இணைய இதழ்இணைய இதழ் 100சிறுகதைகள்

வளர்பிறை – அகிப்ரியா

சிறுகதை | வாசகசாலை

இன்று வானிலை மிகவும் இரசிக்கும்படி இருந்தது. வட்ட நிலா மேகத்துக்குள் ஒளித்து கண்ணாபூச்சி விளையாடியது. நெல்மணிகளை யாரோ கைதவறி வானத்தில் விட்டெறிந்து விட்டனர் போலும். நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. தோட்டத்துத் தென்னை மரங்கள் உறங்காமல் காற்றோடு உரசி காதல் சில்மிஷம் புரிந்தன. இரசிக்கத் தெரிந்த யாரையும் கவிஞனாக்கும் இந்த சூழலிலும் வந்திருந்த விருந்தினர்கள் மத்தியில் கொஞ்சம் கிசுகிசுப்பைக் கேட்க முடிந்தது. இது எதிர்பார்த்ததுதான். ஆட்டிறைச்சி பிரட்டல் நாசியில் நுழைந்து வாயில் எச்சில் ஊறி வயிற்றில் பசி எடுக்க ஆரம்பித்தது. இருந்தாலும் பசியை அடக்கிக் கொண்டு விருந்தினர்களைக் கவனிக்கத் தொடங்கினார் பாரி.

பொத்!!!!! நாற்காலியில் இருந்து அன்பிற்கினியாள் மயங்கி விழுந்தாள். எதிரே அமர்ந்திருந்த மனநல மருத்துவர் விரைந்து அவளைத் தூக்கி படுக்கையில் கிடத்தினார். சிறிது நேர சிகிச்சைக்குப் பிறகு அவள் சுய நினைவுக்கு வந்தாள். ஆனால், திடீரென்று அவளின் கைகள் பயங்கரமாக நடுங்க ஆரம்பித்தது. உடம்பெல்லாம் தீப்பட்டது போல் எரியத் தொடங்கியது. கண்கள் திறக்கவே மிகவும் பயந்தாள். வயிற்றில் இருக்கும் கருவைப் போல் தன் உடலையும் சுருக்கிக் கொண்டாள். பற்களைப் பலமாக அமுத்தி கடித்துக் கொண்டே ஏதோ ஒரு உணர்வை அடக்க முயன்றாள். முடியாமல் தோற்றுத் தவிப்பதையும் பார்க்க முடிந்தது. அவள் தவிப்பதைக் கண்டு பாரியும் செய்வதறியாது தவித்து நின்றார். இரண்டு மணி நேர வரைம் அவள் அப்படியேதான் இருந்தாள். அடுத்த அறையில் இருந்து கண்ணாடி வழி நடப்பதைக் கண்ட பாரி கதிகலங்கி, கண்ணீர் மல்க எப்படி அன்பிற்கினியாளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரப் போகிறேன் என தவித்தார். நடப்பதைப் பார்த்தால் முடியும் என்றே தோன்றவில்லை. அப்பா முருகா, ஒரு நல்ல வழியைக் காட்டு கடவுள் முருகனையும் துணைக்குச் சேர்ந்து கொண்டார். மனைவி இருந்திருந்தால் அவரையும் சேர்த்துக் கொண்டிருப்பார்.

அன்பிற்கினியாள்; பெயருக்கு ஏற்றார் போல் அன்புக்கு இனியவள்தான். அனைவரிடமும் அன்பும் பாசமும் கொண்டு மிக இனிமையாக நடந்து கொள்வாள். அவளுக்கு அந்த பெயரை வைத்ததில் பாரிக்குத் தனி பெருமை உண்டு. திருமதி. பாரி, பல பெயர்களைத் தேடி அதில் சில பெயர்களை தணிக்கை செய்து, அவள் பிறந்த போது அவளின் அழகில் மயங்கி சட்டென்று இந்தப் பெயர் சொல்லிதான் பாரி அவளைக் கொஞ்சினார். சீரும் சிறப்புமாய் வளர்த்த மகளை இன்று இந்த நிலைமையில் பாரி பார்க்கும்போதெல்லாம் அந்த வலியை ஜீரணிக்க அவரால் முடியவில்லை.

