
ஊரிலிருந்தவர்கள் அனைவரும் அந்த மரத்தினருகில் கூடியிருந்தார்கள். மகளின் இரண்டாவது பிரசவத்திற்காக புதுக்கோட்டைக்குச் சென்ற ராமய்யா, திருப்பூரில் மகனை போலீஸ் பிடித்ததால் சென்ற மணியன், இரண்டு ஆண்டுகளாக கட்டிலை விட்டு இறங்காத சுப்பம்மா ஆகியோர் மட்டும் வரவில்லை. பள்ளிக்கு விடுமுறை தினம் என்பதால் கைக்குழந்தையிலிருந்து எல்லாப் பிள்ளைகளும் வந்திருந்தன. பெரியவர்களுக்கு உள்ளூர அச்சம் இருந்தாலும் இவ்வூரில் இதுவரை நிகழாதவொன்று நிகழவிருக்கிறது, இதை தவறவிடக் கூடாது என்ற எண்ணத்தினால் வந்துவிட்டார்கள். அதிசயமென நடப்பதை பிள்ளைகளும் பார்க்கட்டுமே என்று அவர்களையும் அனுமதித்திருந்தார்கள். அத்தனை பேரும் அந்தப் புங்கை மரத்தையே நோக்கினார்கள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே அதன் உச்சி தெரியுமாறு ஓங்கி வளர்ந்திருக்கிறது. அடிமரத்தை வாட்டசாட்டமான இரண்டுபேர் சேர்ந்து கைகோர்த்தால்தான் கட்டிப்பிடிக்க இயலும். இரண்டு ஆள் உயரமான அடிமரத்தின் நடுவில் பெரும் பலூன்போல உருண்டையாக உப்பியிருந்தது. உப்பிய பகுதியில் பட்டையே இல்லாமல் யானைக்கால் வியாதி கொண்டவரின் காலில் காணப்படும் கொப்புளங்கள் போல சிறு சிறு வீக்கமாகவும் அதன் மேல் புண்கண்கள் போன்ற கருப்பு புள்ளிகளும் பார்ப்பதற்கே அருவெறுப்பாகவும் அச்சம் தரக் கூடியதாகவும் இருந்தது. இலைகளின் பச்சை அத்தனை துல்லியமாக துளி தூசு படியாமல் சற்று நேரத்திற்குமுன் மழையில் நனைந்ததுபோல பளிச்சென்று இருந்தது.
கொஞ்சமாவது மாசுமருவில்லாத எதுவுமே இயல்பில்லாத ஒன்றென மனிதரிடம் பெரும் பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்திவிடுகின்றன. இந்த மரம்தான் இப்போது வெட்டப்பட இருக்கிறது. வெட்டும்போது நிகழப்போவதென்ன என்பதை அறியவே பேராவலுடன் அத்தனை பேரும் காத்திருக்கிறார்கள்.
இந்த மரம் முதலில் இருந்தே இப்படியில்லை. பெரும் வேப்பமரத்தின் அருகில்தான் இது செடியாக வளர்ந்தது. அந்த வேப்பமரம்தான் ஒருநாளைக்கு ஒருமுறை மதியத்தில் புதுவயலில் இருந்து அறந்தாங்கிக்கும் மாலையில் மறு மார்க்கத்திலும் செல்லும் பேருந்திற்கு நிறுத்துமிடமாக இருந்தது. வேப்ப மரத்தின் வேர்களில் அமர்ந்தும் நிழலில் நின்றும் சனங்கள் பேருந்துக்கு காத்திருப்பார்கள். இந்த மரத்தின் செடியைக் கண்டவர்கள் வேம்பின் நிழலில் இதனால் தழைக்க முடியாதென்றே கருதினார்கள். ஆனால், இது செடியிலிருந்து பெருத்து மரமாக மாறும்போது வேம்பு சிறிது சிறிதாக பட ஆரம்பித்தது. அதன் ஒருகிளையின் ஒட்டுமொத்த இலைகளும் ஒரே நாளில் தீப்பட்டதுபோல காய்ந்தன. ஒரு வாரத்தில் அந்தக் கிளை பட்டை உரிந்துபோய் எலும்புக்கூடு போலானது. பட்ட கிளை மரத்தில் இருக்கக்கூடாதென தவசிப்பிள்ளை கூறியதும் இரண்டு இளவட்ட பிள்ளைகள் அதனை முறித்துச் சென்று தங்கள் வீட்டின் விறகுகளோடு போட்டார்கள்.
