
பொன்னந்திப் பூ
தாமரை இலைமேல் உருண்டோடும் மனம்
இலட்சியங்கள் மொட்டும் மலருமாய்த் தலையாட்ட
தடாகத்தில் விரியும் உணர்வலைகள்
சகதிக்கும்..
நீருக்கும்..
தவளைக்கும்.. அஞ்சியஞ்சி
ஆடை நனையாதபடி
கரையிலேயே தயங்கித் தயங்கி நின்று
லட்சியத் தண்டைத் தீண்டும் பேராவலோடு
மலரின் மகரந்தத்தை
விரலில் பூசிக்கொள்ளும் நாள்
எப்போதுதான் புலருமோ?
•
என்னோடிருத்தல்
ஒரு செடியானது
இன்னும் படரவில்லையென்பதை
நினைவூட்டத் தங்கியிருக்கும்
சிறு பச்சையமாய்;
அடுப்பு முற்றிலுமாய் அணையாமல்
அடுத்த வேளை சமையலுக்கு
ஆதாரமாய் ஒளிந்திருக்கும்
அந்த ஒரேயொரு கங்காய்;
வெகுதூர நடைப்பயணத்தில்
மிச்ச தூரத்தைத் தொட்டுப் பார்க்க
நம்பிக்கையளிக்கும்
ஒத்தையடிப் பாதையின் இளநீர்க் கடையாய்;
நரைகூடும் என் நாட்களுக்கு
கருப்பு மை பூச வந்த
அதியற்புத தூரிகை நீ!
அந்த நாள் நியாபகம்
நீரும் சகதியுமாய் இணையத் துடிக்கும் தீரா ஆசைகள்.
இரு பக்கமும் வாளேந்திப் போராடும்
ஏக்கம் நிறைந்த எண்ணங்கள்.
காதலின் கரையைத்
தொட்டுத் தொட்டு வரும் மன அலைகள்
காமச் சீற்றம் கொள்ளாத
மீப்பெரும் சமுத்திரம் போன்றது நம் நேசம்.
சேர இயலாமல் விலகியே இருக்கும்
இரு கரைகள் நம் கரங்கள்.
பால்யத்தின் பாதச்சுவடுகளை
மனத்தில் பதுக்கும் மழலைகள் நாம்.
காதல் எல்லோருடைய பாதங்களிலும்
ஒட்டிச் செல்லும் மணலெனில்
கடற்கரைப் பக்கம்
காற்று வாங்க வராதவர் யாரும் உளரோ?