இணைய இதழ்இணைய இதழ் 100கட்டுரைகள்

உலக நாயகனின் சண்டைக்கலை உத்திகள் – அபுல் கலாம் ஆசாத்

கட்டுரை | வாசகசாலை

ஆண்டு 1976, அன்றைய காலகட்டத்தின் தமிழ்த் திரைப்பட சண்டைக் காட்சிகளின் உச்சமாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் மான் கொம்புச் சண்டை உழைக்கும் கரங்களில் இடம்பெற்றது. உத்திகளும், காட்சியமைப்பும், படப்பிடிப்பும், எம்.ஜி.ஆர். + ஷியாம் சுந்தர் (சண்டைப் பயிற்சி) கூட்டணியின் வழக்கமான விறுவிறுப்புடன் ரசிகர்களை மகிழ்வித்தன. பழமையைக் கொண்டாடும் வகையில் சிலம்பம், மான் கொம்பு, வாட்போர், சுருள் கத்தி, பழைய மற்போர் எனவும், ஜூடோ, நவீன மற்போர், குத்துச்சண்டை என அவ்வப்போது சமகால சண்டைக்கலை உத்திகளையும் தன் திரைப்படங்களில் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டுவந்தார்.

குங்ஃபூ + கராத்தே வகை சண்டைக்கலையில் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த புரூஸ்லீயின் எண்டர் த டிராகன் திரைப்படத்தை எம்.ஜி.ஆர். அவர்கள் வியந்து பாராட்டிப் பார்த்ததற்கான குறிப்புகள் காணக்கிடைத்தாலும், சீன ஜப்பானிய சண்டைக்கலைகளின் தாக்கம் தமிழ்த் திரைப்படங்களில் வந்தபோது தமிழ்த் திரையிலிருந்து எம்.ஜி.ஆர். அவர்கள் விலகியிருந்தார். அதனால், எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் குங்ஃபூ + கராத்தே வகை சண்டைக்காட்சிகள் இடம்பெறவில்லை.

அந்தக் குறையைப் போக்கும் விதமாக உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் சண்டைக்காட்சிகள் தமிழ்த் திரையில் இடம்பெற்றன. உழைக்கும் கரங்களில் எம்.ஜி.ஆரின் மான்கொம்புச் சண்டை உத்தியை ரசிகர்கள் கண்ட ஆண்டுக்கு அடுத்த ஆண்டு, 1977இல் அன்றைய இளைஞர்களை ஈர்க்கும் விதமாக கராத்தே பாணியில் சண்டைக்காட்சிகள் ஆடு புலி ஆட்டம் திரைப்படத்தில் பிரமாதமாக அமைக்கப்பட்டன. சண்டைப்பயிற்சி: கிருபா.

ஆடு புலி ஆட்டத்தில் உணவு விடுதியில் நடக்கும் சண்டைக்காட்சி முழுதும் கராத்தே பாணியில் அமைக்கப்பட்டிருந்தது. கராத்தேயின் அடிப்படைக் கால் உதைகளான முன்பக்க உதை (ஃப்ரண்ட் கிக்), பக்கவாட்டு உதை (சைடு கிக்) இவ்விரண்டும், பறந்தடிக்கும் உதையும் (ஃப்ளையிங் கிக்) கமலஹாசனால் அனாயாசமாகச் செய்துகாட்டப்பட்டன.

சண்டைக்காட்சிகளில் மட்டுமல்லாது கராத்தேயின் சில நகர்வுகளை, வீச்சுகளை நடனத்திலும் பொருத்தமாகப் புகுத்தி கமலஹாசன் தன் ரசிகர்களை மகிழ்வித்தார்.

நேரடியாக நடனங்களில் சண்டையை அமைப்பது ஒருவகை. அரச கட்டளை திரைப்படத்தில் ‘ஆடப் பிறந்தவளே ஆடி வா’ என்னும் பாடல் எம்.ஜி.ஆருக்கு அப்படி அமைந்தது. அதன் சண்டைப் பயிற்சியாளர் ஷியாம் சுந்தர். போலவே, எங்க பாப்பா திரைப்படத்தில் ரவிச்சந்திரனுக்கு ‘நான் போட்டால் தெரியும் போடு’ பாடல் சண்டைக்காட்சிகளுடன் அமைந்தது. இவ்விரண்டைப் போல் அல்லாமல், கமலஹாசன், இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படத்தில் ‘என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு’ பாடலில் கராத்தே நகர்வுகளைப் பாடலின் நடனத்தோடு இணைத்திருந்தார். சட்டம் என் கையில் திரைப்படத்தின் ‘சொர்க்கம் மதுவிலே’ பாடலிலும் நடன அசைவுகள் ஒன்றிரண்டு கராத்தேயின் வீச்சுகளைப் போல இருக்கும்.

சகலகலா வல்லவனின் ‘இளமை இதோ இதோ’ பாடலிலும் ‘கம்பெடுத்து ஆடுவேன் கத்திச்சண்டை போடுவேன் குத்துவதில் சூரன் நான் குஸ்திகளின் வீரன் நான்’ வரிகளுக்கான அபிநயம் சண்டைக்காட்சி நகர்வுகள்தான். தேடி வந்த மாப்பிள்ளையில் ‘சொர்க்கத்தைத் தேடுவோம்’ பாடலின் இடையில் வரும் ‘எவரோடும் நான் போராடுவேன்’ என்னும் வரிகளுக்கு மட்டும் எம்.ஜி.ஆருக்கும் சண்டைக்காட்சியின் அடிப்படையில்தான் நடனத்தை அமைத்திருந்தனர்.

