
மீனுக்குட்டியாகணும்
கடல்நீலத்துக்குள் சிறு பச்சை
கலந்த அற்புதச் சுழல்
சிறு சிறு சிறு
வளர்ந்து
சற்றே பெரு பெரு உள்ளே
சிறு சிறு வட்டங்கள் குமிழியிட
மீன்குஞ்சுகள்
ஒவ்வொரு குமிழுக்கும் ஒவ்வொன்றாக
ஒன்று பத்தாக விர்ரென ஏறி
விசுக்கென மறைந்து
துடுப்புகளை அப்படி இப்படி ஆட்டி
எட்டி முழித்து
இறங்கி இறங்கிப் போக
துடுப்பில்லாது
அப்பா தோளிலிருந்து இறங்கிக்கொண்ட
பாப்புக்குட்டிக்கு
ஓரேஅழுகை
மீனுக்கெல்லாம் யாராச்சும் பயப்படுவாங்களா
அம்மா தாஜா பண்ணுகிறாள்.
—
இணை
குள்ள ரமேஷுக்கு எப்போதும் துணை
சொத்தைப்பல் விஜய்
சொத்தைப்பல் விழுந்து முளைத்து வளர்ந்தபோது
விஜயைக் கடைசி வரிசைக்கு
அனுப்பிவிட்டார் தமிழ் சார்
வகுப்பில் பேச்சு சத்தம் கேட்கும்போதெல்லாம்
பலகையில் எழுதியபடி
பின்பக்கம் விஜய்க்காக அவர் வீசும்
துண்டு சாக்பீஸ் மட்டும்
இப்போதும் குள்ள ரமேஷ் மேல்தான் விழுகிறது.
—
அவனுடையதுதான்
ஆனாலும் விடாமல் இறங்கிக் கொண்டேயிருக்கும்
சிவப்புக் கயிறு இடுப்பில் கட்டி விட்டாள் அம்மா
குட்டையில் கிடந்து ஊறி ஊறி
இவனுக்கும் சேர்த்து வெளுத்துக் கிடக்குது அதுவும்
தோள்பையை மாட்டிக்கொண்டு போகும்
பள்ளிநடையிலும்
தென்னை மட்டை கிரிக்கெட் இடையிலும்
அரிசிபுளி வாங்க அம்மாவோடு போகையிலும்
நின்று நின்றுதான் போகணும்.
யார் போனாலும்
பழையதுப் பங்காளி ஜிம்மி மட்டும்
நிற்கும் இவனோடு
காற்சட்டையைக் கயிற்றில் இறுக்கும்வரை