இணைய இதழ்இணைய இதழ் 57சிறுகதைகள்

வேதனைக்கு வாக்கப்பட்டவர்கள் – நித்வி

சிறுகதை | வாசகசாலை

“லேய், காமுட்டாப் பயலே எப்புடிப் போற?” – என்று என்னை இடிக்க வந்தவாறு சென்ற பைக்காரனை திட்டிக்கொண்டே அறுபது வேகத்தில் ஆண்டிபட்டி கானாவிலக்கு சாலையில் சென்று கொண்டு இருக்கிறேன். ஆக்சிலேட்டரை முறுக்கினேன் வண்டி அறுபதில் இருந்து தாவி எண்பதைத் தொட்டது. வேக முள் எண்பதைத் தொட்ட மாத்திரத்தில் வண்டியில் அதிர்வு ஆரம்பமானது பின்பு இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை கால் வைத்திருக்கும் இடம் அதிரத் தொடங்கி மொத்த வண்டியுமே ஆட்டம் கண்டது. என்னைக் கடந்து சென்றது என்பீல்டு வண்டி. அதில் போனவன் ஜீன்ஸ் பேண்ட், மேலே டீ சர்ட், அதன் மேலே ஒரு ஜெர்கின், தலையில் என்பீல்டுக்கே உண்டான தோரணை தரும் ஹெல்மெட் என ஆள் பார்க்க படு ‘போர்சாக’ இருந்தான். அவன் தோரணையிலயே தெரிந்தது அவன் கண்டிப்பாக மூணாறுக்குத்தான் சுற்றுலா செல்கிறான் என்று. நானும் சென்று கொண்டுதான் இருக்கிறேன் எனது எக்சலில்..இன்பச்சுற்றுலா அல்ல; துன்பச்சுற்றுலா. வண்டியின் முன்னே ஒரு வயர் கூடை. அதில் சோறு, குழம்பு, கீரை, கூட்டு என அடுக்குகளுக்குள். கானாவிலக்கு ஆஸ்பத்திரிக்குள் வண்டியை விட்டேன்.

இங்கு என்றுமே கூட்டத்திற்கு கணக்கு வழக்கே கிடையாது. எல்லா நாட்களிலுமே இப்படித்தான். என்னைப் போன்றே வயர் கூடை தூக்கிக்கொண்டு பல தலைகள் உள்ளேயும் வெளியேயும் சென்று கொண்டிருந்தனர். “நாளைக்கி தீவாவளினு இங்க இருக்க ஒரு பயலுக்குந் தெரியாதா? ஒண்ணுமே தெரியாத மாரி இப்புடி இருக்காங்களே. சரி, நாம மட்டும் என்ன சந்தோசத்துல பொரண்டுக்கிட்டா இருக்கோம்? எல்லாம் நம்பள மாரித்தே வேற வழி இல்லாம இப்புடிலா” என்று புலம்பிக்கொண்டே வண்டிக்கு சைடு லாக் போட்டுவிட்டு வயர் கூடையை கையில் எடுத்து நானும் பல தலைகளுள் எனது தலையையும் உள்ளே கொடுத்தேன். தேனி மாவட்டத்திலே உள்ள பெரிய அரசு ஆஸ்பத்திரி இதுதான், பின்னே கூட்டம் இல்லாமல் எப்படி இருக்கும்? ஊசி போட வரிசையில் அமர்ந்திருக்கும் பலரும், “லொக்கு லொக்குனு” இருமிக் கொண்டு தான் இருந்தார்கள். காய்ச்சலுக்கு தெரியாதல்லவா நாளை தீபாவளி என்று நினைத்துக்கொண்டு பல வார்டுகள், பல படிக்கட்டுகள், பல டாக்டர்களைக் கடந்து உள் நோயாளிகளின் வார்டுக்கு வந்து உள்ளே நுழைந்தால், எப்போதும் போலத்தான் ஒரு இடம்கூட காலியாக இருக்கவில்லை, அனைத்துப் படுக்கைகளும் தனக்கென்று கிடைத்த ஆட்களை விட்டுவிடாமல் பத்திரப்படுத்தி வைத்து இருந்தது.