ஒரு தந்தையாக, அவள் கேட்டது கேட்காதாது என அனைத்தும் பார்த்துப் பார்த்து செய்த பாரியால் மகளின் இந்த வேதனைக்கு ஒன்றுமே செய்ய முடியவில்லை. தனது கையாலாகாததனத்தை எண்ணி வருத்துவதைத் தவிர வேறொன்றும் அவருக்கு இப்போது தோன்றவில்லை. அவரையும் குற்றம் கூறமுடியாது. ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவள் கடந்து வந்த வாழ்க்கையும் அனுபவித்த கொடுமையும் அப்படி. அவளே தேர்ந்தெடுத்ததுதான். என்றாலும்….

திருமணம் எனும் பயணம் அவள் வாழ்க்கையைத் தடம் புரட்டிப் போட்டது. காதல் திருமணம்தான். பாரிக்கு மகள் தனக்கென தேர்ந்தெடுத்த மாப்பிள்ளையைப் பிடிக்கவில்லை. இருந்தாலும் ஆசை மகளின் விருப்பம் அதுவாய் இருப்பின் மறுக்க முடியவில்லை. திருமணத்திற்குப் பின் அவள் மகிழ்ச்சியாகவே இருந்தாள். இருப்பதைப் போல் நடித்திருக்கிறாள். அன்று அவள் நடிக்காமல் இருந்திருந்தால் இன்று இப்படி இருந்திருக்க மாட்டாள்.

காதலுடன் கைப்பிடித்த கணவன் திடீரென்று சந்தேகவாதியாக மாறிப் போனான். சந்தேகம் இருக்குமிடத்தில் ஏது நிம்மதி? கடுஞ்சொற்களால் கணவன் தினம் தினம் அவளைச் சுட்டு சாகடித்தான். நின்றால் குற்றம், நடந்தால் குற்றம், சிரித்தால் குற்றம், பேசினால் குற்றம். மிக விரைவில் சொற்களோடு சேர்ந்து அடி உதை என வன்முறைகளும் நடக்க ஆரம்பித்தன. காதல் கணவனின் அட்டூழிங்களை ஒருமுறையும் தந்தந்தையிடம், அன்பிற்கினியாள் கூறியதும் இல்லை. வெளிக்காட்டிக் கொள்ளவும் இல்லை. காதல் திருமணம் ஆயிற்றே. எப்படிச் சொல்வாள்? ஆனால், இப்போது அதை நினைத்து பாரி வருத்தம் கொண்டார். மகளின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ளாமல் இருந்தது அவரை மேலும் மேலும் துன்புறுத்தியது.

கணவனின் கொடுமை ஒரு நாள் அதன் எல்லையைக் கடந்தது. கணவனின் வார்த்தையை மறுத்து பேசிவிட்டாள் என்பதற்காக அவளை ஒரு பெண் என்றுக்கூட பாராமல் காலணி போட்டிருந்த காலால் அவள் அடிவயிற்றில் ஓங்கி வேகமாக எட்டி உதைத்தான். அதனால் விளைவு, புது உயிர் ஒன்றை அநியாயமாக இழந்தாள். எதார்த்தமாக அவளைச் சந்திக்க வீட்டிற்குச் சென்ற தோழி ஒருத்தி, அவள் இரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதைக் கண்டு பயந்து அவளின் தந்தைக்கு தகவல் தெரிவித்தாள். கணவன் தலைமறைவானான்.

