தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை – ஒரு பார்வை – ஜி.செல்வா
சாளரம் | வாசகசாலை

“நாங்க என்ன அரசாங்கத்த எதிர்த்தா போராடினோம், ஒரு தனியார் கம்பெனிய தானே எதிர்த்தோம், அதுக்காக என் பிள்ளை மேல் துப்பாக்கி குண்டுகள் ஏன் பாய்ந்தது?”
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் எழுச்சியில் பங்கேற்று துப்பாக்கி குண்டுகளுக்குப் பலியான ஸ்னோலினின் தாய் கதறலுக்கு இடையில் எழுப்பிய கேள்வி இது. இதற்கு பதில் தேடுவதன் ஊடாகத்தான், அரசின் வர்க்கத் தன்மையை, தன் சுயதேவைக்கு, வன்முறையின்வழி மக்களைக் கொன்று குவிக்கும் அதிகாரவர்க்கத்தின் கோர முகத்தைப் பார்க்க முடியும். புரிந்துகொள்ள இயலும்.
2018 மே 22ந் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டின் காரணமாக கொலையுண்டவர்கள், காயமுற்றோர் குறித்தும், ‘சட்டம் மற்றும் ஒழுங்கு’ சீர்குலைவுகளுக்கான காரணங்களை ஆராயவும் நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க 2018 மே 23ஆம் தேதி அரசு ஆணையிட்டிருந்தது. நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு நான்கு தொகுதிகளில் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை 2022 மே 18ஆம் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையின் உள்ளடக்கங்கள் ஊடகங்களில் வெளிவர ஆரம்பித்தவுடன், நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையை அரசு அதிகாரபூர்வமாக வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியிருந்தது. இச்சூழலில், சட்டமன்றத்தில் 2022 அக்டோபர் 18ஆம் தேதி நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எழுதாமல் இருப்பதையும் புரிந்துகொள்ளல்
சமகாலத்தில் இயற்கை வளங்களை மூலதனத்தின் லாப வெறிக்காக வேட்டையாடும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை எதிர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கணக்கில் சாதி, மதம் கடந்து களத்தில் ஒன்றுதிரண்டு மக்கள் நடத்திய போராட்டம் மிகுந்த முக்கியத்துவம் உடையது. ‘நூறு நாட்கள் இலக்கு’ வைத்து நடந்த போராட்டத்தின் இறுதியில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அணிதிரண்டபோது, துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியாகி எண்ணற்றோர் காயமுற்று அரசின் கொடூர அடக்குமுறையை எதிர்கொண்ட வரலாற்றைப் புரிந்துக்கொள்ள வேண்டியது சமூக மாற்றப் போராளிகளின் அடிப்படைக் கடமையாகும். இதற்கு நீதியரசர் அருணா ஜெகதீசன் அறிக்கையை வாசிப்பது உதவிபுரியும். ஒரு பிரதியில் எழுத்தாளன் சொல்லாமல் விட்டது, பேசாப்பொருள் ஆகியவற்றை ஒருவருடைய வாசிப்பு, கள அனுபவம் உருவாக்கும். அத்தகு வாசிப்பிற்கு ஒப்பானதாக அருணா ஜெகதீசன் அறிக்கையை அவதானிக்கலாம்.