நான்காவது பெட்டில் அம்மா, கிழவி, தம்பி சுற்றி அமர்ந்து இருக்க, சொட்டுச் சொட்டாய் விழும் குளுகோஸை ஏந்திய வண்ணம் தலகாணியை நெட்டுக்கு நேராக வைத்து அதில் தலையையும் முதுகையும் அண்டக் கொடுத்து ஒரு கால் மேல் இன்னொரு காலை போட்டு படுத்திருந்தார் எனது அப்பா ராசுக்கண்ணு.

கிழவி பொங்கியது….”ஏண்டா இம்புட்டு நேரோ என்னதே பண்ணிக்கிட்ருந்த ?”

“ம்ம்ம்….ம்‌…. அல்லாரும் இங்க வந்து படுத்துக்குட்ட ஆரு மாட்டுக்கு தண்ணி காட்றது.. ஆரு மோட்டார போட்டு விட்றது? நெனவு கெட்டு பேசக்குடாது கெழவி” என கிழவியை அதட்டும் தொனியிலே பேசினேன் கிழவியும் விடுவதாயில்லை கூடவே நானும். 

“ங்கொப்பே இங்க முடியாம கெடக்குறானே என்னானு ஒரு வாத்த கேட்டியா? எம்மேல எறிஞ்சு எறிஞ்சு விழுகுற?” 

“பிறவு ஒம்மேல எறிஞ்சு விழுகாம என்ன பண்றது. வேலயப்பாரு கெழவி.. சும்மா என்னத்தையாச்சும் பேசிக்கிட்டு. காலையிலயே வேலயக் கெடுத்து இங்க வர வச்சிட்டு இப்ப என்னய எதனாச்சும் பேசவச்சுராத. அம்புட்டுதே சொல்ட்டே. ஒம் மகனுக்கு நீ ஒத்தூது.. அல்லாரையும் ஊதச் சொல்லாத!” – மறுவார்த்தை பேச வாய் எடுத்த கிழவியை பேசவிடாமல் அம்மா, “இன்னைக்கு ஆருடா சோறாக்கி குடுத்து விட்டது?” என்று கேட்க, “சித்திதே.. வேற யாரு?” என எரிச்சலாக பதிலளித்தேன்.

“அதுக்கேன்டா எம்மேல இப்புடி பொறியிற ?”

“இல்லம்மா, சொன்னே அம்புட்டுதே….”

“உங்க சித்தப்பே வரேன்னு சொன்னையான். இன்னும் ஆளக் காணோ?” என்று அப்பா என்னிடம் வாய் எடுத்தார்.

“ஆமா, இப்ப அது ஒன்னுக்குதேங் கொனச்சலு இங்க. நீ இருக்க இருப்புக்கு பொழுதன்னைக்கும் ஒன் நொண்ணனுந் தொம்பியிம் வந்து பீத்துட்டு போவாங்க பீத்துட்டு” – என எண்ணெயில் போட்ட கடுகாய் அம்மா வெடித்துச் சிதறியது. தம்பியோ எதைப்பற்றியும் துளியும் தெரியாது பட்டன் போனில் பாம்பு கேம் விளையாடிக்கொண்டிருந்தான். சரியாக நான் கீழே குனிந்து போனைப் பார்க்க அவன் அவுட்டாகிவிட்டான் மேலே நிமிர்ந்து என்னைப் பார்த்து, “நீ பாத்ததாலதே அவுட்டாயிட்டேன். இல்லேனா இன்னக்கி ஹைஸ்கோரு வெச்சுருப்பே தெரியுமா?”

“கிளிச்சுருப்ப போடா..எனக்குத் தெரியாதாக்கும்”

“ஏய், நாந்தே இப்பதிக்கி இதுல அதிகோ வெச்சிருக்கேன், நீயே கம்மிதே..ஹி ஹி!” – என என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டான்…

எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியாத ஒரு நிலை. கூட்டைக் கலைத்து கட்டும் பறவைகளைப் போலவே நாங்களும் ஆறு மாதத்திற்கோ எட்டு மாதத்திற்கோ ஒருமுறை ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியாய் மாறி மாறி சென்று கொண்டே இருக்கிறோம். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இதே நிலைமைதான். அவராக திருந்துவாரா என்று பார்த்தால் கிடையாது. உடன் பிறந்த அண்ணன் தம்பிகள் சொல்லிப் பார்த்தார்கள் அவர்கள் பேச்சிற்கும் இயைந்த பாடில்லை, சரி என ஊர் பெரியவர்களைக் கூப்பிட்டு அவர்களும் பேசிப் பார்த்தார்கள். ‘நாங் கேப்பேனா.. போங்கடா’ என்ற ஒரு அசட்டு உதாசீனம் அனைவரிடமும். இது எங்கே சென்று முடியுமோ என்று ஒரு விடை தெரியாத கேள்வியைத் தோளில் சுமந்து கொண்டு தினமும் அல்லாடிக்கொண்டு இருக்கிறோம். 

