இணைய இதழ்இணைய இதழ் 66நேர்காணல்கள்

“மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் ஏற்படுகிறது” – மொழிபெயர்ப்பாளர் கே.நல்லதம்பி

நேர்காணல்கள் | வாசகசாலை

கேள்விகள்; கவிஞர் வேல்கண்ணன்

1. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது வாங்கியமைக்கு வாழ்த்துகள் 
10 ஆண்டுகளுக்கு மேலாக மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டு வரும் உங்கள் மீது தற்போது விழுந்திருக்கும் இந்த வெளிச்சம் குறித்து எப்படி உணர்கிறீர்கள்?

வாழ்த்தியமைக்கு மனமார்ந்த நன்றிகள். சுமார் 10 ஆண்டுகளாக மொழிபெயர்த்து வருகிறேன். தற்போது நான் கவனத்திற்கு உள்ளாகி இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அங்கீகாரம் என்பது எல்லோரும் எதிர்பார்ப்பதுதானே. நான் அதற்கு விதிவிலக்கல்ல.

2. தமிழ், கன்னடம் இரு மொழி இலக்கியங்களிலும் பெரும் ஆர்வமும் தேடலும் உங்களிடம் இருக்கிறது. இது எப்படி சாத்தியமானது? இதன் பின்புலம் அதாவது இரு மொழி இலக்கியங்களின் மீது ஆர்வம் ஏற்பட குறிப்பான காரணம் ஏதாவது இருக்கிறதா?

நான் பிறந்து வளர்ந்தது மைசூரில். கன்னடம் படிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. 1950-60 களில் ஆரம்பத் தமிழ் கல்வி கற்க வசதிகள் இருக்கவில்லை. எங்கள் சமூகப் பெரியவர்கள் கும்பகோணத்திலிருந்து ஒரு தமிழ் ஆசிரியரை அழைத்து வந்து அவருக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து, சுமார் 40-50 பிள்ளைகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் தமிழ் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இப்படி தமிழும் கன்னடமும் கற்றேன். பிறகு கன்னட எழுத்தாளர் ஸ்ரீகாந்த் என்ற என் மூத்த நண்பர் மூலமாக மைசூரில் இருந்த சில கன்னட எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைத்தது.  அது இலக்கியத்தில் எனக்கு ஆர்வத்தைத் தூண்டி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

3. உங்களது முதல் படைப்பு,‘மொட்டு விரியும் சத்தம்’மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பைக் குறித்து?

கன்னட எழுத்தாளர் லங்கேஷின், ‘நீலூ கவனகளு’ என்ற சுமார் 1500 கவிதைகள் கொண்ட  நான்கு கவிதைத் தொகுப்புகள் இருந்தன. அவை நான்கைந்து வரிகள் கொண்ட கவிதைகள். அவற்றின் மீது எனக்கு இளம் வயதிலிருந்தே தீராத விருப்பம் இருந்தது. ஓய்வு பெற்ற பிறகு அவற்றில் சுமார் 400 கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தமிழுக்கு மொழிபெயர்த்தேன்.

4. மொழிபெயர்ப்பில் இருக்கக்கூடிய சவால்கள் என்ன? அப்படியான பல சவால்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், கடந்து வந்தும் இருப்பீர்கள் அது பற்றி… 

சுய படைப்புக்களைப் படைப்பதை விடவும் மொழிபெயர்ப்பது  மிகவும் கடினம்.
மூல எழுத்தின் கருவும், கருத்தும் சிதையாமல் மொழிபெயர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கும். மூல படைப்பின் அழகியல் கெடாமல் மொழிபெயர்க்க வேண்டும். ஒரு நிலப்பரப்பு, பண்பாடு, சமூக வாழ்வியல் போன்றவற்றை உயிர்ப்புடன் பிரதிபலிக்க வேண்டும். சொல்லாடல்கள், பழமொழிகள் போன்றவற்றை மொழிபெயர்ப்பது சிரமம். இதுபோல பல சவால்களை  எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும்.

5. ஒரு பிரதியைப் படிக்கும்போது அதனை மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எங்கிருந்து கிடைக்கிறது? எது அந்த உந்துதலைத் தருவதாக நீங்கள் நம்புகிறீர்கள்?

