அறை – தேவி லிங்கம்

“ஏண்டி பரிமளா! யாருக்கு கல்யாணம்? இவ்வளவு ஜொலிப்பா வந்துருக்க. ஆப்பிளு ,ஆரஞ்செல்லாம் அமர்க்களப்படுது.. ஏதாவது விசேஷம்னா தான் படியேறி பத்திரிகையத் தூக்கிட்டு வர்றீங்க. பக்கத்து தெருதான். இருக்கோமா, இல்லையான்னு நீயாச்சும்,உன் மாமியாராச்சும் ஒரு எட்டுப்பார்க்கறீகளா?” என்று எரிச்சலாகக் கேட்ட கனகத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே, “இல்லை அத்தை..வீட்ல மாடு கன்னு போட்டுருக்கு, அத்தைக்கு வேற உடம்பு முன்னமாதிரி இல்லை..மாமாவ பத்தி தான் இந்த ஊருக்கே தெரியுமே!நில்லுன்னா நிக்கணும் உட்காருன்னா அம்புட்டு பேரும் உட்காரணும்.. ரொம்ப சோலியா இருக்கு..புள்ளைங்க வேற ஸ்கூலுக்கு போகுதுங்க. நேரமே இல்லத்த!” என்றாள் பரிமளா.
“ஆத்தாடி.. பங்கஜம் எப்படி இருக்கா? அப்படீயே தன்னை மாதிரியே மருமகளை வளர்த்து வச்சிருக்காடி !அப்படீயே உன் மாமியார் மாதிரியே பேசுறடி பரிமளா. உன் பேச்சுல மயங்காதவோ இருக்காவோளா? உள்ள வா..கட்டில்ல உட்காரு. வாங்க தம்பி உள்ளார ,என்ன அப்படி திகைச்சிப்போய் நிக்கிறீங்க..உள்ள வந்து உட்காருங்க. சொந்தக்காரவோ ஒரு எட்டு வந்து எட்டிப்பார்க்க மாட்டேங்கறீங்களேன்னு ஆதங்கம் அவ்வளவு தான். மனசுல எதும் வச்சிக்காதீங்க தம்பி. வாங்க !வாங்க..இந்தக்கட்டில்ல உட்காருங்க,” என்று சடாரென முகபாவனைகளை மாற்றிக்கொண்டு வரவேற்பவளை சிறிது கடுகடுப்பான முகத்துடன் ஏறிட்டான் மாணிக்கம். அங்கே சிரித்துக்கொண்டே கனகத்திடம் பேசிக்கொண்டிருந்த பரிமளத்தைப் பார்த்ததும் மனதிற்குள் மெல்லிய தென்றலென ஒரு பெருமிதம் எழுந்தது மாணிக்கத்திற்கு,
மாநிறத்தில் துலக்கி வைத்த குத்து விளக்குப்போல் அத்தனை தெளிவாக இருந்தது பரிமளத்தின் முகம். துருதுருவென சிறிய விழிகள். அகன்ற நெற்றி. அகன்ற மூக்கு. சிறிய உதடுகள் என வசீகரம் இல்லையெனினும், பார்ப்போரை லெட்சுமி களை என சொல்ல வைக்கும் முகம். அதுபோலவே அவள் வந்ததிலிருந்து வாழ்வில், குடும்பத்தில் ஏற்றம் தான். அவ்வப்பொழுது மாமியாருக்கும் மருமகளுக்கும் சண்டை வந்தாலும் அது எல்லை மீறிப்போனதில்லை என நினைத்துக்கொண்டிருந்தவனிடம், பித்தளை லோட்டாவில் வழிய வழிய தண்ணீரை நீட்டினாள் கனகம். நிரம்பி வழிந்த தண்ணீரை கீழே சிறிது சிந்திவிட்டு அண்ணாந்து கடகடவென குடித்த வேகத்தில் வெயிலின் காட்டம் புரிந்தது.