இந்த மரம் வளரவளர வேம்பின் ஒவ்வொரு கிளையாக பட்டுக்கொண்டு வந்தாலும் யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. இந்த மரத்தின் வளர்ச்சியும் இலைகளின் அடர்பசுமை ஏற்படுத்திய குளிர்ச்சியும் சனங்களிடையே ஒருவித மலர்ச்சியை உண்டாக்கியது. வேம்பின் இலைகள் சிறியதாகவும் சற்று இடைவெளி விட்டும் இருந்ததால் அதன் நிழல் அடர்ந்து இல்லாமல் சூரியவொளி ஊடுருவும் வண்ணமே இருக்கும். நிழலில் பத்து நிமிடங்கள் நின்றால் வெயிலில் நிற்பதாகவே தோன்றிவிடும். ஆனால், இம்மரத்தின் இலைகள் சற்று அகலமாகவும் அடர்ந்தும் நெருக்கமாகவும் இருந்ததால் இதன் நிழல் சூரியவொளி ஊடுருவாமல் சற்று குளிர்ச்சியாக இருந்தது. வெடித்த பருத்தியின் சிறு மாதிரி போன்ற மென்மையான வெண்ணிற மலர்கள் பசுமையை முழுதாக மறைத்து பூத்தது. ஒருவித கிறக்கத்தை தந்த அந்த மலர்களின் வாசனைக்கு ஒளி ஊடுருவும் மென்சிறகுகளுடன் விதவிதமான சிறு பூச்சிகள் வந்து ரீங்காரமிட்டு திரிந்தன. பல்வேறு வண்ணக்கலவையாக இருந்த அம்மரம் பார்ப்பதற்கே பெரும் பரவசமளித்தது. முன்பு பேருந்து ஏறுபவர்கள் மட்டுமே அங்கு வந்த நிலை மாறி நிழலுக்காகவும் வர ஆரம்பித்தார்கள். சட்டென வேம்பு முழுவதுமாக இல்லாமலாகி இந்த மரம் மட்டுமே நின்றது. அந்த வருட திருவிழாவிற்காக கூட்டம்போட முடிவு செய்து இடம் எப்போதும்போல வேப்பமரத்தடி என்று குறிக்கப்பட்டது. அப்போது சபை நாகரீகம் பற்றிய போதமில்லாத ஒரு பொடியன், “அங்கதான் வேப்ப மரமே இல்லையே” என்றான். அப்போதுதான் திடுக்கிடலுடன் அத்தனை பேரும் அதன் இழப்பை உணர்ந்தார்கள். அது இல்லாமலானதை உணரவிடாதவாறு இந்த மரம் வளர்ந்திருந்ததைப் பற்றி வியப்புடன் பேசிக் கொண்டார்கள். அதன்பின் ஊர்க்கூட்டம் இந்த மரத்தின் கீழேயே நிகழ ஆரம்பித்தது.
இரண்டு மாதத்திற்குமுன் வரை எல்லாம் சரியாகத்தான் இருந்தது. சித்ரா பௌர்ணமிக்கு மறுநாள்தான் அடி மரத்தின் மத்தியில் சிறு புடைப்பு தோன்ற ஆரம்பித்தது. ஒரு வாரத்திற்குள் இப்போது இருக்கும் அளவிற்கு பெரிதாக ஊதி, காண்பவர்கள் அச்சப்படும் அளவிற்கு பருத்துவிட்டது. பருத்ததுகூட பரவாயில்லை அந்த சிறு கொப்புளங்களை சற்று கூர்ந்து நோக்கினால் அதிலிருந்து சீழ் வழியப்போவது போன்று மனதிற்குத் தோன்ற ஆரம்பித்துவிடும். குளிர்ச்சியைத் தந்த நிழல், நடுக்கத்தை தர ஆரம்பித்தது. மாலை மசங்கிய நேரத்தில் சைக்கிளில் வந்த வெளியூர்க்காரர் ஒருவர் இவ்வூர் சாலையில் திரும்பியவுடன் சட்டென எதிர்ப்பட்ட பிரமாண்ட மரத்தைக் கண்டு, “அய்யோ ராட்சசன்” என்று அலறியபடியே சரிந்தார். சத்தம் கேட்டு கூடியவர்கள் முகத்தில் நீர் தெளித்து எழுப்பியபோது திக்பிரமை பிடித்தவராக, “ராட்சசன்… ராட்சசன்..” என்று மரத்தைச் சுட்டி கதறியடி இருந்தார். எப்படியோ அவரின் ஊர் எதுவெனக் கேட்டறிந்து கொண்டுபோய் விட்டு வந்தார்கள். அதன் பிறகு அத்தனை பேரின் பார்வையிலும் ராட்சசன் என்பதே பதிந்து போய்விட்டது. அம்மரத்தின் அருகில் யாருமே செல்வதில்லை. அந்தப் பக்கம் செல்பவர்கள் மாபெரும் விழியொன்றின் நோக்கினை உணர்ந்து மெய்சிலிர்த்தனர். 360 பாகை கோணத்தில் எவ்விடத்தில் நின்றாலும் அப்பிரமாண்ட விழியின் நோக்கை தவிர்க்க இயலவில்லை. சிறு மகவுகள் ஏனென்று தெரியாமல் நிறுத்தாமல் அழுதன. கருவுற்றிருந்தவர்கள் தீக்கனா கண்டு நள்ளிரவில் வியர்த்து எழுந்தார்கள். ஆண்களுக்கும் உள்ளூர ஓர் அச்சம் நிலையாக நீடித்தது. ஒரு சில ஆண்கள் மட்டும் தங்களுக்கு பயமேதுமில்லை என காட்டும் விதமாக வீம்பாக அந்தப் பக்கம் செல்வதோடு சரி. பிறர் செல்வதில்லை. பேருந்து ஏறுவதற்கும் மரத்தடிக்குச் செல்லாமல் ஒரு கிலோ மீட்டர் நடந்து போசம்பட்டிக்கு சென்று ஏறினார்கள்.
பலமுறை ஊர் முக்கந்தர் வீட்டில் கூடி என்ன செய்வதெனப் பேசினார்கள். அம்மரம் உண்மையிலேயே ஒரு தீய சக்திதான் என்பதில் எவருக்கும் ஐயம் இல்லை. ஆனால், அதனால் எந்தத் தீங்கும் பெரிதாக இல்லை. அந்த வெளியூர்க்காரர் கூறியதால்தான் எல்லோர் மனதிலும் அச்சம் பீடித்துவிட்டது என முக்கந்தர் கூறினார். ஆனால், பிள்ளைகள் அழுவதும் தீக்கனவுகள் தோன்றுவதும் தீய நிமித்தங்கள் என்று கோவில் பூசாரி ஆவுடையப்பன் கூறினார். என்ன செய்வதென எல்லோரும் அறிந்திருந்தாலும் யாருமே பேசவில்லை. அதை தம் வாயால் முன்மொழியக்கூடாது என்றே ஒவ்வொருவரும் எண்ணி யாருமே சொல்லாமல் கூட்டம் கலைந்தது.