இரட்டை வேடச் சண்டைக்காட்சிகளில் இரண்டு கதாபாத்திரங்களின் தன்மைக்கும் ஏற்றபடி சண்டையிடும் தோரணையில் வேறுபாட்டைக் காட்டுவதில் எம்.ஜி.ஆர். வல்லவர். முரடனாக இருக்கும் நாயகனும், நளினமாக இருக்கும் நாயகனும் சண்டையிடும் காட்சி எம்.ஜி.ஆரின் நீரும் நெருப்பும் திரைப்படத்தில் உண்டு. எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமையும் என்றபோதிலும் முரடனாக இருக்கும் கதாபாத்திரத்தின் வாள்வீச்சுகள் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப ஆவேசமாகவும், நளினமாக இருக்கும் நாயகனின் வாள்வீச்சுகளில் வசீகரமும் நேர்த்தியும் முகத்தில் தவழும் புன்னகையுமாக வேறுபாடு தெளிவாகக் காட்டப்பட்டிருக்கும்.

மேற்சொன்ன ‘சட்டம் என் கையில்’ திரைப்படத்தில் கமலஹாசனும் அப்படியான கதாபாத்திர வேறுபாட்டைச் சண்டைக்காட்சியிலும் செய்துகாட்டியிருப்பார்.

நாகரீகச் சூழலில் வளர்ந்த கமலின் (பாபு) சண்டை நகர்வுகளில் கராத்தே பாணியைக் கலந்து வீச்சுகள் நளினமாகவும், சில வீச்சுகளுக்குப் பிறகு தோளை குலுக்குவதுமாகச் சண்டைக்காட்சி வசீகரமாக இருக்கும். அதே நேரத்தில் ரத்தினத்தின் (சென்னையர் கமல்) சண்டைக்காட்சிகளில் கராத்தே நுட்பம் இருப்பினும் அதில் முரட்டு அடிப்பரபரப்பு சேர்க்கப்பட்டு விறுவிறுப்பாக இருக்கும். அந்த நிமிடத்தில் திரையில் சண்டையிடுவது நாகரீகக் கமலா? சென்னையர் கமலா? என்னும் குழப்பம் ரசிகனுக்கு இல்லாத அளவுக்கு சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும்.

விஸ்வரூபம் திரைப்படம் வெளியான காலகட்டத்தில் இருந்த தொழில்நுட்பம் சட்டம் என் கையில் வெளியான காலகட்டத்தில் இருந்திருப்பின், கடைசிச் சண்டையின் போது படபடவென எதிரி வீசும் குத்துகளைத் தடுத்து நொடிப்பிளவில் தன் தலையில் இருக்கும் தொப்பியை எதிரியின் தலையில் வைத்து எதிரியைத் தள்ளிவிடும் பரபரப்பான காட்சி சண்டைக்காட்சியின் இடையே வந்து சென்ற நகைச்சுவைத் துண்டாக அல்லாமல், தாக்குதல் + தடுப்பு சண்டைப் பாடத்தை ரசிகர்களுக்கு நடத்தியிருக்கக்கூடும். சட்டம் என் கையிலுக்கும் சண்டைப்பயிற்சியாளர் கிருபாதான்.

கராத்தே தனக்குத் தெரியும் என ஒரு கதாபாத்திரத்தின் மூலமாக உலக நாயகன் அறிவித்த படம் மீண்டும் கோகிலா. கதைப்படி வழக்கறிஞராக இருக்கும் அவரை கராத்தேப் போட்டி ஒன்றில் விருந்தினராக அழைக்க, அங்கு கராத்தே வித்தையை அவர் செய்துகாட்டி ‘அடியேனுக்கும் கராத்தே தெரியும்’ என்று வசனம் பேசுவார்.

அன்றைய கமலின் கராத்தே வகை சண்டைக்காட்சிகளின் உச்சமாக எனக்குள் ஒருவனைச் சொல்லலாம். அதன் சண்டைப் பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன். நேபாளத்தில் நடக்கும் கராத்தே போட்டியில் குங்ஃபூ, கராத்தேயின் கலவையாக ஒற்றைக்கு ஒற்றை நடக்கும் சண்டையும், பிறகு மலைப்பிரதேசப் புல்வெளியில் நடக்கும் சண்டையும் நீண்ட சண்டைக்காட்சிகள். மலைப்பிரதேசப் புல்வெளியில் நடக்கும் சண்டையில் சில நொடிகள் வாள் வீச்சும் இடம்பெறும். அந்த வாள் வீச்சு எம்.ஜி.ஆர். பாணி வாள் வீச்சாக அல்லாமல், ஜப்பானிய நிஞ்சா வகை வாள்வீச்சாக அமைக்கப்பட்டது. சில நொடிகளே வரும் அந்த வாள்வீச்சிலிலும் வாளை உள்ளங்கையில் பிடிக்கும் உத்தியைச் செய்துகாட்டியிருப்பார்கள்.

புன்னகை மன்னனில் ‘மாமாவுக்குக் குடுமா’ பாடலில் பீப்பாய் உருளஉருள அதன் மேல் நடக்கும் காட்சி நகைச்சுவையாகப் படமாக்கப்பட்டது அல்லவா, எனக்குள் ஒருவன் சண்டைக்காட்சியில் பீப்பாய் உருள்வதும், அதன் மேல் கமல் அனாயாசமாக நடப்பதும், அதில் இருந்தபடி சண்டையிடுவதும் சண்டைக் காட்சிக்காக அமைக்கப்பட்டன. சண்டையோ, நகைச்சுவையோ உருளும் பீப்பாயின் மீது ‘டூப்’ இல்லாமல் நின்று சாகசம் செய்தவர் கமலஹாசன்.