“யாருக்குக் கல்யாணம் பரிமளா? நடு உள்ளவனுக்கு தான் மதுரையில பொண் எடுத்து கல்யாணம் பண்ணீட்டீங்களே? இப்பதான குழந்தைக்கு காப்பு போட்டீங்க! அட செல்வத்துக்கா கல்யாணம்? புள்ளைங்க எவ்வளவு வேகமா வளருதுங்க! என்ன வயசு ஆகுது அவனுக்கு?” என்று கேட்டுக்கொண்டே பரிமளத்தின் கழுத்தையும் காதையும் நோட்டமிட்ட கனகத்திடம், “அது வந்து சித்திரை வந்தா முப்பது வயசு ஆகுது அத்தை. எனக்கும் சின்ன அத்தானுக்கும் ஒரே வயசு தான். நான் இந்த வீட்டுக்கு கல்யாணம் பண்ணி வந்தப்ப பண்ணன்டாவது படிச்சிட்டு இருந்தாங்க,,” என்றவளின் விழிகளில் சின்ன மின்னல் தெறித்து ஓடியதை கவனித்த கனகம் கழுத்துல போட்டுருக்கற வைர அட்டிகையோட ஜொலிப்பாக இருக்கும் என எண்ணிக்கொண்டாள்.
“நாளை மறுநாள் கல்யாணம். இன்னைக்கே வீட்டுக்கு வந்துடுங்க அத்தை. நீங்க வந்துதான் எல்லாம் செய்யணும். நீங்க தான் ராசின்னு அத்தை உங்கள்ட்ட சொல்லச் சொன்னாங்க. இந்தாங்க குங்குமம் எடுத்துங்க..மாமாட்ட வந்துட்டு போனதாகவும், ரொம்ப விசாரிச்சதாகவும் சொல்லுங்க அத்தை..இந்தாங்க அத்தை பத்திரிகை” என்று சொல்லும்போதே, “ஏங்க.. இங்க வாங்க. தட்டைத் தூக்கமுடியல ஒரு கையப் போடுங்க” என்று கணவனிடம் சொல்லிக்கொண்டே அவன் வரும் முன் தட்டை கனகத்திடம் கொடுத்திருந்தாள் பரிமளா.அவள் அப்படி தான். எல்லாவற்றிலும் தான் முன்னாடி நிற்கவேண்டும். தனக்கே மரியாதை அனைத்தும் வந்து சேர வேண்டும் என நினைப்பவள். நினைப்பது மட்டும் இல்லாமல் அதற்காக மெனக்கெடுபவள்.
“பெரியம்மா.. பெரியப்பாட்ட நான் வந்து அழைப்பு கொடுத்தேன்னு சொல்லுங்க. கடையில பார்த்து நான் நேரா சொல்லிடுறேன். கஸ்டமர் வந்து காத்திருக்காங்களாம். போன் மேல போன் வருது,” என்று மாணிக்கம் சொன்னவுடன், ஊதாரியாய் ஊர் சுற்றும் தன்மகனின் வயதும், அவனின் திருமணம் பற்றிய நினைப்பும் பாறை ஊறும் எறும்புபோல மனதில் ஊறத்தொடங்கியது கனகத்திற்கு. அதை முகத்தில் வெளிப்படுத்தி விடாமல் சாமார்த்தியமாக முகத்தை துடைப்பதுபோல் சாதாரணமாக, “ஏண்டி அம்மா.. பொண்ணு எந்த ஊருன்னு சொல்லாமப் போற? செல்வம் ரொம்ப பதவுசாச்சே. .தங்கமான பையன்..அதிர்ந்து பேசிப் பார்த்ததில்லை..பங்கஜத்தோடவே சுத்திட்டு இருப்பான். நல்ல பொண்ணா பார்த்தீகளாடி? இருடி.. பால் கறக்கறேன், ஒருவாய் காப்பித்தண்ணி குடிச்சிட்டு போ! ஆனா, நீங்கல்லாம் எங்க வீட்ல காபி குடிப்பீங்களா? உனக்கு எங்க நேரம் இருக்கப்போகுது ,”என சொல்பவளது உள்ளர்த்தம் புரிந்தது பரிமளத்திற்கு. “வேணாம் அத்தை, நான் இப்பதான் குடிச்சிட்டு வந்தேன். தட்டு உங்களுக்கு தான். பொண்ணு எட்டுகுடி .கல்யாணத்து வந்து பாருங்க. வந்துருங்க அத்தை ,நான் கிளம்பறேன்.. தலைக்கு மேல வேலை இருக்கு. முக்கியமான வீடுக்களுக்கு மட்டும் தான் நாங்க வந்தோம். மீதிக்கெல்லாம் கடைப்பையனிடம் பத்திரிகை கொடுத்து விட்டாச்சு. கடைக்கு லேட்டாகுதுன்னு பறக்குறாங்க, நான் வர்றேன் அத்தை ,”என்று கனகத்தின் வீட்டிலிருந்து முன்னமே இறங்கி விருவிருவென்று நடந்துக்கொண்டிருந்த மாணிக்கத்தை நோக்கி ஓட்டமும்,நடையுமாய் சென்றாள் பரிமளா.