உருக்கொண்ட போராட்டங்கள்
புனேயை பூர்விகமாகக் கொண்டவரும், லண்டனில் நிரந்தரமாகத் தங்கியிருந்து செயல்படுவருமான அனில் அகர்வாலின் ‘வேதாந்தா’ நிறுவனத்திற்குச் சொந்தமானது, ஸ்டெர்லைட் ஆலை. 1997ஆம் ஆண்டு சிப்காட் வளாகத்தில் மக்களின் எதிர்ப்பையும் மீறி உருவாக்கப்பட்டது, ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அயல் நாட்டிலிருந்து மூலப் பொருட்கள் / தாதுப் பொருட்கள் ஆகியவற்றை வரவழைத்து தாமிரம், தாமிர மின்னணுக்கள் முதலியவற்றை உற்பத்திசெய்வதில் முதன்மையாக ஈடுபட்டது. ஆலை உருவான எட்டு ஆண்டுகளில் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிலையம் (NEERI) உச்ச நீதிமன்றத்தில் 2005ல் தாக்கல் செய்த அறிக்கையிலும், திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவத் துறை நடத்திய கள ஆய்விலும் ஆலையைச் சுற்றி நிலத்தடி நீர் மாசுப்பட்டு இருப்பதும், பல்வேறு தொற்றுநோய்களின் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் விரிவாக, வெளிப்படையாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு நேரெதிராக, ஸ்டெர்லைட் நிறுவனமோ ஆலையின் உற்பத்தியை இரண்டு மடங்காக அதிகரிக்கும் வகையில் வீரபாண்டியபுரம் பகுதியில் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியது. தனது சட்டவிரோத ஆலை விரிவாக்கத்துக்கு மக்களிடம் கருத்தறியும் முறைமையிலிருந்து தப்பிப்பதற்காக சிப்காட் எல்லைக்குள் ஆலை இருப்பதாக அனைவரையும் நம்ப வைத்தது. நம்ப வைப்பதற்கான அனைத்துக் காரியங்களிலும் ஈடுபட்டது. ஆலையினுடைய கருத்தையே உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் ஒப்புக்கொண்டதை நீதியரசர் அருணா ஜெகதீசன் குழு சுட்டிக்காட்டி “மாண்புமிகு உச்ச நீதிமன்றம் 2013ஆம் ஆண்டு பொதுநலன் கருதி ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் இயங்கிட அனுமதித்தது” என சொல்லிச் செல்கிறது. இதில் ‘பொது நலன் என்பது வேதாந்தாவின் நலன்தான்’ என்பதை வாசிப்பவர் உணர முடியும்.

இதைத் தொடர்ந்து ஆலை கட்டுமானப் பணிகளுக்காக எல் & டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆலையின் விஷத்தன்மை தெரியாத ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிஹார், ஒடிசா மாநில தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக கொண்டுவரப்பட்டு அடிப்படைக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆழ்துளைக் குழாய்கள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு ஆலையைச் சுற்றியுள்ள 11 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. காரணம், மேற்கண்ட 11 கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 48 பேருக்கு புற்றுநோய், 49 பேருக்கு சிறுநீரக மற்றும் இதர பிரச்சினைகள், 78 பெண்களுக்கு கருக்கலைப்பு, 137 பேருக்கு ஆஸ்துமா, 100க்கும் மேற்பட்டோர் பல்வேறு தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வருவதாக அருணா ஜெகதீசன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் 2015இல் 16 பேர், 2016இல் 28 பேர், 2017 மற்றும் 2018இல் 31 பேர் பல்வேறு நோய்களால் இறந்துள்ளனர். இத்தகு காரணங்கள்தான் ஆலையின் சுற்றுவட்டார கிராமங்களை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நெடிய போராட்டத்திற்கு உந்திதள்ளியது என அருணா ஜெகதீசன் ஆணையம் குறிப்பாக எடுத்துரைத்துள்ளது.
களத்தில் மக்கள். கண்டுகொள்ளாத அதிகார வர்க்கம்
இலக்கை நோக்கி மக்களின் போராட்டங்கள் தொடர்ந்து பயணித்துக்கொண்டிருந்த வேளையில், அதிகார வர்க்கம் கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற விஷயங்களை ஆணையம் பட்டியலிட்டுக் காண்பித்துள்ளது.
முதலாவதாக, பல்வேறு கிராமங்களில் மக்கள் கூட்டாக அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக 2018 பிப்ரவரி 12ஆம் தேதி எம்.ஜி.ஆர் பூங்கா அருகில் 500க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கை எட்டும் தூரத்தில் மாவட்ட ஆட்சியர் இருந்த போதும், போராட்ட இடத்திற்கு நேரடியாக வந்து போராட்டக்காரர்களை சந்திக்காதது, அவரின் பொறுப்பிலிருந்து தவறிய செயல் என ஆணையம் குற்றம்சாட்டியுள்ளது. மக்களோடு பேசுவதற்கு மாறாக, போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தலைமை வகித்தவர்கள், நல்லெண்ணத்தோடு உதவி செய்தவர்கள் ஆகியோரை காவல்துறை வன்மத்தோடு கையாண்ட செயல்கள்தான் நிலைமையை படுமோசமாகியுள்ளது.