சில நண்பர்களும், பதிப்பாளர்களும் பரிந்துரை செய்யும் நூல்களை வாசிக்கிறேன். நானாகவும் சில நூல்களை வாங்கி வாசிக்கிறேன். கதைக் கரு, எழுத்து நடை, ஏதாவது புதுமை போன்றவை எனக்கு உந்துதலைக் கொடுக்கின்றன. முதலில் அந்த மொழிபெயர்ப்பு என் மீது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது போன்ற நூல்கள் நான் கடத்தும் மொழியில் முன்பு வந்திருக்கக் கூடாது. அதை என்னால் மொழிபெயர்க்க முடியுமா என்பதையும் கவனத்தில் கொள்கிறேன். கூடிய அளவிற்கு 200-300 பக்கங்கள் இருப்பதையே மொழிபெயர்க்க விரும்புகிறேன். அதை  மீறும் பொறுமை என்னிடம் இல்லை என்றே நினைக்கிறேன்.

6. நீங்கள் அதிகம் மெனக்கெடுவது மொழிபெயர்ப்புக்காக என்று நினைக்கிறேன். ஏனெனில் இதுவரை நேரடி படைப்பாக கன்னடத்தில் ஒரு கவிதைத் தொகுப்பு, தமிழ், கன்னடம் இரண்டிலும் ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பு  மட்டுமே வந்து இருக்கிறன. இத்தனை ஆண்டு காலம் இலக்கிய உலகில் பயணித்த உங்களுக்கு மொழிபெயர்ப்பு அளவுக்கு நேரடி படைப்புகளின் மீது ஆர்வம் குறைவாக இருக்கிறதா? அல்லது நேரமின்மையால் செய்வது இல்லையா? 

முன்பே இருக்கும் ஒரு படைப்பை வேறு மொழிக்கு கடத்த சொந்தக்  கற்பனை வளம் தேவை இல்லை. ஏனென்றால் மொழிபெயர்ப்பில் சுதந்திரம் குறைவு. மூல மொழியில் இருக்கும் அழகியலும் கருவும் சிதைந்து விடாமல் கடத்துவதில் எச்சரிக்கையாக இருந்தால் போதும். சொந்தப் படைப்புக்களில் சொல்வது  சரியா, தவறா என்ற குழப்பங்கள் இருக்கும். மிக நம்பிக்கையுடன் எழுத வேண்டிய தேவை இருக்கும். அவை என்னிடம் இன்னும் சரியாக அமையவில்லை என்றே நான் எண்ணுகிறேன். அதுமட்டுமல்ல தொடர்ந்து மொழிபெயர்ப்புப் பணிகள் வந்துகொண்டே இருப்பதாலும் நேரமின்மையும் ஒரு காரணம்.

7. மொழியின் ஆகச் சிறந்த வடிவம்தான் கவிதை என்பார்கள். உங்களது கவிதையை கன்னட மொழியில் எழுதுவதற்கு ஏதேனும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா? மொழி பற்றி உங்களின் பார்வை என்ன? 

கவிதை சிறந்த வடிவம் என்பது உண்மை. அதே போல சிக்கலான, சிரமமான வடிவமும் கூட. என் முதல் கவிதைத் தொகுப்பு கன்னடத்தில் வந்தது ஏன் என்பது எனக்கே தெரியாது. அது தானாக அமைந்துவிட்டது. “கோஷி’ஸ் கவிதைகள்”  என்ற அத்தொகுப்பு ஒரு சோதனை முயற்சி. அது 100 தொடர் கவிதைகள் நிறைந்தது. எல்லாம் நான்கைந்து வரிகளின் கவிதைகள். எனக்கு கன்னடமும் தமிழும் வருவதால் சில சமயம் என் சிந்தனை கன்னடத்தில் ஏற்படுவதும் உண்டு. அப்படி கன்னடத்தில் தோன்றியதால் அக்கவிதைத் தொகுப்பு வந்தது. அதையே தமிழில் முயற்சி செய்தேன். சரியாக அமையவில்லை. கன்னடத்தில் அமைந்த நுட்பத்தை தமிழில் ஏனோ என்னால் கொண்டுவர முடியவில்லை. அதனால் அதைத் தொடரவில்லை.

8. உங்களின் கன்னடக் கவிதைகள் இந்நாள் வரைக்கும் ஏன் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை? அப்படி ஒரு எண்ணம் உண்டா? 

“கோஷி’ஸ் கவிதைகள்” ஐ ஏன் தமிழில் கொண்டுவரவில்லை என்பதற்கான காரணம் இதற்கு முதல் கேள்வியின் விடையில் இருக்கிறது. கவனிக்கவும்.

9. நேரடிப் படைப்புகள் தொடர்ந்து எழுதுவீர்களா? அது குறித்து எதிர்காலத் திட்டம் என்ன? (நாவலா, சிறுகதையா, கவிதையா?) 