காலை ஐந்து மணிக்கு வருபவர்களை வரவேற்க பந்தலின் முகப்புக்கு மாணிக்கத்தோடு சென்றவள் காலை உணவு சாப்பிடக்கூட முடியாமல் கூட்டம் தொடர்ந்து வந்துகொண்டே இருந்தது.. கொஞ்சம் கூட்டம் குறைந்ததும் , பரிமளா உள்ளே எட்டிப்பார்த்தாள். அங்கிருந்து பார்ப்பதற்கு திருவிழா தேர்ப்போல அலங்கரிக்கப்பட்ட மேடையும், அதில் மாப்பிள்ளையாய் சின்ன கொழுந்தன் செல்வமும்,மணப்பெண்ணாய் பேரழகியாய் மதுபாலாவும் தெரிந்தார்கள். அணையை மீறி அலையடித்து பொங்கிக்கொண்டே இருக்கும் வெள்ளம் ஒரு நொடியில் அணையை உடைத்துப் பேரொலியோடு ஆங்காரமாய் கிளம்புவது போல், ஏதோ ஒரு புரியாத உணர்வு பரிமளாவிற்குள் எழுந்தது.
திடீரென குமட்டுவது போல் உணர்வு வர சாப்பிட்டு விட்டு வருவதாக மாணிக்கத்திடம் கூறிவிட்டு,உள்ளே நாற்காலியில் வந்து அமர்ந்தாள் பரிமளா. அங்கிருந்து மேடை தெரிந்தது. செல்வத்தைப்பார்த்தாள். இத்தனை கம்பீரமானவனா செல்வம்? எத்தனை லெட்சணமாக இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டே, தன் கணவனின் முகத்தைப் பார்த்த பொழுது, முதன்முதலாக மாணிக்கம் முகம் ரொம்ப அவலட்சணமாக பரிமளத்திற்குத் தோன்றியது. அங்கே மேடையில், மிகமிக கலகலப்பாக புதுமனைவியிடம் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் விளையாண்டுக்கொண்டும் அவளது கரங்களைப்பற்றிக்கொண்டும் இருந்த செல்வத்தைப் பார்த்த பரிமளத்திற்கு செல்வம் புத்தம் புதியவனாகத் தெரிந்தான். இதுவரை தான் பார்த்த, அமைதியான, தான் இருக்கும் பொழுது வீட்டிற்குள் கூட அதிகமாக வராத, சகோதர எண்ணிக்கையில் ஒருவனாக மட்டும், தன் கணவன் பேச்சைக்கேட்டுத்தலையாட்டுபவனாக, தன் சமையலை விரும்பி சாப்பிடும் செல்வம் திடீரென ஒருநாளில் ஒரு சிறுபெண்ணிற்காக தன் இயல்பை மாற்றிக்கொள்பவனாக மாறியதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தான் செல்வத்தைப்பற்றி நினைந்திருந்ததற்கு வேறாக அவன் மாறியது அவளுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. அவளுக்கு கையிலிருந்து பிடுங்கப்பட்ட அதிகாரமாய் செல்வத்தை நினைத்தாள். ஒரு மதிப்பு மிக்க பொருளோ,புகழோ,பொண்ணோ ஒருவனுக்கு கிடைக்கும்பொழுதுதான் அவன் மதிப்புமிக்கவனாகிறான். இதுநாள்வரை தன் கணவனை மட்டும் புகழ்ந்துகொண்டிருந்த உறவினர்கள் மத்தியில், பெரிய இடத்திலிருந்து அவனுக்கு பிடித்தமாதிரி மனைவி அமைந்தது குறித்து அதிஷ்டக்காரன் செல்வம் என பரிமளத்தின் காதுபடபேசியது அவளுக்கு எரிச்சலை அதிகப்படுத்தியது.
