
“அப்பா இன்னும் வீட்டுக்கு வர்லப்பா” என்று சொல்லும்போது சுதாவின் குரல் சாதாரணமாகத்தான் இருந்தது. கணினியின் ஓரத்தில் மணி பார்த்தேன். ஒன்பதைத் தொட்டிருந்தது. வழக்கமாக இந்த நேரத்தில் அவள் அழைப்பதில்லை. கணினியை அணைத்துவிட்டு உடனடியாகப் புறப்பட்டேன். இனந்தெரியாத மூட்டம் மனத்துள் கவிவதை உணர்ந்தேன். சாலையில் நடப்பவர்களை, நிற்பவர்களை உற்றுப் பார்த்தபடியே வாகனத்தை மெதுவாகவே செலுத்தினேன். அப்பாவை கண்டுபிடிப்பது சுலபம்தான். நிதானமே அவரைக் காட்டிக்கொடுத்துவிடும். எதற்கும் அவசரப்படமாட்டார். பதற்றம் கொள்ள மாட்டார். கடக்கும் வாகனங்கள் அனைத்தும் போன பின்பு இடமும் வலமுமாய் பார்த்துவிட்டுத்தான் சாலையின் குறுக்கே அடியெடுத்து நடப்பார். கோடு கலையாத வெளிர் நிற அரைக்கைச் சட்டை. சரியான அளவில் தைக்கப்பட்ட பேண்ட். எல்லாமே புத்தம் புதுசாகவே மெருகிழக்காமல் இருக்கும். கடைசியாக எங்கள் கல்யாணத்தின்போதுதான் புதிதாகத் தைத்துக்கொண்டார் என்று நினைவு. வீட்டில் இருக்கும்போது கை வைத்த பனியனும் நீலத்தில் கட்டம் போட்ட குமாரபாளையம் லுங்கியும்தான். நல்ல நாட்களில் சில சமயங்களில் சிறு கரையிட்ட நாலு முழு வேட்டி.
வழக்கமான சாலையில் வாகனம் தடம்பிடித்து வந்திருக்கவேண்டும். வீட்டுக்குத் திரும்பும் சாலையின் முனையை அடைந்திருந்தேன் தெருவிளக்கின் மங்கலான ஒளியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அடுக்கக வாசலில் நுழையும்போது செக்யூரிட்டி கூண்டருகே நான்கைந்து பேர் கூடி நிற்பது தெரிந்தது. சுதாவும் மதுவும் நின்றிருந்தனர். ஓரிரு பெண்களும். இரண்டாவது மாடியில் வசிக்கும் சுகவனம் அக்கறையுடன் சுதாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தார். கையில் கீரைக்கட்டு தலைகாட்டும் சிறிய துணிப்பை.
அருகில் போனதும் என்னிடமிருந்து அலுவலகப் பையை வாங்கிக் கொண்டாள் மது. நான் எதுவும் கேட்கும் முன்பே சுதா மெதுவாகச் சொன்னாள், “எப்பவும் போல நாலரை மணிக்கு லைப்ரரி போறேன்னு சொல்லிட்டுத்தான் போனாரு. ஏழு மணிக்கெல்லாம் வந்துருவார். எட்டரை வரைக்கும் பாத்தோம். வர்லேன்னதும்தான் கூப்பிட்டேன்.”
“நம்ம செக்யூரிட்டிக ரெண்டு பேரும் பக்கத்து வீதியில இருக்கற பார்க், அங்காளம்மன் கோயில், சாய்பாபா கோயில் எல்லாத்துலயும் பாத்துட்டு வந்துட்டாங்க. அங்கல்லாம் இல்லை” சுகவனத்தின் முகத்திலிருந்த பரபரப்பு எனக்குள் பதற்றத்தை கொண்டு வந்தது.
“லைப்ரரி வரைக்கும் போய் பாக்கலாமா?” சுதா மெதுவாகச் சொன்னாள். நான் வாகனத்தை முடுக்கினேன்.
“நானும் வரவா?” சுகவனம் கையிலிருந்த பையைப் பார்த்தார்.
“இல்ல சார். நான் பாத்துட்டு வரேன். பக்கத்துலதானே?” அவருக்காகக் காத்திருக்காமல் வெளியே வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன். சுதா அருகில் வந்தாள். “அம்மா எங்க?” கேட்கும் போதே அனிச்சையாக வீட்டு பால்கனியைப் பார்த்தேன். மங்கலான விளக்கொளி. எப்போதும் வேடிக்கை பார்ப்பதுபோலவே நின்றிருந்தாள்.
“வந்துருவாங்க, எதுக்கு இப்ப அவனுக்கு போன் பண்ணி தொல்லை பண்றேன்னுதான் சொன்னாங்க.”
அம்மா வேறுமாதிரி சொன்னால்தான் ஆச்சரியம். அப்பாவின் நிதானத்தில் இரண்டு மடங்கு அவளுடையது.
முகப்பு வெளிச்சத்தில் மரங்களின் நிழல்கள் கலைந்து அசைந்தன. புங்க மரத்தின் வெள்ளைப் பூக்கள் காற்றில் உருண்டன. அப்பாவுக்கு சரியாக இரண்டு மணிக்கு சாப்பாடு வேண்டும். பிறகு ஒருமணி நேரம் சிறு தூக்கம். மூன்றரை மணிக்கு எழுந்து முகம் கழுவி அரைச் சக்கரையுடன் டீயைக் குடித்துவிட்டு லைப்ரரிக்குப் புறப்பட்டு விடுவார். வெளியில் செல்லும் வேலை இருந்தால் சுதாவுடன் போய் இறங்கிக் கொள்வார். இல்லையென்றால் பேருந்து. சரியான சில்லரை எப்போதும் பையில் இருக்கும். சரியாக ஆறரைக்கெல்லாம் திரும்பி வந்துவிடுவார்.
சில நேரங்களில், என்ன காரணம் என்று தெரியாது, லைப்ரரிக்குப் போகாமல் அடுத்தத் தெருவில் இருக்கும் பூங்காவுக்கு சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார். கச்சேரியோ, காலட்சேபமோ, பிரசங்கமோ இருந்தால் கோவில்களுக்குச் செல்வதுண்டு. ஆனால், எங்கே என்று சுதாவிடம் தவறாமல் தகவல் சொல்லிவிடுவார்.
அம்மாவிடம் பேசுவது வெகு சொற்பம். இருவரும் சேர்ந்தாற்போல இரண்டு நிமிடம் பேசிப் பார்த்ததில்லை. அவர் பால்கனியில் நாளிதழ் வாசிக்கும்போது அம்மா கூடத்தில் கால்நீட்டி அமர்ந்து நூலகத்திலிருந்து அவர் எடுத்து வந்திருக்கும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பாள். கூடத்திலிருக்கும் பிரம்பு நாற்காலியில் சாய்ந்துகொண்டு அவர் தொலைகாட்சியில் செய்திகளைக் கேட்கும்போது அம்மா பால்கனியில் கீரை ஆய்ந்துகொண்டிருப்பாள். அப்பா சாப்பிடும்போது அடுப்படியில் அம்மா தோசை வார்ப்பாள். இவர் கையைக் கழுவிக்கொண்டு உட்காரும்போது அரைச் சக்கரை காப்பி மேசையில் ஆவிபறக்கத் தயாராக இருக்கும். இருவரும் கூடத்தில் ஒருசேர இருக்கும்போது சமயங்களில் மது வம்புக்கிழுப்பாள், “ரெண்டு பேர்த்துக்குள்ளயும் பேசிக்கறதுக்கு ஒண்ணுமேயில்லையா? இல்ல, நாங்கல்லாம் போனதுக்கப்பறமா பேசித் தீத்துக்கறீங்களா?”