கடந்த வாரம் நிகழ்ந்தவை தொடர்ந்து அவ்வாறு தள்ளிப்போட முடியாமல் செய்தது. இரண்டு மாதத்திற்கு முன்பு வரை பொழுது சாயும்போதே கரிச்சானும் காகமும் மைனாவும் அம்மரத்தில் அடைந்துவிடும். இரண்டு மணி நேரத்திற்கு அவற்றின் கீச்சொலி ஊர் முழுக்கவே எதிரொலிக்கும். பகலில் குயிலும் கிளிகளும் அமர்ந்து கூவி பேசிக் கொண்டிருக்கும். அந்தப் புடைப்பு தோன்ற ஆரம்பித்தவுடன் எந்தப் பறவையும் அந்த மரத்திற்கு செல்வதில்லை. எல்லா மரங்களிலும் அமரும் கரிக்குருவிகள் கூட அதில் அமர்வதில்லை. ஒரேயொரு கழுகு மட்டும் எப்போதாவது உச்சியில் அமர்ந்திருக்கும். அடர்ந்த இலைகள் மறைப்பதால் கீழிருந்து பார்க்க முடியாது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது நிழல்போலத் தோன்றும். கடந்த வாரத்தின் முதல் நாள் தன் ஐந்து குஞ்சுகளுடன் தரையைக் கிளறி கொத்தியபடியே சென்ற செண்பகத்தின் செவலைக்கோழி அந்த மரத்தினடியில் சென்று விட்டது. மரத்தின் நிழலை உணர்ந்தபின்தான் திடுக்கிட்டு நிமிர்ந்து மரத்தை நோக்கிய கோழி, குஞ்சுகளை பிடிக்க முனையும் காக்கையைத் தாக்க முற்படுவதைப்போல எம்பி எம்பிக் குதித்து கொக்கரித்தது. அதன் சத்தத்தைக் கேட்ட செண்பகம் வீட்டிலிருந்து வெளியே வந்து பார்த்தாள். குஞ்சுகள் வெவ்வேறு திசைகளில் பதறியோட கோழி மட்டும் மரத்தின் நிழலுக்கு வெளியே கழுத்து முறிபட்டதுபோலக் கிடந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு கண்ணப்பனின் ஆட்டுக் கொட்டிலில் மறுநாள் அறந்தாங்கி சந்தைக்கு ஓட்டிச் செல்ல முடிவு செய்திருந்த இரண்டு கிடாய்களில் ஒன்று வாயில் நுரையுடன் செத்துக் கிடந்தது. காரணம் புரியாமல் தலையை நிமிர்த்தி கிட்டித்திருந்த வாயை இரும்புக் கரண்டியால் நிமிண்டித் திறந்து கைகளால் துலாவியபோது அடர்பசும் நிற இலையின் அரைபட்ட கசடுகள் இருந்தது.
கடைசியாக மூன்று நாட்களுக்கு முன் முக்கந்தர் வீட்டுக்கு இழப்பு. தன் வீட்டில் ஈனப்பட்ட இரு கன்றுகளை ஜோடி சேர்த்து பழக்கி காளைகளாக்கினான் முக்கந்தரின் இளைய மகன் சிவசாமி. அவற்றை, முக்கந்தர் வீட்டுக்காரர்கள் தங்கள் பிள்ளைகளாகவே பாவித்தனர். மேய்வதற்கு அவற்றை அவிழ்த்து விட மாட்டார்கள். கழுநீர், பருத்திக் கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, வைக்கோல் எல்லாமே கொட்டிலிலேயே அவற்றுக்கு கொடுக்கப்படும். அன்று, முக்கந்தரின் பதினைந்து வயது பேரன் தட்டு வண்டி ஓட்ட ஆசைப்பட்டு அக்காளைகளை பூட்டிக் கொண்டு சென்றான். பையனின் பிடிவாதத்தை அறிந்ததாலும் காளைகள் கவிழ்த்து விடாது என்ற நம்பிக்கையாலும் யாரும் தடுக்கவில்லை. போசம்பட்டிவரை ஓட்டிச் சென்று திரும்பி வந்தான். ஏதோவொரு உற்சாக மிகுதியில் சாட்டையைச் சுழற்றியதில் இடப்பக்க மாட்டின்மேல் சாட்டை பட்டு குருதி துளிர்த்து விட்டது. இதுவரை சாட்டையடி பெற்றிராத அக்காளை வெருண்டு குதித்து சாலையிலிருந்து விலகி சாலையோர மரத்தில் மோதியது. அந்த மரம் அதே ராட்சச மரம். உடனே எதுவும் தெரியவில்லை. ஆனால், இரவில் கால்களால் தரையை கீறிக் கீறி மண்ணை தோண்டிக் கொண்டே இருந்ததை கண்ணீரோடு பார்த்து நின்றார்கள். விடிகாலையில் தரையில் விழுந்து உயிர்விட்டது.
