உமா ரமணன் – ஓர் ஆனந்த ராகம்; இளம்பரிதி கல்யாணகுமார்
கட்டுரை | வாசகசாலை

ஒரு திரையிசைப் பாடலின் மையமானது இசையைச் சுற்றியா அல்லது மொழியைப் பற்றியா போன்ற உரையாடல்கள் ரசிகர்களிடையே காலம்காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இரண்டுமே மையமில்லாது போன இன்றைய பாடல் காலத்தில் இது போன்ற உரையாடல்கள் எப்புறம் இருந்து பேசினாலும் பாடல்களின் மேன்மையைத்தான் பேசுகிறது. இதில் ‘மையம்’ என்ற சொல் அமர்ந்திருக்கும் இடத்தில் புகழ், வெற்றி,தோல்வி, அடையாளம் என்று எந்த வெளிச்சத்தை இட்டு நிரப்பினாலும் இசையா மொழியா என்ற கேள்வி என்றும் இருட்டில்தான் சுற்றிக் கொண்டிருக்கும். தாய்க்கு செல்லப்பிள்ளை நானா நீயாஎன்று இரு குழந்தைகள் சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது மற்றொரு பிள்ளை வேடிக்கை பார்ப்பது போல தனித்துநிற்கிறது இசையை மனித குலத்திற்குப் புரிய வைக்கும் ‘குரல்’. இசை வடிவம் பெற்ற வரிகளை நம் செவிகளில் வந்து சேர்க்க அழகிய குரலின் தேவை இருப்பதை இங்கு நாம் மறந்து விடப் போவதில்லை. இசையையும் மொழியையும் சண்டையிட்டு விளையாடச் செய்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ் இசையின் தமிழ் மொழியின் ஆனந்தக் குரல் ஒன்று கடந்த மே மாதம் முதல் நாள் முதல் பாடுவதை நிறுத்திக் கொண்டது. ‘ஆனந்த ராகம்’ பாடிய உமா ரமணனின் ஏகாந்த குரல் காற்றோடு கலந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன.
‘ஸ்ரீ கிருஷ்ண லீலா’ படத்தில் தனது கணவரும் இசைக் கலைஞருமான ஏ.வி. ரமணனோடு பின்னணி பாடத் தொடங்கிய உமா ரமணன் ‘நீரோட்டம்’ என்கிற படத்தில் தனது கணவரின் இசையில் அனைத்துப் பாடல்களையும் பாடி முழுநேர பின்னணிப் பாடகியாக அறியப்பட்டார். வெளிச்சத்தின் வாசலுக்கு ஒளியின் தேவை இருக்கிறதுதானே. இளையராஜா எனும் தேவ ஒளி உமா ரமணனின் குரலை வந்தடைகிறது. ‘நிழல்கள்’ படத்தின் மூலம் ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்று திரையிசையின் வாயிலைத் திறந்துகொண்டு ‘பைரவி வீடு இதுதானே’ என்று வந்த சிவாஜி ராவ் போல, உமா ரமணனை இளையராஜா அழைத்து வந்த போது தேனில் நனைந்தது இசையுள்ளம். ‘நீரோட்டம்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் பாடியிருந்த உமா ரமணனுக்கு இந்தப் பாடலில் பாடக் கிடைத்த முதல் வரி ‘நீரோட்டம் போலாடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்’. இந்த வரிகள் போலவே அவரது திரைப்பயணம் திசைகள் அறியாத தெளிந்த நீரோட்டமாகவே இருந்திருக்கிறது. எத்தனையோ பசுமைகளுக்கு நீர் தெளித்த பூவாளி கடல் சேர்ந்திருக்கிறது.
உமா ரமணன் பெயரைச் சொன்னதும் ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பப் பாடல் ஒன்று சட்டென மனதில் தோன்றும். மனதிற்கு சுகந்தமாக அவர் பாடிய எத்தனையோ நற்பாடல்களில் ஒரு அரிய பாடலை நினைவு செய்ய விரும்புகிறேன்.
