப்பரை எடுத்து எனது பைக்குள் திணித்துக்கொண்டு எனது பேப்பரைக் கையில் வைத்தபடி கதவருகே சென்றேன். “டேபிள்மேல வச்சிட்டுப் போ” என்றார் சார். எனது பேப்பரை டேபிள்மேல் வைத்துவிட்டு வெளியே வந்தவன் மூச்சை அடக்கிக்கொண்டு வேக வேகமாக வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாகப் போனேன். பைக்குள் பாலாவின் கணக்குப் பரீட்சைப் பேப்பர். ஒழிஞ்சான், பாசானாத்தானே அடுத்த வருஷமும் என் கூடவே வந்து என்னைக் குப்புறத்தள்ளுவே? வீட்டிற்குள் நுழையும் வரை என்னை யாரோ துரத்திக் கொண்டு வருவதுபோலவே எனக்குள் ஒரு பிரமை, திரும்பிப் பார்க்கவும் தைரியம் இல்லை. நான் வந்தபிறகு சார் கண்டுபிடித்திருந்தால் என்று நினைத்தபோது வயிற்றைக் கலக்கியது. சாருக்கு விசயம் தெரிந்தால்? எச்செம்மிடம் சொல்லி கண்டிப்பாக எனக்கு டீசி கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். வீட்டிற்குத் தெரிந்தால்? தோலை உரித்து உப்புக்கண்டம் போட்டுவிடுவார்கள். நானா இப்படியொரு காரியம் செய்தேன் என்று என்னாலேயே நம்ப முடியவில்லை. இப்படியொரு வேலையைச் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியே தெரியவில்லை.
ஏதோ ஒரு வேகத்தில் பேப்பரைத் திருடி, ஆமாம் திருடித்தான் வந்துவிட்டேன் என்றாலும் பயத்தால் அன்று மாலை முதல் வயிற்றுப்போக்கு தொடங்கியது. இரவு முழுவதும் நிம்மதியாக உறங்க முடியவில்லை. மூன்று முறை கழிவறைக்குப் போனேன். தண்ணி தண்ணியாகப் போனது. அடுத்தநாள் காலை குளிப்பதற்காக அண்டாவில் தண்ணீர் காய்ந்து கொண்டிருந்தது. சட்டைக்குள் மறைத்து எடுத்துச் சென்றேன். பேப்பரைக் கிழித்து நெருப்பில் போடுவதற்காக எடுத்தபோது எப்படித்தான் எழுதியிருக்கிறான் என்று பார்க்கலாமென்று பேப்பரைப் பிரித்துப் பார்த்தேன். ஒரு அடித்தல் திருத்தல்கூட இல்லாமல் முத்துமுத்தான கையெழுத்தில கணக்கு நோட்டில் இருக்கிற மாதிரி வலதுபுறம் வழிமுறைகள் எழுதுவதற்கு வசதியாக அகலமான இடம் விட்டு கோடுபோட்டு எழுதியிருந்தான். மீண்டும் ஒரு முறை அடிவயிற்றைக் கலக்கியது கழிவறைக்குள் ஓடினேன். குற்ற உணர்ச்சியாலும், என்மீது எனக்கே தோன்றிய கழிவிரக்கத்தாலும், வெறுப்பாலும் வெளியே சத்தம் கேட்காமல் அழுதேன். கண்களில் கண்ணீர் வழிந்தது. ரகசியமாக சட்டை நுனியில் கண்களைத் துடைத்துக் கொண்டேன்.
