இணைய இதழ்இணைய இதழ் 75சிறுகதைகள்

திருவிருத்தி – மஞ்சுநாத் 

சிறுகதை | வாசகசாலை

ரத்தம் உந்தப்பட்டு உச்சி நோக்கிப் பெரும் பாய்ச்சல் நிகழ்த்தியது. இறக்கத்திலிருந்து சிரமத்துடன் மேலேறினோம். முகம் விறுவிறுத்திருந்தாலும் மலர்ச்சியின் சாயலை ருசிக்க முடிந்தது. தலையின் பாரம் கூடுவதும் குறைவதுமாக இருந்தது. உள்ளங்கைகள் நீரில் ஊற வைத்த தாமரை இதழ்களாகப் பிசுபிசுத்தன. விழிப்படலங்களில் திரையிட்டிருந்த புகை மூட்டம் பார்வையை மங்கலாக்கியது. முதுகுப்பையின் கனம் மட்டுமே உணர்வில் இருக்கிறது. உடலை ஒரு சுமையாக உணராதவனுக்கு கட்டற்ற உற்சாகம் கரைபுரளும்… 

இரவின் வரவால் பகலின் மிச்ச மீதித் தடயங்கள் அழிவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. கிச்சாவால் எனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை. திரும்பிப் பார்த்தேன். அவன் நெற்றியில் பயத்தின் நரம்புகள் தெறித்தன.

கிச்சாவின் அடர்த்தி மிகுந்த முடிக்கற்றைகள் அலங்கோலமாகக் கலைந்து அதிலிருந்தும் வியர்வைத்துளிகள் கசிந்தன. உடலுடன் ஒட்டிய சட்டையுடன் பார்க்கும்போது சதைகளற்ற அவனது விலா எலும்புகள் சற்று அகோரம்தான். ஆறடி மூன்றங்குல உயரமுடைய மனிதனுக்கு சதைப்பற்றில்லாதது ஒன்றும் கம்பீரத்தைக் குறைத்துக் காட்டாது… ஆனால் நெஞ்சுரம்?

வேகத்தைக் குறைத்து நெருங்கி வருவதற்காகக் காத்திருந்து மீண்டும் அவனது அருகாமையை உணர்ந்ததும் திரும்பிப் பார்க்காமல் நடையைத் தொடர்கிறேன்.  அதிருப்தியின் முணகல்களும், வேகமான மூச்சிரைப்பும், சருகுகள் மிதிபடும் ஒசையும் பின்தொடரும் அடையாளங்கள். 

குறுகலான வளைவுப் பாதையை ஆக்கிரமித்தவாறு நின்றிருக்கும் பெரியதொரு தான்றி மரத்தினருகில் வந்ததும் அவனுக்காகக் காத்திருக்க முடிவு செய்தேன். நாங்கள் வரும்பொழுது இம்மரத்தின் கிளையில் அமர்ந்திருந்த இரண்டு செம்போத்துக் காகங்கள் தங்கள் செம்பவளக் கண்களால் எங்களிருவரையும் முறைத்துப் பார்த்தன. அதை எச்சரிக்கையின் குறியீடாக எடுத்துக்கொண்டு வெறுங்கையுடன் திரும்பிச் செல்லும் எண்ணத்தை நான் அனுமதிக்கவில்லை.

நிழலடர்ந்த கட்டுப்பாதையில் இளவேனிற் தென்றலின் உற்சாகத்தைப் பருகியவாறு எங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்தோம். அங்குதான் ஆடுகளுடன் பேசும் முதியவரைச் சந்தித்தோம்.

“தாத்தா… அருவிக்கு இன்னும் எவ்வளவு தூரம் இறங்கிப் போகணும்…?”

“அருவியா… நீங்க வரும்போது வழியில வீடெல்லாம் பார்த்திருப்பிங்களே…”

“ஆமாம்… பத்துப் பன்னிரண்டு வீடுங்க இருக்கும். எல்லா வீட்டு வாசல்லேயும் தானிக்காய் உலர்த்தி வைச்சிருந்தாங்களே…”

“அதேதான்… அங்கயிருந்து இங்க வர உங்களுக்கு எவ்வளவு நேரமாச்சு…?”

நான் கிச்சாவைப் பார்த்தேன். அவன் தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஒரு விரலை உயர்த்தினான்.

“அதேதான்… இன்னும் அவ்வளவு நேரம் நீங்க கீழறங்கிப் போகணும்…

பெரியவர் தனது ஆடுகளை ஒன்று சேர்க்கும் பரபரப்பில் இருந்தார். அடிவயிற்றிலிருந்து கூர்மையான குரலெழுப்பி அது தொண்டைக்கு வரும் சமயத்தில் வேகமான உதட்டசைப்பின் மூலம் தட்டையானதொரு அதிர்வையும் அதனுடன் சேர்த்தார். அதனை உள்வாங்கிய மலைகள் வனப்பிராந்தியத்தின் மீது கவிழ்ந்திருக்கும் மர்மங்களை எல்லாம் உயிர்தெழச் செய்தன. செம்போத்து காகங்கள் குரலெழுப்பாமல் நாங்கள் செல்லும் திசைநோக்கிப் பறந்து சென்றன.