திடீரென ஒரே சலசலப்பு. தலைகவிழ்ந்து இருந்த நான் நிமிர்ந்து பார்த்தேன். டாக்டர் உள்ளே நுழைந்திருக்கிறார். கூடவே நர்ஸ் அக்காவும் பரிச்சை அட்டையில் சில வெள்ளைத் தாள்களை அட்டையின் கிளிப்பில் சொருகிக்கொண்டு டாக்டர் பின்னாடியே வந்தார்.

ஒவ்வொரு பெட்டாக பார்த்துக் கொண்டு வந்தார். ஒவ்வொருவரையும் விசாரித்து தொட்டுப் பார்த்துவிட்டு நர்ஸ் அக்காவிடம் ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தார். அவரும் அந்த பரிச்சை அட்டையில் சில கிறுக்கல்கள் கிறுக்கி விட்டுவிட்டு மறுபடியும் அவரை பின் தொடர்ந்து கொண்டிருந்தார். எனது அப்பாவின் பெட்டிற்கு வந்து விட்டனர். நானும் அம்மாவும் உட்கார்ந்திருந்த பெஞ்சியை விட்டு விருட்டென எழுந்து கொண்டோம். கிழவி பெட்டின் கீழ்ப்புறத்தில் ஒற்றைக்கால் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தது. டாக்டரை பார்த்ததும் கைகளை தரையில் ஊணி, ‘எம்மா எம்மா.. ஐயோ!’ என்ற சில முனகல்கள் முனகிக்கொண்டே மெல்ல எழுந்தது. நிமிர்ந்து உட்கார முற்பட்ட அப்பாவை தோள்களில் கை வைத்து. “இருக்கட்டும் இருக்கட்டும் ராசுக்கண்ணு,,பரவால்ல. அப்பறம் இப்ப எப்படி இருக்கு?” என்றார் டாக்டர். 

“பரவால்லிங்க சார்…இப்போ கொஞ்சோ நல்லாருக்க மாரி இருக்குது” 

“வயிறு எதுவும் வலிக்குதா ?”

“இல்ல சார். வயித்த வலியெல்லா இப்போ இல்ல சார்.”

“சேரி, அப்போ இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிக்கோங்க, நாளைக்கு சந்தோசமா போயி தீபாவளியை கொண்டாடு ராசுக்கண்ணு….ஒனக்காக இல்லன்னாங் கூட உங் குடும்பத்த பாருய்யா. ஒத்தப்புள்ள அது என்னதே பண்ணும்? பாவம், கைக்கு நிமுந்த பயலுகல வீட்ல வெச்சுக்கிட்டு இப்புடியா பண்றது.. எல்லா அந்த புள்ள மொகத்துக்காகத்தே.. கொஞ்ச நஞ்ச அழுகயா.. இனிமேயாச்சும் பாத்து நடந்துக்க.. என்ன சொல்றது புரிஞ்ச்சா ராசுக்கண்ணு?”

“இனிமேலு குடிக்க மாட்டே சார். நாம் பட்ட பாடு போதும் போதும்னு ஆயிப்போச்சு சார். இனி இத தெடுவனா?” – என்று எனது அப்பா மூச்சை இறைத்து இறைத்து பேசி முடிக்க, “சரி, பாத்து பத்திரமா வீட்டுக்கு கூப்ட்டு போமா” என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு என்னையும் பார்த்து ஒரு சிறுநகை புரிந்துவிட்டு, அடுத்த பெட்டில் இருக்கும் அமிர்தலிங்கம் தாத்தாவை கவனிக்க சென்றுவிட்டார் டாக்டர். 