அதே சண்டையில் இன்னும் ஒரு முக்கியமான நகர்வாக ‘அனுமார் தோப்புக்கரணம்’ (Hanuman Baithak, Desi Squats) அமைக்கப்பட்டிருக்கும். ரிக்ஷாக்காரனில் சுருள்கத்தி வீசும்போது இப்படிக் காலை மடக்கி மடக்கி முட்டிபோட்டு அமர்ந்தெழுந்து அனுமார் தோப்புக்கரணம் இட்டபடி வீசுவார். அதற்குப் பின் தெளிவாக அப்படி ‘அனுமார் தோப்புக்கரணம்’ அமைந்தது கமலஹாசனுக்கு எனக்குள் ஒருவனில் இருக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், அந்தச் சண்டையில் ‘குளோஸ் ரேஞ்ச் அட்டாக்’குகள் எனப்படும் நெருக்கத் தாக்குதல் வகைகளில் முழங்கை அட்டகாசமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும். இளைஞர்களுக்கு நெருக்கத் தாக்குதல் சண்டைக்காட்சிகளைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால்,

அ.

தனுஷ் அவர்களின் மின்தூக்கிச் சண்டையைச் சொல்லலாம். திரைப்படம்: என்னை நோக்கிப் பாயும் தோட்டா, சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சில்வா.

ஆ.

பட்டாஸ் திரைப்படத்தில் தனுஷ் தன்னை உணரும் சண்டையான கராஜில் நடக்கும் சண்டையிலும் நெருக்கத் தாக்குதல்களில் முழங்கைகளின் பயன்பாட்டைக் காணலாம். சண்டைப்பயிற்சி: திலீப் சுப்பராயன்.

இ.

தெறியில் மழைச்சண்டையில் விஜய் அவர்களுக்கும் நுட்பமான முழங்கைத் தாக்குதல்கள் உள்ளன. சண்டைப்பயிற்சி: திலீப் சுப்பராயன்.

ஈ.

நெருக்கத் தாக்குதல் இடம் பெற்ற சண்டைக்காட்சிகளில் சிறந்ததாக ‘ஐபி மேன் 3’ இல் இடம்பெற்ற மின்தூக்கிச் சண்டையைச் சொல்லலாம். சண்டை தொடங்கிய சிறிது நேரத்தில் மோதுபவர்கள் இருவரும் மின்தூக்கியிலிருந்து வெளியே வந்து படிகளில் சண்டையைத் தொடர்வார்கள், அப்போது நெருக்கத் தாக்குதல்கள் மட்டுமன்றி சீனச்சண்டைக்கலை ‘விங்க் சுன்’ தாக்குதல்கள் இடம்பெறும் எனினும், மின்தூக்கிக்குள் நடக்கும் அந்தக் குறைந்த நேரச் சண்டையால் இந்த முழுச்சண்டையும் ரசிகர்களால் லிஃப்ட் ஃபைட் என்றே அழைக்கப்படுகிறது.

உ.

தமிழில் மின்தூக்கிக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகளின் முன்னோடி, வெற்றி விழாவில் இடம்பெற்ற சண்டை. கமலஹாசன் – விக்ரம் தர்மா மோதிக்கொள்ளும் காட்சி. வெற்றி விழாவில் கமலஹாசன் – விக்ரம் தர்மா சண்டைக்காட்சி சில நொடிகளே திரைப்படத்தில் வந்து சென்றாலும் விறுவிறுப்பிலும் உத்திகளிலிலும் இயல்பாக நடக்கும் சண்டையை ஒத்திருக்கும்.

விக்ரம் தர்மா, தர்மசீலன் என்னும் இயற்பெயர் கொண்டவர். இரண்டாம் தலைமுறை சண்டைக் கலைஞர். இவருடைய தந்தையார் ஆர். என். நம்பியார் அவர்கள் எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்கு சண்டைப் பயிற்சியாளராகப் பணிபுரிந்தவர். குறிப்பாக, நாடோடி மன்னனின் சண்டைப் பயிற்சியாளர். கமலஹாசனுடன் விக்ரமில் பணியாற்றிய பிறகு தர்மசீலன் என்னும் தர்மாவின் பெயருடன் விக்ரம் இணைந்துகொண்டது.

விக்ரம் தர்மா + கமலஹாசன் சண்டைக் காட்சிக் கூட்டணியை எம்.ஜி.ஆர். + ஷியாம் சுந்தர் கூட்டணியுடன் ஒப்பிட்டுச் சொல்லலாம். 2006இல் தன்னுடைய ஐம்பதாவது வயதில் விக்ரம் தர்மா மாரடைப்பால் இறந்திருக்கவில்லையெனில் இன்னும் சில சிறப்பான சண்டைக்காட்சிகளை நாம் இந்தியத் திரையில் பார்த்திருக்கக்கூடும்.

ஹாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்ற சண்டைக்காட்சிகளில் வன்முறை அதிகமாக வெளிப்பட்டதைத் தொடர்ந்து இந்தியத் திரையிலும் சண்டைக் காட்சிகள் ரத்தக்களறியாயின. அதற்கு முன்பு இந்தியத் திரையில் ரத்தக்களறிக் காட்சிகள் குறிப்பாலேயே உணர்த்தப்பட்டன.