“வழியில மிருகங்கள் ஏதாவது இருக்குங்களா…?”

“மிருகங்களா…? “

” ஆமாம்… சிங்கம், புலி, யானை…? கிச்சா குறும்புடன் சிரித்தான்.

முதியவர் தனது ஆடுகளின் எண்ணிக்கையை சரிபார்த்து முடித்ததும் தலையில் சுற்றியிருந்த கருப்புத் துண்டை உதறி முகத்தைத் துடைத்தவாறு வெறுப்புடன் எங்களைப் பார்த்தார். அவரது இயல்பான வலது கண்ணை விட பூ விழுந்த இடது கண் நட்சத்திரம் போல் பிரகாசித்தது. ஒருவேளை எனக்குதான் அப்படி தோன்றியதோ…?

“அதெல்லாம் தெரியாது தம்பி… வெளிச்சம் குறைஞ்சதுக்கப்பறம் குண்டு கரடிங்க நடமாட்டம் இங்க அதிகமா இருக்கும்… முக்கியமா நீங்க போற பாதையில பாம்புங்களும் நிறைய தென்படும். பாத்து கால் வைச்சுப் போங்க… பொழுது சாய்ஞ்சதுக்கப்பறம் கீழ இறங்காதீங்கன்னா இளவட்டப் பசங்க கேக்கவா செய்றீங்க…? பத்திரம்.”

பெரியவர் தனது இரு கைகளையும் வானத்தை நோக்கி உயர்த்திவிட்டு தனது மந்தையின் பின்னால் ஒலியெழுப்பியபடி ஆடுகளை வேகமாக முடுக்கினார். மறுபடியும் அவரிடமிருந்து வந்த விசித்திரமான ஒலி மலைகளை மீண்டுமொருமுறை அதிர வைத்தது. பொதுவாக ஆடுகள் கூட்டமாக நெருக்கியடித்துப் போவதைத்தான் பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு ஆடுகள் இரண்டு வரிசையில் மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் குறுகிய பாதையிலும் இணையாகவே நடந்து சென்றன. 

“மச்சி திரும்பி போயிடலாம்டா… அதான் நமக்கு நல்லது. காரணம் இல்லாமலா தாத்தா ஆட்டு மந்தைய நாலு மணிக்கெல்லாம் வீட்டுக்கு திருப்புது…”

“காரணம் இருக்கு. ஆனா நீ நினைக்கறது கிடையாது… சும்மா பயந்து நடுங்காதே. பக்கத்து ஊர்ல நாளைக்கு வெள்ளிமலை சந்தை, இந்தப்பக்கத்து ஆடுங்களுக்கு விலை அதிகம். ரோட்டு கடையில வண்டி நிறுத்தி டீ சாப்பிடும்போது ஒரு படுதாக்கட்டின லாரி நின்னுகிட்டு இருந்ததைப் பாத்தியே…? வியாபாரிங்க கொழுத்த ஆடுகளை வாங்க கல்வராயன் மலைக்குதான் வருவாங்க. அதான் கிழம் பறந்துகிட்டு ஓடுது.

“அப்புறம் ஏன் தேவையில்லாம நமக்கு அவர் பயம் காட்ற மாதிரி பேசணும்? இந்தப் பக்கத்து அனுபவப்பட்ட மனுசனாத் தெரியறாரு. காரணமில்லாம சொல்லுவாரா? நியாயம்தானே, இன்னும் ஒரு மணி நேரத்துல சூரியனும் மறைஞ்சுடும், வழியில பாம்பு வேற இருக்குமாம்… வேணான்டா எனக்கும் நாம திரும்பிடறதுதான் நல்லதுன்னு தோணுது.  இன்னொரு முறை பகல்ல சீக்கிரமாவே வந்து பாக்கலாம்.”

” கிச்சா, இனிமேல் நாம போவறது சரிவான பாதை, அதனால கஷ்டமில்லாம சரசரன்னு அரை மணி நேரத்துல அருவியை நெருங்கிடலாம். பார்த்துட்டு, கொஞ்சம் வேகமா கையை வீசி நடந்தாப் போதும் ஒரு மணி நேரத்துல ரோட்டுக் கடைக்குத் திரும்பிடலாம். இப்ப மணி நாலே கால், சரியா ஆறு மணிக்கெல்லாம்  கல்வராயன் மலை சோதனை சவடியைக் கடந்து ஊருக்குப் போயிட்டு இருப்போம். அது மட்டுமில்ல, மலைப்பகுதில ஏழு மணி வரைக்கும் வெளிச்சம் இருக்கும். இந்த மாதிரி காட்டுக்கு உள்ளடங்கின அருவியில குளிக்கிறதே செமையான அனுபவம்… நிறைய பேருக்கு மலைக்கு மேல அதுவும் காட்டுக்கு நடுவுல இப்படியொரு உயராமான அருவி இருக்கிறது தெரியவே தெரியாது.”

“என்னது அருவியில குளிக்கப் போறீயா…? அதெல்லாம் சரிப்பட்டு வராது…”

டேய் எதுக்கு இந்த அதிர்ச்சி? வாய்ப்பிருந்தா குளிக்கலாம். இல்லைனா திரும்பிடலாம்.

