இணைய இதழ்இணைய இதழ் 63கவிதைகள்

நிழலி கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

இனிப்புக் கறை

துவண்டு ஓடும் நரம்புகளை
இழுத்துப் பிடித்துக் கைடிப்பிடிக்குள் திணித்து
தாத்தாவின் வெள்ளை வேட்டியை
வெளுத்து இன்னும் கொஞ்சம் வெண்ணிறம் படற
உலர்த்தி மடித்து வைக்கிறாள் பாட்டி
வேட்டியை உடுத்திக்கொண்டு
வீதி வரும் தாத்தாவைப் பார்த்த
பேரக்குழந்தை மிட்டாய் வேண்டுமென
அடம்பிடித்து வாங்கி விரல் பிடித்து
வீடு திரும்பும் வேளையில்
எச்சில் ஊறிய மிட்டாய்
வாய் முழுவதும் வழிந்தோட
வெள்ளை வேட்டி கைக்குட்டையாகி
கறை அகற்றுகிறது
வீடு வந்து கறையைத் தொட்டு
கோபமாக முறைக்கும் பாட்டியிடம்
இனிப்பு பூத்திருக்கிறதென பேரக் குழந்தையின்
வாயைக் காட்டுகையில் பாட்டியின்
முந்தானையிலும் பூத்துக் குலுங்கியது
அதே இனிப்புக் கறை.

*** 

மொத்தமாக ஒரு முறை 

அயர்ந்து சோர்ந்து முழங்கால்களை
கட்டிக்கொண்டு முதுமையின் பிணிகளுக்குள்
புரண்டு கொண்டிருக்கும் தாத்தாவின்
அருகாமை வந்து அமர்கிறது பேரக்குழந்தை
கொஞ்சம் ஓய்வெடுக்கத் தோன்றிய
முழங்கால் வலியொன்று தாத்தாவை
பிணைத்துக்கொண்டிருந்தது
மெதுவாக காது பிடித்த குழந்தை
தாத்தா ஒரேயொரு முறை அம்பாரி
விளையாடலாமென
கெஞ்சலாகக் கொஞ்சியது
முதுகில் ஏற்றி யானை மேலே அம்பாரியென
வீட்டை வலம் வந்த பின் கணக்கில்லாத ஒரு முறை
நீண்டு கொண்டிருந்ததை நேசிக்கத் தொடங்கினார் தாத்தா

***

சாய்வு நாற்காலி

இதயத்துடிப்பின் உள்ளே நுழைந்து
இறுகக் கட்டிக்கொண்ட கழுத்தை நெறுக்கி
மார்பு புதைத்து உறங்கிக் கொண்டிருந்த
பேரக்குழந்தையின் மூச்சுக்காற்றை சுவாசித்தபடியே
சாய்வு நாற்காலியின் அசைவுகளோடு
தாலாட்டுகிறார் தாத்தா
நெடுநாட்களுக்குப் பின் ஊர் திரும்பும்
விடுமுறையின் நாள் வரை உதிராமல்
ஒட்டிக்கொண்டிருந்த உறக்கத்தை குழந்தையின்
கையில் தருகிறாள் பாட்டி
தாத்தாவையும் குழந்தையையும் மடியில் கிடத்திடவே
வாழ்ந்து கொண்டிருக்கிறது அந்த சாய்வு நாற்காலி.

