
மனமுறிவு என்றவுடனே
பெண்களை வழிபாட்டுக்கூடத்துக்கும்
ஆண்களை ஜிம்முக்கும்
அனுப்புகிறார்கள்.
சொன்னால் நம்புங்கள்
அவள் அழுவது தெய்வதிற்காக
அவன் அலறுவது தசைகளின் வலியால்.
உப்பின் கரிப்பில் மனம் கரைய
சமூகத்தின் நுண்ணறிவு வியக்க வைக்கிறது.
பெண்களில்லா ஜிம்மிலும்
தனி ஆண் வராத கோவிலிலும்
ஆகப்பெரும் விடுதலை.
அவன் முத்தத்தை நினைத்துத் தொலைக்காதே
முட்டாள் தோழியே
இன்னும் இரண்டு முறை
கோவிலைச் சுற்று.
நடையின் வேகத்தில்
பக்திப் பாடலொன்று ஒலிக்கிறது கேள்.
அவனோ
“உடம்பே ஆலயம்” என்ற மந்திரத்தோடு
இரும்பாலான காவடியை
மீண்டும் தூக்குகிறான்.