வெகுநேரத்திற்குப் பிறகே கிச்சா சமாதானமடைந்தான். திரும்பும் மனமுமில்லை. தொடரும் மனமுமில்லை. அவனுக்கு வேறு வழிகளுமில்லை. பாலர் பள்ளியிலிருந்து துவங்கிய நட்பு சித்த மருத்துவக் கல்லூரியிலும் தொடரந்தது. நான் பயணத்தை விரும்புவேன். அவன் பயணத்துடன் பாதுகாப்பையும் சேர்த்து விரும்புவான்.  

பயணம் மட்டும்தான் நம் கையில் இருக்கும் வாய்ப்பு. பாதுகாப்பு என்பது  மாயை. நமது அரண்கள் பலமற்றது. சிறு திறப்பு மட்டும் போதுமானது அது நம்மை வெளியேற்றி விடும். இறுதியில் பயணம் முடிந்து பாதுகாப்பாக கல்லறையில்தானே இருக்கப்போகிறோம்…

வழியில் எந்தவொரு பாம்புகளோ கரடிகளோ இருப்பதற்கான தடயங்கள் சிறிதும் தென்படவில்லை. ஆனால் அமைதியின் நிழல் மனிதர்களுக்குள் உறைந்துள்ள ஆதி உணர்வான பயத்தை எளிதில் தூண்டி விடுகிறது. காடுகளில் நிலவும் அமைதிக்கு அடர்த்தி அதிகம். அந்த அமைதியில் கண்களை இறுக மூடிக்கொள்வது குழியில் தள்ளிவிடும். கண்களை சற்று அகலத் திறந்திருப்பதுதான் இங்கு விவேகமான செயல். 

கிச்சாவிடம் இப்பொழுது பேசாவிட்டால் பயம் அவனை விழுங்கிவிடும், திரும்பி ஓடினாலும் ஓடி விடுவான். 

“கிச்சா கல்வராயன் மலைக்கு மேல இப்படியொரு இடம் இருக்குனு நீ இதுவரைக்கும் கேள்விப் பட்டிருக்கியா…? நாம வழியில பார்த்தோமே ஆட்டுக்கார தாத்தா அவர் இந்த மலையோட மூத்த காராளர்… தமிழ்நாட்டில மிச்சமிருக்கக்கூடிய பூர்வகுடிகளில் இவங்களும் அடக்கம். மலையில கிடைக்கிற தேன், காட்டு நெல்லி, தானிக்காய், கடுக்காய், பலவிதமான மூலிகை வேர்களும், ஒருசில கிழங்குங்களும்தான் இவங்க வாழ்க்கை பிழைப்புக்கான ஆதாரம்.

ரோட்டோரத்துல நிறைய விவசாய நிலம் பார்த்தோமே அதெல்லாம் இவங்களது. கிடையாதா…?

எந்த மலைவாழ் பூர்வக்குடிக்கு அதிகாரபூர்மான விவசாய நிலப்பட்டா  கொடுத்திருக்கோம்…? அவங்க எதையும் சொந்தம் கொண்டாட மாட்டாங்க. காடு மட்டும்தான் அவங்க சொந்தம். உயிருக்கே பிரச்சனைன்னாலும் பிறந்த மண்ணை விட்டு வெளியே வரவும் மாட்டாங்க… ஆனால் சமவெளியிலிருந்து வர்ற ஒருத்தன் அவங்க பிழைப்பு, கலாச்சாரம், நம்பிக்கை மேல கூசாமல் மண்ணை அள்ளி போட்டுட்டுப் போய்டுவான்… இப்போ நாம பதுங்கி பயந்து போற அருவிக்கு இன்னும் சில வருடத்துல சுற்றலா பலகை மாட்டி வியாபாரமாக்கிடுவாங்க… அதுல ஒரு நயா பைசாக்கூட இந்த மக்களோட வயித்துக்குப் போகாது. இப்படியெல்லாம் நடக்குமுனு இவங்களுக்கும் தெரியும். அதனாலதான் கரடி, பாம்பு, பேய், உக்கிரமான வனதேவதைன்னு வர்றவங்களுக்கு பயத்தைக் காட்டி சீரழிவை கொஞ்சம் தாமதப்படுத்துறாங்க…

“அது சரி மச்சி… நாம வந்த வேலையைப் பார்த்துட்டு ஊரு போய் சேர்த்திருக்கலாம். அத விட்டுட்டு இப்படியொரு ஆபத்தான சாகசம் எல்லாம் அவசியம்தானா… அவங்களுக்குதான் விருப்பம் இல்லைன்னு சொல்ற, அப்புறம் ஏன் நாம அருவிக்குப் போகணும்? பயிற்சியை முடிச்சோமா கிளினிக் திறந்தோமா நாலு பேருக்கு வைத்தியம் பார்த்தோமான்னு இல்லாம…

படிச்சு முடிச்சுட்டு வெளிய வர்ற எல்லாரும் ஆஹா ஓஹோன்னு வைத்தியம் பாக்கறாங்களா என்ன? ஆனா ஒரு சில பரம்பரை வைத்தியருங்க மட்டும்… நல்லா கவனி ஒரு சில பரம்பரை வைத்தியருங்க மட்டும் கோடி கோடியா சம்பாதிக்கறாங்களே எப்படி…?