ஊர் கூடியது. அம்மரத்தை வெட்டவேண்டுமென முக்கந்தர் தன் வாயினால் முதலில் கூறினார். அதற்காகவே காத்திருந்தவர்களாக அனைவருமே வழிமொழிந்தார்கள். அதை வெட்டவேண்டும் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், யார் செய்வது? அருகில் சென்ற கோழியும், இலையைக் கடித்த ஆடும், மரத்தில் மோதிய காளையும் இறந்த நிலையில் யாருக்கும் துணிவில்லை. கைகாட்டினால் தங்களுக்கு ஏதேனும் தீமை நிகழ்ந்து விடுமோ எனக் கருதி யாரையும் கைகாட்டவும் தயங்கினர். முக்கந்தர் சாந்தனை அழைத்து வெட்டலாம் எனக் கூறினார். கூட்டத்திற்குள் மெல்லிய குளிர்போல அதிர்ச்சி பரவியது. “அந்த இளந்தாரியை எப்படிங்க இதுக்கு கூப்பிடறது…?” என ஒருவர் குரலெழுப்பினார். எதிர்ப்பை விரும்பாத முக்கந்தர், “நீங்களும் யாரையும் சொல்லமாட்டீங்க. இவனும் வேண்டாம்னா.. நீ வெட்றியா…?” கேட்டதில் கோபமும் கேலியும் இயைந்திருந்தன. இதற்குப் பிறகு எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
“இது ஆபத்தான வேலையாச்சே. அவனப்போயி யாருங்க கூப்பிடறது. கூப்டாலும் அவன் வரணுமே…” இன்னொரு குரல் எழுந்தது. இப்போது இக்கேள்வியை எதிர்பார்த்திருந்த மகிழ்வு முக்கந்தர் முகத்தில் தெரிந்தது. “நம்ம தவசிப்பிள்ளைய அனுப்புவோம். அவர் சொன்னா கண்டிப்பா கேப்பானே…” என்றபோது அது சரிதான் என உணர்ந்தார்கள்.
கூட்டத்திற்குள் நின்ற சங்கர் இடுப்பிலிருந்து நழுவ முயன்ற அரை ட்ராயரைத் தூக்கி தன் கருப்பு அரைஞாண் கயிற்றினுள் சொருகியபடி பெரியப்பா வீட்டிற்குச் சென்றான். இவன் பெரியப்பா தவசிப்பிள்ளை ஊர்க் கூட்டங்களில் கலந்துகொள்ள மாட்டார். ஆனால், கூட்டத்தில் நடப்பதை கேட்டு அறிந்துகொள்வார். முக்கந்தர் ஊர்க் காரியங்களில் ஈடுபடும்போது தவசிப்பிள்ளையின் இருப்பை மனதில்கொண்டே எதையும் முடிவு செய்வார். தவறான முடிவாகவோ முக்கந்தருக்கு வரும்படி வருவதான செயல்களாகவோ இருந்தால் ஊர்க்காரர்களிடம் அதை விவரித்து கெட்டபேரை உருவாக்கிவிடுவதையும் அச்செயலை தடுத்துவிடுவதையும் தவசிப்பிள்ளை தொடர்ந்து செய்துவந்தார். தவசிப்பிள்ளைமேல் ஒரு பழி சுமத்த ஏதேனும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார். சங்கரைப் பார்த்ததும், “என்ன சங்கரு, கூட்டத்துக்குப் போனியா?” என பெரியம்மா கேட்டார். “ஆமா, அங்கேர்ந்துதான் வர்றேன்” என்று கூறியபடியே அறைக்குள் சென்றான். தவசிப்பிள்ளை, கை பட்டு பட்டு பழுப்பு நிறமாக மாறியிருந்த ராமாயண நூலில் கவனமாயிருந்தார். அவரிடம் சென்றவன் கூட்டத்தில் மரத்தை வெட்ட வேண்டுமெனவும், அதை வெட்டுவதற்கு சாந்தனை இவர்போய் அழைக்கவேண்டும் என்ற இறுதி முடிவெடுத்ததையும் கூறினான்.
இருவரையும் சரியான இக்கட்டில் நிறுத்தியிருப்பதை உணர்ந்தார். அழைக்க முடியாது என்றால் ஊர் நலனுக்கு எதிரானவர் என்று ஊரும், அழைத்தால் அவனை ஆபத்தில் தள்ளுவதாக சாந்தனும் குற்றம் சுமத்துவார்கள் எனக் கணக்கிட்டு முக்கந்தர் இதைச் செய்துள்ளார் எனப் புரிந்தது. முதன்மையாக இவர் அழைத்து அவன் வரச் சம்மதிக்காவிட்டால் எல்லாப் பழியும் இவர் மேல் விழும் என்பதே முக்கந்தர் எதிர்பார்ப்பது. யோசனையுடன் சாந்தனைப் பார்க்க புதுப்பட்டிக்கு கிளம்பினார்.