தனக்கு வேண்டியவைகளை வாங்கித் தரும் சிறுவனாக, தன் குழந்தைகளிடம் விளையாடுபவனாக, தனக்கும் மாமியாருக்கும் வரும் சண்டைகளை சமரசம் செய்பாவனாக இருந்த சின்னப்பையன், இன்னொருபவளுக்கு அருகில் பெரிய ஆளாக, அவளைப் பாதுகாப்பவனாக ,பெரிய மனிதனாக மாறிப்போனது குறித்து அவளுக்கு சரிசெய்யமுடியாத இயலாமை வந்தது. இத்தனை நாள் நான்தானே இவனைப் பாதுகாத்தேன்.. இவனுக்கு பிடித்ததெல்லாம் சமைத்துக்கொடுத்தேனே! அனைவரும் அவனை லாயக்கில்லாதவன், ஒரு செயலையும் சாமார்த்தியமாய் செய்யத்தெரியாதவன் எனத்திட்டும் பொழுதெல்லாம் அவனுக்கு எத்தனை ஆதரவாக இருந்திருக்கிறேன். இவன் எனது உடமை என்ற எண்ணமும், அந்த உடமையைப் பறிக்க வந்தவள் என்று மதுபாலாவின் மேல் பொறாமையும், சிறிது சிறிதாக ஒன்றோடொன்று உரசிப் பெருகி காட்டுத்தீயைப் போல் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியது.
“பரிமளா..என்னடி இங்க வந்து உட்காந்திருக்க? காபி தரவா?” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் சுகந்தி பரிமளாவின் அக்கா
“ஏண்டி.. நீயும் படிக்கல, உனக்கு அடுத்து வந்த யமுனாவும் படிக்கல.அப்பறம் ஏண்டி உன் கடைசிக் கொழுந்தனுக்கு மட்டும் படிச்ச பொண்ணா பார்த்தீங்க? ரொம்ப வசதியான இடம் போல..பொண்ணு வேற ரொம்ப அழகா இருக்காளேடி! எப்படி இவனுக்கு கொடுத்தாங்க? ஏதாவது சீக்கு கீக்கு இருக்குமோடி? போச்சி போ, உன் வீட்ல இனி உன் பேச்சை யாரும் கேட்க போறதில்லை…இனி நீ அவ்வளவு தான்,” என்றவளை கண்களால் எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு பதில் பேசாமல் நகர்ந்தாள் பரிமளா.
‘பெரிய இவ, திமிர் பிடிச்ச நாயி. நல்லா வேணும். புருஷன் தான் ஊர்லையே பெரிய ஆளு, இவதான் வீட்டுக்கே மகராணின்னு மண்ட கனமெடுத்து ஆடிட்டு இருந்தா குந்தாணி. இனி திமிரெல்லாம் அடங்கிடும்’ என எண்ணிக்கொண்டே தாம்பூலப்பை வாங்கச் சென்றாள் சுகந்தி.
அன்றிரவு பரிமளத்திடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் மாணிக்கம். “பரிமளா, நமக்கு கல்யாணம் ஆகி பத்து வருசமாகுது. நாம இப்ப பழைய புருஷன் பொண்டாட்டி ஆகிட்டோம். எனக்கும் கல்யாண வேலைன்னால உடம்பெல்லாம் ஒரே வலி. நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.,”என்றான் மாணிக்கம்
“அதுக்கு இப்ப என்ன பண்ணனும்னு சொல்றீங்க? என்ற பரிமளாவின் கண்களில் முன்னால் விட்டுவிட்டு பின்னால் வேட்டையாடும் பசித்த நரியின் தந்திரச்சாயல்
“இல்லம்மா, நம்ம வீட்ல இருக்கறது இரண்டு ரூம் தான். இருக்கறதுல இது தான் பெருசு.இன்னொன்னு மூர்த்தி இருக்கான். அவன் பச்சப்புள்ளை வச்சிருக்கான்.அப்பா அப்பவே வயல் வீட்டுக்கு நாமள போகச் சொல்லிட்டாரு.நீதான் அங்க வரமாட்டேங்கிற. இதுதான் ராசியான ரூம். எல்லார் விஷேசமும் இங்கதான நடந்துச்சி..அம்மா உன்ட சொல்ல சொல்லுது..நீ வெளில எழுந்திரிச்சி வந்தாதான் அறைய ஏற்பாடு பண்ணனுமாம்.,”
இதைக்கேட்டதும் சுவரைப் பார்த்து திருப்பி நின்றுகொண்டிருந்த பரிமளாவின் முகத்தில் வெறுப்பு உச்சத்தைத் தொட்டு, முகமே ஆங்காரமான சிவப்புநிறமாக மாறிக்கொண்டிருந்தது. எந்த முகம் களையாக தெரிந்து கொண்டிருந்ததோ, அது கூர்ந்து பார்க்கவே அச்சமூட்டுவதாக, விகாரமாக மாறிக் கொண்டிருந்தது. எண்ணங்கள் தான் முகத்தின் கண்ணாடி. கண்கள் அதன் பிரதிபலிப்பு. எண்ணங்கள் சரியில்லையெனில், சரியில்லாத முகத்தைத்தான் அது காட்டும். என்ன சொன்னாலும் இப்பொழுது தனது பேச்சு எடுபடப் போவதில்லை எனத்தெரிந்தவள்.தூங்கிக்கொண்டிருந்த ஸ்வேதாவை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு ரூமை விட்டு வெளியே வந்தாள்.