இரண்டாவதாக, இதே காலகட்டத்தில், காவல்துறை அனுமதியோடு சிதம்பரம் நகர் பழைய பேருந்து நிலையம் அருகில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரிய பொதுக் கூட்டத்தில் 30 ஆயிரம் மக்கள் பங்கேற்றுள்ளனர். இப்பொதுக்கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக 12,000 கடைகள், நிறுவனங்கள் கடையடைப்பு செய்துள்ளனர். குறிப்பாக, தங்களின் வாழ்வாதாரத்தைக் கூட பொருட்படுத்தாமல் 2,000 மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதையெல்லாம் குறிப்பிட்டுவிட்டு, இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் அணிதிரண்ட போதும், எந்தவிதமான அசம்பாவிதமும் மக்கள் தரப்பிலிருந்து மேற்கொள்ளப்படவில்லை என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மூன்றாவதாக, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி 44வது நாள் போராட்டம் நடந்துகொண்டிருந்த வேளையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் விதித்த நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் கடைபிடிக்காததால், மின்சாரம் துண்டிக்கப்பட்டு, ஆலையில் தாமிர தாதுப் பொருளின் உருக்கு இயக்கம் தடைசெய்யப்பட்டது. தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை மக்கள் வெளிப்படையாக அறியும் வண்ணம் எந்த அறிவிப்பையும் மாவட்ட நிர்வாகம் வெளியிடவில்லை. அதுபோலவே, மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் தனது உத்தரவின் காரணமாக ஆலை மூடப்பட்டுள்ளது என்பது குறித்து எந்த விளம்பரமும் செய்யவில்லை.
நான்காவதாக, போராட்டம் 50வது நாளை எட்டிய தருணத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். அதேநேரம் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் அபாயகரமான கழிவுகள் ஆலையைச் சுற்றியுள்ள 9 கிராமங்களில் வசிப்போர்களுக்கு சுவாசக் கோளாறுகள், புற்றுநோய், தோல் நோய்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துவதாக மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் மனு அளித்திருக்கின்றனர். 2018ஆம் ஏப்ரல் 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.
ஐந்தாவதாக, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் உறுப்பினர்கள் சார்பாக 06.05.2018, 11.05.2018 ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவது சம்பந்தமான தயாரிப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்ட விரிவான தயாரிப்புப் பணிகள் முழுமையாக அரசு நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. மேலும், இக்காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. 2018ஆம் மே 6ஆம் தேதி வி.வி.டி சிக்னல் அருகில் நடைபெற்ற போராட்டங்களையும், அங்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளின் முக்கியத்துவத்தையும் ஆணையம் சுட்டிக்காட்டுகிறது.
மேற்கண்ட அம்சங்களை மிக விரிவாக எடுத்துசொல்லும் நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம், இத்தருணங்களில் அதிகாரத்தில் இருப்போர் உரிய வகையில் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் மிகப் பெரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கும் என சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளது.
காவல்துறை, உளவுத்துறை, ஆட்சி நிர்வாகம் நிகழ்த்திய வன்முறை
போராட்டம் நூறாவது நாள் நெருங்க நெருங்க மக்களின் கொந்தளிப்பு அதிகரிப்பதை உணர்ந்து 2018 ஏப்ரல் 10 அன்று கள நிலவரத்தை விரிவாகக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல்துறையே கடிதம் அனுப்பியுள்ளது. அதன் நகல், தென்மண்டல காவல்துறை தலைவர், திருநெல்வேலி காவல் சரக துணைத் தலைவர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டது. இக்கடிதத்தை பெற்றுக்கொண்ட ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாததை ஆணையம் விமர்சனம் செய்துள்ளது. அதிலும், காவல்துறையின் கடிதத்திற்கு எவ்வித எதிர்வினையும் ஆற்றாத மாவட்ட ஆட்சியர், அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் பிரச்சினை குறித்தும், அதுதொடர்பான மக்கள் போராட்டங்கள் குறித்தும் வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பல நாட்களுக்குப் பகிர்ந்துள்ளதை ஆணைய விசாரணையில் தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்துவிட்டு, “தலைமைச் செயலாளர் இந்த பிரச்சினையை மேல் நடவடிக்கைக்காக மாண்புமிகு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்தார். அது எப்போதுமே வாக்குறுதியாகவே இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது” என அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து அன்று தமிழக அரசை இயக்கிய மையப்புள்ளியாக கிரிஜா வைத்தியநாதன் கோலோச்சியது அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்தையும், நிகழ்வையும் நுட்பமாக நுண்ணறிவுத் துறை தகவல்கள் மூலம் உள்வாங்கிய நுண்ணறிவுத் துறை ஐ.ஜி., அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சேலத்திற்கு நேரடியாகச் சென்று சந்தித்து பிரச்சினையின் வீரியத்தை விரிவாக எடுத்துரைத்துள்ளார். முதல்வருக்கு அவர் கொடுத்த ஆலோசனைகளையும் ஆணையம் பட்டியலிட்டுக் காண்பித்துள்ளது. அது போன்றே உளவுத்துறையின் தகவல்களின் பேரில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சொல்லப்பட்டுள்ளது. அதிலும் 1 லட்சம் பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும், முன்னெச்சரிக்கையாக கைது செய்ய வேண்டியவர்களின் பட்டியலையும் மாநில நுண்ணறிவுத் துறை கொடுத்துள்ளது. ஆனால், அன்றைய முதல்வர் முதற்கொண்டு மாவட்ட நிர்வாகம் வரை நுண்ணறிவுத்துறையின் குறிப்புகளை முழுமையாக நிராகரித்துள்ளனர்.