*****
முன்னோக்கி திரண்ட மார்பும் திண்டுதிண்டாக திரண்ட கை கால்களும் கொண்ட சாந்தன் அம்புராணியில் பிறந்தவன். புதுப்பட்டியில் இருக்கும் விறகுக்கடையில் பத்தாண்டுகளாக வேலை பார்க்கிறான். இவனை பெற்ற ஒரு வருடத்திற்குள் அம்மா இறந்துவிட அடுத்த ஒரு மாதத்திற்குள் வீட்டிற்கு சித்தியை கொண்டுவந்தார் இவன் அப்பா. இவன் மேல் அத்தனை பாசம். வந்த பத்து நாட்களுக்குள் சித்தியால், இவனின் பெரியப்பா வீட்டிற்கு அனுப்பப்பட்டான். பிள்ளையில்லாத பெரியம்மாவும் பெரியப்பாவும் இவனை வளர்த்தார்கள். பெரியப்பா ஏதோவொரு காரணத்தால் பெண்கள்மீது சற்று வெறுப்பு கொண்டவர். அந்த வெறுப்பை சாந்தனிடமும் புகட்டி சிறு வயதிலேயே இவனை அனுமன் பக்தனாக மாற்றினார். பெண் வெறுப்பை ஒரு காரணமாகக் கூறி வேலைக்குச் செல்லாமல் இருந்த பெரியப்பா நிலங்களை விற்று குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார். இவன் அப்பாவின் சொத்துகளை சித்தியும் அவள் பெற்ற பிள்ளைகளுமே வைத்துக் கொண்டார்கள். கேட்டு வாங்கி என்ன செய்யப் போகிறோம் எனத் தோன்றியதால் இவனும் கேட்கவில்லை. பெரியம்மா பெரியப்பா இருவரும் இறந்ததும் என்ன செய்வதென திகைத்தவனை இவன் மேல் அபிமானம் கொண்ட மாமா முறை கொண்ட ஒருவர் புதுப்பட்டியில் உணவகம் நடத்திவந்த கந்தையாவிடம் கொண்டு வந்து விட்டார். கூலி குறைவாக இருந்தாலும் உணவுக்கு குறைவிருக்காது என்பது அவரது எண்ணம். இடைநிலை நகரங்களிலும் புதிதாகத் தோன்ற ஆரம்பித்த உணவகங்களுக்கு விறகு தேவையாக இருந்தது. அவர்களே ஆள் வைத்து மரத்தை வெட்டி உலர வைத்து எரிக்கப் பயன்படுத்த வேண்டும். கந்தையாவிற்கு சாந்தன் வேலைக்கு கிடைத்தது பெரும் உதவியாக இருந்தது. அக்கம் பக்கத்து ஊர்களில் சல்லிசாக கிடைத்த மரங்களை சாந்தன் வெட்டி பிளந்து வைப்பான். கந்தையா வண்டி வைத்து ஏற்றி வருவார். சில வாரங்களிலேயே விறகு வெட்டுவதில் சாந்தன் தேர்ச்சி பெற்றுவிட்டான். பிற உணவகங்கள் நடத்துபவர்கள் விறகிற்குச் சிரமப்பட்டார்கள். விறகைச் சேகரிப்பது அவர்களின் உண்மையான தொழிலுக்கு பெரும் இடையூறாக இருந்தது. அதை கந்தையா தன் வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு விறகு விற்பதையே தொழிலாக மாற்றிக்கொண்டார். கந்தையாவிற்கு பெரிதாக வேலையின்றி வருமானம் வந்தது. வாரத்தில் இரண்டு நாட்கள் விறகு வெட்டச் செல்லும் சாந்தன் ஐந்து நாட்கள் விறகுக் கடையில் அமர்ந்து எடைபோடும் வேலையைச் செய்தான். விறகுக் கடைக்கு அருகில் டீக்கடை இருந்தது. இரண்டு நீள மர டேபிளும் அதன்மேல் கைபட்டு கசங்கிய நாளிதழும் கிடக்கும். தினமும் தவசிப்பிள்ளை நடந்தே புதுப்பட்டிக்குச் செல்வார். டீக்கடையில் டீ குடிப்பது ஒரு சாக்குதான். நாளிதழ்களை படிப்பதும் வெளியூரிலிருந்து வருபவர்களிடம் பேசுவதுமே முதன்மைக் காரணம். அப்படி டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது சாந்தனிடமும் பேசுவார். .இந்த ஊர்க்காரர்கள் புதுப்பட்டிக்கு செல்லும்போதெல்லாம் தவசிப்பிள்ளையும் சாந்தனும் உள்ளமொன்றி உரையாடுவதை வியப்போடு நோக்குவார்கள்.
இரண்டு மாதங்களுக்குமுன் முக்கந்தர், சாந்தனிடம் வந்தார். “எங்க மேல வயலோட வரப்போரமா நிக்கிற மஞ்சனத்தி மரம் வயல் பக்கமா தணிஞ்சு வருது. இப்டியே விட்டா உழுகிறப்ப மாட்டோட கொம்புல தட்ட ஆரம்பிச்சிரும். எப்பவும் பெரியகோட்டை மூக்கன்தான் இந்தமாதிரி வேலையெல்லாம் செய்வான். அவனுக்கு ஒடம்புக்கு அப்பப்ப சீக்கு வந்திருது. நீ வந்து வெட்டிக் கொடுத்திடு. ஒரு நேரக் கஞ்சியும் ரெண்டு ரூபா பணமும் கொடுத்ர்றேன்…” என்றார். முக்கந்தரைப் பற்றி அந்த ஊர்க்காரர்கள் மத்தியில் பேசப்படும் பேச்சுக்களைக் கேட்டிருந்ததால் இவனுக்கும் அவர் மேல் விலக்கம் தோன்றியிருந்தது. அதோடு, இதுவரை கடைக்கென வெட்டுவதைத் தவிர வெளியாள்களுக்கு வெட்டியதில்லை என்பதாலும் உடனேயே, “இல்லைங்கையா. கடைக்கானத தவிர வெளிய வெட்றதில்லங்க..” எனக் கூறிவிட்டான். கொஞ்சமும் யோசிக்காமல் மறுத்து சொன்னது முக்கந்தருக்கு உள்ளே தைத்துவிட்டது. ஆனால், அதைக் காட்டிக்கொள்ளாமல் வரவழைத்துக் கொண்ட முறுவலுடன் விலகிவந்தார்.