அம்மாவின் முகத்தில் எந்த சலனமுமே இருக்காது. அப்பாதான் மதுவின் தலையைத் தட்டியபடி சிரிப்பார், “எல்லாம் பேசி ஓஞ்சாச்சு புள்ள. இப்ப பேசினா சண்டையிலதான் முடியும். அதுக்கு பேசாமயே இருந்தர்லாம்னுதான்.”
“இந்தப் படத்தைப் பாத்தா அப்பிடித் தெரியலையே. ரெண்டு பேர்த்துக்கும் எவ்ளோ பொருத்தம்?” சுவரிலிருக்கும் கருப்பு வெள்ளை படத்தைக் காட்டிச் சொல்வாள் மது. மணமான புதிதில் சேலம் மினர்வா ஸ்டூடியோவில் எடுத்த படம். அப்பா நறுக்கிய மீசையுடன் கோட்டும் டையுமாக சிரித்திருக்க, கல் அட்டிகை அணிந்து பஃப் கையுடனான ரவிக்கையுடன் அம்மா கூர்ந்து பார்த்திருப்பார். “கல்யாணமான புதுசுல கொஞ்சம் அப்பிடித்தான இருக்கும்” என்று சொல்லிவிட்டு உடனே தொடர்வார், “படமெடுத்தவன் கெட்டிக்காரன்.”
இதையெல்லாம் கேட்டபடியே சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருக்கும் அம்மாவின் பார்வை தொலைக்காட்சித் திரையிலேயேதான் நிலைத்திருக்கும். பதிலெதுவும் சொல்லமாட்டாள். இத்தனைக்கும் அவருடைய உடைகளைத் துவைத்து சரியான வரிசையில் அடுக்கி வைப்பது அவள்தான். வேளாவேளைக்கு மருந்து மாத்திரைகளை எடுத்து மேசையில் வைப்பதும் அவள்தான். மிக்ஸியில் அரைத்தால் அப்பாவுக்குப் பிடிக்காது என்று அம்மியில் கொத்துமல்லிச் சட்னியை அரைத்து வைப்பாள். வெளியில் புறப்பட்டுப் போனவர் தெருமுனையில் திரும்பி மறையும் வரை பால்கனியில் நின்று பார்ப்பாள். ஆனால், அவரிடம் எதுவும் பேசி பார்த்ததில்லை.
எட்டு மணிக்கு லைப்ரரி மூடப்பட்டுவிடும் என்பது தெரியும். ஆனாலும், அசோக மரங்கள் வரிசையில் நின்ற கட்டடத்தின் எதிரில் வண்டியை நிறுத்திவிட்டு எட்டிப் பார்த்தேன். உதிர்ந்த சருகுகள் வாசலில் புரண்டிருக்க மூலையிலிருந்து பூனை ஒன்று எட்டிக் குதித்தது. அடுத்திருந்த சேகர் டீ கடையின் வெளிச்சம் சாலையில் நீண்டிருந்தது. கண்ணாடித் தம்ளர்களைக் கழுவிக்கொண்டிருந்த மாஸ்டர் நிமிர்ந்து பார்த்தார். “டீ முடிஞ்சுது சார்.”
“அதில்ல. அப்பா இருக்காரான்னு பாத்தேன். சாயங்காலம் லைப்ரரிக்கு வந்தவரு இன்னும் வீட்டுக்கு வர்லை.”
“அப்பவே சாத்திட்டாங்களே. யாரும் இருந்தாலும் வெளிய அனுப்பிருவாங்க. வேற எதாச்சும் வழில போயிருப்பார் சார்.”
அப்பாவுக்கு வெளியில் எதையும் குடிக்கும் பழக்கம் கிடையாது. டீயோ பழச்சாறோ எதுவானாலும் வீட்டில்தான். எனவே, இவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
பேருந்து நிலையத்தில் யாருமே இல்லை. இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தேன். பகலின் சூடு இன்னும் தணிந்திருக்கவில்லை. மனம் வெறுமையில் உறைந்திருந்தது. பளீரென்ற முகப்பு வெளிச்சத்துடன் சாலையில் விரைந்தன வாகனங்கள். யாரும் யாரையும் பொருட்படுத்தாத அவசரம். எங்கே என்று தேடுவது? இந்நேரம் வீட்டுக்கு வந்து சேர்ந்திருப்பாரா? சுதாவை அழைத்துக் கேட்போமா? இல்லை, வந்திருந்தால் அவளே அழைத்திருப்பாள்.
வாகனங்களின் வேகத்தைப் பார்த்தபோது அதுவரை எழாமலிருந்த பயம் தலைகாட்டியது. எங்காவது விழுந்திருப்பாரா? அவர் எச்சரிக்கையுடன்தான் சாலையைக் கடப்பார். ஆனால், எதிரில் வரும் வாகனமோ அல்லது அவரைக் கடந்து போகும் வாகனமோ மோதியிருந்தால் என்ன செய்ய முடியும்?
அந்த எண்ணம் எழுந்ததும் வாகனத்தை வேகமாக முடுக்கினேன். வழக்கமான சாலையில் செலுத்தினேன். விழுந்திருந்தாலும் இத்தனை நேரம் அதே இடத்தில் இருக்க வாய்ப்பில்லை. யாரேனும் உதவியிருப்பார்கள். அவருடைய சட்டைப் பையில் சிறிய குறிப்பேட்டில் அலைபேசி எண்களை எழுதி வைத்திருக்கிறார். என்னுடைய, சுதாவுடைய, மதுவுடைய எண்கள் உள்ளன. யாரேனும் அழைத்திருப்பார்கள், நிச்சயமாக.
சிறிய நோக்கியா அலைபேசி ஒன்றை வாங்கித் தந்தபோது அதை வைத்துக்கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாய் மறுத்துவிட்டார். “நான் எங்கப்பா போறேன். போன் வெச்சுக்கறதுக்கு? அதெல்லாம் சரிப்பட்டு வராது. உங்கம்மாவுக்கு வேணா குடு. நாலு பேர்த்துகிட்ட பேசறதுக்கு ஆகும்.”
சாலைகளில் இப்போது வாகன நெரிசல் சற்றே குறைந்திருந்தது. வழக்கமாக அவர் இறங்கும் பேருந்து நிலையத்தருகே நின்றேன். வாகை மரத்தினடியில் இளநீர் குலைகளை அடுக்கி துணியைக் கொண்டு மூடியவர் வெட்டருவாளை எடுத்து இருசக்கர வாகனத்தின் பெட்டியில் பத்திரமாக வைத்தார். அப்பா இவரிடம் இளநீர் குடிப்பதுண்டு.
“அப்பா எதும் வந்தாங்களா?”
உற்று முகத்தைப் பார்த்தவர் பளிச்சென்று சிரித்தார், “நேத்தோ முந்தா நாளோ எளநி குடிச்சிட்டு பேசிட்டு போனார். இன்னிக்கு வரலையே?”