அதே வேளையில், ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி 144 தடையுத்தரவு கேட்டு உயர் நீதிமன்றத்தை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நாடியுள்ளது. நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று, நேரடியாக 144 தடையுத்தரவை பிறப்பிக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி, “ஒரு கார்பரேட் கம்பெனி எப்படி தன் விருப்பத்தை மாவட்ட நிர்வாகத்தின் மீது திணிக்க முடியும்..?” என ஆணையம் கேள்வியெழுப்பி, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையிடமிருந்து எவ்வித கருத்துக்களையும் கேட்டறியாமல் மாண்புமிகு நீதிமன்றமும் இந்த விவகாரத்தில் உத்தரவிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென்ற ஒற்றைக் கோரிக்கையை ஏந்தி ஒரு லட்சம் பேர் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாக எந்த வழியில், எந்த திசையில் வரப்போகிறார்கள் என அத்தனை தகவல்களும் வெளிப்படையாக அரசு நிர்வாக அமைப்புகளுக்கு தெரிந்துள்ளது. இதை எதிர்கொள்வதற்கு தேவையைவிடக் குறைந்த எண்ணிக்கையில் காவலர்கள், வஜ்ரா – வருண் வாகனங்கள் ஆகியன கேட்கப்பட்டிருந்தபோதும், கேட்டதைவிட குறைவாகவே அரசு தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகம் நோக்கி அலைகடலென திரண்ட மக்கள் மீது குண்டுகளை பொழிந்து சாகடிக்காமல் தடுத்து நிறுத்துவதற்கு, மக்களை கலைய வைப்பதற்கு உபயோகப்படுத்தப்படும் வஜ்ரா வாகனத்தை தேவைப்படும் இடத்தில் முறையாகப் பயன்படுத்தாத அலட்சியத்தை ஆணையம் கடுமையாக விமர்சித்துள்ளது.
மனித உயிர்களை வேட்டையாடிய அதிகார வர்க்கம்
ஆட்சியர் அலுவலக முற்றுகைப் பேரணியானது பனிமய மாதா தேவாலயம், விவிடி சிக்னல், மூணாவது மைல், எப்.சி.ஐ. ரவுண்டானா வழியாகச் செல்லும் என முன்னுணர்ந்த மாவட்ட நிர்வாகம், மக்களின் கொதிநிலை உணர்வை கவனத்தில் கொண்ட போதும், வன்முறை நடக்க வேண்டும் என்ற இலக்கோடும் செயலாற்றியுள்ளது என்பதை அறிக்கையின் பக்கங்கள் சொல்லாமல் சொல்லிச் செல்கின்றன. எனவே, அதற்கு உகந்த வகையிலேயே காவல்துறையின் செயல்பாடு அமைந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. மக்கள் திரளை எதிர்கொள்வதற்கான ஏராளமான காவல்துறை வழிகாட்டு குறிப்புகள் இருந்தபோதும், அவற்றையெல்லாம் அறிந்த, புரிந்துகொண்ட உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் அவற்றைக் கடைபிடிக்காமல் ஓடி ஒளிந்ததையும், ஆணையத்தின் முன் பொய் வாக்குமூலத்தை அள்ளித் தெளித்ததையும் ஆணையத்தின் அறிக்கையை வாசிப்பதன்வழி அறிய முடிகிறது.