*** 

அவர்களோடு எடுத்துக்கொள்ளாத புகைப்படம்

நீண்ட நாட்களுக்குப் பின் தூசு தட்டிய
சிறு வயதுப் புகைப்படச் செருகேடுகளை மகள்
ரசித்துக் கொண்டிருக்கிறாள்
முதல் முறை ஆடையில்லாது குப்புறத்
தவழ்ந்த புகைப்படம்
முதல் பிறந்த நாளன்று இனிப்புகளோடும்
பொம்மைகளோடும் நின்ற புகைப்படம்
நடை தவழ்ந்து வந்தபோது
முதல் முறை பள்ளிச் சீருடை அணிந்தபோது
ஏகப்பட்ட புகைப்படங்களை ரசித்தவள்
இறுதியாக தனித்தனியாக இருந்த
தாத்தாவையும் பாட்டியையும்
யாரென்று கேட்கிறாள்
என்னுடைய தாத்தா பாட்டியென பதிலுரைக்கையில்
தனியாக நின்று விரல் சப்பும் எனது
புகைப்படம் ஒன்றை இருவருக்கும் இடையில்
ஒட்டி வைக்கிறாள் மகள்
அவர்களோடு எடுத்துக்கொள்ளாத புகைப்படமொன்று
கையில் வந்திருந்தது.

*** 

நரைத்த இரவு 

வீட்டுப்பாடங்களை எழுதித் தீர்த்து
அலைபேசியின் உயிர் போகும் வரை
விளையாண்டு ஓய்ந்து
பாட்டியைக் கண்டுகொள்ளாமல்
அலுத்து உறங்கி விடுகின்றன
பேரக்குழந்தைகள்…
அவர்களுக்காகக் காத்திருந்த கதைகளை
தனக்குத்தானே சொல்லிக்கொண்டு
இம் கொட்டிக்கொண்டே
உறங்காமல் அல்லாடும் பாட்டி
இரவைத் துரத்திக்கொண்டு
திரும்புகையில்
அதே கதைகளை கேட்பவர் போல
உறக்கத்திலே இம் கொட்டும்
பேரக்குழந்தைகளைப் பார்த்தபடியே
உறங்கிவிடுகிறார் நரைத்த இரவுகளில்
பாதியில் தொங்கிக் கொண்டிருகிறது
பாட்டியின் மீதிக் கதை.

*** 

குழந்தையும் தெய்வமும்

விடியல் பிடித்து
விரதத்திற்காக
குளித்து முடித்து தண்ணீரைக் கூட
அருந்தாமல் உணவு சமைக்கும் அம்மாவிடம்
அப்பளம் வேண்டும் வடை வேண்டும்
கொஞ்சூண்டு பாயாசம் வேண்டுமென
அடம்பிடித்துக் கொண்டிருக்கும் குழந்தையிடம்
சாமிக்கு வச்சிட்டுதான் சாப்பிடனும்
விளையாடப் போவென விரட்டுகிறாள்  அம்மா
நடை உடைந்து தொள தொளவென
உடல் தொங்க அம்மாவின் அருகில்
வந்த பாட்டி பேரக்குழந்தை கேட்ட
எல்லாவற்றையும் எடுத்து ஊட்டுகிறாள்
கோபமாகப் பார்க்கும் அம்மாவிடம்
குழந்தை போலச் சொல்கிறாள்
குழந்தையும் தெய்வமும் ஒன்னுதான்
எம் பேரக்குழந்தைதான் எங்குலசாமியென
நெட்டியெடுக்கிறாள் பாட்டி
சாமி பித்து கொண்ட கிழவியா இவளென
வெறித்து நிற்கும் அம்மாவிற்கு
குழந்தையும் தெய்வமும் வடை தின்பதாகத் தெரிகிறது.

*** 

அழுக்குக் கை

மணல் வீடு கட்டி
வாசல் அமைத்து
செங்கல் அடுக்கி மதில் எழுப்பி
தோட்டங்களில் பூக்கள் நட்டு
அம்மாவையும் பாட்டியையும்
அழைத்துக் காட்டுகிறாள் குழந்தை
விளையாட்டுகள் போதும்
கைகளை சுத்தம் செய்யென அம்மா நகர்கிறாள்…
பாட்டியோ அழகா திறமையா விளையாடுதே தங்கமென
பேரக்குழந்தையின் கைகளில் முத்தமிடுகிறாள்
அழுக்கு கைகளில் பூத்திருக்கின்றன மணல் வீட்டுத் தோட்டத்தின் மலர்கள்.

*********

k.tamilbharathi@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button