“எல்லாம் வாய்ஜாலம்தான்…”

பொத்தாம் பொதுவா அப்படி சொல்லிட முடியாதில்லையா… சிலரிடம் தொழில் ஜாலமும் இருக்கு. நுணுக்கம் தெரிஞ்சவங்க அதிகம் சம்பாதிக்காமல் கூட இருக்கலாம். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வழியில ஒரு தான்றி மரம் பார்த்தோமே அதுக்கு எத்தனை வயசு இருக்கும்…?

“நானும் கவனிச்சேன். நல்ல வளப்பம்தான். எப்படியும் அறுபது வருசத்துக்கு மேற்பட்ட மரமாகத்தான் இருக்கும்.”

“தேர்ந்ததிலிருந்து மட்டும்தான் பழங்குடி மக்கள் அறுவடை செய்வாங்க. ஒவ்வொரு வீட்லேயும் உலர்த்தி வைச்சிருக்கிற தானிக்காய், எலுமிச்சைக் காய் அளவுல இருக்கு. இதுல செய்யுற மருந்தோட வீர்யம் எப்படியிருக்கும் பார்த்துக்க..?

“நானும்தானே சொன்னேன் விலையும் குறைவா சொல்றாங்க, ஆளுக்கு அஞ்சஞ்சு கிலோ தான்றியும் கடுக்காயும் வாங்கிட்டு திரும்பிடலாம்னு…”

நீ திரும்புறதுலயே இரு. நீ பார்த்தது சாதாரண பால் கடுக்காய்… இது மட்டும்தான் இருக்குதுன்னு நினைக்கிறியா…

“தெரியும் தெரியும்… ஆனா மூலப்பொருட்கள் சந்தையில் காபூல், சூரத்திலிருந்து கொண்டு வர்ற மட்டி கடுக்காய் மட்டும்தானே நமக்கு கிடைக்குது. அதோட ஒப்பிடும்போது இது சிறப்பானதுதானே…?”

ரொம்ப சிறப்பானது. ஆனா… அதைவிட அபூர்வமான கடுக்காய் வகைகள் பலதும் இருக்கு…

“நீ கருங்கடுக்காய், செங்கடுக்காய் பத்தி சொல்றியா…? அதுதான் இப்போ கிடைக்கிறதில்லையே…?

ப்ச்… அது நிறம் பார்த்துப் பிரிக்கிறது. ஏழு வகை அபூர்வ கடுக்காய்கள் இருக்கு. படிச்சதை மறந்திட்டியா? விசயன், அரோகினி, பிருதிவி, அமிர்த சேதகி, சீவந்தி, திருவிருத்தி…

ஆதி விசயன் அரோகினியோ டேபிருதிவி
தீதியில் அமிர்தை சிவந்திமலை-மீதார்
திருவிருதி தீயபயன் செப்பிலைவை யேழாம்
அரிதகியின் பேதம் அறி.

“அடேயப்பா! மூணாவது வருஷம் மூலிகை பாடத்துல உருபோட்டதோட சரி, ஆனா நீ இன்னும் நினைவில அச்சு மாறாமல் வைச்சிருக்கிறது ஆச்சர்யம்தான். ஒருவேளை பரம்பரை வைத்தியரான உங்க தாத்தா வழியில வந்த ரத்த பந்தத்தோட தொடர்ச்சியா இருக்கலாம்…”

சிரிச்சது போதும்… இந்த கடுக்காய்கள நீ எங்கேயாவது எப்பொழுதாவது பார்த்துட்டு சோதனைக்குப் பயன்படுத்தியிருக்கியா…?

“திரும்பவும் சிரிச்சிடுவேன் பார்த்துக்க… கரடி வந்துடும்னுதான் அடக்கமா சிரிக்கிறேன். பெயரே ஞாபகத்துல இல்ல. இதுல பாத்திருக்கியா… பயன்படுத்தி இருக்கியான்னு… கடுப்பைக் கிளப்பாதே”

“கிச்சா, தேடறவங்களுக்கு கிடைக்க வேண்டிய இடத்துலேர்ந்து கிடைச்சுட்டுதான் இருக்கும்…  இருக்குது! இந்த கடுக்காய் வகைகளை மருந்துகளாகப் பயன்படுத்தி இன்னைக்கு மக்கள் மத்தியில புழங்கற நூறு விதமான நோய்களை குணப்படுத்திட முடியும். இது பத்தி அப்பறம் பேசலாம். உண்மையை சொல்லணும்னா லாபம் நமக்கு மட்டுமில்ல, இந்த காராளர் மக்களுக்கும் சேர்த்துதான். ஊர் சுத்தறது மட்டும்தான் என் வேலையினு நினைச்சுகிட்டு இருக்க… நிறைய பரம்பரை வைத்தியர்கள் மூலமா தகவல்களை சேர்த்து வச்சிக்கிறதை மட்டும் நான் செய்யல, கூடவே முறையான சோதனைகள் மூலம் அதை உறுதியும் செய்வேன். நூறு சதவீதம் அக்மார்க் தரவுகள்தான் என்னோட பலம்.