எல்லா மொழிபெயர்ப்பாளனும் சாதரணமாக நினைப்பது நேரடியாக எழுத வேண்டும் என்பது. எனக்கும் அந்த விருப்பம் உண்டு. ஒரு நாவல் எழுத முயன்று கொண்டிருக்கிறேன். சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமான வடிவம். சிறுகதைகளையும் முயல வேண்டும். சில சிறுகதைகள் பாதியிலேயே நிற்கின்றன.

10. தமிழ் இலக்கியச் சூழல், கன்னட இலக்கியச் சூழல்  ஆகியவற்றின் தற்போதைய நிலை என்ன? எங்கு வாசகர்களுக்கு புரிதல் அதிகம் என்று நினைக்கிறீர்கள்?

தமிழ், கன்னடம் இரண்டிலும் அதற்கே உரிய சூழல்கள் உள்ளன. அது அந்தந்த மக்களின் சமூகச் சூழல், பண்பாடு, அரசியல் ஆகியவற்றைப் பொருத்தது. இரண்டிலும் அவற்றுக்கே உரிய சிறப்புகள் இருக்கின்றன.  வாசகர்களுக்கு எப்போதும்  புரிதல் அதிகம். அதில் கன்னடம், தமிழ், மற்ற மொழிகள் என்று எந்தப் பாகுபாடும் கிடையாது.

11. நீங்கள், இரண்டு மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர், மேலும் தொடர்ந்து இயங்கி கொண்டிருப்பவர் என்பதால் இந்த கேள்வியைக் கேட்கிறேன். பொதுவாக ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அப்படி இவ்விரண்டு மொழிகளின் தனித்தன்மை குறித்துச் சொல்ல முடியுமா? இரண்டு மொழிகளுக்கும் ஒற்றுமை, மாறுபாடு எனக் கருதுவது எது?

எனக்கு இரண்டு மொழிகளும் தெரியும். தேர்ச்சி பெற்றவன் என்று சொல்லிவிட முடியாது. எல்லா மொழிகளுக்கும் அதற்கே உரிய தனித்தன்மைகள் உண்டு. சொல்லாடல்கள், பழமொழிகள், வாக்கிய அமைப்புகள் போன்றவை. சாதாரணமாக தமிழ் கதைகளில் நாம் அப்பா அம்மாவை பன்மையில் அழைப்பது வழக்கம். (தமிழில் அம்மாவையாவது சில சமயம் ஒருமையில் குறிப்பார்கள். அப்பாவைக் கண்டிப்பாகக் கிடையாது என்று நினைக்கிறேன்)  கன்னடத்தில் அது குறைவு. அவர்கள் ஒருமையில் அழைப்பது பரவலாகத் தெரியும். பல சொற்களுக்கு இடையே இரு மொழிகளிலும் பொருத்தங்கள் இருக்கின்றன. சில சமயம் ஒரே சொல் மாறுபட்ட பொருளைக் கொடுக்கும். எடுத்துக்காட்டிற்கு,‘இடைவெளி’ என்றால் Interval, Gap என்ற பொருள்கள் உண்டு. கன்னடத்தில், ‘விராம’  என்றால் ஓய்வு என்ற பொருள் மட்டுமே உண்டு. மொழிபெயர்க்கும்போது, குறிப்பாகத் தமிழிலிருந்து கன்னடத்திற்கு, இது எந்தப் பொருளில் சொல்லப்படுகிறது என்பதை வாக்கிய அமைப்பைக் கொண்டு புரிந்து மொழிபெயர்க்க வேண்டும். அதேபோல பல சொற்கள் இருக்கின்றன. பழமொழிகளை மொழிபெயர்ப்பது மிகச் சிரமம். அதே பொருள் தரும்  பழமொழியைக் கடத்தும் மொழியில் தேடவேண்டும். இப்படி பல சிக்கல்களும், சிரமங்களும் உண்டு. மொழிபெயர்ப்பாளன் அவற்றை மிக எச்சரிக்கையுடன் கையாள வேண்டி இருக்கும்.

12. நீங்கள், தமிழிலிருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்த்ததை விட கன்னடத்திலிருந்து தமிழுக்கு  மொழிபெயர்த்தது குறைவு. இதற்கு காரணம் என்ன? தமிழில் இலக்கியம் செழுமையாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

தவறு. நான் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததுதான் அதிகம். கன்னடத்திலிருந்து தமிழுக்கு 21 நூல்களும், தமிழிலிருந்து கன்னடத்திற்கு 13 நூல்களும் மொழிபெயர்த்துள்ளேன். இரு மொழிகளுக்கும் அவற்றுக்கே உரிய இலக்கியச் சிறப்புகளும், செழுமையும் உண்டு.