எடுத்துக்காட்டாக, ‘ஷோலே’ இந்தித் திரைப்படத்தின் கதைக்களனில் முக்கியமானது டாகூர் பாத்திரத்தின் கைகளை கப்பர் சிங் வில்லன் பாத்திரம் வெட்டிவிடுவது. வெட்டுவதற்கு முன்னும் பின்னும் அமைக்கப்பட்டிருந்த உணர்வுமயமான காட்சியமைப்பும் இசையும் ரசிகர்களுக்கு டாகூரின் மிரட்சியைக் கடத்தி, கப்பர் சிங்கின் மேல் தீராத கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கின. இன்றைய காலகட்டமாக இருந்திருப்பின் டாகூரின் உடலிலிருந்து கைகள் வெட்டப்பட்டுக் குருதி கொப்பளிப்பதை ‘குளோசப்’பில் காட்டிப் பின் தணிக்கையால் மொசைக் அடிக்கப்பட்டு வெளியாகியிருக்கலாம்.

நாயகன் திரைப்படத்திலும் பிரதீப் சக்தியை (காவலர்) கமலஹாசன் சாய்தளத்தில் கிடத்தி சம்மட்டியால் தலையில் அடிப்பதைக் காட்சியாகக் காட்டியிருக்க மாட்டார்கள். ஆக்ரோஷம் பொங்க கமலஹாசன் சம்மட்டியை வீசுவதையும், சம்மட்டியை எடுப்பதையும், குருதி தோய்ந்த சம்மட்டியுடன் அவர் நடக்கையில் பிரதீப் சக்தியை மங்கியபடி காட்டிக் கதையை முடித்திருப்பார்கள். நாயகனின் சண்டைப்பயிற்சியாளர்: சூப்பர் சுப்பராயன்.

இன்றைய காலகட்டத்தில் நாயகன் திரையாக்கப்பட்டிருந்தால் ஒருவேளை சிதிலமடைந்த காவலரின் முகம் குளோசப்பில் காட்டப்பட்டிருக்கலாம்.

யாரையும் குறை சொல்வதற்கில்லை. சாமுராய் வகை ஜப்பானிய சண்டைக் காட்சிகளிலும், கில் பில் வகை அதிரடி வாட்போர்களிலும் வெட்டிக்கொண்டு மாள்வதை குளோசப்பில் குருதியும் சதையுமாக ரசிகர்களுக்குக் காட்டிப் பழக்கப்படுத்தியிருக்கையில், இந்தியத் திரைப்படங்களில் மட்டும் குருதி பொங்காமலிருப்பதை ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள்?

பகடை பன்னிரண்டு, எனக்குள் ஒருவன், காக்கிச்சட்டை, விக்ரம், நாயகன், சத்யா என வரிசையாக சண்டைக்காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை முடித்துவிட்டு, தேவர் மகனில் சிலம்பத்தைக் கையில் எடுத்தது தமிழ்த் திரைப்பட சண்டைக்காட்சிகளில் உலக நாயகனுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுத்தது.

தேவர் மகனுக்குப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சகலகலா வல்லவனில் கமல் செடிகுச்சியைக் கையில் எடுத்தார். செடிகுச்சியானது சிலம்பத்தை விட அளவில் சிறியதாகவும் இரண்டு கைகளிலும் குச்சிகளைப் பிடித்துக்கொண்டு வீசுவதாக இருக்கும். சகலகலா வல்லவனில் பாரம்பரிய செடிகுச்சி சுழற்சியும், அதில் கொஞ்சம் சீன ஜப்பானிய கம்புப் பிடிகளின் பாணியில் சில கம்புப்பிடிகளையும் இணைத்து, அதனுடன் அதிவேகமாக ஒற்றைக்கையில் செடிகுச்சி சுழற்றுவதையும் இணைத்து ரகளையான கலவையாக்கியிருப்பார், சண்டைப்பயிற்சியாளர் ஜூடோ ரத்தினம்.

ஜாக்கி சானின் வரவுக்குப் பின் வரிசையாக சென்னைக்கு இறக்குமதியான சீனப் பின்னணி சண்டைப்படங்களில் நகைச்சுவை கலந்த சண்டைக் காட்சிகளும், கையில் கிடைக்கும் அறைக்கலன்கள் அனைத்தையும் ஆயுதமாக்கும் சண்டைக்காட்சிகளும் இடம்பெற்றன. அவற்றையும் தமிழ்த் திரைப்படங்கள் தங்கள் சண்டைக்காட்சிகளில் தழுவிக்கொண்டன.

தூங்காதே தம்பி தூங்காதேயிலும் அறைக்கலன்கள் (ஃபர்னிச்சர்ஸ்) அனைத்தையும் பயன்படுத்தி எதிரியைத் தாக்கும் சண்டைக்காட்சியை ஜூடோ ரத்தினம் உலக நாயகனுக்கு அமைத்திருப்பார். முதலில் எதிரியின் தாக்குதலைப் புத்தகத்தால் தடுப்பதாகக் கைகலப்பு தொடங்கும், பிறகு அறையில் ரிமோட்டால் நகரும் கட்டில், திரைச்சீலை என ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி எதிரியை நிலைகுலையச் செய்யும் சண்டை அமைப்பு. இதில் சரவிளக்காகத் தொங்கும் பிளாஸ்டிக் குண்டுகளைக் கூரையிலிருந்து உருவிக்கொண்டு அதைச் சுருள்கத்தியைப் போல் வீசி எதிரியைத் தொலைவிலிருந்து தாக்குவதும், பின்னர் அதே குண்டுகளைக் கையில் பிடித்துக்கொண்டு சீன ஜப்பானியப் பாணியில் எதிரியைத் தாக்குவதும் இந்தச் சண்டையில் அமைக்கப்பட்டன.

