
பச்சை மஞ்சள் சிவப்பு நீலம் ஆகியவை மட்டுமே
மகளுக்கு நிறங்களின் பட்டியல்
வெள்ளை என்பது நிறமல்ல என்றும்
அது நிறங்களை வைக்கிற இடம்
என்றும் சொல்வாள்
கருப்பு நிறம் பற்றிக் கேட்டால்
அது இருள்பட்ட இடம் என்பாள்.
அவளறிந்த நிறங்களின் சாயலில்
எதைக் காட்டினாலும்
இது கொஞ்சம் மஞ்சள் இது நிறைய மஞ்சள் என்பதாக
நான்கு நிறங்களையும்
இரண்டு வகைக்குள் நிரப்பிவிடுகிறாள்
அவள் ஓவியம் வரையும்
தொடக்க நேரங்களில்
வரிசையாக இருக்கும் நிறக் குச்சிகள்
சற்றுநேரத்தில் அறையெங்கும்
சிதறத் தொடங்கும்
அதன்பின் சிதறிக் கிடக்கும்
கொஞ்சம் நிறைய நிறக் குச்சிகளை
அவளின் கோரிக்கையின்படி எடுத்துத்தர
வீட்டின் யாவரும் தயாராக வேண்டும்
இப்போது கொஞ்சம் சிவப்பு
நிறக் குச்சியினைக் கேட்கிறாள்
மனைவி ஆரஞ்ச் கலர்க் குச்சியுடனும்
அம்மா கத்தரிப்பூ கலர்க் குச்சியுடனும்
அப்பா பழுப்புநிறக் குச்சியுடனும் நிற்க
நிறமற்ற நான்
நிறங்களை வைத்துக்கொள்ளும்
வெள்ளையாகிறேன்.