நானும் அம்மாவும் ஒரு நெடிய பெருமூச்சு விட்டு பெஞ்சியில் அமர்ந்தோம். கிழவி கீழே உட்காரப் போக நான் அதைத் தடுத்து பெஞ்சியில் உட்கார செய்தேன். டாக்டரு கெளம்பச் சொல்லிட்டாருல வெள்ளனாவே கெளம்பிருவோம், போறத்தே போறோ வெள்ளனாவே வீடு போயிச் சேரலாமுல. வீடு வேற என்ன கண்றாவில கெடக்கோ ?” என்று அம்மா ஒரே புலம்பல்.

“கொஞ்ச நஞ்சமாச்சு வீட்டுப் பக்கோ வரணு. இங்கனயே கெடந்தா அப்பொறோ வீடு கண்றாவியாத்தே இருக்கும். ஒத்தையாள நாந் தோட்டத்த பாக்குறதா இல்ல வீட்டுப் போயி பாக்குறதா ? சேரிச் சேரி இப்புடிலா நடக்கனுன்னு விதி இருக்கு யாரைச் சொல்லி என்ன பண்ண….?”

நாங்கள் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தார் எனது அப்பா. அவரிடம் இருந்து ஒவ்வொரு முறையும் கேட்கும் அதே வார்த்தைகள் இப்போதும் ஒரு வார்த்தை கூட மாறாமல் அப்படியே வெளிப்பட்டது. “யேய்.‌. யேய்….போனதப்பத்தி பேசாதடி..”

எனது தம்பி அவர் பேச ஆரம்பித்ததும் கேம் விளையாடுவதை விட்டு விட்டு அவரைப் பார்த்தான் ஏனென்றால் அனைத்து முறையுமே அவர் பேசும் டயலாக்குகள் அவனிடமே பேசப்படும். அதற்கு தான் அவன் கேம் விளையாடாமல் கேரக்டருக்குள் தன்னை ஈடுபடுத்துகிறான். “அப்பா, இனிமேலு குடிக்க மாட்டே.. எந்த தப்பும் பண்ண மாட்டே”.

:ஆஆஆ.வயிரெல்லா விண்ணு விண்ணுனு வலிக்கிது. இனிமே இந்தக் கருமத்த தொடவே மாட்டே” – என்று என் தம்பியை பார்த்து வார்த்தை மாறாமல் சொன்னார். எத்தனையாவது தடவை என்ற கணக்கு எல்லாம் எனக்கு ஞாபகம் இல்லை…

“மோவ்… கெளம்பும்மா வெள்ளனா போலான்ட்டு என்ன பேச்சு? நாங் கீழ போறே.. நீங்க வேமா வாங்க” என நான் கொண்டு வந்த வயர் கூடையையும், அவர் போர்த்தியிருந்த போர்வையையும் கீழே எடுத்துச் சென்றேன் அனைத்தையும் வண்டியில் சொருகிக்கொண்டு வண்டியின் மீதேறினேன்.

“லேய்… மாப்ள… எலேய்…“ – திரும்பிப் பார்த்தேன். எனது கல்லூரித்தோழன். கல்லூரி முடிந்து வருடம் ஆகிறது என்பது கூட மறந்து விட்டது எனக்கு.

“என்னடா இங்க?” 

“மாமாவுக்கு டைபாய்டு காச்சன்னு இங்க சேத்துருக்காங்க. அதே பாக்க வந்தே.. சரி, கோயமுத்தூர்ல இருந்து எப்ப வந்த?”

“நேத்துத்தே மாப்ள வந்தே..”

“ஆமா, நீ என்னடா இங்க?”

“எல்லா எப்பையு நடக்குற கததே”

“என்னடா சொல்ற.. இன்னுமாடா உங்கய்யா இப்புடி பண்ணிகிட்டுருக்காரு?”

“என்ன மாப்ள பண்றது? இன்னு அப்பிடிடுத்தே நடந்துகிட்ருக்கு”

“பேசிப் பார்றா அவர்ட்ட”

“எத்தன தடவடா பேசுறது? அன்பாச் சொல்லியும் பார்த்தாச்சு.. கோவப்பட்டும் பார்த்தாச்சு. ஒன்னு நடக்கல. என்ன பெரச்சனனு சொன்னா தான தெரியும்? குடுச்சா எல்லாஞ் சரியாப் போயிருமா ?”