தேவர் மகன் சிலம்பச்சண்டைக்குப் பின், சண்டைக்காட்சியும் பாடலும் இணைந்து இடம்பெற்ற வரிசையில் ‘சாந்துப்பொட்டு சந்தனப் பொட்டு’ நிலையான இடத்தைப் பிடித்துக்கொண்டது. பாடலும் சண்டையும் இணையும் பாடல் ‘ஆடப் பிறந்தவளே ஆடி வா’ (அரசகட்டளை) நினைவுக்கு வந்தால், அந்த வகைப் பாடலில் சாந்துப்பொட்டு சந்தனப்பொட்டும் நினைவுக்கு வந்தது.

சிலம்பக்கலை நுட்பத்தின் அடிப்படையில் தேவர் மகனின் சண்டைக் காட்சி தொடக்கத்தில் சிலா வரிசையிலிருந்து தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக சண்டைப் பாடத்தின் வியூகங்களுக்குச் சென்று வீச்சுகளில் முடியும். நேருக்கு நேர் மோதல் முடிந்த பின்னர், குழுச்சண்டையில் நடுவில் நின்று வீடு கட்டி அடித்து எதிரிகளைத் துரத்துவது நிகழும். தேவர் மகனின் சிலம்பச் சண்டைப் பாட வியூகங்களைப் பார்க்கையில் தாயைக் காத்த தனயனில் எம்.ஜி.ஆரும், தேவரும் மோதிக்கொள்ளும் சிலம்பச்சண்டை நினைவுக்கு வரும். போலவே, நடுவில் நின்று வீடு கட்டி அடிக்கும் காட்சி எம்.ஜி.ஆரின் படகோட்டியையும், அன்னமிட்ட கையையும், உரிமைக்குரலையும் நினைவுபடுத்தும்.

சிலம்பச்சண்டையில் தன்னுடைய முன்னோடி எம்.ஜி.ஆர். சாதித்துக் காட்டிச் சென்ற பின்னர், அதன் தொடர்ச்சியாக அதே சண்டைக் கலையை ரசிகர்களுக்குப் புதிய கோணத்தில் துணிந்து அளித்து, வெற்றியும் பாராட்டும் பெற்ற கமலஹாசனின் சண்டைக்கலைத் திறன் வெகுவாகப் பாராட்டத்தக்கது.

கமலஹாசன் அவர்களின் நகைச்சுவைத் துணுக்குகளில் நொடி அசந்தாலும் ஒரு நல்ல நகைச்சுவையைத் தவறவிடும் வாய்ப்பு உள்ளதைப் போலவே, அவருடைய சண்டைக் காட்சிகளிலும் சில நுட்பங்கள் நொடி அசந்தாலும் நம்மைவிட்டுவிட்டுக் கடந்துவிடும்.

‘நம்மவர்’ திரைப்படத்தில் எதிரிகள் கூட்டமாகத் தாக்கவரும்போது அவசரமாகக் கடைக்குச் சென்று பிளேடு வாங்குவார். பிளேடுகளை உடைத்து விரல்களுக்கு இடையில் வைத்துக் கட்டிக்கொண்டு அவற்றைப் புலி நகங்களைப் போலப் பயன்படுத்தி எதிரிகளின் உடலில் கீறல் போடுவார். இந்தக் காட்சிக்குத் திரையில் பெரிதாக எந்த விளக்கமும் நீண்ட நேர குளோசப்போ, ஸ்லோமோஷன் வகையறாக்களோ இருக்காது. ரசிகன்தான் அந்த உத்தியை நொடியில் உள்வாங்கி ரசிக்கவேண்டும்.

போலவே கலைஞனில் எதிரி துப்பாக்கியை நீட்டும்போது “விக்டரி ஆர்ம்ஸ் பிரைவேட் லிமிடட்” எனத் துப்பாக்கித் தயாரிப்பு நிறுவத்தின் பெயரைப் படிப்பதும் அந்த வகை.

விஸ்வரூபத்தில் முக்தார் கானின் கையை வெட்டி + வெட்டப்பட்ட கையிலிருக்கும் ரிவால்வருடன் அப்படியே இரண்டு குண்டுகளைச் சுட்டுவிட்டு + அதன் பின்னர் கையைத் தனியாக வீசி ரிவால்வரை மட்டும் கையில் வைத்துக்கொள்ளும் காட்சி ஸ்லோமோஷனாக இருப்பினும் நொடி அசந்தாலும் நடந்ததை உள்வாங்குவது சிரமம்.

தசாவதாரத்தில் நம்பியின் முதல் சண்டைக்காட்சிக்குத் தனியாக ஒரு அத்தியாயம் எழுதலாம்.