இது நடந்து ஒரு வாரத்திற்குள்ளேயே வயல் பக்கம் போனபோது தவசிப்பிள்ளையின் நடுவயலின் வரப்பில் நின்ற எலந்தை மரத்தை யாரோ வெட்டிக் கொண்டிருப்பதைக் கண்டு கூர்ந்து பார்த்தார். தவசிப்பிள்ளை கீழே நிற்க மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தான் சாந்தன். தன் மரத்தை வெட்ட மறுத்ததுகூட பரவாயில்லை. ஆனால், தனக்கு எதிரான காரியங்களைச் செய்பவருக்கு வேலை செய்வதைக் கண்டதும் முக்கந்தரின் உள்ளம் கொதித்தது. ஏதோ காரியமாக தவசிப்பிள்ளை அவர் வீட்டை நோக்கி நகர்ந்தவுடன் இவர் மரம் வெட்டப்படும் இடத்திற்கு சென்றார். இவரைப் பார்த்ததும் அவன் மனம் சங்கடப்படுவான் என எண்ணியபடியே சென்றார். ஆனால், அவன் முகத்தில் அச்சமோ சுருங்கலோ ஏற்படாதது இவரின் கொதிப்பைக் கூட்டியது. “ஏப்பா, கடைக்கு தவிர வெளிய வெட்டமாட்டேன்னு ஒங் கொள்கையெல்லாம் சொன்ன. இப்ப இங்க வந்திருக்கியே. இதுவும் கடைக்குதானா…” உதடுகளை வளைத்து இளக்காரப் பாவனையுடன் கேட்டார். அவர் எண்ணியபடி சாந்தன் முகம் சிறுக்கவில்லை. மெல்லிய முறுவலுடன் “இல்லைங்கையா, இது அன்புக்காக…” என்றவன் அவரின் புரியாத பாவனை கொண்ட முகத்தைக் கண்டு, “என்னைய தவசி ஐயா கூப்பிடவேவில்லை. பேச்சுவாக்கில இங்கே உழுகிறப்ப கால்ல எலந்த முள்ளு குத்துதின்னு சொன்னாங்க. நான் வந்து வெட்டிடுறேன்னு வந்திருக்கேன். கூலிக்காக வரலேங்க..” என முடித்தபோதும் முறுவல் மாறவேயில்லை. அவன் கூறிய விசயத்தைவிட அந்த முறுவல்தான் முக்கந்தரின் கொதியை ஆவியாக்கியது. அப்போதே மனதில் கறுவியபடி உறுதிகொண்டார்.
******
சாந்தனை அழைப்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால், மிக ஆபத்தான ஒன்றில் ஈடுபடுத்த அவன் மேல் அக்கறையுள்ள தவசிப்பிள்ளையே முன்வந்ததை ஆச்சர்யத்தோடு பேசிக்கொண்டார்கள். தவசிப்பிள்ளையே புதுப்பட்டிக்குச் சென்று அவனைப் பார்த்துவிட்டு வந்தார். மறுநாள் காலை பத்து மணிக்கு அவன் வர ஒப்புக்கொண்டதை கூறியபோது அச்சமேற்படுத்தும் மரம் அப்புறப்படுத்தப்படப் போவதை எண்ணி அனைவருக்கும் பெரும் நிம்மதி தோன்றியது. விபரீதமாக ஏதும் சாந்தனுக்கு நிகழ்ந்து மரம் வெட்டும் பணி தடைபட்டுவிடக் கூடாதென தங்களுக்குள் வேண்டிக்கொண்டனர்.
******
இருநூறடி சுற்றளவில் தன்னைச் சூழ்ந்து நிற்பவர்களை, மரம் விழிகளை நெரித்து நோக்குவதாகத் தோன்றியது. ஒவ்வொருவருக்குள்ளும் அச்சம் இருந்தாலும் கூட்டமாக இருப்பதானால் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் இயல்பாக இருப்பதாக பாவனை செய்தார்கள். ஒரு ராட்சசன் வதைபடப் போவதைக் காணும் ஆவல் இருந்தாலும் ராட்சசனால் ஒரு மனிதன் அதுவும் யாருக்கும் தீங்கு நினைக்காத அப்பாவி மாண்டுபோவதைக் காணப்போகிறோமா என்ற அச்சமும் ஒரு புறம் இருக்கவே செய்தது. “கோழி ஆடு மாடு போல மனிதப் பலியொன்றும் நிகழ்ந்துதான் தீரும்” என்ற ஒற்றைக் குரல் தீனமாக கூட்டத்தில் ஒலித்தபோது ஒவ்வொருவருக்குள்ளும், ‘ஆம். அப்படித்தான் நிகழப் போகிறது’ என்று பெருங்குரல் கேட்டது. கல் பட்ட சுனை நீரினைப் போல ஓர் அலுங்கல் கூட்டத்தினுள் ஊடுருவியது.
பத்து மணி ஆன போது தவசிப்பிள்ளை வந்தார். எல்லோரும் அவரை, சாந்தன் வருவானா அல்லது யாராவது எச்சரிக்கை செய்து அவனைப் பின்வாங்கச் செய்துவிட்டார்களா என்ற கேள்வியோடு நோக்கினார்கள். அவர் பதிலேதும் கூறாமல் மரத்தையும் புதுப்பட்டியிலிருந்து வரும் சாலையையும் நோக்கினார். அவர் அருகில் சங்கர் நகத்தைக் கடித்தபடி தன் பெரியப்பாவையும் சனங்களையும் மரத்தையும் மாறிமாறி நோக்கிக் கொண்டிருந்தான். அப்போது லேசாக வீசிய காற்றுக்கு அம்மரத்தின் கிளைகள் உயர்ந்தாடியதாகத் தோன்றியது. சூழ நின்றவர்களிடம் பதட்டம் ஒரு அலைபோல பரவிச் சென்றது. சில நாட்களுக்கு முன் இந்த மரம் இப்படி மாறியது ஏனென்று பெரியப்பாவிடம் சங்கர் கேட்டான். “மனுசனுக்குள்ளேயேயும் ஏதாவது தீய எண்ணம் திடீர்னு மொளச்சிருதே. அதுக்கான காரணமெல்லாம் அவ்வளவு லேசா அறிஞ்சிட முடியுமாயென்ன? மனுசனால எல்லாத்தையும் அறிஞ்சிட முடியாதுங்கிறத அறியிறதத்தான் ஞானம்னு சொல்றாங்க..” என்று அவர் கூறிய வார்த்தைகள் இப்போதும் நினைவுக்கு வந்தபோதும் புரிந்தமாதிரியும் பூடகமாகவும் ஒருமாதிரி மங்கலாகவே இருந்தது.