உருத்திராட்சத்தில் ஏகமுகி, த்விமுகி, த்ரிமுகி, பஞ்சமுகி, ஷண்முகி… இப்படி பலவகைள் உண்டு. விதையில் இருக்கிற கோடுகளின் எண்ணிக்கையை வச்சு அதோட தெய்வீக பலன்கள் மாறுபடும்னு சொல்லுவாங்க. கடுக்காய்ல கூட இந்த வரியும் வடிவமும் மாறும்போது அதோட மருத்துவ பலன்களும் பலவிதத்துல வித்தியாசப்படும்.

நான் முதல்ல சொன்னனே விசயன் கடுக்காய், அவந்தி நாடு தெரியுமா? அதான் மால்வா. ஒரு காலத்தில எரிமலை பூமியாக இருந்த பிரதேசம். அங்கே இருக்கிற விந்திய மலைத்தொடர்ல இந்த அரியவகை மரங்கள் இருக்கு. ஒவ்வொரு கடுக்காயும் பேய்ச்சுரைக்காய் அளவு.

ஒரு காலத்துல அரோகினி கடுக்காய் கன்னியாகுமரி மருத்துவா மலையில நிறைய இருந்திருக்கு… இப்போ கடுக்காய் மரம் மட்மில்லை எந்தவொரு மரமும் அந்த மலையில கிடையாது. மலைக்கு மேல நாராயணகுரு தவம் செஞ்ச குகை ஒன்னு இருக்கு. வெறுத்துப்போய் ரா முழுசும் அங்கேயே தங்கிட்டேன்.  காலையில செந்நாயுருவி தேடிகிட்டு வந்த வைத்தியர் தன்னோட தோட்டத்துல நாலு வரியுடைய அரோகினி கடுக்காய் மரங்களை வளர்த்துகிட்டு வரேன்னு சொன்னதோட கூடவே அழைச்சிட்டு போய் காட்டுனப்ப, நெசமாவே அசந்துட்டேன் போ… 

பிருதிவி வகை கடுக்காய் கத்தியவார் தீபகற்பத்துல கிர்னார் மலைப்பகுதியில கிடைக்குது. இந்த மலையும் வயசான ஏரிமலையோட எச்சம்தான்.  இந்த மலையில மக்கள் சாமியா கொண்டாடுற யோகி தத்தாத்ரேயர் வாழ்ந்து வந்திருக்கார். மக்களுக்கு அவரோட கதை தெரியும். கடுக்காய் மரம் பத்தி கேட்டால் ஒன்னும் தெரியாது. அந்த யோகி தனது முக்திக்காக பத்ரிநாத் நோக்கி பயணமாகும்போது மடி நிறைய பிருதிவி கடுக்காய் கட்டி எடுத்துகிட்டு ஏன் போனாருன்னு யாருக்காவது தெரியுமா…?

“சரி மச்சி நீயே சொல்லு எதுக்காக தத்தாத்ரேயர் பிருதிவி கடுக்காய் எடுத்துகிட்டுப் போனாரு…? ” 

கிச்சாவின் கண்களில் ஆவல் பிதுங்கியது. என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

எதுக்குனு தெரியுனுமா…? அது முக்திக்கான கமுக்கம். இப்போ சொல்ல மாட்டேன். முறைக்காதே… சொன்னாலும் உனக்குப் புரியாது. சரி அதைவிடு…

பத்து வருஷத்துக்கு முன்னாடி அமிர்த சேதகி கடுக்காய் காசி கங்கைக் கரையோரம் சிரமமில்லாது கிடைச்சது. ஆனா இப்போ அதுக்கு ரிஷிகேஷ் எல்லையைத் தாண்டனும்… இமயமலை சரிவு துவங்கற இடத்துல அடர்ந்த காட்டுக்கு நடுவுல சீறிவரும் கங்கைக்கு எதிர்கரையில ஏகப்பட்ட அமிர்த சேதகி.

அபயன் கடுக்காய் பொதிகை மலையில வளரக்கூடியதுன்னாலும் சுலபத்துல கிடைச்சிடாது… இத்தனை வகை கடுக்காய்களையும் நாயா பேயா அலைஞ்சி திரிஞ்சி பாதுகாப்பா பாடம் போட்டு சேகரிச்சு வைச்சிருக்கிறேன்.  

ஜனவரி மாசம் தலைக்காவேரிக்கு போயிருந்தேன். சீவந்தி கடுக்காயை அங்க கண்டுபிடிக்கவே முடியலை. பொய்யான தகவல். பாக்காம திரும்பக்கூடாதுன்னு முடிவு செய்ததோட பலன், ஒரு துறவி கருணை வச்சு வழியையும் சொன்னாரு… வீராஜ்பேட்டைக்கு பக்கத்துல இருக்கிற பிரம்ம கிரி காட்டுக்கு நடுவுல தங்கமுட்டை மாதிரி நிறைய சீவந்தி கடுக்காய்கள்… அள்ளிகிட்டு வந்துட்டேன். ஏழுல ஆறுவகை கடுக்காய்களை சேர்த்தாச்சு.