அதன் பிறகு வந்த நாட்களெல்லாம், அன்பிற்கினியாள் நடைபிணமாகவே இருந்தாள். யாரிடமும் பேசுவதில்லை, சரியாக உண்பதில்லை, பார்வை ஓர் இடத்திலேயே நிலைக்குத்தியது. மருத்துவர் சிகிச்சை அளிக்கும் போது அவள் உடலைப் பார்த்து அதிர்ந்து போனார். அடி, உதை, சிகரெட்டால் சுட்ட தழும்புகள் அவள் உடல் முழுக்க இருந்தன. அது அவள் உடலை மட்டுமல்ல மனதையுமே காயப்படுத்தி நீங்கா தழும்பை விட்டிருந்தது. எப்படிதான் இவ்வளவு கொடுமைகளை யாருக்காகப் பொறுத்துக் கொண்டாளோ என அம்மா தினமும் மனம் குமுறுவார். தன் அப்பா தன்னால் வருத்தப்படக்கூடாது என்ற மகளின் எண்ணத்தை அப்பா புரியாமல் இருப்பாரா?

 பழைய நிலைக்கு அவளைக் கொண்டு வர, பார்க்காத வைத்தியமில்லை, போகாத கோவில் இல்லை. மூன்று வருடங்கள் ஓடி விட்டன. மனநல மருத்துவரின் ஆலோசனைப்படி அன்பிற்கினியாள் மீண்டு வர சில காலங்கள் ஆகலாம். மீண்டு வராமலேயும் போகலாம். ஏனெனில் அவள் தனியாக அனுபவித்த வலிகளின் தாக்கம் மிக ஆழமானது. கிட்டத்தட்ட இப்போது அவள் ஒரு மனநோயாளி.

மகள் அடிவாங்கி கொடுமைகளை அனுபவித்து சாதாரணமாக வாழ்வதை விட இப்படி மனநோயாளியாக இருப்பதே மேல் என அப்பாவும் நினைத்துக்கொண்டார். தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என அவளுக்குத் தெரியாத போதும் அவள் தேவைகளை அவரே பார்த்துக் கொண்டார்.

வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர் அனைவரும் கிளம்ப ஆரம்பித்தனர். அப்பா சற்று ஓய்வெடுக்க நாற்காலியில் அமர்ந்தார்.

“மகதான் பைத்தியம்னு பார்த்தா, அப்பா அதற்கு மேல இருக்காரு. நமக்கென்ன வந்த வேலைய பார்ப்போம்.” இப்படி சில அரசல் புரசல் பேச்சுகள் அவரின் காதுகளிலும் விழத்தான் செய்தன. அதற்கெல்லாம் அப்பா பதில் கொடுக்க விரும்பவில்லை. அவருக்குத் தேவை அன்பிற்கினியாள் மீண்டு வரவேண்டும்.

இன்று அன்பிற்கினியாளுக்கு விடுதலை. ஆமாம், அந்த அரக்கனிடமிருந்து முழுமையான சுதந்திரம்.

அவன் ஏதோ ஒரு லாரியில் கொடூரமாக அடிப்பட்டு இறந்து போயிருந்தான். தன் மகளை இந்த நிலைக்குத் தள்ளியவனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் அப்பாவிற்கும் இருந்தது. இயலவில்லை. ஆனால், அவருக்கும் முன் யாரோ ஒருவர் அந்த லாரியின் மூலம் மோதிவிட்டார். இன்று விதி வழி அது நிறைவேறியது. அதைதான் அப்பா மிக சிறந்த முறையில் விருந்து வைத்து விழாவாகக் கொண்டாடி பலரின் முகச் சுளிப்புகளுக்கும் ஆளானார். அதனால் என்ன.. தன் மகளில் வாழ்வில் அந்த அரக்கனை இனி ஒரு போதும் அவள் பார்க்கமாட்டாள். நினைத்து பயப்படவும் மாட்டாள்.

சன்னல் ஓரத்தில் நின்றிருந்த அன்பிற்கினியாள் வட்ட நிலாவை இரசிப்பது போல் அப்பாவிற்கு தோன்றியது. மீண்டும் ஒரு முறை அன்பிற்கினியாளைக் கைக்குழந்தையாய் கைகளில் ஏந்திய உணர்வில் அப்பாவின் கண்கள் கலங்கின. இன்னொரு சுற்றுக்கு அவர் முதலில் தன்னை மனதளவில் தயாராக்கிக் கொண்டார்.

agipriya2203@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button