மெடிகல் ஸ்டோரில் சொல்லி அம்மா மாத்திரை வாங்கிக் கொடுத்தார். இரண்டு வேளை சாப்பிட்டதும் வயிற்றுப்போக்கு நின்றது. அடுத்தநாளே என்னையும் தங்கையையும் அழைத்துக்கொண்டு சென்ற அம்மா எங்களை மேட்டுப்பாளையத்திலுள்ள பாட்டி வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பினார். இருபது நாட்கள் அங்கே பக்கத்து வீட்டிலுள்ள பையன்களோடு சேர்ந்து விளையாடியதில், ஆற்றில் ஆட்டம் போட்டதில் எல்லாவற்றையும் மறந்து நிம்மதியாக இருந்தேன். அடுத்தநாள் பள்ளி ரிசல்ட் போடப் போகிறார்கள் என்று அம்மா வந்து வீட்டுக்கு அழைத்துப் போனபோதுதான் பள்ளி நியாபகமே வந்தது. காலையில் எழுந்து குளித்துவிட்டு பிள்ளையார் கோவிலுக்குப் போய்விட்டு வந்து பள்ளிக்குப் புறப்பட்டேன். கணக்குப் பரீட்சையின் பேப்பர் இல்லாததால் பாலா நிச்சயமாக ஃபெயில் ஆகியிருப்பான். எட்டாம் வகுப்பிற்கு அவனால் வர முடியாது. பழையபடி மீண்டும் நான்தான் ‘க்ளாஸ் லீடர்’. இழந்த இடம் திரும்பக் கிடைக்கப் போகிறது. வழக்கமாகப் பத்து மணிக்குத்தான் ரிசல்ட் போடுவார்கள். சென்ற வருஷமெல்லாம் ரிசல்ட் பார்க்க நான் போகவேயில்லை. வகுப்பில் முதல் ரேங்க் வாங்கும் நானே ஃபெயில் ஆனால் வேறு யார்தான் பாசாகப் போகிறார்கள் என்கிற அலட்சியம் இருந்தது. ஆனால், இந்த ஆண்டு சிவப்பு இங்க்கில் எழுதப்பட்டிருக்கும் பாலாவின் பெயரை ஃபெயிலானவர்களின் பட்டியலில் பார்ப்பதற்காகவே ஒன்பதரை மணிக்கே பள்ளியின் கேட்டில் போய்க் காத்திருந்தேன். அதே நேரத்தில் பாலாவும் வரவேண்டும், நோட்டீஸ் போர்டில் தான் ஃபெயில் என்பதைப் பார்த்து பாலா தேம்பித் தேம்பி அழுவதை நான் கண்குளிரப் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஹெச்செம் ரூமுக்கு அருகிலுள்ள எட்டாம் வகுப்பு A B பிரிவுக்கு ஓடினேன். A. ஆனந்தன், P.அன்புராஜ், K. பாலகிருஷ்ணன்…… பாசானவர்கள் பட்டியலில்தான் அவனது பெயர் இருந்தது. என்ன மாயம் நடந்ததென்று எனக்குப் புரியவேயில்லை கடந்த ஒரு மாதமாக பட்ட மன உளைச்சல்கள் எல்லாம் நொடியில் மாயமாய் மறைந்துபோனது. இப்போது தனது சதியெல்லாம் தோற்றுப்போய் பாலா பாசானதற்காக கவலைப் படுவதா? அல்லது தான் ஒரு பெரிய துரோகம் செய்த பாவத்திற்கு ஆளாகாமல் தப்பித்துவிட்டதற்காக சந்தோஷப்படுவதா? என்று குழம்பி நின்றேன்.
அன்று எட்டாம் வகுப்புக்குப் போகின்ற முதல் நாள். பள்ளிக்கு புதிய ‘ட்ரெஸ்’ எல்லாம் போட்டுக் கொண்டு பள்ளிக்குச் சென்றேன். வகுப்பு தொடங்கியது அட்டென்டென்ஸ் எடுத்தபோது இரண்டு முறை K. பாலகிருஷ்ணன் பெயரை அழைத்தும் ‘ப்ரெசென்ட் சார்” சொல்ல அவன் வகுப்பில் இல்லை. முதல் பீரியட் முடிந்தது. வேறு யாரும் முன்வராததால் ரெஜிஸ்டெரை எடுத்துக் கொண்டு ஹெச்செம் ரூமை நோக்கி நடந்தேன். தூரத்தில் போய்க் கொண்டிருக்கும்போதே கண்களில் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை. ஹெச்செம் அறையிலிருந்து பாலா வெளியே வந்து கொண்டிருந்தான். சென்ற வருஷம் அவன் வகுப்புக்கு வந்தபோது போட்டிருந்த அதே நீல நிற கட்டம் போட்ட சட்டையில். அங்கு நின்றபடியே பள்ளியின் உள்பக்கமிருந்த வராந்தா பக்கம் திரும்பினான். நேருக்கு நேர் நானும், பாலாவும் பார்த்துக் கொண்டோம். அவனைப்பார்த்து சிரிப்பதா? பேசுவதா? என்று புரியவில்லை. ஒரு நிமிஷம் அவனைத் தவிர்த்துவிட்டு ஹெச்செம் அறைக்குள் போய்விடலாமா என்று நினைத்து நிதானமாக நடக்கத் தொடங்கினேன். மாறாக சிரித்த முகத்தோடு பாலா என்னை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தான். வந்தவன் எனது கைகளை பிடித்து தன் கைக்குள் வைத்துக் கொண்டான்.