இரட்டையர் தேவராஜ்-மோகன் இயக்கத்தில் சரத்பாபு-மாதவி நடிப்பில் ‘கவிதை மலர்’ என்ற தலைப்பில் ஒரு வெளிவராத திரைப்படத்தை 1982 ஆம் ஆண்டு தமிழ் சினிமா தனது முடக்கப்பட்ட கணக்கில் வரவு வைத்துக் கொண்டது. இளையராஜா இசையில் பாடல்கள் மட்டும் வெளியாகி இருந்தன. ‘கவிதை மலர்’ திரைப்படத்தில் கண்ணதாசனால் மலர்ந்த கவிதை ஒன்றை இளையராஜா, எஸ்.பி. பாலசுப்ரமணியம்-உமா ரமணன் ஆகியோரின் துணை கொண்டு பாடலாக்கித் தந்தார்.

அந்தப் பாட்டு மாலைக்கு ‘அலைகளே வா’ என்று பெயர். அன்றையச் சூழலில் இந்தப் பாடலுக்குக் காட்சிகள் படமாக்கப்பட்டதா இல்லை எதுவுமே படமாக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால், இந்தப் பாடலின் இசை கட்டமைப்பும் வரிகளும் நமக்கு காட்சியை தத்ரூபமாக உணர்ந்து கொள்ள வழிவகை செய்யும்.
இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதே 5 நிமிடங்கள் 11 நொடிகள் கொண்ட இந்தப் பாடலையும் YOUTUBE-இல் ஒலிக்கச் செய்ய வேண்டுகிறேன். இந்தப் பாடலை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ளலாம்.
பகுதி 1 – காலம் 0:00 முதல் 1:40 வரை
மாலையை வழியனுப்பிய ஒரு இரவு நேர கடற்கரையில் தலைவனுக்காக காத்திருக்கிறாள் தலைவி ஒருத்தி. நிலவு வந்து எட்டிப் பார்க்க தலைவியின் கண்கள் கடலின் எல்லையை முத்தமிட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தக் கண்களில் நிலவுக்குத் தெரிந்திருக்கலாம் தலைவனுக்காக தேடல். தொட்டு விடும் தூரத்தில் நிலவு இல்லை, ஆதலால், கால் நனைக்கும் அலைகளிடம் கண் நனைக்கும் தலைவனை அள்ளிவர தூது சொல்கிறாள் தலைவி.
“அலைகளே வா அவருடன் வா
உறவு கரையிலே
ஒரே கீதம் நம் வாழ்விலே
இனி என்றும் பிரிவில்லை வா”
ஏகாந்தத்திற்கு வடிவம் தந்த ஓவியத்தை யார் குரலாகச் செய்திருப்பார்கள்.?
இந்தக் கேள்விக்கு இந்தப் பல்லவியின் பதில் ‘உமா ரமணன்’.
‘அலைகளே வா’ தொடங்கி ‘பிரிவில்லை வா’ வரை ஒரு அலை படத்தை வரைந்தால் அதன் உச்சம் ‘ஒரே கீதம்’ என்பதில் இருக்கும்.
பகுதி 2 – காலம் 1:41 முதல் 3:03 வரை
அலைகளின் பதிலுக்காக காத்திருக்கும் தலைவியிடம் அலைகளின் சார்பில் கடலே வந்து பேசுவது போல இந்த வரிகள். கடல் ராஜனின் குரலுக்கு இசைக்கடலைத் தானே பயன்படுத்த முடியும் என்று இசைக்குத் தெரியாதா என்ன?
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அலை முகம் கடல் குரல்.
“நாள் தோறும் இங்கே வந்தாள் கன்னி
வேறென்ன எனையேதான் எண்ணி
கிடைத்ததை விட மாட்டேன் – எவருக்கும் தர மாட்டேன்
அருகினில் நெருங்குவேன் – அவள் அதில் மயங்குவாள்
மழையே பனியே அலைகளின் நுரையே
மணந்தால் சுகமே இணைவோம் முறையே.. வா வா
கரை மீதில் ஆடும் காதலி
கடல் ராஜன் என்னைக் காதலி
எனை விட அழகா.. இனி ஒரு உறவா
கண்ணாலே ஜாடை போதுமே கிளியே”
தலைவியின் நிலை கண்டு கடலே அவள் மீது காதல் சொல்கிறது.