எதிரே பால்சொம்போடு வனப்பும் வண்ணமாய் நிற்கும் மதுபாலா இவளைப்பார்த்து சிரிக்க, இவள் பார்க்காதவாறு முகத்தை திருப்பிக்கொண்டாள். அவளின் அழகு இவளை வெறுப்பூட்டியது. திடீரென புறக்கணிக்கப்படும் காரணம் புரியாது குழம்பும் மதுபாலாவின் சுணங்கிய முகத்தைக்கண்டு பரிமளாவின் மனம் அந்தரங்கமாக ஆனந்திக்கத்தொடங்கியது. நள்ளிரவு வரை பொறுமையாக இருந்த பரிமளாவிற்கு அனைவரும் அசதியில் தூங்கத்தொடங்க, மனம் பரபரக்க தொடங்கியது. ஏதேனும் செய்!
உனது அறையில் உனக்குப் பிடித்தமானவன் வேறோரு பெண்ணோடு என மனம் தூண்ட ஆரம்பித்தது. அசதியில் உறங்கும் கணவனும் அன்று அவளுக்குத் தேவைப்பட்ட ஆனால் மறுக்கப்பட்ட கணவனோடான கூடலும் அவளை மெதுமெதுவாக தந்திரங்களை உருவாக்கச் சொன்னது. மனிதனை சூழ்நிலைகளின் இக்கட்டுகள் தான் வழிநடத்துகின்றன. அது ஒரு பரிட்சை.அதில் வெற்றியோ,தோல்வியோ முக்கியம் இல்லை. நியாயங்களா?அநியாயங்களா? பிறருக்கு காயங்களைத் தருகிறோமா? தவிர்த்துக் காயங்களை ஏற்கிறோமா என்பது மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மையில் காயங்களைத் தருவது வீரமில்லை. துணிந்து காயங்களை ஏற்றுக்கொள்வதற்கு தான் தைரியம் வேண்டும்.
பரிமளாவின் எண்ணங்கள் மோகத்திற்கு அடிமையாகிவிட்டது. அது தவறில்லை. ஆனால், அதற்கான நேரம்? அதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவளுக்கு பொறுமை இல்லை..மனமும் இல்லை. யோசித்துக் கொண்டிருந்தவளின் கண்களில் தூக்கிக் கொண்டிருந்த ஸ்வேதாவின் ஆடை மேலே ஏறி தொடைகள் தெரிந்தது. ஒரு நிமிடம் கூட மகளென யோசிக்கவில்லை. தொடையில் பிடித்து நறுக்கென கிள்ளினாள் பரிமளா.
அலறிய குழந்தையின் குரல்கேட்டு பதறி எழுந்து விளக்கை போட்டான் மாணிக்கம்.