“ஜெயா! நாங்க எங்க சொந்த ஊருக்கே போறோம். T C வாங்கத்தான் வந்தோம். அங்க நிக்கறவங்கதான் என்னோட அம்மாவும் தங்கச்சியும். நம்ம க்ளாசுக்கு வந்து எல்லார்கிட்டயும் சொல்லிட்டுப் போகணும்னுதான் நெனச்சேன். ஆனா, அங்க வந்தா நான் அழுதுருவன். எப்படியோ உன்னைப் பார்த்துட்டேன். பசங்ககிட்ட சொல்லிடு.”
‘நாந்தாண்டா உன்னை எனிமியாவே பாத்தேன். ஒரு தடவகூட உங்கிட்ட பேசவே இல்ல. காரணமில்லாம உம்மேல பொறாமைப்பட்டேன்னு சொல்ல வேண்டுமென்று என் மனசில் என்னனென்னவோ நினைத்தேன்…’ ஆனால் எதுவுமே பேச எனக்கு வாய் வரவில்லை.
“ஏன்டா இங்கிருந்து போறீங்க. இங்கயே இருக்கலாம்ல்ல?”
“போன வருஷம் ரோட் ஆக்சிடென்ட்ல என்னோட அப்பா போயிட்டாரு, அப்பதான் எங்க மாமா மெட்ராஸ் வந்து எங்களை அவரு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாரு. ஆரம்பத்திலிருந்தே நாங்க இங்க வந்தது எங்க அத்தைக்கு சுத்தமா புடிக்கல. கொஞ்சம் பிரச்னையாயிடுச்சு. அதனால எங்க அம்மா, சொந்த ஊருக்கே போயி எப்படியாவது பொழச்சுக்கலாம்னு சொன்னாங்க. நானும் படிப்ப விட்டுட்டு ஏதாவது வேலைக்குப் போயி அம்மாவுக்கு உதவி பண்றேன்னு சொல்லிருக்கேன்.”
“பாலா…! வேகம் வா…! ட்ரெயினினு சமயமாயி..!” தூரத்தில் நின்று கொண்டிருந்த பாலாவின் அம்மா அவனை கூப்பிட்டார்கள்.
“வரேன் ஜெயா..!” கைகளை உருவிக்கொண்டு குனிந்து காலடியில் வைத்திருந்த பையை எடுத்துக் கொண்டு வேகமாகச் சென்றான் பாலா.
*********
நல்ல கதைப்பா.
எப்பவாவது சாகசம் செய்துவிட்டு டிச்சர்கிட்ட நல்லபெயர் எடுத்தா கிளாஸ் லீடர் ஓரக்கண்ணில் பார்த்து எரிப்பது நினைவுக்கு வருகிறது. ????
சிறுவயது பிள்ளையோட மனநிலை ,அச்சம்,ஏக்கம் னு எங்கையும் தொய்வே இல்லாது கோர்வையாக எளிதாக எழுதியிருப்பது சிறப்பு.
பாலா போனதும் ஜெயாவுக்கு ஒரு வலி பிறந்திருக்கும் எனக்கும் அதே நிலைதான். ❤️