
இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளுடன் பயணத்திற்கு தயார் நிலையில் இருந்தனர்.
இனி…
வண்ணம் தேடி நிலப்பகுதிக்குப் போக ராம், பாலா, மகேஷ் மற்றும் கூட்டணி மீன்கள் எல்லோரும் தயாராகினர். சுட்டீஸ் மூவரும் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் கப்பலை வந்தடைந்தனர்.
இதுவரை ஊரிலேயே இவ்வளவு ஆர்ப்பாட்டமாக எதுவும் நடந்ததில்லை. திருவிழாப் போல் அவர்களை வழியனுப்பும் நிகழ்வு நடந்தது. ஊர் மக்கள் அனைவரும் கொண்டாட்டமாக இருந்தனர்.
கப்பல் கிளம்பியது. சித்திரக் குள்ளர்களான அந்த ஊர் மக்கள் எல்லோரும் ‘ஹோ’ என குதித்துக் குதித்துச் சத்தமெழுப்பியது காற்றில் புற்கள் அசைவது போல் இருந்தது.
“லல்லா லல்லா
வண்ணம் தேடி போறாங்க லல்லா…
ஃபுல்லா ஃபுல்லா
சந்தோஷம் எங்க மனசு ஃபுல்லா…”
என ஊரின் பாடகர் பாட்டைத் தொடங்கி வைத்தார். கோரஸாக பாடிக் கொண்டே கப்பலைக் கிளப்பினர்.
கப்பல் கிளம்பி கண்ணுக்குத் தெரியும் தூரம் வரை தாத்தா அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
வலசை மீன்களின் உதவியுடன் பயணத்திற்கான மேப் தயார் செய்து வைத்திருந்தனர். ஆனால் அது முழுதாக இல்லை. ‘கீனு’ என்கிற இடம் வரைதான் வரைபடம் தயாரித்தனர். “அங்கிருந்து வலப்புறம் திரும்ப வேண்டும் என்றும், மிச்ச தூரத்தை அந்த இடத்தில் இருந்தே அறிந்து கொள்ள வேண்டி வரும்.” என தாத்தா முன்பே கூறியிருந்தார்.
ராம் வரைபடம் பார்த்து வழி சொல்லிக் கொண்டிருக்க, பாலா கப்பல் ஓட்டினான். காற்று திசை, கப்பல் சுற்றியுள்ள விஷயங்கள் என மற்ற விஷயங்களை நோட்டமிட்டபடி மகேஷ் அமர்ந்திருந்தான்.
வெகு தூரம் வந்திருந்தனர். கப்பல் ஓட்டிய பாலா களைத்துப் போயிருந்தான். கரை எதுவும் கண்ணுக்குத் தெரியவில்லை. வெளியே இருந்த மகேஷ் அடுத்ததாக கப்பலை ஓட்ட உள்ளே வந்தான். எல்லோருடைய வேலையையும் அவர்களுக்குள்ளாகவே மாற்றிக் கொண்டனர்.
கீனு இடத்திற்கு வந்து சேர்ந்தாயிற்று. தாத்தா கூறியபடி, கப்பலை மகேஷ் வலப்பக்கம் திருப்ப, மீன்கள் எல்லாம் அதிர்ச்சியடைந்தன. வெளிய நின்றிருந்த பாலாவிடம் லூனா அவசர அவசரமாக வந்து கப்பலை நிறுத்தும்படி சொன்னது.
பாலா: என்னாச்சு லூனா, ஏன் இவ்வளவு பதற்றமாகுற?
லூனா: இந்தப் பக்கம் போக வேண்டாம் பாலா. வலசை மீன்கள் எல்லாரும் ரொம்பப் பயப்படறாங்க.
பாலா: ஏன், என்ன ஆச்சு?
லூனா: இந்தப் பக்கம் போனா சரியா வராதுனு சொல்றாங்க.
பாலா: ஏதாவது பிரச்னையா?
லூனா: இரு எல்லாரையும் வரச் சொல்றேன். சேர்ந்து பேசுவோம்.
லூனா எல்லா மீன்களையும் அழைத்து வந்தது. இவர்களும் கப்பலை நிறுத்திவிட்டு பேசுவதற்காகக் கூடினர்.
வலசை மீன்கள் கோரஸாக “அந்தப் பக்கம் போக வேண்டாம்” எனக் கூறின.
இரும்பு மண்டையன்: அந்தப் பக்கம் இல்லாத பிரச்சனைகளே இல்ல. மீன்களான நாங்களே அந்தப் பக்கம் போக மாட்டோம். அந்தப் பக்கம் போனவங்க இதுவரைக்கும் திரும்ப வந்ததே இல்ல, போனவங்களுக்கும் என்ன ஆனதுன்னும் தெரியல.
பாலா: இப்போ என்ன பண்றது?
ராம்: நாம இந்தப் பக்கம்தான் போகனும்னு என்ன இருக்கு. வேற வழியாப் போகலாமே.
மகேஷ்: இல்ல… நம்ம தீவ விட்டுப் போன தேவதைகள் இந்தப் பக்கமா போனதாத்தான் நம்ம முன்னோர்கள் குறிப்பு எழுதி வச்சிருக்காங்க.
ராம்: நாம இடப்பக்கம் திரும்பி அப்பறமா சுத்திகிட்டு அந்த இடத்தை அடைய முடியுமா?
லூனா: முடியாதுப்பா.
எல்லோரும் முடிவெடுக்க முடியாத குழப்பத்தில் ஆழ்ந்தனர்.
ஒரு வழியாக மனதைத் தேற்றிக் கொண்டு, பாலா பேசினான்.
பாலா: இவ்வளவு தூரம் வந்த அப்புறம் ஆபத்தைக் கண்டு பயப்பட்டா நாம நினைச்சத முடிக்க முடியாது. வலப்பக்கம் போய் என்னதான் இருக்குனு பாத்துடலாம். ஒற்றுமையா இருந்தா நம்மால எல்லா ஆபத்துகளையும் கடக்க முடியும்.
இரும்பு மண்டையன்: அதான… என்னைய மீறி உங்கள யார் தொடுறான்னு பாக்குறேன்.
அனைவரும் சிரித்தனர். நம்பிக்கையுடன் எல்லோரும் ஒப்புக்கொண்டதால் கப்பல் வலப்பக்கம் திருப்பப்பட்டது. ஆனாலும், எல்லோர் இதயமும் ‘படபட’ என அடித்தது கடல் அலையையும் மீறி வெளியே கேட்டது!
தொடரும்…