“ஏங்க பாப்பாக்கு பசி வந்துட்டுப் போல..பால் பாட்டில் ரூம்ல இருக்குதுங்க. இப்ப என்ன பண்றதுங்க?” – என அப்பாவியாய் முகத்தைவைத்துக்கொண்டு கேட்பவளை செய்வதறியாது பார்த்தான் மாணிக்கம். குழந்தையின் அழுகை பெரிதாகிக்கொண்டே இருந்தது
“சரிடா.. இரு, நான் போய் கதவை தட்டி பாட்டிலை வாங்குறேன்” என கதவைத் தட்டச்சென்ற பங்கஜத்தின் பின்னாலேயே போய் வேண்டுமென்றே நின்றுக்கொண்டாள் பரிமளா. கதவைத் தட்டியதும் உள்ளே சிறிய பரபரப்புக்கு பின் சட்டென்று கதவு திறக்கப்பட்டது. உடனே அங்கு எதுவும் சொல்லாமல் திடீரென.உள்ளே நுழையும் பரிமளத்தைக் கண்டதும் அவிழ்த்திருந்த உடைகளை அணிய நேரமில்லாமல், அருகே கிடந்த போர்வையைச் சுற்றிக்கொண்டு சுவரோரத்தில் குறுகிக்கொண்டவளைப் பார்த்ததும், கழுத்துக்கடிபட்டு உயிர்விடப்போகும் மானின் முன்பான புலியின் கொடூரம் வந்தது பரிமளாவிற்கு. மதுபாலாவைப்பார்த்து நக்கலாக ஒரு சிரிப்புச் சிரித்தாள். ‘நீ எத்தனை அழகாய் இருந்தாலென்ன, படிச்சிருந்தாலென்ன, உன்னை நிம்மதியாக வாழ விடுகிறேனா பார்!’ என்ற ஆணவம் தலைதூக்கியது. இவ்வளவு நாள் தனித்து குடும்பத்தை அடக்கிஆளும் தனது திமிருடன், தன் முன் நிர்கதியாய், நிர்வாணமாய் நிற்பவளை, அப்படி நிற்க வைத்த தன் சாமார்த்தியம் குறித்த எண்ணம் அவளுக்கு பெரும் போதையை தந்தது. அந்த மயக்கத்தோடும், மகிழ்ச்சியோடும் பால் பாட்டிலை எடுத்துக்கொண்டு வெளியேறினாள் பரிமளா.
அங்கே, திடீரென தன்னிடம் கூட சொல்லாமல் திறந்துவிட்ட கதவுகளின் வழியே அப்பட்டமாக்கப்பட்ட தனது அரை நிர்வாணமும், கணவனின் மேல் இருந்த முதல் நம்பிக்கைத் தகர்த்தப்பட்ட நிகழ்வும் தந்த அதிர்ச்சி தாளாது உறைந்திருந்தாள் மது. அவளுக்கு அழுகையாகவும்,அந்த வீட்டின் நடவடிக்கைகள் அதிர்ச்சியாகவும் இருந்தது. என்ன அவசரமாக இருந்தாலும், தன்னை எழுப்பி உடைகளை சரிசெய்யச் சொல்லாத கணவனின் தன் உணர்வில்லாத பதட்டம் குறித்து மதுபாலாவிற்குள் மகிழ்ச்சியின் முழுமையில் ஏதோ ஒன்று விழுந்து உச்சியிலிருந்து கீழாக, சிறிது சிறிதாக உடைபடத் தொடங்கியது. தொடரும் நாட்களில் ,சொந்தமில்லாத அறையில், எப்பொழுது கதவு தட்டப்பட்டு திறக்கப்படப்போகிறதோ என பயந்துக்கொண்டே, கணவனின் கெஞ்சலுக்குக்கூட உடைஅவிழ்க்க பயந்து போனவளாய் மாறியிருந்தாள் மது..
காலை முழுவதும் பரிமளா அவள் அறையில் படுத்துக்கொண்டே, குழந்தைகளை அங்கே தூக்கி கொண்டுபோய் வைத்துக்கொண்டே ஏதேனும் சாக்கு சொல்லி, பகல் நேரத்தில் செல்வமும் மதுபாலாவும் தனியாக அறையில் சந்திப்பதைத் தடுத்திருந்தாள்..இரவு எவ்வளவு தாமதிக்கமுடியுமோ, அவ்வளவு தாமதித்து அறையை விட்டு நகர்ந்தாள்.
அன்று வழக்கம் போல மதுபாலா குளித்துவிட்டு உள்ளே நுழையும் பொழுது, கூடத்தில் ஆசாரி வேலை நடந்து கொண்டிருந்தது. கூடத்தில் நட்டநடுவில் புதிதாக மரஅட்டையால் அடைக்கப்பட்ட ஒரு அறை தயாராக இருந்தது..
