
இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக அந்த ஊர்ச் சிறுவர்கள் முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளுடன் கடலில் பயணம் செய்தனர். கடலுக்குள் இருந்த கதவு கேட்ட விடுகதைக்குச் சரியாகப் பதில் சொன்னதால் கதவு திறக்கப்பட்டு உள்ளே நுழைந்தார்கள்.
இனி…
அம்மு மீன்: ஹேய் அங்க பாருங்க. யாரோ ஒரு பொண்ணு பறந்து வருது.
இரும்பு மண்டையன்: ஒரு வேள அந்த தேவதையா இருக்குமோ?
திரும்பிப் பார்த்த சிட்டுக்குருவி, இது தேவதை இல்லையென்று கூறியது.
மகேஷ்: அப்போ இது யாரு?
சிட்டுக்குருவி: ஆ… இவங்களா? இவங்க பயங்கர ஸ்ரிக்ட்டான ஆளு. பேரு இன்கி பின்கி.. இப்படில்லாம் கூட்டமா நின்னு பேசிட்டு இருந்தா அவங்களுக்கு சுத்தமா பிடிக்காது.
இன்கி பின்கி பக்கத்தில் வருவதை பார்த்த சிட்டுக்குருவி அங்கிருந்து பறந்தது. எதிர்ப்பக்கம் இருந்த பாறையில் அமர்ந்து, ஏதோ வேலை செய்ய ஆரம்பித்தது.
மகேஷ், ராம், பாலா மூவரும் இன்கி பின்கியையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் பறந்து வருவதைப் பார்க்கவே அழகாக இருந்தது.
இரண்டு கைகளுடன் இறக்கையும் இருந்தது. இறக்கை முழுக்க வெள்ளையாகவும், நுனியில் மட்டும் விதவிதமான வண்ணங்களும் இருந்தன. அது மட்டுமின்றி இறக்கையில் இருந்து மின்மினி பறப்பதைபோல ஏதோ பளபளவென பறந்து கொண்டிருந்தது. அதன் ஆடையோ பூக்களையும், இலைகளையும் கொண்டு தயார் செய்யப்பட்டிருந்தது.
பூக்களின் வண்ணங்கள் எல்லாம் அப்பப்பா. இலைகளில் இத்தனை நிறங்களா? பல இடங்களைச் சுற்றிப் பார்த்திருந்த, வலசை மீன்கள் கூட இதை பார்த்து வாயைப் பிளந்தன. வரும்போதே இன்கி பின்கி சின்ன துள்ளலோடும், எதையோ முணுமுணுத்துக் கொண்டும் வந்தது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு எறும்பு, “இஞ்சி தின்ன மூஞ்சி இன்கி பின்கி வந்துட்டா. எல்லாரும் ஓடுங்கடா” என்று சொன்னது.
தூரத்தில் இருந்து இவர்களைப் பார்த்த இன்கி பின்கி சர்ரென்று வேகமாக இவர்களை நோக்கி வந்தாள். கண்ணிமைக்கும் நேரத்தில் அவளை அருகில் பார்த்த மூவரும் அதிர்ச்சி அடைந்தனர். மீன்களும் கொஞ்சம் கலங்கித்தான் போயின.
இன்கி பின்கி: நீங்க தான் புதுசா மாட்ன ஆளுங்களா? ம்ம்ம்.. இங்கிருந்து இனி எப்பவும் வெளிய போக முடியாது. அதனால தப்பிக்கலாம்னு நினைக்க வேண்டாம். இந்தக் கோட்டை எங்க வண்ண ராணிக்குச் சொந்தமானது. இந்தக் கோட்டைக்குள்ள சிக்குறவங்க எல்லாம் எங்க அடிமைகள். இனி நான் சொல்ற வேலைய எல்லாம் நீங்க செய்யணும். அவ்வளவு தான்.
ராம்: வணக்கம் தேவதையே. நாங்க இங்க வந்து மாட்டல. கதவு கேட்ட விடுகதைக்குப் பதில்கள் சொல்லித்தான் உள்ள வந்தோம்.
இன்கி பின்கி: ஹா ஹா ஹா… அடிமையாகறதுக்கு கஷ்டப்பட்டு பதில் வேற சொன்னீங்களா.
பறந்து பறந்து உருண்டு புரண்டு சிரித்தது இன்கி பின்கி.
ராம்: என்னடா இது, இப்படிச் சிரிக்குது?
மகேஷ்: டேய்.. இப்போ இன்னும் பயமா இருக்குடா
ராம்: ஐய்யய்ய.. இவன் வேற. தைரியமா இருடா.
அம்மு மீன்: பாலா.. பாலா..
பாலா: என்ன அம்மு?
அம்மு மீன்: இந்த இன்கி பின்கிக்கு பாட்டுனா ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன். வரும்போது காத்துலயே கைய அசைச்சு அசைச்சு தாளம் தட்டிட்டு ஏதோ பாடிக்கிட்டே வந்துச்சு. இங்கயும் நிறைய பாடுற பறவைகள தான் பிடிச்சு அடைச்சிருக்கு. இசை, பாட்டு சம்பந்தமான வீக்னெஸ் இதுகிட்ட இருக்கும். ஏதாவது பேச்சுக் கொடுத்துப் பாருங்களேன்.
பாலா: சரி அம்மு.
எல்லோரும் இன்கி பின்கி சிரித்து முடிப்பதற்காகக் காத்திருந்தனர். வெகு நேரம் சிரித்த பின்பே இன்கி ஓய்ந்தது.
இன்கி பின்கி: நீங்களா வந்தாலும் சரி, நாங்க இழுத்து உள்ள போட்டாலும் சரி, நீங்க மாட்னது மாட்னது தான். சொல்ற வேலைய செஞ்சுட்டு அமைதியா இருக்கணும். புரியுதா?
புரியுதா என்பதை கொஞ்சம் ராகமாகவே இழுத்துச் சொன்னது. உடனே பாலா பேசத் தொடங்கினான்.
பாலா: நீங்க பேசறதே பாடற மாதிரி தேனா இனிக்குதே. ரொம்ப அழகா பேசுறீங்க. குரலும் ரொம்ப இனிமையா இருக்கு. உங்களுக்கு இசை ரொம்ப பிடிக்குமா?
இன்கி பின்கி: ஓ… இப்ப வந்த வந்த உங்களுக்குக் கூட என்னோட இசை ரசனை தெரிஞ்சிருக்கா? அப்போ உலக ஃபேமஸா நானு? இந்த உலகத்துலயே சிறந்த பாடகி நான்தான். அத்தனை இசையும் எனக்கு அத்துப்படி.
பாலா: அடேங்கப்பா. சூப்பர். உங்கள மகிழ்ச்சிப்படுத்த நாங்க பாடலாமா?
இன்கி பின்கி: உங்களுக்குப் பாடவும் தெரியுமா? சரி பாடுங்க கேப்போம்.
அனைவரும் ஒருசேர குரலைச் செருமிக்கொண்டு கூட்டமாகப் பாடத் தயாரானார்கள்.
தொடரும்…