ஆணழகன் போட்டியின் அடிப்படை வெளிப்பாடான ‘முன் பட்டைப் பரவல்’ (Front lat spread) பாணியில் தோள்களை விரித்து புஜங்களின் தசைகள் கட்கத்தில் அழுந்தியிருக்க கீழிருந்து துள்ளி எழுகின்ற காட்சி முதல், “சுங்கம் தவிர்த்த சோழனின் பேரனிடம் கர்வம் தவிர்க்கச் சொல்” எனக் கர்ஜித்து மணியை அடித்துவிட்டு திரும்பி நின்று குடுமியை முடியும்போது ‘இரட்டைப் புயத்தசை – பின்புறம்’ (Rear double biceps) நிலைக்கு வருகின்ற வரையில் நிகழும் சண்டைக் காட்சிகளில் மிக நேர்த்தியாக நவீன வீச்சுகளின் சாயல் சிறிதும் கலக்காமல் அமைத்திருப்பது அந்தச் சண்டைக்காட்சியின் சிறப்பு.

சண்டை நிகழும் காலகட்டம் பன்னிரண்டாம் நூற்றாண்டென்பதால் சீன ஜப்பானிய சண்டைக் கலைகளில் காணப்படும் வீச்சுகளின் சாயலோ, நமது பாரம்பரியக் குத்துச் சண்டைகளில் வீசப்படும் வரிசைகளோ இல்லாமல் மற்போரின் பாணியில் சண்டையை அமைத்திருப்பது வியக்கவைக்கிறது.

காட்டாக, மேற்சொன்ன வசனம் துவங்குவதற்கு முன் பகையாளி வீசுகின்ற ஆயுதத்தைத் திருப்பி அவன் கழுத்தின் அருகில் நிறுத்துவதான உத்தி காட்டப்படும். சற்றே நுணுக்கமாக எழுதுவதென்றால், எதிராளியின் வலது கை ஓங்கி ஆயுதத்தை நமது உடம்பில் பாய்ச்ச வரும்போது அதனை நமது வலக்கை எதிராளியின் மணிக்கட்டின் அருகே இருக்கும்படி தடுத்து, இடக்கையால் எதிராளியில் முழங்கையை உட்புறமாக இழுக்கையில் ஏற்கெனவே எதிராளியின் கையின் இயங்கு கதியால் அவனது வலக்கை வளைந்து, கொண்டு வந்த ஆயுதம் அவனது கழுத்தை நோக்கியே திருப்பப்படும்.

இந்த நிலையில் ஆயுதத்தை நிறுத்துகின்ற அமைப்புதான் “சுங்கம் தவிர்த்த சோழனின்…” வசனத்துக்கு முன் காட்டப்படுவது. மற்போரில் இது ஒரு உத்தி. கைகள் மேலிருந்து தாக்க இறங்குகையில் இப்படி வளைத்து கால்களை பின்னே கொடுத்து எதிராளியை நிலத்தில் தள்ளி விடுவதுண்டு.

மகாதேவி திரைப்படத்தில் இந்த உத்தியையொத்த காட்சி ஒன்று இருக்கிறது. எம்.ஜி.ஆர். படுக்கையிலிருக்கும்போது குறுவாளைப் பாய்ச்சவரும் எதிரியை வீழ்த்தும் உத்தி. மேலே சொன்ன எல்லாம் மகாதேவியில் நிகழும்; தசாவதாரத்தில், கால்களைப் பின்னே நகர்த்தி எதிரியை தரையில் வீழ்த்தாமல் ஆயுதத்தைத் திருப்புவது வரையில் மகாதேவியில் நிகழும்.

பக்கவாட்டில் கால்களை உயர்த்தி உதைக்கும் உத்தி சீன-ஜப்பானியக் கலைகளின் தாக்கத்திற்குப் பிறகே தமிழ்த் திரைப்படங்களில் வந்தது. இப்படியாகப் பக்கவாட்டில் உதைக்கும் சீன-ஜப்பானிய நிழல்கூட நம்பியின் சண்டைக்காட்சியில் கிடையாது. காலால் உதைப்பதைக் காட்டும் காட்சியில் முன்புறம் எத்தி உதைக்கும்படியாகவே அமைத்திருக்கிறார்கள் (சின்னக்கவுண்டர் விஜயகாந்த் – தமிழக கிராமப்புற எத்து). படத்தின் கடைசியில் நிகழும் ஜப்பானிய – அமெரிக்க கமல் சண்டைக் காட்சியில் சீன-ஜப்பானிய பக்கவாட்டு உதையை (side kick) முதன்மைப்படுத்தி அமெரிக்க கமலுக்கு காட்சியை அமைத்த குழுவினர் அதனை இந்தச் சண்டைக் காட்சியில் முழுவதுமாகத் தவிர்த்து பழமை மாறாமல் காட்டியிருந்தனர்.

கைகளை கத்தரிபோல் வைத்து எதிரியின் கழுத்தைப் பிடித்து இழுத்துத் தள்ளுவதும் மற்போரில் ஒரு உத்தி. எதிரியை அதிகமாக நிலைகுலையச் செய்ய தோளை ஆதாரமாகக் கொடுத்தும் உடலை இழுப்பதுண்டு. நேராகப் பிடித்து இழுப்பதற்கு கத்தரிபோல் பிடித்து இழுப்பதற்கும் வித்தியாசம் உண்டு. நேராக இழுக்க அதிக பலம் தேவைப்படும்; கத்தரிபோல் வைத்து இழுக்க அதிக பலம் தேவையில்லை. காரணம் கைகளைக் கத்தரிபோல வைக்கையில் வலக்கை இடப்புறமும், இடக்கை வலப்புறமும் சென்று உடலியல் இயக்கம் (bio-mechanism) மாறுபடுகின்றதல்லவா அது இயல்பு நிலைக்கு வரும் வழியில் எதிராளியின் கழுத்து மாட்டியிருப்பதால் குறைந்த பலத்தாலேயே இழுக்கலாம், பலம் செலுத்தினால் எதிரிக்கு பாதிப்பு அதிகம். இந்த உத்தியும் தசாவதாரத்தில் நம்பியின் சண்டைக்காட்சியில் உண்டு

 
இப்படி ஒவ்வொரு அசைவிலும் பழமை தெரியும்படி அமைக்கப்பட்ட நம்பியின் சண்டைக்காட்சி தமிழ்த் திரையில் இடம்பெற்ற முக்கியமான சண்டைக்காட்சிகளுள் ஒன்று.