“சரிங்க. பாக்கறேன்.”
அவர் அடுத்த கேள்வியைக் கேட்பதற்கு முன்பே நான் வண்டியை முடுக்கியிருந்தேன்.
பேருந்து நிறுத்தத்திலிருந்து அவர் நடந்துவரும் சாலையில் மெல்ல வாகனத்தைச் செலுத்தினேன். சரியாக ஒன்றரை கிலோ மீட்டர் என்று அடிக்கடி சொல்லுவார். இருமருங்கும் கவனமாய் பார்த்தபடியே வந்தேன்.
அடுக்கக வாசலில் சுதாவும் மதுவும் நின்றார்கள். என் முகத்தைப் பார்த்தவுடன் தலையைக் குனிந்துகொண்டாள் சுதா.
“போன் எதுவும் வந்துச்சா?”
சாதாரணமாகக் கேட்பதுபோல கேட்டுவிட்டு மேலே பார்த்தேன். பால்கனியில் அரையிருட்டில் அம்மா நின்றிருந்தாள்.
மணி பத்தைத் தாண்டியிருந்தது. “சலூனுக்கு போயிருப்பாரோன்னு ஒரு சந்தேகம். அங்கயும் இவ போய் பாத்துட்டு வந்துட்டா. இல்லை.” சுதாவின் குரல் மிக மெதுவாக ஒலித்தது. சமாளிக்கிறாள், என்னைப் போலவே.
“பார்க்ல இருக்கும்போது தாத்தாவோட இன்னும் ரெண்டு மூணுபேரு பேசிட்டிருப்பாங்க. ஒருத்தர் பக்கத்து அப்பார்ட்மென்ட்ல இருக்காரு. அவர்கிட்ட கேட்டுப் பாக்கலாமா?” மது இன்னும் நம்பிக்கை இழந்திருக்கவில்லை.
“வா, போய் கேப்போம்.” வண்டியை நிறுத்திவிட்டு அவளுடன் நடந்தேன். சுதா வெறுமனே தலையாட்டினாள்.
நான்கு மாடி அடுக்ககத்தில் ஜன்னல்களின் வெளிச்சம். பாதுகாவலர் வீட்டு எண்ணைக் கேட்டு அனுமதித்தார். உற்சாகத்துடன் கதவைத் திறந்தவர் மதுவைக் கண்டதும் குதூகலத்துடன் சிரித்தார் “என்னடா இந்த நேரத்துல வந்துருக்கே. எங்க உங்க தாத்தா?”
விடை அந்த இடத்திலேயே கிடைத்த பின் அங்கே இருப்புக் கொள்ளவில்லை. வெளியில் வந்து சோர்வுடன் நடந்தபோதுதான் மது தோளைத் தட்டினாள் “அப்பா, ஒரு விஷயத்தை மறந்துட்டோம். இப்பல்லாம் தாத்தாவுக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு. சட்டுன்னு மறந்துர்றார். ஒருவேளை இருட்டுல வழி மாறி நம்ம அப்பார்ட்மென்ட் பேரை சரியா சொல்லத் தெரியாம வேற எடத்துக்கு போயிருப்பாரோ?”
அதே பாபா காலனியில், வெவ்வேறு தெருக்களில், ஒரே நிறுவனத்தால் கட்டப்பட்ட அடுக்ககங்கள் ஒன்பது இடங்களில் உண்டு. பெயரில் சிறிய வித்தியாசங்களே. நாங்கள் இருப்பது ‘கோவை கிரீன்ஸ்’. அடுத்த தெருவில் இருப்பவை ‘கோவை ட்ரீம்ஸ்’, ‘கோவை ரெசிடென்ஸி’. இந்தப் பெயர் குழப்பம் ஆட்டோக்காரர்களுக்கும் டாக்ஸிகாரர்களுக்குமே உண்டு.
வேகமாக வீட்டுக்கு வந்தபோது வாசலில் மூர்த்தி நின்றிருந்தான். மூன்றாவது தெருவில் இருக்கும் அலுவலக நண்பன். வழக்கமாக ஒன்பது மணிக்கு மேல் பக்கத்து மைதானத்தில் இருவரும் சேர்ந்து இரண்டு சுற்று நடப்பதுண்டு.
“ஏண்டா, சொல்லமாட்டியா?”
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
“மது ஒரு ஐடியா சொன்னா, பேரை சரியா சொல்லத் தெரியாம இருட்டுல வேற அப்பார்ட்மென்ட்டுக்கு போயிருப்பார்னு. போயி பாக்கலாம் வா” என்று வண்டியில் ஏற முயன்றேன்.
“சாவியக் குடு. நீ உக்காரு” அவன் தாவி ஏறினான்.
பாபா காலனியிலிருந்த அடுக்ககங்களில் தேடி உருப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஊர் அடங்கி வாகன இரைச்சல் குறைந்து எங்கும் அமைதி கவிந்தது. அங்கங்கே ஓரிரு வாகனங்கள் விரைந்தன. விளக்குகளை அணைத்துவிட்டு கடைகள் மூடப்பட்டன. வேலன் பேக்கரி வாசலில் ரோந்து வாகனம் சிவப்பொளியுடன் நின்றது.
“டீ சாப்பிடலாமா?” கேட்டதும் மூர்த்தி ஓரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு கேட்டான் “நீ இன்னும் சாப்பிடலையா?”
“யாருமே சாப்பிட்டிருக்க மாட்டாங்க.”
சூடான டீ சற்றே தெம்பளித்தது. மூர்த்தி மெல்லக் கேட்டான், “இவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வெக்கலாமா?”
இதென்ன தேவையில்லாத பிரச்சினை என்ற எண்ணம் சட்டென எழுந்தது. அதற்கு அவசியம் இருக்காது என்று நம்பிக்கை. காலி டம்ளரை மேசையில் வைத்துவிட்டு தொப்பியை மாட்டிக்கொண்டவர் ஒரு தரம் எங்களை உற்றுப் பார்த்தார். ஜீப்பில் ஏறப் போனவரிடம் முன்னிருக்கையில் இருந்தவர், எங்களைப் பார்த்தபடி என்னவோ கிசுகிசுப்பது தெரிந்தது. பதற்றமடைந்தேன். காசைக் கொடுத்துவிட்டு வந்த மூர்த்தியை நிறுத்தினார் போலீஸ்காரர், ”எங்கிருந்து வறீங்க?”
“இங்கதான். டீ சாப்பிட வந்தோம்.”
“இங்கதான்னா?”
“கோவை ட்ரீம்ஸ்னு பாபா நகர்ல இருக்கு.”
“வேற ஒண்ணுமில்லையே?”
மூர்த்தி என்னைப் பார்த்தான். நான் வெறுமனே நின்றேன். “ஒண்ணுமில்ல சார்.”
“சரி சரி. வீட்டுக்குப் போங்க. வேற எங்கயும் சுத்திட்டு இருக்காதீங்க.”
மூர்த்தி வண்டியைக் கிளப்பிக்கொண்டு நகர்ந்தபோது ரோந்து வாகனமும் மெல்ல நகர்வது தெரிந்தது.
பாபா நகரிலும் அடுத்திருந்த பகுதிகளிலும் வெறுமனே சுற்றினோம். எங்கிருந்தாவது ஏதாவது ஒரு குரல் அழைக்கக்கூடும் என்ற நம்பிக்கை. அலைபேசியிலும் எந்த அழைப்பும் இல்லை.
