
இதுவரை...
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆபத்தான இடத்தை நோக்கி கப்பலைத் திருப்பினர்.
இனி…
கப்பலை வலப்பக்கம் திருப்பி நீண்ட நேரமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அசாதரணமாக எதுவும் நடக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் படபடப்பு குறைந்து உற்சாகத்துடன் கப்பல் ஓட்ட ஆரம்பித்தனர்.
பயத்தில் பசி மறந்திருந்த அவர்களுக்கு இப்போது பசிக்க ஆரம்பித்தது. சாப்பிடுவதற்காக அவர்கள் கொண்டு வந்திருந்த பார்சல்களைப் பிரித்தபோது அவர்களுக்கு பேரின்ப அதிர்ச்சி காத்திருந்தது.
உணவுப் பண்டங்கள் எல்லாம் பலவித வண்ணங்களில் தெரிந்தன. இத்தனை வண்ணங்களை அவர்கள் யாரும் தங்கள் வாழ்நாளில் கண்டதேயில்லை. ராம் அவசர அவசரமாக லூனாவை அழைத்தான்.
ராம்: லூனா, லூனா.. சீக்கிரமா இங்க வந்து பாரேன்.
ஏற்கெனவே வலசை மீன்களைத் தவிர மற்ற மீன்களும் குதூகலத்தில் குதித்துக் கொண்டுதான் இருந்தன.
லூனா: என்ன ராம்? வண்ணங்கள் தெரியுதா உங்களுக்கும்?
ராம்: ஆமா லூனா. சூப்பரா இருக்கு. எங்களால சந்தோஷம் தாங்க முடியல. ஆனா இது என்னென்ன வண்ணங்கள்னு தெரியலயே.
லூனா: பொறு. வலசை மீன் இரும்பு மண்டையன கேட்டா நிறங்களோட பேர சொல்வான்.
இரும்பு மண்டையன்: சோறு வெள்ளையா இருக்கு, குழம்பு மஞ்சளா இருக்கு, வெள்ளரிக்காய் பச்சையா இருக்கு, ஜிலேபிக்கு ஆரஞ்சு நிறம், சிவப்பு, வெள்ளை, கருப்பு, ஊதா, ரோஸ்னு எல்லா நிறங்கள்லயும் மிட்டாய் கலந்து இருக்கு.
ராம்: அடேயப்பா! இத்தனை வண்ணங்கள் இருக்கா?
இரும்பு மண்டையன்: ஆமா! இன்னும்கூட இருக்கு.
மகேஷ்: அப்போ நமக்கு வண்ணங்கள் கிடைச்சிடுச்சா? நாம திரும்ப ஊருக்கு போலாமா?
லூனா: இல்ல மகேஷ். நாம சபிக்கப்பட்ட இடத்தைக் கடந்துட்டோம். அதனாலதான் நமக்கு வண்ணங்கள் தெரியுது.
மகேஷ் மனம் ஒப்பவேயில்லை. வண்ணங்கள் கிடைத்துவிட்டதாகத் திடமாக நம்பினான்.
மகேஷ்: இல்ல நமக்கு வண்ணங்கள் கிடைச்சிருச்சு லூனா. நீ புரியாம சொல்ற.
லூனா வலசை மீன்களை அழைத்துக்கொண்டு வந்தது. வலசை மீன்களும் லூனா சொன்னதையே கூறின.
யாரும் சொல்வதை மகேஷ் கேட்பதாயில்லை. வண்ணங்கள் கிடைத்து விட்டாதாகவே கூறிக் கொண்டிருக்க, எல்லோரும் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போயினர்.
லூனா: இவனுக்குப் புரியவைக்க முடியாது. பேசாம கப்பல திருப்புங்கப்பா. நம்ம எல்லைக்குள்ள போயித்தான் பாப்போம். அப்போ புரியும்.
பாலா: சரி கொஞ்ச தூரம்தானே. திரும்பி போயி அவனுக்குப் புரிய வைப்போம்.
கப்பலை வந்த பாதையிலேயே திருப்பினர். ஆனால் எல்லையைத் தாண்ட முடியவில்லை. ராமுக்கு ‘பகீர்’ என்றிருந்தது.
ராம்: டேய் மகேஷ், பாலா.. கப்பலை நம்ம எல்லைக்குள்ள கொண்டு போக முடியலடா.
பரபரப்பாக லூனாவையும் மற்ற மீன்களையும் அழைக்கப் போனால், அங்கு அதைவிட பெரிய குழப்பம் நடந்து கொண்டிருந்தது.
லூனா: அச்சச்சோ எல்லை கிட்ட போனா ஷாக் அடிக்குதே. எல்லாம் இந்த கரன்டு பய வேலையாத் தான் இருக்கும். டேய் என்னடா பண்ண?
கரன்ட்: அச்சோ எனக்கும்தான் ஷாக் அடிக்குது. இப்போதானே புரியுது, நான் கரன்டு விடும்போது மத்தவங்களுக்கு எப்படி இருக்கும்னு.
இரும்பு மண்டையன்: டேய் என் தலையெல்லாம் விர்ர்ர்ங்குதுடா. எப்படியாச்சும் காப்பாத்துங்கடா.
அம்மு மீன்: டூர் மாதிரி இருக்கும்னு ஆசப்பட்டு வந்தேன். இப்படி விதவிதமா ட்விஸ்ட்டு வைக்கறானுங்களே. நானே பாவம்.
ஆளாளுக்கு புலம்பியும் கத்திக் கொண்டும் இருந்தனர். பாலா, ராம் என யார் கூப்பிட்டதும் அவர்கள் காதில் விழவே இல்லை. இவர்களுக்கும் என்ன செய்வதென்று புரியவில்லை.
திடீரென பெரும் புயல் அடிப்பதற்கான அறிகுறி தெரிந்தது. ராம், பாலா, மகேஷ் மூவரும் பயத்தில் நடுங்கத் தொடங்கினர். மீன்கள் இருந்த இடத்தை விட்டு நகர முடியாமல் தத்தளிக்கத் தொடங்கின. வானம் இருட்டிக் கொண்டு வந்தது.
தொடரும்…