நம்பி நீங்கலாக, திரைப்படத்தில் நீளமான சண்டைக்காட்சியில் ஈடுபடும் அமெரிக்க + ஜப்பானிய கமலஹாசன்களின் சண்டைக்கலை முறையை நோக்கினால் அவை இரண்டும் அந்தந்த பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப சண்டை நுட்பங்களைக் காட்டிச் சண்டையிடும். நொடிப்பொழுது கவனிக்கத் தவறினாலும் சண்டைக்காட்சியிலும் காட்சியைத் தவறவிடுவது தசாவதாரச் சண்டைக்காட்சிகளிலும் நடக்கும்.

ஜப்பானியப் பெண்ணை அமெரிக்கர் சண்டையில் எதிர்கொள்ளும்போது பெண்தானே எனச் சாதாரணமாக எதிர்கொள்வார். குறிப்பிட்ட தாக்குதலில் அந்தப் பெண் கராத்தேயில் வென்ற பட்டயங்களைப் பார்த்ததும், ‘ஷிட்’ எனத் தன்னைத்தானே சலித்துக்கொண்டுத் தன் சண்டை முறையை மூர்க்கமாக்குவார். நொடிப்பொழுது அசந்தாலும் ஏன் திடீரென மூர்க்கமாகிறார் என்னும் காட்சியைத் தவறவிட வாய்ப்பு உள்ளது.

எனது நினைவு சரியாக இருக்குமானால் கமலஹாசனின் சண்டைக்காட்சிகளில் வன்முறை அதிகம் வெளிப்பட்டது தசாவதாரத்தில் ஜப்பானியப் பெண்ணுடன் நடக்கும் சண்டையில்தான். கழுத்தைக் கொடிக்கம்பியில் வைத்து அழுத்தி இழுத்து அறுக்கும் வன்முறை கில் பில் வகையறாக்களின் பாதிப்பாகவும் இருக்கலாம்.  

அவ்வை ஷண்முகியின் மார்க்கெட் சண்டைக்காட்சியைக் குறிப்பிடாமல் இந்தக் கட்டுரை முழுமையடையாது. பெண்ணின் நளினமும் சண்டைக்காட்சிக்குத் தேவையான தோரணையும் கலந்து வெளிப்படுத்தப்பட்ட சண்டை அது. கனல் கண்ணனின் உள்ளங்கையை மணிக்கட்டின் வளைவோடு அழுத்திப் பிடித்துத் துடிக்கவைக்கும் தொடக்கக் காட்சி முதல், கத்தியைப் பறங்கிக்காயின் மீது வீசும் முடிவுக்காட்சி வரை அவ்வை ஷண்முகியின் ஆட்டம் புன்னகைக்கவைக்கும்.

தமிழ்த் திரைப்படத்தில் சண்டைக்கலைஞன் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் இருவர். டிஷ்யூமில் ஜீவா அவர்கள் சண்டைக்கலைஞன் பாத்திரத்தில் நடித்தார், பம்மல் கே சம்மந்தத்தில் கமலஹாசன் அவர்கள் நடித்தார்.

பம்மல் கே சம்மந்தத்தின் பாத்திரப்படைப்பும் சென்னையில் சண்டைக் காட்சிகளில் நடிப்பவர்களுள் சற்றே வசதியான கலைஞர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக இருந்தது. ஃபேன்சியாக இருக்கும் ஜீப், கட்டுமஸ்தான உடல், வருமானத்துக்குப் பிரச்சனையில்லாத விடுதி வாடகை வருமானம், கூடவே இருக்கும் நணபர் கூட்டம் எனப் பார்த்துப் பார்த்து வசதியான சண்டைக்கலைஞனை கண்முன்னே நிறுத்தியிருப்பார். படத்தில் சாகசக் காட்சிகளுக்குத் தேவைப்படும் ‘ரிக்’ (Rig) பயன்பாட்டினையும் பின்னணியில் காட்டியது சிறப்பு.

விருமாண்டியின் சண்டைக்காட்சிகளில் இயல்பு மீறாத தன்மை கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளில் கதாநாயகத்தன்மை தூக்கலாகி மண்ணின் மணம், சிறையின் வெறி இவை குறைந்துவிடாமல் இருக்கும்படி காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

வேட்டையாடு விளையாடுவில் ராயபுரம் மணியின் (ஸ்டன் சிவா) முன் நின்று, “கண்ணு வேணும்னியாமே? எர்ரா” என விழியை உருட்டும் சண்டைக்காட்சியை இளைஞர்களின் மொழியில் சொல்வதென்றால்… “வேற வேற வேற லெவல் தலைவா அது” என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுவாக, எம்.ஜி.ஆரின் சில சண்டைக்காட்சியின் தொடக்கங்களுக்கு முன் வசனங்களால் காட்சியில் கனத்தைச் சேர்ப்பார்கள். ஆயிரத்தில் ஒருவனின் கத்திச்சண்டை, ரிகஷாக்காரனின் கொம்புச்சண்டை, நீரும் நெருப்புமில் குறுவாள் சண்டை இப்படிப் பல சண்டைக்காட்சிகளில் அவற்றுக்கு முன் கனம் சேர்த்த வசனங்களைச் சொல்லலாம். கமலஹாசன் அவர்களுக்கு வேட்டையாடு விளையாடுவில் அமைந்த அந்த “எர்ரா பாக்கலாம்” வசன பில்டப், உண்மையில் “வேற லெவல் பில்டப்”.