13. ஒரு சமயத்தில் உலக மற்றும் தேசியக் கண்காட்சிகளில் உங்களின் ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஒளிப்படங்கள் மீது உங்களுக்கு ஆர்வம் எப்படி வந்தது? அது குறித்த அனுபவம்… தொடர்ந்து அதில் ஈடுபட்டு உள்ளதா? உங்களது படைப்புகளில் அதனுடைய தாக்கம் என்ன?

நான் சினிமா இயக்குநர் ஆகவேண்டும் என்று ஒரு காலத்தில் விரும்பியது உண்டு. பல முயற்சிகளுக்குப் பிறகும், என் வாழ்க்கைப் பாதை மாறியதாலும் அது நிறைவேறவில்லை. விரும்பியது நடக்காமல் போன வருத்தம் இருந்தாலும், வந்ததை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை சாதாரணமாக வாழ்க்கை கற்பிக்கும். அது எனக்கும் நடந்தது. நான் ஹைதராபாதில் இருந்தபோது எட்வர்ட் என்ற ஆங்கிலோ இந்தியர் எனக்கு புகைப்படக் கலையைக் கற்றுக் கொடுத்தார். இன்றும் எனக்கு அது முதல் காதல். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமராவும் கையுமாக அலைவது இன்றும் தொடர்கிறது. ஆனால் கண்காட்சிகளிலும், போட்டிகளிலும் இப்போது கலந்துகொள்வதில்லை. எழுதும்போது அதன் தாக்கம் இருப்பதாகவே நினைக்கிறேன். எழுத்துகளை எளிதாக காட்சிப்படுத்திப் பார்க்க உதவுகிறது.

14. கார்நாடகம் பொதுவாக பல்வேறு கலாச்சாரங்கள், பண்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மாநிலம். உதராணமாக, கன்னடியர்கள், மராட்டிய மக்கள், துளு தாய்மொழியாக கொண்ட மக்கள், தமிழர்கள் என்று பலவாறு சொல்லலாம். அப்படி பன்முகத்தன்மை கொண்ட  மாநில மக்களிடம் கலை இலக்கியம் என்னவாக இருக்கிறது, வெளிப்படுகிறது?

நீங்கள் கூறியது போல கர்நாடகாவில் பல பண்பாடுகள் இருப்பதால் அவற்றின் தாக்கம் கன்னட எழுத்துகளிலும், கலைகளிலும் தென்படுகின்றன. பல கலாச்சாரங்களை பின்னணியாகக் கொண்ட நாடகங்களும், சினிமாக்களும் கன்னடத்தில் வருகின்றன. அதேபோல சிறுகதை, நாவல்களும் உண்டு. கர்நாடகாவில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்கள் கன்னடப் பின்னணியிலோ அல்லது கன்னடப் பண்பாட்டின் சில தாக்கங்களுடனோ எழுதுகிறார்கள். பாவண்ணன், தமிழவன்,  விட்டல் ராவ், சகாதேவன், கண்மணி  போன்றவர்கள் இருக்கிறார்கள்.  நஞ்சுண்டன், சுஜாதா போன்றவர்கள் இருந்தார்கள்.  இவை எனக்கு உடனே நினைவிற்கு வரும் பெயர்கள். இன்னும் பலர் இருக்கிறார்கள். மொழிபெயர்ப்பாளர்களான மலர்விழி, ஜெயலலிதா, செல்வகுமாரி, ஜெயந்தி போன்றவர்கள் பெங்களூரில் வசிக்கிறார்கள். அதே போல பல மலையாள, கன்னட மொழிபெயர்ப்பாளர்களும் கர்நாடகாவில் வசிக்கிறார்கள்.

15. மொழிபெயர்ப்பினால் கலாசாரப் புரிதல் இருமொழி பேசுவோரிடையே ஏற்படும் எனக் கருதுகிறீர்களா? அவ்வாறு கருதினால் அதற்கான உரிய வழியாக எதனைக் கொள்வீர்கள் (கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை)?

கண்டிப்பாக கலாச்சாரப் புரிதல் ஏற்படுகிறது. முக்கியமாக சிறுகதை, நாவல்களை உரிய வழியாகக் கூறலாம். தமிழ் சினிமாக்களை கன்னடர்கள் விரும்பிப் பார்க்கிறார்கள். தமிழ் சினிமா பாடல்களைப் பல கன்னடர்கள் முணுமுணுக்கிறார்கள்.

அதிக மொழிபெயர்ப்பாளர்களின் அவசியம் எல்லா மொழிகளிலும் இருக்கிறது. அதற்கு பதிப்பாளர்களும், அரசாங்கமும், பல்கலைக் கழகங்களும்  ஊக்குவிக்க வேண்டும் என்பது என் பணிவான கருத்து.

******

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button