இணைய இதழ்இணைய இதழ் 70கட்டுரைகள்

வெண்ணிற மலர்களின் மலை – ஜெய்சங்கர்

கட்டுரை | வாசகசாலை

வ்வொரு முறை கொல்லிமலைக்குச் செல்லும்போதும் புதுவித அனுபவம் கிட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே சலிக்காமல் சென்றுக் கொண்டேயிருக்கிறேன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையேனும் சென்று வந்திருக்கிறேன். கொல்லி மலையிலுள்ள தாவரங்களின் பசுமை, நிலப்பரப்பின் நிறம் மாறியபடியே இருக்கும். ஒவ்வொரு மாதத்திற்கும் மலையில் வீசும் காற்றில் வரும் வாசனைகளும் வேறுபடும். டிசம்பர் மாதங்களில் பழுத்துச் சிவந்த காப்பிப் பழங்களை கொத்துக் கொத்தாக பார்க்கலாம். சில்லென்று காற்று எப்போதும் வீசிக் கொண்டிருக்கும். ஜனவரி மாதத்தில் சாலை முழுக்க காப்பிக் கொட்டைகளைப் பரப்பிக் காய வைத்திருப்பார்கள். நீர் ஊறிக் கிடக்கும் பாறை இடுக்குகளில், தோட்டங்களில் நீலம், மஞ்சள், ரோஜா நிற மலர்கள் ஆடிக் கொண்டிருப்பதை அதிகம் பார்க்கலாம். மே மாதத்தில் அன்னாசி, பலா வாசனை மலை முழுக்க விரவி நாசியைத் தாக்கும். கடந்தமுறை ஆகஸ்டில் சென்ற போது மிளகுக் கொடிகள் காய்த்துத் தொங்கின.

இம்முறை சென்றது ஏப்ரல் மாதத்தில். கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மார்ச் முதல் ஜூன் வரை எதிர்பார்த்த குளிர் இல்லாமல் கிடக்கும். மழையின்றி கோடை வெப்பத்தால் மரங்கள் காய்ந்துவிடும், பசுமைக் குறைந்து பழுப்பு நிறத்தை மலை சூடிக் கொண்டுவிடும். எனவே இம்மாதங்களை தவிர்த்து விடுவேன். இம்முறை சமவெளி வாழ்க்கையில் சில நாட்களாக மன அழுத்தம் பெருகிக் கிடந்தது. எங்கேனும் மலை உச்சியில் நின்று சமவெளியின் மீதே அதைக் கொட்டிப் பழி வாங்கினால் என்ன என்று தோன்றவே ஏப்ரல் முதல் வாரத்தில் நண்பர்களுடன் சென்றேன். அருவிகளில் நீர் வரத்து குறைவாக இருந்த போதிலும், இம்முறையும் என்னை ஏமாற்றாமல் என் மனதை சரி செய்தவை மலை முழுக்க மலர்ந்திருந்த வெண்ணிற மலர்கள்

மலையேறத் தொடங்கி சிறிது தொலைவுக்கு பின்னர் காப்பித் தோட்டங்களும், சீரான இடைவெளிகளில் உயரமாக நின்று கொண்டிருக்கும் சில்வர் ஓக் மரங்களும், அவற்றில் தழுவி ஏறி இறுகக் கட்டிக் கொண்டு கிடக்கும் அடர்ப் பச்சை நிற இலைகளுடைய மிளகுக் கொடிகளும் கண்ணுக்குக் கிடைக்கும். இம்முறை மிளகுக் கொடிகளில் அறுவடை முடிந்திருந்தது. அன்னாசித் தோட்டங்களில் முள் இலைகள் பழுத்துக் கிடந்தன.