“அவரோட பிரண்ட்ஸ்கூட எங்கயாவது வீட்டுக்கு போயிருப்பாரா?”
“அப்பிடியெல்லாம் சொல்லாம போக மாட்டார்டா. அப்பிடியே போயிருந்தாலும் இவ்ளோ நேரமெல்லாம் இருக்க மாட்டார். அவகிட்ட கூப்பிட்டு சொல்லிருவார்.”
“கடைசியா எப்ப செக் அப் போனாரு?”
“போன மாசந்தான். எதுவும் பிரச்சினை இல்லை. நார்மலாதான் இருக்கார். ஆனா, இப்ப இப்ப ஞாபக மறதி வருது. திடீர்னு எதுவும் ஞாபகத்துல இருக்கறது இல்லை.”
“எழுவது வயசுல இதெல்லாம் வறதுதாண்டா. நமக்கே இன்னிக்கு மத்தியானம் நடந்தது சட்டுன்னு ஞாபகம் வர மாட்டேங்குது.”
இருண்ட தெருக்களில் ஆள்நடமாட்டம் குறைந்திருந்தது. தெரு நாய்களின் குரைப்பொலி.
மணியொலித்தபடி குல்பி வண்டி கடந்து போனது. அவிலா கான்வென்ட் திருப்பத்தில் அந்த ரோந்து வாகனம் நின்றிருந்தது. காவலர்கள் வாகனங்களை நிறுத்தி சோதித்துக் கொண்டிருந்தனர். ஒருகணம் மூர்த்தி வேகத்தைக் குறைத்தான். கண்டுகொள்ளாததுபோல கடக்க முற்பட கைவிளக்கை முகத்துக்கு நேராக ஆட்டி வாகனத்தை நிறுத்தினார்.
டீக் கடையில் பார்த்த அதே கான்ஸ்டபிள்தான்.
“நீங்க இன்னும் வீட்டுக்குப் போகலையா?”
மூர்த்தி இந்த முறை என்னைப் பார்க்கவில்லை “சார். இவங்க அப்பாவைக் காணம்னு தேடிட்டு இருக்கோம்.”
இறங்கி நின்ற என்னை ஏறிட்டார். முகத்தில் இறுக்கம் இன்னும் குறையவில்லை.
“சாயங்காலம் லைப்ரரி போனவர் வீட்டுக்கு வர்லை. அதான் தேடிட்டு இருக்கோம் சார்.”
“அப்பவே கேட்டபோது சொல்ல வேண்டிதுதானே? ஹெல்ப் பண்ணத்தானே கேக்கறோம். சரி, என்ன வயசு?”
“எழுவது சார்.”
“போட்டோ ஏதாச்சும் வெச்சிருக்கீங்களா?”
நான் இல்லையென்பதுபோல தலையாட்டினேன்.
“பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பக்கமெல்லாம் பாத்தீங்களா? ஜி.எச்ல விசாரிச்சீங்களா?” அடுத்தடுத்து அவர் சொல்லச் சொல்ல எனக்கு நடுக்கம் கூடியது. மூர்த்தி நிதானமாக பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.
“சரி. போட்டோவை இந்த நம்பருக்கு அனுப்புங்க. நாங்களும் தேடறோம். எதுக்கும் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் குடுத்துருங்க.” கான்ஸ்டபிள் மூர்த்தியின் எண்ணைப் பெற்றுக்கொண்டு அடுத்த வண்டியிடம் போனார்.
வீட்டுக்குத் திரும்பியபோது இன்னும் சிலர் சேர்ந்திருந்தனர்.
வண்டியை நிறுத்திவிட்டு வந்தவுடன் சுதா தண்ணீரை நீட்டினாள். முகத்தைக் கழுவினேன். மூர்த்தி அவள் காதோரமாய் கிசுகிசுத்தான். அவள் தலையாட்டியபடியே நகர்ந்து அலைபேசியில் மெல்லப் பேசினாள்.
“நேரமாயிருச்சு. இனியும் வெயிட் பண்ண வேண்டாம். போலீஸ்ல ஒரு கம்ளைன்ட் குடுத்து வெப்போம்” சுகவனம் நிதானமாகச் சொன்னார்.
“அதான்ப்பா நல்லது. அவங்களும் நாலு பக்கம் தேடுவாங்கல்ல…”
“ரோந்து போலீஸ்காரங்களும் அதான் சொல்லிட்டுப் போனாங்க. போட்டோ அனுப்பச் சொன்னாங்க” மூர்த்தி சொல்லிக்கொண்டிருக்கும்போதே மது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை நீட்டினாள். தன் அலைபேசியில் அதை படமெடுத்துக் கொண்டவன் உடனே அனுப்பினான்.
“சரி. நீங்க போய் படுங்க. நேரமாயிருச்சு. நாங்க ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வரோம்” மூர்த்தி மறுபடியும் வண்டியை எடுத்தான்.
“ஸ்டேஷன்ல அப்பிடியே விவரத்தை சொல்லிட்டுப் போயிடுங்க” சுகவனம் தோளில் கைவைத்துச் சொன்னார். நான் தலையாட்டினேன்.
“பாட்டி எதுவும் சாப்பிட்டாங்களா?” பதில் தெரிந்தும் மதுவிடம் கேட்டேன். உதட்டைப் பிதுக்கினாள். “போலீஸ்லயெல்லாம் சொல்ல வேண்டாம். அவருக்கு ஒண்ணும் ஆயிருக்காது, வந்துருவாருன்னு சொல்றாங்க. உங்களையும் வீணா அலைய வேண்டாம்னு சொல்றாங்க.”
அம்மா அப்படித்தான். எதிலும் எந்த அவசரமும் இல்லை, தேவையில்லாத பதற்றமும் இல்லை.
வடகோவை மேம்பாலத்தில் ஏறியபோது காற்றில் குளிர் கூடியிருந்தது. பாலத்துக்குக் கீழே ஜன்னல் வெளிச்சங்களுடன் ரயில் விரைந்தோடியது. கிராஸ் கட் ரோடு வழியாக காந்திபுரம் பேருந்து நிலையத்தை அடைந்தபோது மணி பதினொன்றை நெருங்கியிருந்தது. பரபரப்பு அடங்கி இரவுக்கான நிதானத்துடன் ஊர்ந்தன பேருந்துகள். சூடான டீயுடன் சிரித்தபடியே நடத்துநர்கள். உப்பு வீச்சத்துடன் சிறுநீர் நெடி. ஆவி பறக்கும் கடலையுடன் தள்ளுவண்டி. தாளைச் சுருட்டி பொட்டலமாக்கி கடலையை அள்ளி நிரப்பி நீட்டினான். அதே வேகத்தில் ஒரு கடலையை வாய்க்குள் வீசினான்.
பெஞ்சுகளிலும் தரையிலும் படுத்துக் கிடந்தவர்களை நிதானமாகப் பார்த்தபடியே நடந்தோம். ஓரிருவர் காலை அகட்டி தலையைச் சாய்த்து நிலைகெட்டுப் படுத்திருந்தனர். டீக்கடைகள், புரோட்டாக் கடைகள், பிரியாணி கடைகள் எதையும் விடவில்லை. மூர்த்தி எல்லாவற்றிலும் தலைநீட்டிப் பார்த்தான். எங்கும் அப்பா இருக்க வாய்ப்பில்லை என்பது எனக்குத் தெரியும். ஆனால், தேடாமல் இருக்க முடியாது.