“அத்தை..அத்தை, இது என்ன அத்தை புதுசா இருக்கு? யாருக்கு இது..கூடத்துல ஏற்கனவே காத்து வராது..இது வேற ரொம்ப குட்டியா இருக்கே! மூச்சே விடமுடியாதுல்ல, தும்முனாக்கூட வெளில குரல் கேட்கும்..அதுவும் கூடத்துல எல்லாரும் சுத்திலும் இருப்பாங்கள்ள!” எனக்கூறிக்கொண்டே, அந்த ப்ளைவுட்டால் செய்யப்பட்ட அறையை சுற்றிப்பார்த்தாள் மதுபாலா. அவளது அத்தை பங்கஜம் அவளைப் பரிதாபமாக பார்த்தாள். மதுபாலா வீட்டில் அவள் பாட்டிக்காலத்தில் உயர்ந்த விலைமதிப்புள்ள பொருட்கள் வைப்பதற்காக தேக்கு மரத்தினால் செய்யப்பட்டு, வழவழப்பாக இழைக்கப்பட்டு, பூ வேலைப்பாடுகள் செய்த பெட்டகம் ஒன்று இருக்கும்.அதில் சிறுவயதில் கண்ணாம்பூச்சி விளையாடும்பொழுது அடிக்கடி இறங்கி ஒளிந்துக்கொள்ளுவாள். மூச்சுத்திணறி வெளியே ஓடிவந்துவிடுவாள்.அது மாதிரி இது கொஞ்சம் பெருசு என மனதில் நினைத்துக் கொண்டாள். ஒருவேளை மளிகை சாமான்கள் வைப்பதற்காக இருக்குமோ? என எண்ணிக் கொண்டவளாய், சிறிய குன்று போல் இலைகளை மறைத்து மலர்ந்திருந்த,ரோஸ்நிற டிசம்பர் பூக்கள் பறிப்பதற்காக கொல்லைப்புறம் சென்றுவிட்டாள்.
அன்று இரவு கடையிலிருந்து செல்வம் வந்ததும் பங்கஜம் அவனிடம் பரிமளா நேற்றிரவு கொல்லையில் போய் படுத்துவிட்டதாகவும், மாணிக்கம் அவளை சமாதானப்படுத்தி கூட்டிக்கொண்டுவந்ததாகவும் கிசுகிசுப்பாகச் சொல்லியது மதுபாலாவின் காதுகளில் விழுந்தது. செல்வம் ஒன்றுமே பேசாது.பரிமளா அறையிலிருந்து மெத்தை தலையாணிகளைக் கொண்டு வந்து,அந்த மர அறையில் போட்டுவிட்டு, மதுபாலாவைப் பார்த்தான். மகிழ்ச்சி என்பதும் வைரம் போல பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டியது. அதைத் தனியாக அனுபவிக்க வேண்டும். எப்பொழுது அதை பிறரிடம் பகிர்ந்துக் கொள்ளநினைக்கிறோமோ, அப்பொழுது பிணப்பாறை கழுகுகளென துன்பங்கள் நம்மைச் சுற்ற ஆரம்பித்து விடும். அவளிடம் மன்னிப்புக்கோருவதாக இருந்தது அவனது பார்வை. மதுபாலாவிற்கு அந்த அறை கொஞ்சம் கூட பிடிக்க வில்லை. கணவனின் பரிதாப முகத்திற்காகவும், தன்னால் அக்குடும்பத்தில் பிரச்சனை வருவதைத் தடுப்பதற்காகவும் அந்த அறையில் படுக்க அவள் ஒத்துக்கொண்டாள்.
ஆறு மாதங்கள் கழித்து எப்பொழுதுமே தன்னைச்சுற்றி சத்தங்கள் கேட்டுக்கொண்டே, தொலைக்காட்சியில் ஓடும் காட்சிகளுக்கேற்ப, தனக்கு கனவுகள் வந்துகொண்டே, புணர்தல் பொழுதில் கூட சத்தம் எழுப்ப முடியாத, அந்த அறையைச்சுற்றிலும் உள்ள மனிதர்களால் உள்ளே என்ன நடக்கிறது என யூகித்துக்கொண்டே இருக்கும், அந்த அறையை மிகவும் வெறுத்தாள் மதுபாலா. தன் முதல் குழந்தை வேறு வயிற்றிலேயே இறந்து விட, மன உளைச்சலை தந்துக்கொண்டே இருந்த அந்த அறைக்குத் திரும்ப வர முடியாதென்று கூறிவிட்டு அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டாள் மதுபாலா. அத்தனை அதிஷ்டமாக நினைத்த திருமணத்தின் திடீர்பிரிவு பற்றி அனைவரும் இரகசியமாக,ஏதேதோ காரணங்களைப் பேசத்தொடங்கினார்கள்.
