
நதி
உன்னில் பயணிக்கும்
எல்லாவற்றிலும் ஏற்படும்
சலசலப்பு ஓய்ந்தபாடில்லை
குறுகிய கரைகள் மீறி
அகண்ட பரப்பில் நிதானமாக
உயர்ந்த மேடுகள் மீதேறி
செல்வதை கவனிக்கும் என்னை
அசட்டையாக பார்க்கிறாய்
தீராத தாகத்தை தீர்த்துக் கொள்ள
அவ்வப்போது எனைக் களைந்து
சன்னமாக மிதக்கவும்
மூழ்கி திளைக்கவும்
அனுமதிக்கும் வரை
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை
***
மேன்மை
ஒழுங்குகளாக நீ நம்பும்
எல்லாமும் என்னை இறுக்கிப்
பிழிந்து சுருக்கியிருந்தன
வெளிப்பட்ட கணத்திலிருந்து.
உன்னுள் குடியிருந்த பொழுதில்
என் ஜன்னல் திரைச்சீலைகள்
ஆடும் ஒவ்வொரு அலைவிலும்
கீச்கீய்ச்யென கிரீச்சிடும் குருவிகள்
கீக்கீக்கீயென கிளிக் குஞ்சுகள்
பறத்தலின் தன்மையைப்
பரப்பி பறந்தபடியே இருக்கின்றன…
விட்டு விடுதலையாகி
விட்டு விடுதலையாகி
விட்டு விடுதலையாகி
***
காடு
மாயச் சித்திரமான
வெடித்து விடுபட்ட
மெளன இன்சொல்
காற்றில் விட்டு விடாமல்
தலைக்குள் சுழல
எண்சாண் உடலின் குருதி பருகி
இரட்டிப்பு அடைந்து
ஒன்றுடன் ஒன்று
உரசிக் கொள்ள
செஞ்சிவப்பு பொறிகள்
காட்டில் பரவுகின்றன.
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
வெந்து தணிந்தது காடு
***
லாவா
நதியாக வேண்டும்
மூச்சிரைக்கும் நதியாகிறது கடல்
மலராக வேண்டும்
தேனீக்கள் அண்டாத
ரோஜாவாகிறது தோட்டம்
பறவையாக வேண்டும்
வேட்டையாடும் கழுகாகிறது காடு
மலையாக வேண்டும்
பசுங்கனியற்ற மலையாகிறது எரிமலை
பூச்சியாக வேண்டும்
இறகற்ற பட்டாம்பூச்சி ஆகிறது
அந்த மலையின் சுவாசம்
மனிதனாக வேண்டும்
மனிதனாக வேண்டும்
மனிதனாக வேண்டும்
******