ஆட்சியர் அலுவலக முற்றுகைப் பேரணியை எதிர்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட சிறப்பு நிர்வாக நடுவர்கள், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பணி செய்யாதது மட்டுமல்லாமல், உயர் அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப ஏதோ ஓரிடத்தில் இருந்துகொண்டு, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டுள்ளதாக ஆணையம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் சிறப்புக் கட்டுப்பாட்டு அறைக்கு பொறுப்பாக அதிகாரி நியமிக்கப்பட்ட போதும், அவர் செய்ய வேண்டிய பணிகளை, கையொப்பமிட வேண்டிய கோப்புகளை வேறொரு பெண் அதிகாரி மேற்கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவர் அங்கிருக்க வேண்டிய அவசியமே இல்லாத போதும், காவல்துறையின் கூற்றுக்குத் தகுந்தவாறு பொது நாட்குறிப்பை பராமரித்துள்ளதாக ஆணையம் கடுமையான விமர்சனத்தை பதிவுசெய்துள்ளது. ஆணையம் இன்னும் ஒருபடி மேலே சென்று, சம்பந்தபட்ட அந்தப் பெண் அதிகாரி, துப்பாக்கிச் சூட்டில் மக்கள் கொடூரமாக கொல்லப்படுவதற்கான நிகழ்வில் முக்கியப் பங்குவகித்த சிப்காட் காவல் ஆய்வாளரின் மனைவியென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் எரிவதற்கு முன்பாகவே, திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதை ஆணையம் மிக விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளது. குறிப்பாக, “பேரணியில் சில ஆண்கள் ரகசியமாக போராட்டக் கூட்டத்தில் நுழைந்து நாசவேலையில் ஈடுபட்டார்கள் என்றும், ஸ்டெர்லைட் நிர்வாகம் – காவல்துறையின் கூட்டுப் பங்களிப்புடன், அவர்களின் வேண்டுகோளின் பேரில், அவர்களின் நோக்கத்திற்காக செயல்பட்டுள்ளதாக சாட்சியங்கள் தெரிவித்ததாக” அறிக்கை சொல்கிறது. இவ்வாறு ‘கூலிக்கு அமர்த்தப்பட்ட குண்டர்கள்’, ‘நாசவேலையில் ஈடுபட்ட குழுவினரை’ கண்டறியுமாறு மாவட்ட காவல்துறைக்கும், சிபிஐக்கும் விசாரணை ஆணையம் வேண்டுகோள் விடுத்தும், இந்த இரண்டு அதிகார மையங்களும் மேற்கண்ட நபர்களை அடையாளம் காண இயலவில்லை என பசப்பு மொழியில் பதில் அளித்துள்ளது வெட்கக்கேடு.
உயிர் பறிப்பதையே இலக்காக்கி இயங்கிய கொடூரர்கள்
நூறாவது நாள் நிறைவையொட்டி நடைபெற்ற பேரணியில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் எவ்வித முன்னறிவிப்பும், எச்சரிக்கையும் இன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் மூன்று மனித உயிர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. இதில் தமிழரசன் என்பவர் ஓடியபோது சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கும் ஆணையம், வேறொரு இடத்தில் சிவப்புச் சட்டை அணிந்திருந்த தமிழரசன் இடதுசாரி கருத்தியலைக் கொண்டவர் என்பதால், காவல்துறை இலக்கு வைத்து அவரைச் சுட்டுக் கொன்றிருக்கலாம் என பொதுமக்கள் கருதுவதாக தெரிவிக்கிறது.