“வாங்க சம்பந்தி உள்ள வாங்க!,” – என்று அழைத்துக்கொண்டே,பெரிய வேலைப்பாடுகளுடன் கூடிய சந்தனபேழாவில் உள்ள சந்தனத்தை நீட்டினாள் மாலதி. மாலதி அந்த ஊரின் பெரிய மளிகைக் கடை முதலாளியின் மனைவி.
“வர்றேன் சம்பந்தி! மூணு அழைப்பு முடிஞ்சிருச்சி. பொண்ணையும்,மாப்பிள்ளையும்,கொண்டுவந்து விட்டுட்டு போகலாம்ன்னு வந்தோம்,” என்றாள் பரிமளா. வளர்ந்து புதுப்பெண்ணாக மாறியிருந்தாள் ஸ்வேதா,பரிமளத்தின் மகள்.
“சம்பந்தி முறைப்படி சீர்வரிசை, பலகாரமெல்லாம் கொண்டு வந்திருக்கோம். உங்க சொந்தக்காரங்களுக்கெல்லாம் கல்யாணப் பலகாரம் கொடுத்திடுங்க சம்பந்தி. யமுனா..அந்த வெள்ளிக்குடம்,வெள்ளி சாமானையெல்லாம் சாமி ரூம்ல கொண்டு போய் வைய்யி. ஏய் அபிகுட்டி !அம்மாவ கூப்பிடு! மதுபாலா..மதுபாலா.. ஓ இங்க தான் இருக்கீயா? அந்த நகைப்பெட்டியில தங்கக் கொலுசு இருக்கு. எடுத்துட்டு வந்து சம்பந்திட்ட நல்லாருக்கான்னு காட்டு” என்று ஓர்படியாளுகளுக்கு ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தாள்,பரிமளா.
“இங்க வந்து பாருங்க சம்பந்தி இந்த ரூம் பிடிச்சிருக்கான்னு” என்று மாலதி கைகாட்டிய இடத்தில் புதிதாக முளைத்திருந்தது ப்ளைவுட்டால் அடைக்கப்பட்ட அறை.
“அது ஒண்ணும் இல்லை சம்பந்தி. . காசு பணத்துக்கு நமக்கென்ன குறைச்சல். பத்துவீடு இருக்கு. ஆனா பாருங்க.. இந்த வீட்ல தான் ஒண்ணாயிருக்கோம்..மாப்பிள்ளை பாரீன்லேர்ந்து வந்திருக்காரு..அவருக்கு மாடியில இருக்கற ரூமைக் கொடுத்தாச்சி. கீழ இருக்கற ரூம்ல பெரிய மருமக மாசமா இருக்கு. அதையும் கேட்க முடியாது. இது கொஞ்ச நாள்தான். ஸ்வேதா கொஞ்சம் அனுசரிச்சிக்கம்மா ,”என்ற மாலதியைப் பார்த்து தலையாட்டினாள் ஸ்வேதா.
பரிமளாவிடம், “என்னக்கா இது? நாம மதுபாலாவுக்கு அடைச்சிக்கொடுத்த ரூம் மாதிரியே இருக்குல்ல?” எனக்கேட்டுக்கொண்டிருந்தாள்.யமுனா. ‘ரொம்ப கஷ்டமால்ல இருக்கும். பாவம் புள்ள!’ என்று மெதுவாக குத்திக் காண்பித்தாள் யமுனா, பரிமளத்தின் இரண்டாவது ஓர்படியார்.
அந்த ப்ளைவுட் அறையையும்,ஸ்வேதாவையும் மாறி மாறி சலனமே இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் பரிமளா. மௌனம் நிறைய நேரங்களில் பாவங்களின் பரிசு. தூரத்தில் நகைப்பெட்டியோடு வந்து கொண்டிருந்த மதுபாலாவின் முகத்தில் அந்த அறையைப் பார்த்ததும் பெரிய சந்தோஷம் தெரிவதாக பரிமளாவாக நினைத்துக்கொண்டாள்.
******