“அட.. கடம் பெரச்சனயா இருந்தாக் கூட சொல்லு.. என்னா ஏதுனு பாத்துக்கலாம்”

“ஒன்னுமுல்ல குடிதே…”

“விடு சரியாயிடும். எல்லா நேரந்தே”

“டேய் பெரியவிங்க பேசுறது கனக்கா நேரம் கீறம்னு.. ஒரு மனுசன இத்தன வருசமாவாடா நேரம் போட்டு ஆட்டும்? நம்ம திமுரெடுத்துக் குடிச்சுட்டு நேரத்து மேல பழிய போடுறதா.. ஊர்ல பூராப் பயலுமே சொன்னாங்க, ‘ங்கொப்பே திருந்த மாட்டயான். நீயிம் தலயெடுத்து வண்ட.. இனிமேலுலா குடுச்சான்னு வச்சுக்க.. கூசாம கைய வெச்சுரு. இல்லேனா வசத்துக்கு வரமாட்டயா பாத்துக்க’ன்னு சொல்றாங்க. இந்தாளு பண்றதுக்கு எனக்கும் பல தடவ தோணிருக்கு..பெத்த அப்பனப் போயி கை வெக்கிறதான்னு ஒரே நெனப்பா இருக்கு, அம்மா கஷ்டப்படுறதயும் பாக்க முடியல…”

“நல்ல வேள எங்க வீட்ல பொம்பளப் பிள்ள இல்லாமப் போச்சு…. “

“பாத்தியா இப்பத்தே நியாவகம் வருது. எங்கக்காவுக்கு அடுத்த மாசோ கல்யாணன்டா. மறந்துறாத மாப்ள நம்ப செட்டுக்கு பூரா சொல்லிட்டே. வந்துருங்கடா…”

“சேர்ரா மாப்ள.. நீ பாரு. நா வாரே” என்று சொல்லி விலகினேன்.

ஆஸ்பத்திரியில் ஒரு வாரக் கூத்து முடிந்து வீடு திரும்பினோம். அடுத்த கூத்து நடக்க எப்படியும் ஆறு ஏழு மாதங்கள் ஆகும் என நினைக்கிறேன். அதுவரையாவது கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட நேரமிருக்கிறது.

காலை லேட்டாகத்தான் எழுந்தேன். வெளியே தம்பி சீனி வேட்டுக்களை ஒவ்வொன்றாக திரியைப் பிய்த்து வெடித்துக் கொண்டிருந்தான். இடது கையில் ஊதுபத்தி..வலது கையில் சீனி வேட்டு. வலது கையில் இருக்கும் சீனி வேட்டு இடது கை பத்தியை மோதியதும் அதை வானத்திற்கு பறக்க விட்டான். அப்பா குளித்து முடித்து ரெடியாகி இருந்தார். நான் குளிக்க கம்மாவுக்கு கிளம்பினேன். அம்மா அவர் கையில் ரூபாய் நோட்டுகளை திணித்து வயர் கூடையே கொடுத்து கறி எடுத்து வரச் சொன்னார், 

நான் ஏறிட்டு அம்மாவை பார்த்தேன். அம்மாவின் நினைப்போ அவர் நேற்றுதான் ஆஸ்பத்திரியில் இருந்து திருந்தி வந்திருக்கிறார்; அவரை குடிப்பவர் என்று வேற்று ஆளாக நாங்கள் நினைக்கக் கூடாது என்பதாகவும், அவரும் தம்மை நம்வீட்டார் என்று நினைக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. அவர் கறி எடுக்க கிளம்ப, நான் குளிக்க கிளம்பினேன். 

குளித்துவிட்டு தலை துவட்டிக்கொண்டிருக்க, போனில் ரிங் அடித்தது. எடுத்த மாத்திரத்தில் அம்மா, “லேய்… அந்தாளு மறுவுடியிம் குடிச்சுப்புட்டு ரோட்ல விழுந்து கெடக்குறாராம்டா..” 

அம்மாவின் அந்த வார்த்தைகள் அவனது ஆறுமாத நிம்மதிப் பெருமூச்சை ஆட்டம் காண வைத்தவிட்டது. 

“அந்தாள, இந்தா வரே இரு…..”

 ******

nithvisnotebook@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button