கணம் கணமென அரைமணி நேரம் கடந்த பின்னும் சாந்தன் வரவில்லை. முக்கந்தர், தவசிப்பிள்ளையின் அருகில் சென்று சாந்தன் வரமாட்டானோ என்ற ஐயத்தை எழுப்பினார். நிச்சயம் வருவான் என்று தவசிப்பிள்ளை கூறிக் கொண்டிருந்தபோது மக்களிடமிருந்து ‘ஓஓ’ என்ற ஒலி அச்சத்துடன் எழுந்தது. எல்லோரின் பார்வையும் சென்ற இடத்தை தவசிப்பிள்ளையும் நோக்கினார். சாந்தன் ஒரு காலை நொண்டியபடி ஓடி வந்தான். அவன் காலிலிருந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அவன் முதுகுப்புறம் ஒரு பளபளப்பான இரும்பு ரம்பம் தொங்கிக் கொண்டிருந்தது. அதன் இருமுனைகளிலும் பிணைத்த சிறு கயிறு பூணூல் போட்டதுபோல முன்புறம் தெரிந்தது. எல்லோரையும் அப்படியே இருக்குமாறு கூறிய முக்கந்தரும் தவசிப்பிள்ளையும் சாந்தனிடம் சென்றார்கள். அவன் வந்த சைக்கிள் டயர் வெடித்து விட்டதாகவும் நேரமாகிவிட்டதென அதை ஓரமாக நிறுத்திவிட்டு, குறுக்குப் பாதையில் ஓடிவந்தபோது காய்ந்த நெருஞ்சிப்பழம் காலில் தைத்துவிட அதைப் பிடுங்கியதனால் ரத்தம் துளிர்ப்பதாகவும் தெரிவித்தான். அப்போது பசும் நாவுகளைப் போன்ற இலைகளை ஆட்டிய மரம் மகிழ்வில் துள்ளுவதாகத் தோற்றமளித்தது.
ஒன்றுக்கு இரண்டு முறை தடை ஏற்பட்டுள்ளதே தீங்கு நேருமோ என்ற அச்சத்துடன் மரத்தை வெட்டாமல் போய்விடுவானோ என்ற பயமும் தோன்ற ஒவ்வொருவரும் வெவ்வேறு பாவனைகளுடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாந்தனை அங்கே கிடந்த கல்லில் அமர வைத்து குடிக்க நீர் கொடுத்தார்கள். ஊர் வைத்தியர் வந்து காலில் வழிந்த ரத்தத்தை துடைத்து விட்டு கைவசமிருந்த களிம்பைத் தடவி கட்டுப்போட்டார். சாந்தன் ஆசுவாசமடைந்தபின் தவசிப்பிள்ளை அவனிடம் குனிந்து வேலையை செய்ய முடியுமா எனக் கேட்டபோது அனைவரின் செவிகளும் என்ன பதில் வரப்போகிறதென அறிய அவ்விடத்தைக் கூர்ந்தன. அத்தனை பேர் கூடி நின்ற அந்த இடம் மெல்லொலியும் எழாமல் நிசப்தமாக இருந்தது. “கண்டிப்பா.. அதுக்காகத்தானே வந்திருக்கேன்” என சாந்தன் கூறியபோது ‘ஏ..ஏய்’ என்ற வியப்பொலி அனைவரிடமிருந்தும் எழுந்தது.
சற்று நேரம் கழித்து சாந்தன் எழுந்தான். அனைவரிடமும் தங்களுக்குள்ளே உண்டான பதட்டத்தை அடக்கும் விதமாக ஒருவித இறுக்கம் ஏற்பட்டது. ஆங்காங்கே பிசிறுகளாய் நின்ற மேகங்களெல்லாம் இங்கு நடக்கப்போவதை காண்பதற்கென கூடியதுபோல இணைந்ததால் ஏற்பட்ட மேகமூட்டத்தால் மாலை போன்ற மயக்கம் தோன்றியது. அனைவரும் மூச்சடக்கியபடி சாந்தனை நோக்கினார்கள். மரத்தை நிமிர்ந்து நோக்கியவன் கை கூப்பி வணங்கி நெடுஞ்சாண்கிடையாக தரையில் விழுந்து வணங்கினான். எழுந்து மண்ணை லேசாக கையில் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டான். மரம் விறைத்து இறுக்கிக் கொள்வதாக தோன்றியது. தோளில் இருந்த ரம்பத்தை கையில் எடுத்துக் கொண்டான். காலை உறுதியாக ஊன்றிக் கொண்டான். மரத்தில், தன் மார்பளவிற்கான உயரத்தில் ஆட்காட்டி விரலால் தொட்டுதொட்டு கோடிடுவதுபோல இழுத்தான். அந்த இடத்தில் ரம்பத்தை வைத்து மீண்டும் ஒருமுறை முகத்தை நிமிர்த்தி மரத்தைப் பார்த்து ஏதோ உச்சரித்தவன் கையால் அழுத்தி பின்பக்கம் இழுத்தான். சங்கர் ஓர் உந்துதலில் கூட்டத்தினரை ஒரு கணம் நோக்கினான். திருவிழாவில் அய்யனாருக்கு ஆட்டை பலி கொடுக்கும்போது அனைவரின் கண்களிலும் எழும், குருதியைக் காண விழையும் பித்தினை அக்கணத்தில் கண்டான். சாந்தனின் குருதியைக் காணத்துடிக்கும் அந்த ஆவல் இவனையுமே தொற்றிக் கொள்ள முயன்றது. இவனுக்கிருந்த நம்பிக்கை சற்று குலைந்ததுபோலத் தெரிந்தது. சாந்தனுக்கு எதுவும் ஆகக்கூடாது என மனம் துடித்தது. அந்த இடம் பெரும் நிசப்தமாக மாற, மெல்லிய மூச்சு விடும் ஓசை கூட எழாமல் நின்றது. அத்தனை பேரும் கண்ணிமைக்காமல் பெரும் ஓலம் எழும் என்று எதிர்பார்த்தபடி நோக்கினார்கள். மெல்லிய மரத் துகள்கள் ரம்பத்திலிருந்து வெளிவந்து பறந்தபோது அனைவரும் தங்கள் மேனியை மெல்லிய குளிர் காற்று தீண்டிச் சென்றதை உணரவில்லை.