அருகிலிருந்த நகரப் பேருந்து நிலையத்துக்குள் போனபோதே நான் சோர்ந்திருந்தேன்.
‘அப்பா, எங்கப்பா இருக்கீங்க?’ உள்ளுக்குள் ஓங்கிக் கத்தினேன். மறுகணம், நினைத்தே பார்க்க முடியாதபடி, இன்னொரு குரலும் நடுக்கத்துடன் மிக மெல்ல ஒலித்தது, ‘இருக்கீங்கதானே?’
இதற்கு முன்பு வேறொரு நாளில் இத்தனை நேரம் உங்களைப் பற்றி நான் யோசித்திருக்கிறேனா? பார்க்க வேண்டும் என்று ஏங்கியிருக்கிறேனா? பத்தாம் வகுப்புக்குப் பிறகு விடுதியில் தங்கிப் படித்த நாட்களில்கூட அப்படி ஏக்கம் எதுவும் இருந்ததில்லை. வீட்டுக்கு வரும்போது பார்த்தவுடன் ஒரு சிரிப்பு. ‘என்ன தம்பி, எல்லாம் சவுரியமா இருக்கா? மறுபடி எப்ப போகணும்?’ அவ்வளவுதான். படிப்பைப் பற்றியோ மதிப்பெண்களைப் பற்றியோ எதுவும் கேட்டதில்லை. வேலைக்குச் சேர்ந்தபோதும்கூட, என்ன வேலை, எவ்வளவு சம்பளம் எதுவும் கேட்கவில்லை. சுதா விஷயத்திலும்கூட அம்மாதான் கொஞ்சம் முரண்டு பண்ணினார். அப்பா கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டது ஒரே ஒரு விஷயம்தான் ‘அவங்க வீட்டுல முழு சம்மதந்தானே?’
ரயில்நிலையத்துக்குள் கால்வைக்க முடியாதபடி கூட்டம். கிடைத்த இடத்தில் படுத்துக் கிடந்தார்கள். எல்லாப் பக்கங்களிலும் பார்த்தேன். ஆனால், என் பார்வையில் எல்லோருமே ஒன்றுபோலத் தெரிந்தார்கள். ஆனால், தெரிந்தவர்கள் யாரும் என் அப்பா இல்லை. வெளியே கடையோரங்களில், நடைமேடைகளில் முழுக்கப் போர்த்தியபடி எண்ணற்றவர்கள் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தனர்.
வண்டியில் ஏறியதும் மூர்த்தி சொன்னான் “ஜி.எச்-லயும் போய் பாத்தர்லாம்டா.”
சட்டென்று கீழே இறங்கினேன். மூச்சடைத்தது. அடிவயிற்றில் வலி மூண்டது. ரயில் நிலையத்தின் மணிக் கூண்டை ஏறிட்டேன்.
“அப்பிடி எதுவும் நடந்திருக்காதுன்னே வெச்சுக்கலாம். அதையும் உறுதி பண்ணிட்டா நிம்மதிதானே?” மூர்த்தி என் கையைப் பற்றினான்.
வேறு வழியிருக்கவில்லை.
பகல்நேர பரபரப்பு எதுவும் இல்லாமல் பாதி தூக்கமும் மயக்கமுமாக மங்கிய வெளிச்சத்தில் உறைந்திருந்தது மருத்துவமனை வளாகம். காற்றில் அதன் வழக்கமான நெடி. கிடைத்த இடங்களில் ஆட்கள் போர்வையை தலை வரைக்கும் போர்த்திக்கொண்டு படுத்திருந்தார்கள். அத்தனை பேரும் நோயாளிகளுடன் வந்தவர்கள். உள்ளே இடம் கிடைக்காதவர்கள். அங்கங்கே தலைமாட்டில் கொசுவர்த்திகள்.
அவசர சிகிச்சைப் பிரிவு வாசலில், காக்கிச் சீருடையுடன் தள்ளு படுக்கையுடன் வந்தவரிடம் விசாரித்தான் மூர்த்தி.
“108 கவுண்டர்ல விசாரிங்க மொதல்ல…”
108-க்கான கவுண்டர் வளாகத்தின் முகப்பிலேயே இருந்தது.
“எத்தனை மணிலிருந்து காணோம்?”
“சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல..”
“அஞ்சு மணிக்கு மேல 108-ல வந்த ஆக்ஸிடென்ட் கேஸ். நாலு பேர் அட்மிட் பண்ணிருக்காங்க. ஒருத்தர் ராமசாமின்னு இருக்கு. மத்த மூணும் பேர் தெரியலை. வயசு?”
“எழுவது.”
“எழுவது வயசு பெரியவரா? ஏழரை மணிக்கு கொண்டு வந்திருக்காங்க. எமர்ஜென்சி வார்ட்ல போய் பாருங்க. மாடில.”
எஞ்சியிருந்த தைரியம் மொத்தமும் வடிந்து உடல் கிடுகிடுத்தது. திண்ணையில் உட்கார்ந்தேன். அழுகை கொப்புளித்தது. அம்மாவின் நினைவெழுந்தது.
மூர்த்தி பக்கத்தில் உட்கார்ந்தான், “டேய், மொதல்ல போய் பாக்கலாம். அது அப்பாவா இருக்கணும்னு அவசியமில்லை.”
அடர்ந்த ஊஞ்ச மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்திருந்தன. எதிர்கோடியில் பிணவறை மஞ்சள் ஒளியுடன். ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நின்றன.
“நான் வரலைடா. நீ போய் பாத்துட்டு வா.”
மூர்த்தி முகத்தைப் பார்த்தான் “வாடா. இவ்ளோ தூரம் வந்துட்டோம். ஒரே ஒரு ஆள்தான். அதுவும் அவர் இல்லேன்னு தெரிஞ்சா நல்லதுதானே.”
கைகளை உதறிக்கொண்டேன். அந்த இடத்தில் அப்பா இருக்கக்கூடாது என்ற பதற்றம் கால்களைத் தடுத்தது.
“இப்ப நல்லா தூங்குதும்மா. ஊசி போட்டதுமே வலிப்பு நின்னுருச்சும்மா. நீ இதையே நெனச்சுட்டு தூங்காம இருக்காதே. சாப்புட்டுட்டு தூங்கு. காலையில நேரத்துல வந்துட்டாதான் நான் வேலைக்குப் போக முடியும்…” கலைந்த தலையும் தாடியுமாக ஒருவன் பேசிக்கொண்டே இருட்டில் நடந்தான்.
அவசர சிகிச்சைப் பிரிவின் மாடிப் படிகளில் ஏறும்போது எதிரில் வந்த தாதி விசாரித்தார், “எங்க போறீங்க?”
“108-ல அட்மிட் ஆயிருக்கற ஒருத்தரைப் பாக்கணும்.”
“நீங்க அவருக்கு சொந்தமா?”
“இல்ல சிஸ்டர். யாரு அங்கேன்னு தெரியாது. பாத்தாத்தான் சொல்ல முடியும்.”
இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு கீழே இறங்கினார் “தெரிஞ்சவர்னா வந்து விபரத்தை பதிஞ்சிட்டு போங்க.”
எட்டிப் பார்த்துவிட்டு வாசலிலேயே நின்றேன். மங்கிய வெளிச்சத்தில் இரு வரிசைகளில் கட்டில்கள். தலையிலும், கையிலும், காலிலும் கட்டுகளுடன் ஆட்கள். தரையில் சிலர். உடன் வந்தவர்கள் உட்கார்ந்தும் சுவரில் சாய்ந்தும் நிமிர்ந்து பார்த்தார்கள். யாரையும் தெளிவாகப் பார்க்க முடியாதபடி மங்கலான வெளிச்சம். அழுக்கும் நிணமும் டிஞ்சரும் டெட்டாலும் கலந்த வாடை. மூர்த்தி உள்ளே போனான். விலகி நின்று கீழே பார்த்தேன். அங்கிருந்து உடனே போய்விடவேண்டும் என்ற அவசரமும் தவிப்பும் என்னை ஆட்கொண்டன. நோயற்ற வாழ்வுதான் வரமா? அப்பா இப்படி பெயரற்றவராய் இங்கு வந்திருக்க வாய்ப்பில்லை. அவரிடமே எல்லா விபரங்களும் உண்டு. யாரும் சுலபமாய் பார்த்துவிட முடியும்.
மூர்த்தியும் மிக வேகமாக வெளியே வந்தான். தலையாட்டினான். வெளியில் வரும் வரை பேசவில்லை. வண்டியை எடுத்துக்கொண்டு பந்தய சாலையில் திருப்பினான். கே.ஜி தியேட்டர் எதிரில் நிறுத்தினான். இழுத்து மூச்சுவிட்டான். வண்டியிலிருந்த தண்ணீர் புட்டியை எடுத்து முகம் கழுவிக்கொண்டான்.
“இல்லடா. அங்க இருக்கறது வேற யாரோ. நிச்சயமா அப்பா இங்க இல்லை. பாக்கலாம். போலீஸ்லயும் சொல்லிருக்கோம். தெரிஞ்சிரும்.”
அவனது குரலில் முன்பிருந்ததுபோல அத்தனை சுரத்தில்லை. என்னை சமாதானப்படுத்துகிறான்.
“வீட்டுக்குப் போலாமா?”
வேறென்ன செய்ய முடியும்?
வீட்டுக்குள் வந்தபோது அம்மா கூடத்தில்தான் இருந்தாள். என் முகத்தைப் பார்த்தாள். “எதுக்குப்பா இப்பிடி சாப்புடாம தூக்கங்கெட்டு அலையறீங்க. ஒண்ணும் ஆகலை. வந்துருவாங்க.”
எனக்கு அழுகை பொங்கியது. அதே சமயம் ஆத்திரமும். களைப்பும் பதற்றமும் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையும் ஒன்று சேர்ந்து உடல் நடுங்கியது. வெடுக்கென்று தலையைத் தூக்கி அவள் முகத்தைப் பார்த்தேன். என்ன ஜென்மம் இவள்?
சுதா தோளில் கைவைத்து அழுத்தினாள். அம்மா என் முகத்தைப் பார்த்தாள். என்னவென்று எதையும் வெளிக்காட்டாத பார்வை. நிதானமாக எழுந்தவள், “போய் படுப்பா. காலையில பாத்துக்கலாம்” என்று சொல்லிவிட்டு அறைக்குள் சென்று விளக்கை அணைத்தாள்.
ஒருகணம் எதுவுமற்று இருண்டு நழுவியது. சட்டென குளியலறையில் புகுந்தேன். ஷவரை திருப்பிவிட்டு அப்படியே நின்றேன். சில்லென்ற தண்ணீர் தலையில் விழுந்து உடலில் வழிந்தது. கண்ணீரும் கரைந்து வழிந்தது.
அப்பா ஒருநாளும் என்னை அழச் செய்தவரில்லை. எதற்காகவும் வருத்தப்படவோ மனம் நோகவோ செய்தவருமில்லை. தேவையானவற்றை தேவையான நேரத்தில் கிடைக்கச் செய்தவர். அது அப்படிக் கிடைக்கும்படி திட்டமிட்டதையோ செய்து முடித்ததையோ ஒரு நாளும் சொல்லிக் காட்டியவருமில்லை. எனக்குத் தெரிந்து அவருடைய நாட்கள் கச்சிதமாகத் திட்டமிடப்பட்டவை. ஒழுங்கு மிக்கவை. கிடைத்த ஊதியத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி, நல்ல கல்வி கொடுத்து, ஊரில் சிறிய வீடு கட்டியதோடு நிறைவு கொண்டவர். வேலையில் சேர்ந்தபோது வாங்கிய ஹெர்குலிஸ் சைக்கிள் இன்னும் இருக்கிறது. அம்மாவிடமும் நகைகள் என்று அதிகம் இல்லை. இப்போது கிடைக்கும் ஓய்வூதியத்தையும் திட்டமிட்டே செலவு செய்கிறார், சேமிக்கிறார். பேத்திக்காக ஒரு ஆயுள் காப்பீடு, வைப்பு நிதி என்று சில விஷயங்கள் மட்டும் எனக்குத் தெரியும். இந்த வீட்டை வாங்க தீர்மானித்தபோது தன் பங்காக ஐந்து லட்சத்தைக் கொடுத்துவிட்டு அவர் சொன்னது, ‘அதிகமா கடன் வேண்டாம் தம்பி. பாத்து செய்யி’ என்பதுதான்.
இன்று மட்டும் ஏன் இப்படி திட்டமிடாமல் நடந்தது? உங்களுக்கு என்ன ஆனது அப்பா? எங்கே இருக்கிறீர்கள்?
கதவைத் தட்டும் சத்தம். முகத்தைத் துடைத்துக் கொண்டு திறந்தேன். துவாலையை நீட்டினாள் சுதா.
இருவரும் பால்கனியில் உட்கார்ந்தோம். தெருமுனை இருட்டில் தீக் கங்கு சுடர்ந்தது. பீடியின் வாடை. காவல் கூண்டருகே படுத்திருந்த கருப்பு நாய் ஒருமுறை எழுந்து சுற்றி வந்து மீண்டும் படுத்துக்கொண்டது.
“போகும்போது அப்பாவோட சட்டையில பாக்கெட் டைரி இருந்துச்சா?”
“அப்ப கவனிக்கலை. ஆனா, எப்பவும் வெக்கற எடத்துல இல்லை. எடுத்துட்டுதான் போயிருப்பார்.”
“டீ குடிச்சிட்டுதானே போனார்?”
“ஆமா. வெள்ளை சுண்டல் கொஞ்சம். எப்பவும்போல டீ.”
வானில் நட்சத்திரங்கள் ஒளிர்ந்திருந்தன. மேகத்தின் விளிம்பில் வெள்ளிக் கோடு. கொன்றை மரம் காற்றில் அசைகிறது. ஏதோவொரு வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம்.
“தப்பா எதும் நடந்திருந்தா இந்நேரம் சொல்லிருப்பாங்க. போன் வந்திருக்கும். எங்கயோ பத்திரமாதான் இருக்கார்.”
எனக்கே நான் சொல்லிக்கொள்வதுபோல அவளிடம் சொன்னேன். சுதா கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனால், எங்கே?
“அம்மா ஒண்ணுமே கேக்கலையா?”
“அவங்க எப்பவும் போலத்தான் இருக்காங்க. போன் நம்பர், போட்டோன்னு ரெண்டு மூணு தடவை மேலயும் கீழயுமா அலைஞ்சப்பதான் சொன்னாங்க, ‘எதுக்கு வெட்டியா அவனை இப்பிடி அலைய வெக்கிறீங்க. அவனை வீட்டுக்கு வரச் சொல்லு’ன்னுதான் சொன்னாங்க.”
எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்துகொண்டேன்.
“அம்மா மாதிரி இருக்கணும்னு நெறைய தடவை யோசிச்சிருக்கேன். ஆனா சாமி, என்னால முடியாதுப்பா.”
அலுப்பும் களைப்புமாக நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினேன்.
*****
“அப்பா, போன்ப்பா” மது தோளை உசுப்பி எழுப்பினாள். பால்கனியில் உட்கார்ந்தபடி அப்படியே தூங்கிப் போயிருக்கிறேன்.
தலையை உலுக்கிக்கொண்டு திரையைப் பார்த்தேன். எண்கள் ஒளிர்ந்தன. பொத்தானை அழுத்தினேன்.
“ஹலோ…”
“ஹலோ சார். கேக்குதுங்களா?”
கண்களைத் துடைத்தபடியே போனைப் பார்த்தேன். சுதாவின் போன். “கேக்குதுங்க சார். சொல்லுங்க.”
“நான் இங்க புதூர்லேர்ந்து பேசறேன். நீங்க…”
“ஆமா, சொல்லுங்க.”
“சார் இங்கதான் இருக்கார். அவர்தான் இந்த நம்பருக்கு கூப்பிடச் சொன்னார்.”
“எங்கப்பாதாங்க. எங்கிருந்து பேசறீங்க?”
“உங்கப்பா இங்கதான் இருக்கார். வரீங்களா?”
போனை விலக்கி எண்களைப் பார்த்தேன். அவசரமாக காதில் வைத்துக்கொண்டு எழுந்தேன். “எங்க சார்?”
இடத்தை அடையாளம் சொன்னார். “உடனே வரேன் சார். கொஞ்சம் பாத்துக்குங்க. தேங்க்ஸ் சார்.” குரல் அடைத்தது.
“சுதா, உடனே மூர்த்தியை வரச்சொல்லு” கண்ணீரைத் துடைத்தபடியே கழிவறைக்குள் ஓடினேன்.
வெளியில் வந்து முகத்தைத் துடைத்தேன். அறைக்குள்ளிருந்து அம்மா வெளியே வந்தாள். “எங்கடா?”
“புதூர் பக்கத்துல.”
காரை வெளியே எடுத்து நிறுத்தியிருந்தான் மூர்த்தி. பின்னால் மது.
“புதூர் பக்கத்துல ஸ்கூல் கிரவுண்ட். அங்க ஒரு வாட்டர் டேங்க் இருக்காம். காலையில வாக்கிங் போக வந்தவங்கதான் இவர் டேங்க் பக்கத்துல படுத்திருக்கறதப் பாத்திருக்காங்க. பாக்கெட்ல இருந்த டைரில போன் நம்பர் இருக்கில்ல. பாத்துட்டுதான் கூப்பிட்டாங்க.”
மருதமலை சாலையில் திரும்பியபோது கிழக்கில் மஞ்சள் வெளிச்சம்.
“புதூருக்கு எங்க போனார் இவரு? நம்ம வீட்டுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லையே? ஏழெட்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்” மூர்த்தியின் கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை.
காசிக்கவுண்டன்புதூர் விலக்கில் திரும்பி, மேடும் பள்ளமுமான மண் சாலையில் நிதானமாக பாலத்தைக் கடந்தபோது மீண்டும் மணியொலித்தது.
“வந்துட்டோம் சார். இங்க முக்குல ஒரு கருப்பராயன் கோயில் இருக்கு. இங்கேருந்து எப்பிடி வரணும்?”
“அப்பிடியே நேரா வந்து வலது கை பக்கமா திரும்புங்க. நேரா கிரவுண்டுக்குதான் வரும்.”
சாலையில் திரும்பியதுமே தண்ணீர் தொட்டி தெரிந்தது. அதற்குக் கீழே ஆட்கூட்டம். அதுவரையில் இல்லாத பயம் திடீரென்று மனத்துள் எழுந்தது. வேறொன்றும் ஆகியிருக்காதே?
காரை நிறுத்தியதும் மெல்ல இறங்கினேன்.
“வாங்க சார்” எதிரில் வந்து என் கைகளைப் பற்றிக் கொண்டவர் நீலச் சட்டை அணிந்திருந்தார். ஆட்கள் விலகி வழிவிட்டார்கள்.
அப்பா கல்மேடையில் உட்கார்ந்திருந்தார். இளநீல அரைக்கைச் சட்டையில் புழுதியும் புற்களும் ஒட்டியிருந்தன.
“இவர்தான் காலையில பாத்திருக்கார்” தலையில் தொப்பியுடன் இருந்தவர் முன்னால் வந்தார்.
“வழக்கமா அஞ்சு மணிக்கு வாக்கிங் வருவேன். இங்க வந்தப்ப வெளிச்சம் வர்லை. டார்ச் லைட் வெளிச்சத்துல பாத்தா இவர் படுத்துருக்கார். யாருன்னு தெரியலை. ஒரு வேளை குடி போதையில கெடக்கறாரோன்னுகூட சந்தேகம் வந்துச்சு. ஆனா, சட்டை பேண்டெல்லாம் பாத்தா அப்பிடித் தெரியலை. அதுக்குள்ள சிவராமனும் வந்துட்டாரு. ரெண்டு பேரும் சேந்து எழுப்பினோம். ஆனா, மனுசனுக்கு நல்ல தூக்கம். அவருக்கே கொஞ்ச நேரம் ஒண்ணும் புரியலை. பாவம், இருட்டுல வழி தெரியாம மெயின் ரோடுலேர்ந்து இவ்ளோ தூரம் வந்துட்டார். கால் வலியில உக்காந்தவர் அப்பிடியே படுத்துட்டார் போல. நல்ல வேளையா பூச்சி பொட்டு ஒண்ணும் படலை.”
அப்பா கையை நீட்டினார். மது கைகளைப் பற்றிக்கொண்டதும் எழுந்து சுற்றி நின்றவர்களைப் பார்த்து தலையாட்டினார் “ரொம்ப தாங்க்ஸ் எல்லார்த்துக்கும். இது எம் பேத்தி மதுமிதா. பி.ஜி படிக்கறா. இது எம் பையன். ஐடில வேலை பாக்கறான். இது மூர்த்தி. இவன் பிரண்டு.”
“இப்பிடியேதான் தம்பி. எல்லாத்தையும் ரொம்ப நிதானமா தெளிவா சொல்றாரு. போன் பண்ணலாம்னு கேட்டபோதுகூட, டைரியக் குடுத்துட்டு, இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க, என்னோட மருமக எடுப்பாங்க. பையன் ஒருவேளை கிரவுண்டுக்கு போயிருந்தா எடுக்க மாட்டான்னு அவ்ளோ தெளிவா சொல்றாரு. இவரு எப்பிடி வழி மாறி வந்தாருன்னுதான் ஆச்சரியமா இருக்கு.”