பகுதி 3 – 3:04 முதல் 4:35 வரை
இந்தப் பகுதியில் வரிகளுக்கு வேலை இல்லை. இளையராஜாவின் ருத்ர தாண்டவம். ஒன்றரை நிமிடங்கள் கடலின் இசையின் தனியாவர்த்தனம். 80 களின் முற்பகுதியில் இப்படியான ராஜ இசை ஒரு பேரதிசயம் என்று சொல்லும் அளவிற்கு இசைக்கோர்ப்பு. இந்த ஒன்றரை நிமிடங்கள் காட்சியில் என்ன இருந்திருக்கும் என்று நமது எண்ணத்திரை யோசிக்காத அளவுக்கு நம்மைக் கட்டிப்போடும். ‘தலைவனை அழைத்து வா என்று சொன்னால் நானே தலைவனாக வருகிறேன் மணந்து கொள்கிறேன் என்று சொல்கிறாயா நீ’ என்று பாயும் தலைவியின் சண்டமாருதமாக இருக்கலாம் அல்லவா?
பகுதி 4 – 4:36 முதல் 5:11 வரை
தலைவிக்கும் கடலுக்குமான பேச்சுவார்த்தையில் தலைவன் வந்துவிட்டான் என்று கற்பனை செய்து கொள்ளலாம். கடலோடுதானே குரோதம் அலைகளிடம் இல்லையே என்று அலைகளுக்கு மீண்டும் செய்தி சொல்கிறாள் தலைவி.
“அலைகளே வா அமைதியாய் வா
உறவு கலந்தது
ஒரே பாதை நம் வாழ்விலே உலகமே நம்மிடம் வா”
அவருடன் வா என்று ஆணையிட்ட அலைகளிடம், அவர் வந்துவிட்டார். நீ பொறுமையாக வா ஒன்றும் அவசரமில்லை என்கிறது உமா ரமணனின் குரல். முதல் பகுதியில் ஆவலாக ஏக்கமாக இருந்த உணர்வு இந்தப் பகுதியில் ஒரு நிறைவு நிலையை எட்டியிருக்கும். ‘உறவு கரையிலே’ விற்கும் ‘உறவு கலந்தது’ விற்கும் இடையே ஒரு படிமம் இருக்கிறது. அங்கு உமா ரமணன் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார். அடுத்த முறை கிழக்கு கடற்கரை சென்றால் ‘அலைகளே வா அவர்களுடன் வா’ என்று எஸ்.பி.பி. உமா ரமணன் இருவரையும் அழைத்து வரச் சொல்ல வேண்டும்.
மொழிக்கும், இசைக்கும் அப்பாற்பட்ட ஒரு வெளியில் ஒரு பாடலுக்கு அடையாளமாக குரல் இருக்கிறது. ‘ஆனந்த ராகம்'(பன்னீர் புஷ்பங்கள்), ‘மஞ்சள் வெயில்'(நண்டு) போன்ற தனிக்குரல் பாடல்கள் அவருக்கான அடையாளங்களாக இருந்தாலும் டூயட் பாடல்களில் சக பாடகரின் குரலோடு இழையோடும் இயல்புக்கு ரசிகன் நான். அப்படி அவர் பாடிய பல பாடல்களுக்கு அடையாளமாக உடன் பாடிய பாடகரின் பெயரே வழங்கப்பட்டாலும் உமா ரமணனின் குரலில் ஓர் தனித்துவமான ஈரம் உணரப்படலாம். எஸ்.பி.பி.யோடு ‘யார் தூரிகை தந்த ஓவியம்’ (பாரு பாரு பட்டம் பாரு), மனோவோடு ‘ஓ உன்னாலே’ (என்னருகில் நீ இருந்தால்), மலேசியா வாசுதேவனோடு ‘உன்ன பாத்த நேரத்துலே’ (மல்லு வெட்டி மைனர்), தீபன் சக்ரவர்த்தியோடு ‘செவ்வந்தி பூக்களில்’ (மெல்ல பேசுங்கள்) முதல், இளையராஜாவோடு ‘மேகம் கருக்கையிலே’ (வைதேகி காத்திருந்தாள்) வரை ஜோடிக்குரலில் ஒரு குரலாக வந்தாலும் உயிர்க்குரலாகி நிற்கும் உமா ரமணனின் குரல். ஆண் பாடகர்களளோடு மட்டுமல்ல பெண் பாடகர்களோடு பாடிய பாடல்களிலும் நன்முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன. பி.சுசீலாவோடு ‘அமுதே தமிழே’ (கோவில் புறா), எஸ்.ஜானகியோடு ‘தாழம்பூவே கண்ணுறங்கு ‘(இன்று நீ நாளை நான்), சித்ராவோடு ‘ஏ மரிக்கொழுந்து’ (புது நெல்லு புது நாத்து), ஸ்வர்ணலதாவோடு ‘ஊரடங்கும் சாமத்திலே’ (புதுப்பட்டி பொன்னுத்தாயி), சுனந்தாவோடு ‘பூச்சூடும் புன்னைவனமே’ (ஆணழகன்) போன்ற பாடல்களைச் சொல்வேன்.