விஸ்வரூபம் சண்டைக்காட்சி வெளியான நேரத்தில் நண்பர்கள் உரையாடலில் சிலர் அதனை ராபர்ட் டௌனி ஜூனியரின் ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்லோமோஷன் ஸ்டண்ட்டுடன் ஒப்பிட்டனர். நான் தெளிவாக மறுத்து அது ஒரே எதிரியைத் தாக்குவதற்குத் திட்டமிட்டு அதைச் செயலாற்றுவது, விஸ்வரூபம் அப்படியல்ல. பல எதிரிகளை எந்தத் திட்டமிடலும் இன்றி எதிரியின் வீச்சுக்கு ஏற்பத் தாக்கிவிட்டு, அந்தத் தாக்குதலை ரசிகர்களுக்காக ஸ்லோமோஷனில் காண்பிப்பது என்றேன். ஷெர்லாக்கின் திட்டமிடல் விஸ்வரூபத்தில் இருக்காது. விஸ்வரூபத்தில் எதிரிகள் முன்னேற முன்னேற வியூகத்தை மாற்றிக்கொண்டே கதாநாயகனும் முன்னேறுவது போன்ற சண்டைக் காட்சியமைப்பு.

விஸ்வரூபத்தின் சண்டைக்காட்சியைப் பேசும்போது அதை அமைத்த சண்டைப் பயிற்சியாளர் யார் என்னும் சந்தேகமும் கூடவே வரும். ஃபெரோஸா? பர்வேஸ் கானா? லீ வைட்டாக்கரா? இனி வரும் திரைப்படங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட சண்டைப்பயிற்சியாளர்களின் பங்களிப்பு இருக்குமானால், யார் யார் எந்தெந்த சண்டைக்காட்சிகளுக்குப் பயிற்சியளித்தனர் என்பதையும் பெயர் காட்டும்போது தெளிவாகப் போட்டுவிட்டால், சண்டைக்காட்சி ரசிகர்கள் ஐயெம்டிபியைப் பார்த்துக் குழம்பத் தேவையில்லை.

விக்ரம் (புதியது) திரைப்படத்தில் சண்டைப்பயிற்சியாளர் தொடர்பாக எந்தக் குழப்பமும் இல்லை. அன்பறிவ் என்னும் ‘அன்பு + அறிவு’ இரட்டையர்கள். விக்ரமிலும் கமலஹாசனின் முத்திரையான நொடி அசந்தால் காட்சியைத் தவறவிடும் நொடி உள்ளது. ‘பன்ச் ட்ராக்கர்’ என்னும் வீச்சின் பலத்தை மதிப்பிடும் செயலி கமலின் ஸ்மார்ட் வாட்ச்சில் இருக்கும். ஸ்மார்ட் வாட்சை உள்ளங்கையில் பிடித்துக்கொண்டு எதிரியைக் குத்திவிட்டுப் பலத்தைப் பார்ப்பார். அது 75 எனக் காட்டும். பின்னர் ஸ்மார்ட் வாட்சை நரேனிடம் வீசுவார், நரேனும் உள்ளங்கையில் வைத்துக்கொண்டு எதிரியைத் தாக்கிவிட்டுத் தன் வீச்சின் பலத்தைப் பார்ப்பார். அது 45 எனக்காட்டும். கமலை விடவும் தன் பலம் குறைவு என்னும் சலிப்பை ஒரு நொடி முகத்தில் காட்டிவிட்டுச் சண்டையைத் தொடர்வார்.

இக்காட்சியில் ‘பன்ச் ட்ராக்கர்’ தொடர்பான எந்த விளக்கமும் இருக்காது. ரசிகனாக ஸ்மார்ட் வாட்ச்களின் தன்மையையும் கமலஹாசன் அதில் பன்ச் ட்ராக்டர் செயலியை நிறுவித் தன் கையின் பலத்தைப் பார்த்துக் கொள்வதையும் புரிந்துகொள்ளவேண்டும். தன் ரசிகன் புரிந்துகொள்வான் என ரசிகனை உயரத்தில் வைத்து அணுகுவதால்தான் அவர் உலக நாயகன்.

பாதுகாப்புக் கருவிகள், உயிர்காக்கும் ‘ரிக்’குகள் இல்லாத 1970களில் சண்டைக்காட்சிகளில் நடிக்கத் தொடங்கி, இன்றைக்குப் படப்பிடிப்புத் தளத்தில் ஆம்புலன்ஸ் முதல் ஃபோம் பெட்டுகள் வரை, ரிக்குகள் முதல் வீயெஃபெக்ஸ் வரை உதவிகளும் தொழில் நுட்பமும் வளர்ந்திருக்கும் இந்த 2024-லிலும் அதே ஆர்வத்துடன் சண்டைக் காட்சிகளில் சிறப்புற செய்யும் உலக நாயகன் கமலஹாசனை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. 

-azad_ak@yahoo.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button