இந்தக் கணம் அடுத்த கணம் என சாந்தனின் அலறலைக் கேட்க செவியினை கூர்ந்திருந்தார்கள். சாந்தன், ரம்பத்தை முன்பக்கம் தள்ளிய பின் அழுத்தி பின்பக்கம் இழுத்து ஒத்திசைவுடன் மீண்டும் மீண்டும் அறுத்தபோது மேனியில் பிறர் விரல் படும்போது, கூச்சத்தில் நெளிந்து சிரிக்கும் மகவு போல மரம் இலைகளையும் கிளைகளையும் ஆட்டித் துள்ளியது. பார்த்துக் கொண்டிருந்தபோதே மெழுகை அறுப்பதென மயக்கம் தோன்றும் வண்ணம் ஒரு சிறிய கோடுபோல இடைவெளி உருவானது. பெரியவர்களும் பிள்ளைகளைப் போலவே ஆச்சர்யத்துடன் லேசாக வாய் திறந்திருக்க சாந்தன் அறுக்கும் திறத்தை நோக்கினார்கள். அதில், பல்லாண்டு காலம் ஒன்றையே இயற்றும் நேர்த்தி மிளிர்ந்தது. முறைப்பதாகத் தோன்றிய மரத்தின் விழி இப்போது பரவசத்தில் இமைமூட முயல்வது போலத் தோன்றியது. சீழ் போன்று அருவெறுப்பளித்த அதன் நீர்மை தெள்ளியதாய் மாறித் தெரிந்தது. முக்கால்வாசி அறுபட்டவுடன் எதிர் திசையில் நின்றவர்களெல்லாம் ஒரே பக்கத்திற்கு வந்தார்கள். சில நிமிடங்களிலேயே மரம் சாய ஆரம்பித்தது. விரும்பியது நடந்தபோதும் நம்ப முடியாமல் சற்று ஏமாற்றத்துடன் திகைத்து நோக்கினார்கள். மரத்திலிருந்து நிழல் போல ஒன்று பறந்ததை கூர்ந்து பார்த்தபோதே கழுகென உணர முடிந்தது. அது இத்தனை நேரம் அமர்ந்திருந்தது என்பதே கீழிருந்து பார்த்தபோது எவர் கண்ணுக்கும் தெரியவில்லை. ‘ஊஊ.. ஊய்ய்’ என்ற பரவசக் கூச்சல் அவர்களின் ஆளுள்ளத்திலிருந்து எழுந்தது. மரத்தின் புடைப்பின் மேல் கருமையான மென் படலமொன்று படர்ந்து மூடியது. அது பார்ப்பதற்கு, சாந்தமும் நிறைவும் அடைந்து மரம் விழி மூடியதாகத் தோன்றியது.
பட்டு இறுகியிருக்கும் மரத்தையே லாவகமாக வெட்டும் சாந்தன் பச்சை மரத்தை எளிதாகவே அறுத்தான். கிளைகளை எல்லாம் தனித்தனியாக நீளமான துண்டுகளாக வெட்டினான். முக்கந்தரிடம் கூறி மண்வெட்டி வரவழைத்து வேரினை மண்ணில் இருந்து அகழ்ந்தெடுக்கவே சற்று தாமதமானது. மொத்த மரத்தையும் வெறும் கட்டைகளாக ஆக்கிவிட்டான். டிராக்டர் கொண்டுவரச் செய்து இளையவர்களின் உதவியுடன் ஏற்றினான். ராட்சசனின் மூடாது விழித்து வெறித்திருக்கும் கண்கள் போன்று தோற்றமளித்த புடைப்பான பகுதியை பிளக்க மனமின்றி அப்படியே ஏற்ற முயற்சித்தார்கள். பலர் சேர்ந்து முயன்றும் முடியவில்லை. கூர்மையுடன் ஆங்காங்கிருந்த சிறிய மூட்டுகளால் கைகளுக்கு பிடி கிடைக்கவில்லை.
ஆனால், கண்களை எப்படிப் பிளப்பது என சாந்தனுக்கு தயக்கமாயிருந்தது. நேரமாகிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லை பிளந்துதான் ஆகவேண்டும். மனசேயில்லாமல் கோடாரியை எடுத்து மனதினுள் வேண்டிக்கொண்டு கைகளை உயரத்தூக்கி ஓரமாக வெட்டினான். இதற்காகவே காத்திருந்ததென சட்டென சிப்பியைப்போல இருபாதியாக பிளந்து கொண்டது. அதனுள்ளிருந்து கலகலவென ஒலியெழுப்பியபடி பசும்பொன்னிற காசுகள் சிதறி விழுந்தன. அனைவரின் கண்களையும் கூசவைத்த, மறைய யத்தனித்த சூரியக் கதிர்களின் பொன்மஞ்சள் ஒளி அக்காசுகளை ஒளிரவைத்தது.
*******