எத்தனையோ டூயட் பாடல்களில் உமா ரமணன் – கே.ஜே. யேசுதாஸ் இணைந்து பாடிய பாடல்களுக்கு என் விருப்ப மாளிகையில் தனியறை வைத்திருக்கிறேன். அவற்றில் ‘பூபாளம் இசைக்கும்’ (தூறல் நின்னுப் போச்சு), ‘கண்மணி நீ வர காத்திருந்தேன்’ (தென்றலே என்னைத் தொடு), ‘நீ பாதி நான் பாதி’ (கேளடி கண்மணி), ‘ஆகாய வெண்ணிலாவே’ (அரங்கேற்ற வேளை), ‘கஸ்தூரி மானே’ (புதுமைப்பெண்), ‘வானமே மழைமேகமே’ (மது மலர்), ‘வானமுள்ள காலம் மட்டும்’ (புது ஸ்வரங்கள்) என்று எண்ணக்கூட்டில் கூடு கட்டும் பாடல்கள் ஏராளம்.
“இங்கு இருக்கும் – காலம் வரைக்கும் – இந்தப் பறவை பாட்டுப் படிக்கும்” என்று அவர் பாடிய வரிகளைப் போலவே இறுதிக்காலங்களிலும் தனது கணவரின் YOUTUBE இணையப் பக்கத்தில் அவ்வப்போது பாடிக் கொண்டிருந்தார். அந்தப் பக்கத்தில் ‘காற்றின் மொழி’ (மொழி திரைப்படத்தில் சுஜாதா பாடிய பாடல்) பாடலை உமா ரமணன் பாடி கேட்ட போது ஒரு புதிய மொழியாக கேட்டது.

‘தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே’ பாடலில் “நெஞ்சை அள்ளும் பாடலிலே. என்னை அள்ளிக் கொடுத்து விட்டேன்” என்ற வரியில் பாடியது போல நெஞ்சையள்ளும் பாடல்களாக அள்ளிக் கொடுத்துச் சென்றிருக்கிறார். நடிகர்களை விட பாடகர்களுக்கு ஆயுள் அதிகம். நடிகர்களின் முகம் கூட மறந்து போகலாம். ஆனால், பாடகர்கள் ஒலி வடிவில் எங்கேனும் நம்மைத் துரத்திக் கொண்டே வருவார்கள். அதிக சத்தத்துடன் பாடல் கேட்கும் பக்கத்து சீட்காரர், பயணம் செய்யும் பேருந்து, கடந்து செல்லும் தேநீர்கடை, கல்யாண வீடு இப்படி எப்படியாவது குரல்கள் நம்மை வந்து சேரும்.
அதனால்தான் உமா ரமணன் இப்படி பாடியிருக்கிறார் போல
“இருட்டில் கூட
இருக்கும் நிழல் நான்
இறுதி வரைக்கும்
தொடர்ந்து வருவேன்”
இதோ இப்பொழுது அவர் நினைவாக இந்தக் கட்டுரையை எழுதி முடிக்கும்போது ‘மூடுபனி’ படத்தின் ‘ஆசை ராஜா’ தாலாட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது.