இணைய இதழ்இணைய இதழ் 81தொடர்கள்

வெந்தழலால் வேகாது – பகுதி 6 – கமலதேவி

தொடர் | வாசகசாலை

மானுடப்பண்புகளின் சோதனைச்சாலை

நுண்ணுணர்வு கொண்ட மனம் தான் காணும் அன்றாடக் காட்சிகளில், நிகழ்வுகளில் சட்டென்ற ஔியையும், அணைதலையும் கண்டு கொள்கிறது. இரண்டுமே அந்த நுண்ணுணர்வு கொண்ட மனதைப் பாதிக்கிறது. எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் சிறுகதைகளின் முழுத்தொகுப்பில் உள்ள கதைகளில் அடுத்தடுத்து ஔியையும் இருளையும் மாறி மாறிக் காணமுடிகிறது. அதே போல இவர் கதைகளில் நகரமும் கிராமமும் இரு இழைகளாக பின்னிக் கிடக்கின்றன. ஆளில்லாத ஸ்டேஷன்களில் நின்று செல்லும் ரயில் போல கவனத்தில் இருந்து தவறக்கூடிய சிறிய தருணங்களை, உணர்வுகளை கதைகளில் காணமுடிகிறது

ஏழெட்டு ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்கு வரும் ஒருவர் முற்றிலும் தோற்றம் மாறிப்போன தன் நண்பரின் மனைவியை கண்டு திடுக்கிறார். அது வரை இல்லாத எண்ணமாக தன் மனைவியும் இப்படித்தானே தொடர்ந்த குழந்தைப்பேறால் உடல் குலைந்து போயிருக்கிறாள் என்று சட்டென்று அவருக்குத் தோன்றுகிறது.

[கதைத்தலைப்பு: பார்த்தது]. கருக்கலைப்புகளோ, குடும்பக்கட்டுப்பாட்டு திட்டங்களோ முறையாக இல்லாத காலகட்டத்தில் அழகிரிசாமி நிறைய கதைகளில் இந்த விஷயத்தை எழுதியிருக்கிறார். இயல்பாகவே பெண்கள் மீதான வாஞ்சையில், அதைக் குறித்த கவனம் கொண்டிருந்த மனதின் வெளிப்பாடுகள் இந்தக் கதைகள். அப்படி வரிசையாக பிறக்கும் பிள்ளைகள் படும் துயரங்களும் கதைகளில் உள்ளன. இதே போல ஒரு இளைஞர் எதேச்சையாக அறிமுகமான விலைமாதுவை சில ஆண்டுகள் கழித்து சந்திக்கும் போது அவளது தோற்றம் மாறி இருப்பதை கண்டு மனம் வேதனை கொள்கிறார் [மாறுதல்]. 

இருபதாம் நூற்றாண்டின் சுதந்திரப் போராட்ட காலகட்ட பின்புலத்தில், தொடர்ந்த சுரண்டல்களால் வளம் இழந்த சமூகமாக, நாட்டுப்புறங்களில் வேளாண்மை நலிந்து மக்கள் நகரத்திற்கு தள்ளப்படுகிறார்கள். வறுமை காரணமாக ஊர்ப்பெண்கள் நகரத்தில் வேறுவழியில்லாமல் விலைமகள்களாகிறார்கள். வறுமையின் காரணமாக விலைமகளாகும் பெண்ணின் அறியா வயது தம்பி அக்காவுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி பேருந்துநிலையத்தில் நின்று ஆட்களை வீட்டிற்கு வரும்படி அழைக்கிறான். கதைகளில் அந்தப்பெண்கள் மனம் சுருங்கிப்போகும் இடங்கள் முக்கியமான தருணங்கள் என்று நினைக்கிறேன். இவர்கள் வளமான உடலோ அலங்காரங்களோ கொண்டவர்கள் அல்ல. மெலிந்த பசித்த வயிறு உடைய கிராமத்துப் பிள்ளைகள். அழகானவர்கள் கூட இல்லை. பசியில் ஒட்டி உலர்ந்த சருகான வெறும் உடல்கள். தைரியமாக பேசக்கூடியவர்கள் அல்ல. குடும்பத்தில் உள்ள பெண்ணும் விலைமகளாகும் பெண்ணும் உள்ள இந்தக் கதைகளில் தங்களின் இளமைக்குள்ளேயே உடலும் உள்ளமும் நலிந்து போகும் பெண்களை அழகிரிசாமி எழுதியிருக்கிறார்

காதலும், கணவன் மனைவியின் பரஸ்பர அன்பும், விட்டுக்கொடுத்தலுக்கான கதைகள் கணிசமாக இத்தொகுப்பில் உள்ளன. உதாரணத்திற்கு குழந்தையில்லாத தம்பதிகளின் மனவெறுமையை, அதை மறக்க அவர்களுக்குள்ளே ஆடிக்கொள்ளும் ஒரு நாடகத்தை இந்தக்கதையில் காணலாம். [பட்டுசொக்காய்]. 

இந்தத்தொகுப்பில் குழந்தைகளை பற்றிய கதைகளும் கணிசமானவை. உதாரணத்திற்குகாற்றுஎன்ற கதையைச் சொல்லலாம். தன் வீட்டில் ஒரு திண்ணை இருக்க வேண்டும் என்பது ஒரு குழந்தையின் கனவாக இருக்கிறது. மூச்சுமுட்டும் ஒருஅறை கொண்ட மெட்ராஸ் வீட்டில் வானத்தைக் காண அந்த குழந்தை எப்போதும் ஏங்குகிறது

வறுமை ஒரு பெரியசூறைக்காற்றை போல அழகிரிசாமியின் கதைகளில் வருகிறது. அந்த சூறை அதுவரை காப்பாற்றி வந்த சிலரது வாழ்க்கையை ஒரு நொடியில் புரட்டிப்போடுகிறது. காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளை [ஜாதியாசாரம்] எங்கு சென்றாலும் ஜாதி துரத்தி அழிக்கிறது. மெட்ராஸ், கோயம்புத்தூர், திருச்சி என்று அவர்கள் வேலை நிமித்தம் அலைந்து திரிக்கிறார்கள். கிடைக்கும் வேலைகளும் காதல் திருமணம் தெரிய வரும் போது பறிக்கப்படுகிறது. வறுமையிலும் நோயிலும் விழும் கணவனைக் காப்பாற்ற மனைவி விலைமகளாகிறாள். அன்றைய சமூகத்தின் பிடிவாதமான வன்மத்தை இந்தக் கதையில் காணமுடிகிறது. அந்த கதையில் கணவன் , ‘உங்கள் ஜாதிக்காரப்பெண் வேசியாகலாம்ஆனால், மாற்று ஜாதிக்காரனின் மனைவியாக வாழக்கூடாது இல்லையா?’ என்று கேட்பான்

காலையில் உருவான ஒரு புரளி மாலைக்குள் எப்படி படிப்படியாக விஸ்வரூபம் எடுத்து இரவுக்குள் அது ஒரு புகை போல ஒன றுமில்லாமல் மறைகிறது என்பதைஆதாரம் இருக்கிறதாஎன்ற கதையில் அழகிரிசாமி சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார். இந்த கதையும் சமூகத்தின் மனநிலையில் உள்ள வன்மத்தை நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கும் கதை.

பசியால் காலையில் இருந்து இரவு வரை ஒரு உணவுவிடுதியின் உணவைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருக்கும் மாடசாமி தேவர் அழகிரிசாமி கதைகளில் மறக்க முடியாத கதாபாத்திரம். சொந்த ஊரில் நன்றாக வாழ்ந்த குடும்பம் பருவமழை பொய்ப்பினால் சரிந்து வீழ்கிறது. கையேந்தி பழக்கம் இல்லாத வாழ்க்கை. முருகேசம் பிள்ளையின் உணவுக்கடையில் பசியுடன் சென்று அமர்கிறார். மாடசாமி தேவர் பார்க்கவே பேருந்தில் இருந்து உணவு உண்ண ஆட்களைப் பிடிக்க அலைகிறார் முருகேசம் பிள்ளை. கூட்டம் இல்லாத நேரத்தில் தானும் இலைவிரித்து உண்கிறார். இரவு வரை பசியோடு அமர்ந்திருக்கும் மாடசாமித்தேவர் வாய்த்திறந்து கேட்காமல் வயிற்றை இழுத்துப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். இறுதியாக கடையை மூடிவிட்டு மீதமான தோசைகளுடன் வீட்டிற்குச் செல்லும் கடைக்காரரை மாடசாமித்தேவர் பின் தொடர்ந்து செல்கிறார். பசி பொறுக்க முடியாத கட்டத்தில், ‘நாளை பணம் தருக்கிறேன். இரண்டு தோசைகள் கொடுமய்யாஎன்று கேட்கிறார். வராத காசுக்குத் தரமுடியாது என்று கடைக்காரர் கேவலமாகப் பேசுகிறார். அங்கு வன்முறையின் முதல் எடுப்புத் தொடங்கிறது. கடையை மூடும் போது பசித்திருக்கும் வயிற்றுக்கு முன்பாக மீதமிருக்கும் கருப்பட்டிக்காப்பியை கீழே ஊற்றும் கடைக்காரரின் சித்திரம் முக்கியமானது. இது போல அழகிரிசாமி நிறைய இடங்களில் மானுடனின் நுண்மையான வன்மத்தைத் தொடுகிறார். இதே போல ஊர் எரியும் போதுக்கூட அதை கண்டு கொள்ளாது தான் கார் வாங்கியிருக்கும் பெருமையைப் பற்றியே நாள்முழுதும் பேசிக்கொண்டிருக்கும் சுந்தரம் என்ற கதாபாத்திரமும் மனதில் நிற்பவர். [கார் வாங்கிய சுந்தரம்]

அழகிரிசாமியின் புனைவுலகம் ஓரு மானுட சோதனைச் சாலை என்ற எண்ணம் வாசிக்கும் போது தோன்றியது. இவரின் புனைவுலகில் உச்சக்கட்ட வறுமை, பசி, நகரத்தின் இடநெருக்கடி என்று தன்னை அழுத்திச் சிதைக்கும் விசைகளின் முன் மானுடன் நிற்கிறான். எந்தப்பக்கம் விழுகிறான் என்பதே இந்தக்கதைகளை முக்கியமானவைகளாக மாற்றுகிறது. ஆச்சரியமாக மனிதன் எதிர்மனநிலையின் பக்கம் விழுவதைப் போலவே நேர்மறையின் பக்கமும் இயல்பாகவே விழுகிறான். [சந்திப்பு, இரு சகாதரர்கள்]

உதாரணமாக, இரு சகோதரர்கள் என்ற கதையை எடுத்துக் கொள்ளலாம். மிகவும் சிரமப்பட்டு தன்னைப் படிக்க வைக்கும் அண்ணனுக்காக திருமணத்தை தள்ளிவக்கும் தம்பிக்கு ஒரு எதிர்பாராத தருணத்தில் தன் அண்ணி மீது காமம் எழும் தருணத்தை மிக இயல்பாக கதையாக்கியிருக்கிறார். இந்தக்கதைகளில் யாரும் இயல்பில் திரிபு கொண்டவர்கள் இல்லை. வன்மம் கொண்டவர்கள் இல்லை. ஒரு கணநேரத்தில் மானுடரிடத்தில் தோன்றும் கசப்பும், உவகையும், வன்மமுமே, அன்பும், திரிபுமே இந்தக்கதைகளின் முக்கியத்துவம் என்று நினைக்கிறேன்.

எதிர்பாராத விதமாக விலைமகளின் வீட்டில் இருக்க நேரும் இளைஞன் தன் அருகில் முதுகுகாட்டி படுத்திருக்கும் அவளின் முதுகைத் தடவி, ‘அம்மா அழாதே.. வீட்டிற்குள் செல்என்று சொல்லும் தருணம் அழகிரிசாமி கதைகளில் மானுட மனம் தொடும் உயரங்களில் ஒன்று. [மாறுதல்] நாலு ஏக்கர் நிலத்தை தான் வாங்கிய கடனிற்காக எழுதிக்கொடுக்க முன்வரும் இளைஞனிடம், ‘தூரத்தில் இருக்கும் புஞ்சையால் எனக்கு எந்த லாபமுமில்லை; நீயே வைத்துப்பிழைஎன்று ப்ரோநோட்டை கிழித்துப்போடும் நம்மாழ்வார் [ இரு கணக்குகள்] என்ற பெரியவரும் இதே கதை உலகிற்குள் இருப்பவரே. அதே போல சுயநலத்தின் பக்கமே வீழும் மனங்களையும் இந்தக்கதைகளில் காணலாம். [இதுவும் போச்சு சிவா சிவா, ஏமாற்றும் வஞ்சமும்,அழகின் விலை]

இந்தக் கதையுலகில் நெருக்கடியான சூழலில் மனித மனதில் ஏற்படும் வைராக்கியம் கொடுக்கும் ஔி அசாத்தியமானது. [தம்பி ராமய்யா, கிழவியின் கனவு] அதுவும் அவ்வளவு நெருக்கடியில் நேர்மறையாக உள்ளம் செயல்படும் விதம் வியப்பானது. பொதுவாக இன்று நம்பிக்கை இழப்பு, கசப்பு உண்டாகும் தருணங்களாக உள்ளவை, ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வைராக்கியம் என்ற ஔி கொண்டவையாக மாறும் தருணங்கள் முக்கியமானது

தன் மனைவியை காமத்துடன் அணுகும் தம்பியை அண்ணன் மன்னித்து அனுப்புகிறார் [இரு சகாதரர்கள்]. இருவரும் நல்வர்களே . அவன் அண்ணனுக்காகவே திருமணத்தை தள்ளிப் போடுகிறான். அறியா கணத்தில் சட்டென மனம் தடம் மாறுகிறது. ‘இதுக்குதான் கல்யாணம் பண்ணிக்கச் சொன்னேன்என்று தம்பியை அண்ணன் அனுப்பி வைக்கிறான். அந்த தருணம் ஒரு சந்தர்ப்பத்தின் விளைவாகவே கதையில் இருக்கிறது. குற்றமாக இல்லை. குற்றம் புரிவதற்கு முன்பாக மனநிலை,பொருளாதார நிலை, உணர்வு நிலைகளை அழகிரிசாமி பெரும்பாலான கதைகளில் கையாண்டிருக்கிறார். முழுத் தொகுப்பை வாசிக்கும் போது ஒரு காலகட்டத்தின் விரிந்த சமூகசித்திரம் நமக்கு கிடைக்கிறது. கிராமம், நகரம், பணக்காரர் ஏழை, ஆண் பெண், குழந்தைகள், சமூகம் என்று அனைவரும் உலவும் வெளி அது. அந்த சமூகத்திற்கு பின்புலமாக விடுதலைப் போராட்ட காலகட்டம் இருக்கிறது. ஆனால், அதை அழகிரிசாமி பின்புலமாகக்கூட வைக்கவில்லை. ஒரு சமூகம் பசியிலும் வறுமையிலும் வயிற்றுப்பாடு மட்டுமே வாழ்க்கைப்பாடாக கொள்ளும் அளவிற்கு உள்ளது. அந்த சமூகம் தன் கலை இலக்கிய வரலாற்று பிரக்ஞை இன்றி அன்றாடப்பாடுகளில் செத்துக்கொண்டிருக்கிறது. அதில் உள்ள எளிய மானுட உள்ளத்தின் ஈரத்தை அழகிரிசாமி தொட்டு எடுக்கிறார். உதிரும் சருகுகளைக் காட்டுகிறார். இத்தனை வீழ்ச்சியிலும் அந்த சமூகம் மனித நேயமும், நேர்மையும், காதலுமாக உயிர்ப்பு கொண்டு முன்னர்கிறது

வறுமையும் ,பஞ்சமும், பசியுமான ஒரு உலகம். அதில் உலவும் எளிய மானுடர்கள். அவர்களுக்குள் உறையும் மனித சஞ்சலங்கள் மற்றும் மனித உணர்வுகளைக் கொண்ட கதைகள் இவை. கரையேறிய பின் நின்று பேசுபவர்களின் சொற்களல்ல இவை. தத்தளிப்பவனின் வாழ்க்கை இந்தக் கதைகளில் உள்ளது. உற்றார் யாருமே இல்லாது உறவினர் வீட்டுத் திண்ணையில் தஞ்சம் புகும் முத்துப்பிள்ளை நாள்தோறும் கூலி வேலைக்குச் சென்று அந்தக்கூலியை உறவினர் வீட்டில் கொடுத்துவிட்டு சாப்பிட்ட பின் திண்ணையில் படுத்துக்கொள்கிறார். அவரால் அவர்களுக்கு லாபமே. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரை அலட்சியமாக நடத்துகிறார்கள். தொடர்ந்து மழை பெய்யும் நாட்களில் அவருக்கு கூலி வேலை கிடைக்கவில்லை. அதோடில்லாமல் இன்னொரு மாடுமேய்க்கும் பையனான ஆண்டியும் அவருடன் திண்ணையில் படுக்க வந்துவிடுகிறான். தொடர்ந்த மழை நாட்கள். ஒரு நாள் இரவு உணவிற்காக அமரும் அவருக்கு நல்ல வசையுடன் உணவு பரிமாறப்படுகிறது. வேண்டுமென்றே சுடுகுழம்பை அவர் கையில் ஊற்றி தன் ஆங்காரத்தை வீட்டம்மாள் தணித்துக்கொள்கிறாள். அவள் உள்ளே சென்ற சமயத்தில் அவசரமாக நான்கு வாய் சாப்பிட்டவர் எழுந்து வெளியே சென்று மீதி உணவை காகிதத்தில் பத்திரப்படுத்துகிறார். அனைவரும் உறங்கிய நடுநிசியில் திண்ணையில் மழைக்கு குஞ்சுகளுடன் ஒதுங்கியிருக்கும் குருவிக்கு அந்த உணவை வைத்துவிட்டு ஆண்டியிடம்,” பத்து நாள் மழை..அதுவும் என்ன செய்யும்? எல்லாம் பொடிக்குஞ்சுகள்..அந்த தாய்க் குருவியப் பாரு,” என்று சொல்கிறார். அவன் உறங்கும் போது தன்னிடமுள்ள ஒற்றைக் கந்தலை அவனுக்கு போர்த்திவிட்டு கூரையை பார்த்துக் கொண்டிருக்கிறார். பசியும், வறுமையும், தனிமையும் வீழ்த்த வல்லவை மட்டுமல்ல; சிறகை அளிக்க வல்லவையும் கூட!

அதே போலசந்திப்புஎன்ற கதை எதிர்பார்ப்பற்ற அன்பின் வலிமையைக் காட்டும் கதையாக உள்ளது. குழந்தையில்லாத அண்டைவீட்டு சின்னம்மாவின் அன்பை பெற்ற ஒருவன் பதினைந்து வயதிலேயே பிழைப்பிற்காக மலேயா சென்று விடுகிறான். பெரிய வியாபாரியாகி பல ஆண்டுகள் கழித்து ஊர்ப்பக்கம் வியாபார விஷயமாக வருகிறார். அவருக்கே என்ன வியப்பு என்றால்,அவர் நோயுற்ற வேளைகளில் அந்த சின்னம்மாவின் முகமே நினைவில் அவருக்குத் துணையாக இருக்கிறது. அவ்வளவு வளர்ந்த பிறகும் தூரதேசத்திற்குச் சென்ற பிறகும் அந்த முகம் துன்பகாலத்தில் அவருடனே இருக்கிறது. அவர் வந்து பார்க்கும் போது அவள் வாழ்க்கை வெறுமையடைந்து மனிதர்களின் மீதான வாத்சல்யம் வற்றிப் போனவளாக இருக்கிறாள். இவரின் வருகையால் பாறையாகிப்போன நிலத்தில் மீண்டும் மழை தூறலைத் தொடங்குகிறது. சின்னஞ்சிறிய ஊற்றின் திறப்புகளே பெரும் நதிகளுக்கான ஆதிமூரங்களாக இருக்கின்றன. ஒரு சமூகம் இப்படியான பல ஊற்று கண்களாலேயே உயிர்ப்புடன் இயக்கம் பெறுகிறது

பிறப்பு, குடும்பம், ஜாதி, ஊர், உறவுமுறை, பாலினத்தை முன்னிட்டு மனிதரை வேறொரு ஆளாக காண்பது அழகிரிசாமியை தொந்தரவிற்கு உள்ளாக்கும் விஷயமாக இருக்கிறது. மனிதர் சகமனிதர்; இதை விட வேறென்ன வேண்டும் என்பது அவரை அலைகக்ழித்த கேள்வி என்று தோன்றுகிறது. தன் உறவு, தன் மனிதர், தன் குழந்தை, தன் வீட்டுப் பெண்கள் என்ற எல்லையை ஒவ்வொரு கதையிலுமே அவர் அழிக்கிறார். ஒவ்வொரு கதையிலும் மனித அன்பு முன்னே செல்வதை அழகிரிசாமியின் கதைகளில் காணமுடிகிறது. விலைமகளானாலும் தன் வீட்டுப் பெண்ணிற்கான அதே சொல்லை ஒருவனால் சொல்ல முடிகிறது. அடுத்தவர் வீட்டுப் பெண் என்றாலும், அவள் உருக்குலைந்து போனதை எண்ணி ஒருவன் விசனப்படுகிறான். தன் குழந்தைகள், பக்கத்துவீட்டு குழந்தைகள், பெயர் தெரியாத குழந்தைகள் என்று விரியும் வாஞ்சையால் ஆனது அழகிரிசாமியின் கதையுலகு. இந்த நேயமே அழகிரிசாமி எழுத்தின் ஆன்ம பலம் என்று நினைக்கிறேன்.

நம் மனதை இடித்து விசாலமாக்கும் கதைகள். இந்தக்கதைகள் மானிதர்களுக்கு இடையில் உள்ள கண்களுக்குப் புலப்படாத தடைகளை மெல்ல அழிக்கின்றன. வீட்டுக்குள் மட்டும் தான் நமக்கானவர்கள் இருக்க முடியும். அல்லது வீட்டில் உள்ளவர்களூக்காக மட்டுமே நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மிக மெல்லத் தொட்டு எடுத்து களைச்செடிகளை பிடுங்குவதைப்போல பிடுங்கி எறிகின்றன. இவை நம்மை குற்றம் சொல்பவை அல்ல. களையைப் பிடுங்கும் வேகத்தில் பயிருக்குச் சேதம் விளைவிக்காத தொடுகை இது. குற்றவுணர்வை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை அல்ல என்பதால் பிரச்சாரமும் அல்ல

இவை முன்வைக்கும் வாழ்க்கை ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பான வாழ்க்கை. ஆனால், நெருக்கடிகள் எப்போதும் உள்ளவை தானே. சுகமாக ஜீவித்திருக்கும் போது மாண்புகள் பெருகுவது இயல்பு. அதன் அழகு வேறு. சிக்கலான காலகட்டத்தில் உருவாக்கும் மாண்புகள் கள்ளிச்செடியின் வளர்நுனியில் பூக்கும் மலரைப் போன்றவை. அவை மனித வரலாற்றின் அடியில் நுண்தளமான ஒன்றின் அழியாத விதை போன்றது. அது மானிட பண்பாட்டின் எந்த நெருக்கடியிலும் மலர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

கு.அழகிரிசாமியின் காலகட்டத்தின் அன்றாடத்தின் கதைகள் இவை. அது சுதந்திரம் கிட்டா இந்தியா. பொருளாதார சிக்கலில் இருந்த இந்தியா. மக்கள் நெருக்கம் மிகுந்த இந்தியா. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த தனிமனிதர்களின் கதைகள் இவை

பெரிய கோபுரங்களைக் கட்டுவதற்கு முதலில் நிலம் சரியாக அமையவேண்டும். நிலத்தில் உள் மண் அடுக்குகளின் குணவிசேசங்கள் துணைநிற்க வேண்டும். அப்படி பார்த்து எழுப்பிய எத்தனையோ கோபுரங்கள் பாதியில் நிற்பதை கண்முன்னே காண்கிறோம். அது போலவே ஒரு சமூகமும் தன் நிலமாக உறுதி கொள்ள முதலில் மனித மனங்களின் பண்புகளின் அடித்தளம் தேவையாக இருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மத்திம காலகட்டம் என்ற சிக்கலான காலகட்டத்தின் கதைகள் இவை. இருண்டு கொண்டிருந்த அந்தியில் எழுந்த மேற்கு வானின் விண்மீன்கள். ஆனால், மனிதப் பண்புகள் ஒருகாலகட்டத்திற்கு மட்டுமே உரியனாவா என்ன? அன்றிருந்த சிக்கல்கள் இன்று வேறு வடிவங்கள் எடுத்துள்ளன. அந்த மீன்களின் வருகை எப்போதும் தேவைப்படுவதுதான் இல்லையா?

[முற்றும்]

[‘வெந்தழால் வேகாதுஎன்ற இந்தக் கட்டுரைத் தொடரை கு.அழகிரிசாமி – கி.ரா நூற்றாண்டில்புரவிமாத இதழில் எழுதத் தொடங்கினேன். இடையில் சில காரணங்களால் தடை பட்டது. பின்னர், வாசகசாலை இணைய இதழில் தொடர்ந்தது. இருவரின் நூற்றாண்டும் நிறைவு பெறும் இந்த மாதத்தில் கட்டுரைத் தொடரை நிறைவு செய்வதில் மகிழ்கிறேன்.]

*****

[email protected]

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button