காரில் சென்றபடியே காப்பித் தோட்டங்களைப் பார்த்தேன். வேகமாக நகர்ந்தபடி புதர் போல பெருகியுள்ள செடிகளைக் கண்ணுற்ற போது, பச்சை இலைகளின் ஊடாக வெள்ளை நிறத் திட்டுகளென நிறைய படிந்திருந்தது. ஏதோ பூஞ்சைத் தாக்குதல் ஏற்பட்டு நோய் வந்து விட்டதைப் போலத் தோன்றியது. பள்ளத்துக்குள் கிடந்த செடிகளைப் பார்த்தபோது அத்தனையும் பூக்கள் என்று தெரிந்தது. தங்குமிடத்தை அடையும் முன்னரே இருட்டத் தொடங்கியதால் இறங்கிப் பார்க்க முடியவில்லை

மலைகளுக்குச் செல்லும் போது விடிவதற்கு முன் தவறாமல் காலை நடை செல்வோம். கசியும் இருளில், குளிரில் துண்டைத் தலைப்பாகை கட்டிக் கொண்டு விடியற்காலைப் பறவைகளின் இசையை ரசித்துக் கொண்டே நடந்து செல்லும் போது கிடைக்கும் இன்பம் வேறெங்கும் கிடைப்பதில்லை. இரண்டு கிலோமீட்டர் தாண்டி பெயர் அறியாத தேநீர்க் கடை தெரியும்வரை போகும் நடை. குளிர் அதிகமானால் இரண்டு டீ வரை குடித்து விட்டு வரும் போது இருள் விலகிக் கொண்டிருக்கும். ஒரே ஒரு டீ மட்டுமே போதுமானதாக இருந்தது இம்முறை. திரும்ப வரும் போது இருள் விலகி மீண்டும் வெண்ணிறப் பூக்கள் கொத்துக் கொத்தாக புலப்படத் தொடங்கிய போது, தோட்டத்திற்குள் சென்ற மண் பாதையில் நானும் இறங்கினேன்.

ஒரு ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்திருந்த நாளில் கொல்லிமலை மூலிகை வனத்திற்குள் வேகமாக இறங்கி, அதை விட வேகமாகத் திரும்பி ஓடி வந்த அனுபவம் இரத்தம் உறிஞ்சும் அட்டைகளால் ஏற்பட்டிருந்தது. இப்போது தரை காய்ந்து, பழுப்பு நிற இலைகளால் மூடப்பட்டு வித்தியாசம் தெரியாமல் கிடந்தது. அட்டைகள் பயமில்லை. நெருங்கிச் சென்று பார்த்தபோது ஜாதி மல்லிப் பூக்களை மிக நெருக்கமாகக் கட்டி, செடியின் கிளைகளாக மாட்டி வைத்தது போல ஒவ்வொரு கிளையும் சிறிய வெள்ளைப் பூக்களால் அடர்த்தியாக ஒட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு அடி நீளக் கிளையில் இருநூற்றுக்கும் மேல் மலர்கள் நெருக்கியடித்தபடி இருந்தன. நிறையக் கிளைகள் ஒவ்வொரு செடியிலும். விரல்களால் பூக்களைத் தொட்டு வருடிப் பார்க்கையில் மனதில் இனம் புரியா மகிழ்ச்சிமெல்ல மெல்ல லேசானது உள்ளம். எவ்வளவு கோடி மலர்கள் இன்று இம்மலையில் மலர்ந்திருக்கும் என்பதை எண்ணுகையில் மிகச் சிறியவனாய் உணர்ந்தேன். மிகப்பெரிய வெண்மேகம் ஒன்று தரையிறங்கி பெருங்கருணையுடன் அணைத்துக் கொண்டது போல் செடிகள் கிறங்கிக் கிடக்கின்றன.

இந்த மலர்களை நுகர்ந்தால் காப்பியின் வாசனை வருமா? வராது என்றறிந்தும் சிறிது பூக்களைத் திருகி எடுத்து உள்ளங்கையில் வைத்து நுகர்ந்துப் பார்த்தேன். நிம்மதியின் நறுமணம் ஒன்று கசிந்து பெருகி வந்தது. கனிகளை விட மலர்கள் சிறந்தவையே என்று தோன்றுகிறது.

***********

goldeneyesankar@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button