ஆட்சியர் அலுவலக வாயிலில் காவல்துறையினர் உள்ளிட்ட யாருடைய உயிருக்கோ, உடைமைக்கோ, சொத்துக்கோ எவ்விதமும் மிரட்டலும் விடுக்கப்படாத நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது குறிபார்த்து காவல்துறையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். போராட்டத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்த, கார்ப்பரேட் கம்பெனியின் கயவாளித்தனத்தை எடுத்துரைக்கும் ஜனநாயக வேள்வியில் பங்கேற்ற 20 வயது நிரம்பிய ஸ்னோலின் என்னும் இளம்பெண் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், எந்தவித வழிகாட்டு நெறிமுறைகளை இம்மியளவும் கடைபிடிக்காமல் அப்பாவி மனித உயிர்களை வேட்டையாடிய காவல்துறையின் குரூர நடவடிக்கைகளை ஆணையம் அப்படியே பதிவுசெய்துள்ளது. அதிலும், காவல்துறை உயர் அதிகாரிகள், பதவிநிலையில் தங்களைவிடக் கீழ்நிலையில் உள்ள காவலர்களைப் பயன்படுத்தி, அவர்களிடம் ஆயுதம் கொடுத்து உரிமைக்காக போராடிய மக்களைத் திட்டமிட்டு கொலைசெய்த செயல்களை விசாரணை ஆணையம் வெளிப்படையாக, விரிவாகப் பதிவுசெய்துள்ளது. மேலும், காவல்துறையின் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் மிதந்த மக்களுக்கு எவ்வித மருத்துவச் சிகிச்சையும் அளிக்கப்படாமல், ஈவு இரக்கமற்ற முறையில் அதிகார வர்க்கம் நின்றிருந்த நிலையில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், நல்லத்தம்பி மருத்துவமனை ஆகியவற்றின் ஆம்புலன்ஸ் மூலமும் இருசக்கர வாகனங்களின் உதவியோடுதான் மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர் என்ற உண்மைகளையும் பதிவுசெய்துள்ளது.
நீதியரசர் அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கை வாசிப்பானது, உரிமைக்காக களம் கண்ட மக்களின்பால் எவ்வித அக்கறையுமின்றி அரசும், அதன் அதிகார வர்க்க இயந்திரமும் அரசமைப்புச் சாசனம் உள்ளிட்ட அரசாங்க வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காமல், திட்டமிட்டு, வெறிகொண்டு, மனித உயிர்களை சுட்டுக்கொன்ற மாபாதக செயல்களை நமக்கு அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
இனி செய்ய வேண்டியவை:
- நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தால் குற்றம்சாட்டப்பட்டுள்ள அன்றைய மாவட்ட ஆட்சியர் தொடங்கி காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவரவர்களின் குற்றங்களுக்கேற்ப சட்டரீதியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்பட வேண்டும்.
- நுண்ணறிவுத்துறையின் மூலம் அனைத்து விவரங்களையும் போராட்டத்திற்கு முன்பே தெரிந்து கொண்டு, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் நலனுக்காக 14 அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கும், ஏராளமானோர் கொடூரமான காயங்களுக்கு உள்ளாக்கப்படுவதற்கும் காரணமாக இருந்த அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் மீது வழக்குப் பதிவுசெய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
- மண்ணின் வளத்தை, மக்களின் நலனை அடகுவைத்து எழுந்த ஸ்டெர்லைட் ஆலை உருவாக்கமானது ஆரம்பம் தொட்டே கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வந்துள்ளதை விசாரணை ஆணையம் குறிப்பிட்டிருந்தாலும், துப்பாக்கிச் சூட்டில் ஸ்டெர்லைட் ஆலையின் பங்கை எந்த வகையிலும் வெளிப்படுத்தாதது ஏற்கத்தக்கது அல்ல. மேலும், ஸ்டெர்லைட் ஆலையின் நலன்சார்ந்து செயல்பட்ட அரசு அதிகாரிகள், அமைப்புகள் உள்ளிட்டோர் மீதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- ஆணையம் வழிகாட்டியுள்ளபடி உரிய இழப்பீடுகள் சம்பந்தபட்ட குடும்பங்களைச் சென்றடைய வேண்டும்.
- மக்கள் தங்கள் உரிமைக்காக நடத்தும் போராட்டங்களை கொச்சைப்படுத்திப் பேசிய திரைப் பிரபலங்கள், அரசியல் இயக்கங்கள், ஊடகம் போன்றவைகள் பகிரங்கமாக மக்கள் மத்தியில் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
- மக்கள் தங்களது உரிமைக்காக நடத்தக்கூடிய போராட்டங்களை அரசு எதிர்நிலையில் நின்று அணுகாமல், ஜனநாயக நெறிமுறைகளோடு அரசமைப்பு சாசனம் வழிகாட்டியபடி அணுக வேண்டும்.

(கட்டுரையாளர் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர்)
******