‘உயிர் தரும் மரம்’ சிறார் மொழிபெயர்ப்பு நூல் குறித்த வாசிப்பு அனுபவம் – செந்தில்குமார்
செந்தில்குமார்
![](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/images-75-640x405.jpeg)
நூலின் பெயர் : The giving Tree
தமிழில் : “உயிர் தரும் மரம்”
இது ஒரு மொழி பெயர்ப்பு மற்றும் உலகப் புகழ் பெற்ற அமெரிக்க சிறார் சித்திரக் கதைப் புத்தகம். வெறும் 30 பக்கங்கள், 500 சொற்கள், 26 சித்திரங்கள் மட்டுமே கொண்ட இப்புத்தகத்தை ஆங்கிலத்தில் படங்களுடன் எழுதியவர் ஷெல் சில்வர்ஸ்டீன் (Shel Silversten). புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் கொ.மா.கோ. இளங்கோ. முதன்முதலில் 1964 ஆம் ஆண்டு ஹர்பர் மற்றும் ரோவ் நிறுவனம் இதனை வெளியிட்டது. இதுவரை, இந்தப் புத்தகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 85 லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது. தமிழில் 2015 ஆம் ஆண்டு பாரதி புத்தகாலயம் சார்பில் “books for children” வெளியிட்டது.
மிகவும் எளிமையாக இருமொழிகளில் (தமிழிலும் ஆங்கிலத்திலும்) ஒரு உணர்வுப் பூர்வமான கதையை சொல்லிச் செல்கிறது இப்புத்தகம். கதை முழுக்க ஏதோ ஒன்றை ஒருவர் கொடுத்துகொண்டே இருக்கிறார், மற்றவர் வாங்கிக்கொண்டே இருக்கிறார். புத்தகத்தின் ஆங்கில தலைப்பைப் பார்த்தவுடன் நாம் இதைப் புரிந்து கொள்ளலாம். ‘குழந்தை இலக்கியத்தில் மிகவும் சிக்கலை உண்டாக்கும் புத்தகத்தில் ஒன்று (“one of the most divisive books in children’s literature”)” என இப்புத்தகத்தைப் பற்றி சொல்கிறார்கள்.
“ஒரு சிறுவன் ஒரு காட்டிற்குச் செல்கிறான். அங்கு மரத்தின் கீழ் அடிக்கடி விளையாடுகிறான். அதைப் பார்த்த பெண் மரம் தன் மேல் ஏறி விளையாடுமாறு கூறுகிறது. அவனும் அடிக்கடி அங்கு சென்று விளையாடிவிட்டு செல்வான். சிறிது காலம், அந்த மரத்தின் பக்கமே அவன் போகவில்லை. அவன் வளர்கிறான். இப்பொது வளர்ந்த பையனாக வருகிறான்.மரம் அவனைப் பார்த்து மகிழ்ச்சி அடைகிறது.அவனைத் தன் மேல் ஏறி விளையாடுமாறு கூறுகிறது. ஆனால் அவனோ, “நான் வளர்ந்துவிட்டேன், உன் மீது ஏறி விளையாட முடியது. எனக்கு விளையாட வேறு பொருட்கள் வேண்டும்.அதற்கு பணம் வேண்டும்…” என்று கூறுகிறான்.
மரமும் தன்னிடம் இருக்கும் ஆப்பிள் பழத்தை பறித்துக் கொண்டு ஊரில் சென்று விற்றுவிட்டு பணம் பெற்றுகொள் என்று கூறுகிறது. அவனும் ஆப்பிளை பறித்துக் கொண்டு சென்றுவிட்டான். பின்னர், மரத்தின் பக்கம் ரொம்ப நாள் வரவேல்லை. இப்போது மறுபடியும் வளர்ந்த இளைஞனாக வருகிறான். மரம் மிகவும் மகிழ்ச்சியடைந்து, “வா… என் மீது ஏறி வந்து விளையாடு” என்று கூறுகிறது. ஆனால், அவன், “நான் திருமணம் செய்யப் போகிறேன். என் மனைவி, குழந்தைகள் தங்குவதற்கு எனக்கு ஒரு வீடு வேண்டும் என்று மரத்திடம் சொல்கிறான். உடனே மரம், தன்னுடைய கிளைகளை வெட்டிகொள்ளச் சொல்கிறது.அதை வைத்து வீடு செய்துகொள் என்று கூறுகிறது. அவனும் கிளையை மகிழ்ச்சியாக வெட்டி எடுத்து கொண்டு சென்றுவிட்டான். நீண்ட நாட்களாக வரவேல்லை.
நீண்ட நாட்கள் கழித்து திரும்பவும் வந்து தன் தேவைகளுக்கு ஏற்றவாறு மரத்தை முழுவதுமாக வெட்டிக் கொண்டு சென்று விட்டான். இவ்வாறாக அவன் வயதாகி முதியவன் ஆன பிறகும் அந்த மரத்திடம் வந்து அவனுக்கான தேவையை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறான்.அந்த மரமும் தான் முழுவதும் வெட்டப்பட்ட பின்பும் தன்னால் முடிந்த உதவியை மகிழ்ச்சியாகச் செய்து கொண்டேயிருக்கிறது.
![Shel Silverstein](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/images-77.jpeg)
கதை முழுவதும் மனிதன் தனது தேவைகளை பெற்று கொண்டே இருக்கிறான்.ஆனால் இயற்கையான மரம் மகிழ்ச்சியுடன் கொடுத்து கொண்டேதான் இருக்கிறது. இந்தக் கதையை நட்பின் அடையாளமாகப் பார்கலாம். நட்புதான் எதையும் எதிர்பார்க்கமால் உதவி செய்துகொண்டே இருக்கும். இன்னோர் பார்வையில் , பெற்றோர் – பிள்ளை உறவாக பார்க்கலாம்.ஏனென்றால் அங்கேயும் பல பெற்றோர்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் தன் பிள்ளைகளுக்கு கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள்.இன்னோரு வகையில், மனிதனின் பேராசையால் இயற்கையை அதன் எல்லைகளை மீறி தொடர்ந்து அதை நுகர்ந்து கொண்டே இருக்கிறான் என்பதை எளிமையாக உணர்த்துகிறது என்று சொல்லலாம். இந்தக் கதையில் வரும் பெண் மரம் , தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கொடுப்பதை மட்டும் நிறுத்தவில்லை. இந்தக் கதையை ஆண் – பெண் உறவு நிலையிலிருந்து கூட அனுகலாம்.
![கோ.ம.கோ.இளங்கோ](https://vasagasalai.com/wp-content/uploads/2020/03/images-78.jpeg)
இது ஒரு சிறிய புத்தகம்தான்.ஆனால் பல சிந்தனைகளை நமக்குக் கொடுத்து நம்முள் உள்ள மனிதத்தைத் தட்டி எழுப்பும் மந்திரத்தைக் கொண்டுள்ள புத்தகம்.
வாசிக்கந்தூண்டும் வகையில் புத்தகம் நேர்மையாக விமர்சிக்கப்பட்டிருக்கிறது. நன்றி.