கடுக்காய் காயகற்ப மூலிகைன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனால் இந்த ஆறு வகைகளையும் ஒன்னு சேர்த்து மகா கற்பம் செய்யலாம்னு யாருக்காவது தெரியுமா? அத்தனை கடுக்காய்களோட ஆற்றல் மட்டுமில்ல அதிசயமும் சேர்ந்து ஒரே கடுக்காய்லே இருக்கு! அது மட்டும் கையில் கிடைச்சா…

கிச்சாவுக்கு மூச்சிரைத்தது. இடுப்பில் கை வைத்து வாய்பிளந்தபடி ஆர்வத்துடன் பார்த்தான். அருவியின் கர்ஜனை என்னை மெளனமாக்கியது. கண்களை மூடினேன்… இரண்டொரு திருப்பங்கள் மீதமிருந்தாலும் மரங்களின் வழியே தெரிந்த ராட்சத வெள்ளித் தூண் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அருவியை தழுவிக்கொள்ள துடித்தேன். சேற்றில் புதைந்த பாதம் வழியே அருவியின் குளிர்ச்சி உடல் முழுவதும் பரவியது. 

கிச்சா தொடர்ந்து பேசும்படி வற்புறுத்தியபோது… அருவியின்  வளைவுப் பாதையிலிருந்து இரண்டு இளைஞர்கள் சேறுபடிந்த ஆடைகளுடன் முகத்தில் பயத்துடனும் உடல் நடுங்க வேகமாக மேலேறினார்கள். அவர்கள் எங்களுக்குள் விதைத்த அதிர்ச்சி எனது அனைத்து திட்டங்களையும் பாழாக்கியது. 

“கீழே போகாதீங்க …அருவி பக்கத்துல ஒரு பொண்ணோட பொணம் துணியில்லாம கிடக்கது… ஏதோ விபரீதம் நடந்திருக்கு பிரச்சனையில மாட்டிக்காதீங்க… “

நானும் கிச்சாவும் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அவர்கள் வெகுவேகமாக எங்களைக் கடந்து சென்றிருந்தார்கள். அசப்பில் எங்கள் இருவரின் ஜாடைகளை பிரதிபலித்தவர்கள் கூறியதை நான் சிறிதும் நம்பவில்லை. இது ஏன் எங்களை பயமுறுத்தும் விளையாட்டாக இருக்கக்கூடாது… வரும் வழியில் சில மது பாட்டில்கள் பார்த்தேன். குடிகாரர்கள்? ஒருவேளை இவர்களாகவே ஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து… இல்லை அப்படி இருக்காது. வனத்திற்குள் காராளர் கிராமங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டு இவ்வளவு தூரம் அவர்களால் கடந்து வந்திருக்க முடியாது. அதற்கான சாத்தியங்கள் குறைவு… 

கிச்சா அழுகையின் விளிம்பில் இருந்தான். எனக்குள்ளும் அவர்கள் தூவிய பதற்றத்தை உணர்ந்து அதை முற்றிலுமாக உதிர்த்தேன். இப்பொழுது, கிச்சாவிடம் நிதானமாக ஒவ்வொரு வார்த்தையாக பேசுவது அவசியம்.

கிச்சா… முதல்ல அமைதியா இரு. குடிகாரப் பசங்க போற போக்குல விளையாட்டுக்கு கலவரப்படுத்திட்டு போகலாம்… சரி அப்படியே இருந்தாலும் நாம பார்த்து உறுதி செய்துட்டு செக் போஸ்டுல தகவல் சொல்லிடலாம். அவங்க பார்த்துப்பாங்க…”

“போடாங்…த்தா வலிய போய் பிரச்சனையில மாட்டிக்க சொல்றீயா… வாய் மூடிகிட்டு பேசாம வா. வந்த தடம் தெரியாமல் ஓடி போயிடலாம். ச்சேய்… இப்பவே இருட்ன மாதிரி ஆயிடுச்சே… “

இங்க மரங்கள் அடர்த்தி அதிகம், நாம பள்ளத்துல இருக்கிறதால இருட்டா இருக்கு… ரெண்டு வளைவு மேலேறிப்போனா…

“நீ ஒன்னும் பேசாத. வாய் மூடிகிட்டு சீக்கிரம் வா. கோபத்துல என் வாயைக் கிளறி அசிங்கமா வாங்கிக் கட்டிக்காத. இங்கிருந்து முதல்ல கிளம்பறோம்…”

சரி…சரி கிளம்பலாம். திரும்பவும் சொல்றேன். நிதானத்துக்கு வா. பதட்டப்படாத. தயவு செஞ்சு எனக்காக பத்து நிமிஷம் அமைதியாய் இங்கேயே நில்லு.  கீழே போய் அருவியோரம் என்னன்னு பார்த்துட்டு வந்துடறேன்.

“அப்படி என்னடா பார்க்கனும் அதான் ரெண்டு பேரு அப்படி தெறிச்சி ஓடறதைப் பார்த்தேயில்ல…  வம்புல தலையைக் கொடுக்கணுமா?”

கிச்சா, நான் சொல்லிகிட்டு வந்த கடுக்காய்ல ஒவ்வொன்னுக்கும் ஒரு தன்மை இருக்கு… அதுல ஒன்றை எடுத்து சாப்பிட்டால் கழியும், ஒன்றை முகர்ந்தால் கழியும், ஒன்றைத் தொட்டாலே கழியும், ஒன்றைப் பார்த்தாலே பேதியாகும், இத நீயும் படிச்சிருப்ப… இது முதல் நிலைதான். அதுக்கு காரணம்…

“டேய் கிறுக்குப் பயலே கடுக்காய் இல்லாமலே இப்ப நீ சொன்னதெல்லாம் எனக்கு நடக்குது…”

தயவுசெய்து நான் சொல்றதைக் கேளு…  ரொம்ப ரொம்ப முக்கியமானது, திருவிருத்தி கடுக்காய்க்கு ஒரு மனுசனோட உடம்பை மறைக்கிற சக்தி இருக்கு… முறையா கையாள தெரிஞ்சா உயிர்சக்தியை வெளியே கொண்டுபோய் மீண்டும் உள்ளே கொண்டு வரவும் முடியும்… அநங்கன் வித்தை கேள்விப்பட்டதில்லையா?

கிட்டத்தட்ட பெருங்குரலில் கத்தியே விட்டேன். நான் கூறியதன் சாரத்தை சிறிதும் உணராமல் நம்பிக்கையற்று வெறித்தான்.

“அருவிக்குப் பக்கத்துலதான் அந்த திருவிருத்தி மரம் இருக்குனு எப்படி உறுதியா சொல்ற?”

இந்த அருவியோட பெயர் மேகம் அருவி. இதுவொரு அடையாளம். சித்தர்கள் புழக்கத்துல கடுக்காய்க்கு 49 விதமான பெயர்கள் வைச்சிருக்காங்க… அதுல மேகமும் உண்டு….

“போ… சரியா பத்து நிமிஷம்தான். அதுக்குப் பிறகு ஒரு நொடிகூட தாமதிக்க மாட்டேன். நான் கிளம்பி போயிடுவேன்… உன்னை நம்பி உன் கூட வந்தேன் பாரு,  காலேஜிலே அப்பவே சொன்னாங்க கிறுக்குப் பையன்கிட்ட சகவாசம் வச்சிக்க வேணாம்னு கேட்டேனா…”

புலம்பலுடன் இருப்பவனிடம் எப்படி பேசிப் புரிய வைப்பது? அவனை பிறகு பார்த்துக் கொள்ளலாம். பல வருடத் தேடல். நோக்கம் நிறைவேற வேண்டும். அருவிப் பாதைக்குள் வழுக்கியபடி கவனமாக இறங்கினேன். கிச்சா தனித்து திரும்புவதற்கு ஒருபோதும் துணிய மாட்டான். பயந்த சுபாவம் அவனை நகரவிடாது. அருவியின் பேரோசையுடன் ஆடுகளை ஒழுங்குபடுத்தும் முதியவரின் கூர்மையான எதிரொலியும் சேர்ந்து கேட்பதுபோல் இருந்தது…

ஆர்பரிக்கும் பிரமாண்டமான மேகம் அருவி அபாயகரமான வாள் போல் பூமியைக் கிழித்து அதனுள் இருக்கும் நீருற்றை சிதறடித்தது. விழுந்த வேகத்தில் காட்டாறாக சீற்றமடைந்து கோமுகி நதியுடன் இணைந்து கொள்வதற்கு பெரும்பாய்ச்சலாய் துடித்தோடியது. தெளிந்த நீர் தடத்தின் கீழே பொன்னிறமுடைய குழைவு கற்களைக் கண்டதும் கடுக்காய் மரங்களின் நினைவுக்கு மனம் தாவியது.

திருவிருத் திக்கடுக்காய் தேகத்தில் நாளும்
வருவிரணம் போக்குமதன் வன்னம்-ஒருவிதமோ
பஞ்சவன்னம் மூவரம்பு பற்றி யிருக்குமது
விஞ்சுமலை தோற்றமுண்டாம் விள்.

என்னையுமறியாமல் உதடுகள் திருவிருத்திப் பாடல்களை முணுமுணுத்தன. அருவியை நெருங்க முடியாதவாறு அதன் எதிரில் பெரிது பெரிதான பாறைக்கற்கள். பாசி படிந்த பாறையின் திறப்பு அருவிக்கு அருகிலுள்ள வனத்திற்குள் அழைத்துச் சென்றது. அருவிச்சாரல் பெருமழையென பொழிந்து கொண்டிருந்தது. சென்றமுறை காய்ப்பு பருவமில்லாத நேரத்தில் மரங்களையும் காணமுடியாமல் வெறுங்கையோடு திரும்பினேன். இம்முறை ஏமாற்றவில்லை!

இது சரியான பருவம். அழுத்தமான மூன்று வரிகளுடன் ஐந்து நிறங்களில் மிளிரும் திருவிருத்தி கடுக்காய்கள் மரங்களை சூழ்ந்திருந்த நீரில் மிதந்து கொண்டிருந்தன. மூன்று மரங்களில் இரண்டு அருவியின் உயரத்திற்கு வளர்ந்திருந்தது, ஆகாயம் தெரியவில்லை. இன்னொரு மரத்தின் உச்சி எவ்வளவு கூர்ந்து பார்த்தாலும் தென்படவே இல்லை. இமயமலை சரிவுகளில் பார்த்த அமிர்த சேதகி மரங்கள் உயரம் குறைவானவை. திருவிருத்தி மரங்கள் ஈரத்தின் மினுமினுப்பில் கவர்ச்சி காட்டின. 

குளிரில் எனது உடல் மெல்ல நடுங்கத் துவங்கியது. நாட்டுக் கொய்யாக் காய்கள் போல் உருண்டு திரண்ட திருவிருத்தி காய்களை ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுத்து எனது முதுகுப் பையில் திணித்ததும் கைகள் உஷ்ணமாகி உடல் நடுக்கம் படிப்படியாகக் குறைந்தது.  முதுகுப் பை நிறைய சேகரித்தவுடன் பாறையிடுக்கு வழியே தவழ்ந்து அருவிக்கு முன்புறம் வந்து மரங்களை ஒருமுறை திரும்பி பார்த்தேன்…  அருவிக்கு செல்வதற்கான இடைவெளியோ வனாந்திரமோ மரங்கள் இருப்பதற்கான எந்தவொரு சுவடுகளும் தெரியவில்லை. திகைப்பாக இருந்தது.  இருப்பினும் முதுகில் சுமக்கும் திருவிருத்தியால் என்னுள் கட்டுக்கடங்காத மகிழ்ச்சி பொங்கித் தளும்பியது.

ஒரு உயரமான பாறையில் சிரமப்பட்டு ஏறி ஏதேனும் பிரேதம் கிடக்கிறதா என சுற்றும் முற்றும் நோட்டமிட்டேன். மேலேயிருந்து கிச்சாவின் குரல் கேட்டதும் கால் தடுக்கி சரிந்தேன். காட்டாற்று வெள்ளம் போல் பிரவாகமாகும் அருவி நீர் நுரைத்து பொங்கி அதனுள் என்னை மூழ்கடித்தது. அருவியின் ஆர்பரிப்பு வேகம் அதிகரித்து சூன்யதிற்குள் இழுத்து சென்ற வேகத்தில் வெளியேற்றவும் செய்தது. ஒருவாறு அருகிலிருந்த பாறையை பிடித்துக்கொண்டு எழுந்து நின்றேன். கைகளை அலைந்து ஒவ்வொரு பாறையாக பற்றிக்கொண்டு கரையேறி தரை தொட்டதும் கைகளையும் கால்களையும் மெல்ல உதறினேன். எந்தவொரு சுமையும் வலியும் அழுத்தவில்லை. மிதக்கும் மேகம் போல் உணர்ந்தேன். என்னை கீழே சாய்த்த பாறை வெகுதூரத்தில் அருவிக்கு எதிரில் மையம் கொண்டு ஆற்றை இரண்டு தடங்களாக பிரித்துக் காட்டியது. அங்கு நுரைத்துப் பொங்கும் குமிழிகளுடன் ஒரு பெண்ணின் ஆடை போல் ஏதோவொன்று தத்தளித்தபடி சுழன்றது. எனது உயிர் சிலிர்த்தடங்கியது. அசாத்தியமான விரைவுடன் மேலேறினேன்.

எனது வரவிற்காகக் காத்திருந்த கிச்சாவின் முகத்தில் பயத்தின் ரேகைகள் குறையவில்லை. மாறுபட்ட முகக்குறிகளை வெளிப்படுத்துவான் என்கிற எதிர்பார்ப்பை அலட்சியப்படுத்தினான். ‘திருவிருத்தி கிடைத்ததா…?  ஆடையின்றி பெண்ணின் பிரேதம் ஏதேனும் பார்த்தாயா…?’ ஆர்வமில்லாத ஜடம். கேள்விகளற்ற புறக்கணிப்பு…

நெடிதுயர்ந்த தான்றி மரத்தினருகில் அவன் நெருங்கி வருவதை உணர்ந்ததும் அவன் மெளனத்தை உடைத்து விடுவதற்குத் தயரானேன்.

என்ன கிச்சா, இன்னுமா பயம் போகல… களைப்பா இருக்குதா… முடியலையா… எவ்வளவு நேரம் பேசாமலே வரப்போற? நம்ம பயணம் வெற்றியடைஞ்சுடுச்சு தெரியுமா? பாதிதூரம் தாண்டிட்டோம். அதோ… காராளர்கள் நெருப்பு மூட்டுற வெளிச்சம் தெரியுது பார். இனி பயமில்லாமல் நடக்கலாம்…

கிச்சா ஒரு வார்த்தையும் பேசாமல் ஆடுகள் நடந்து சென்ற பாதையில் பாதங்களை உறுதியாக ஊன்றி கலையாத பதற்றத்துடன், அழுத்தமான மெளனத்தை சுமந்தவாறு முன்பைவிட இப்பொழுது சற்று வேகத்தைக் கூட்டி நடந்தான். காடு தனது மௌனத்தைக் கலைத்து விட்டு இரவோடு பேசத் தொடங்கியது.

*******

manjunath.author@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

5 Comments

  1. நமக்கு முன்னால் இருக்கும் உலகத்தை நினைவூட்டவதுடன் அதற்குள் நம்மையும் அழைத்துச் செல்லும் கதை. பலவிதமான வாசக சிந்தனைகளுக்கு ஏற்ப விரிவடையும் கதை. சிறப்பாக இருந்தது. வாழ்த்துகள் தோழர்.
    SaguNataraj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button