அப்பா சட்டையில் ஒட்டியிருந்த புற்களைத் தட்டிவிட்டார். டைரியை எடுத்து ஒருமுறை நிதானமாகப் புரட்டினார். சிறிய மஞ்சள் பையிலிருந்த புத்தகங்களை எடுத்து ஒருமுறை சரிபார்த்தார் “நேத்துதான் எடுத்தது. பனில கொஞ்சம் ஈரமாயிருக்கு.” மது பையை வாங்கிக் கொண்டதும் சிரித்தபடியே காரை நோக்கி நடந்தார் “பத்தரமா வெய் கண்ணு.”
சுற்றி நின்றவர்களைப் பார்த்தேன். உயரமாக நின்ற தண்ணீர் தொட்டியையும் அதற்கடுத்திருந்த மைதானத்தையும் நிதானமாக ஏறிட்டேன். எனக்கு அந்த இடம் பரிச்சயமானதில்லை. இந்தப் பக்கமாக வந்ததுகூட கிடையாது. நகரின் நாலாப்பக்கங்களிலும் விரிந்து செல்லும் புதிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று.
“இங்க எங்க வந்தார்னு புரியலை. நல்லவேளையா உங்க கண்ணுல பட்டுருக்காரு. ரொம்ப நன்றிங்க” மூர்த்தி கைகூப்பினான்.
“சரிங்க சார். ரொம்ப டயர்டா இருக்கார். அழைச்சிட்டு போங்க. ரெஸ்ட் எடுக்கட்டும்”
மது காரின் முன்பக்கக் கதவைத் திறந்ததும் உள்ளே அமர்ந்து கதவைச் சாத்தினார் அப்பா. வழக்கமாக அவர் உட்காரும் இடம். “யார் ஓட்டுறா?”
“மூர்த்திதாம்ப்பா.”
“மூர்த்தியா? சரி. கொஞ்சம் மெதுவா போப்பா” என்றதும் மூர்த்தி சிரித்துக்கொண்டே காரை முடுக்கினான்.
“இங்க பாரு. கொஞ்சம் முன்னால போயி லேசா ரைட்ல ஒடிச்சி அப்பறமா ரிவர்ஸ் வா. முன்னாடி முட்டுக்கல் இருக்கு. பாத்து” என்று சொன்னவரைப் பார்த்து வெளியில் நின்றவர்கள் வியப்புடன் சிரித்தார்கள். கையை அசைத்து வழியனுப்பினார்கள்.
எனக்கு எதுவுமே புரியவில்லை. இங்கே எப்படி வந்தார்?
“லைப்ரரிக்குதானே தாத்தா போனீங்க. அப்பறம் இங்க எதுக்கு வந்தீங்க?” மது எட்டிக் கேட்டாள்.
“எல்லாம் இந்த சூரி பண்ணின வேலைம்மா. நாம்பாட்டுக்கு எப்பவும்போல பஸ்ஸைப் புடிச்சு வந்திருப்பேன். அவந்தான் புடிவாதமா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிட்டான்.”
“சூரி யாரு?”
“எங்கூட வேலை பாத்தவன். இப்பத்தான் ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இங்க குடிவந்திருக்கான். பஸ் ஸ்டாப்புல பாத்தவன் வீட்டுக்கு வந்தே ஆகணும்னு கூட்டிட்டு போயிட்டான்.”
“அவங்க வீடு இந்தப் பக்கமா?”
“அது தெரியலை. ஆனா, வீட்டுக்குப் போயிட்டு திருப்பி வந்து என்னை பஸ்ல ஏத்திவிட்டான். காலனிப் பக்கமா ஏத்திவிடறதுக்கு பதிலா எதிர் பக்கமா ஏத்தி விட்டுட்டான்போல. இந்த எடத்துக்கு வந்ததும் நம்ம பஸ் ஸ்டாப் மாதிரியிருக்கவே எறங்கிட்டேன். நடந்து வரும்போதும் எனக்கு எதுவும் தெரியலை. இருட்டு வேறயா? இதோ வந்துரும் வந்துரும்னு நடந்தேன். அப்பறமா ஒண்ணும் தெரியலை. யாரையும் கேக்க முடியலை. ரொம்ப தூரம் நடந்து கால் வலிச்சிருச்சி. அப்பிடியே உக்காந்தவன் அசதில கண்ணை மூடி தூங்கிட்டேன் போல இருக்கு.”
எனக்கு அவர் சொன்னதில் பாதி புரிந்தது. மீதி புரியவில்லை. மதுதான் அவரிடம் கேட்டுக் கொண்டே வந்தாள். ஒரு ராத்திரி முழுக்க வீடு திரும்பாதது குறித்த கவலையோ வருத்தமோ சோர்வோ அவரிடம் தென்படவில்லை. வழக்கம்போல கார் ஓட்ட மூர்த்திக்கு வழிசொன்னபடியே வந்தார்.
தலைமுடியில் ஒட்டிக்கொண்டிருந்த சருகை எடுத்து வெளியில் சுண்டினார், “பாட்டி எப்பிடி இருக்கா?”
மது பதில் சொல்வதற்கு முன்பே அவர் தொடர்ந்தார், “ம்… எதுவும் சொல்லமாட்டா. அவ அப்பிடித்தான்.”
காரிலிருந்து மெதுவாக இறங்கியவர் குடியிருப்பு வாசலில் வியப்புடன் வணக்கம் வைத்த இரவுக் காவலரைப் பார்த்துக் கேட்டார், “என்ன ராத்திரி நல்ல தூக்கமா, லட்சுமணா?”
வழக்கமாக படிகளில் ஏறுபவர் மின்தூக்கியின் வாசலில் நின்றார் “முடியல. கால் வலிக்குது.”
வாசலில் செருப்பைக் கழற்றிப் போட்டார் “ஒரே மண்ணா இருக்கு. அப்பறமா கழுவி வெக்கணும்.” சத்தம் கேட்டு கதவைத் திறந்தாள் சுதா. உள்ளே நுழைந்தவரின் கைகளை அவசரமாகப் பற்றிக்கொண்டாள். “ரொம்ப பயந்துட்டியாம்மா. சாரி. உங்கிட்ட சொல்லிட்டுப் போயிருக்கணும். சொல்லாம போனதாலதான் எல்லார்த்துக்கும் சிரமம்.”
சாத்தியிருந்த அறை வாசலில் தயங்கி நின்றார். பிறகு சோபாவில் வந்து பெருமூச்செறிந்தபடி உட்கார்ந்தார். சட்டையை மெல்லக் கழற்றினார். சுதா வெந்நீர் தம்ளரை நீட்டினாள், “காபி போடவா அப்பா?”
அறைக் கதவைத் திறந்தது. அம்மா வெளியில் வந்தாள். நெற்றிப் பொட்டை சரிசெய்தபடியே அப்பாவை ஒருகணம் பார்த்தாள். அதே நொடியில் அவரும் நிமிர்ந்து பார்த்தார்.
ஒரு கணம். நான் சுதாவைப் பார்த்தேன். சுதா மதுவை ஏறிட்டாள். மது தலையைக் குனிந்தாள்.
நொடியில் பார்வையைத் திருப்பிக்கொண்டு பால்கனிக்கு சென்றாள் அம்மா. எப்போதும்போல வெளியில் வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். அப்பா அன்றைய செய்தித்தாளை எடுத்துப் பிரித்தார்.