
கண்கள் அலைந்ததை விடவும் மனம் இரட்டிப்பு வேகத்தில் அலைந்து கொண்டிருந்து. எனக்கு 41ஆவது நம்பர் டோக்கன் கொடுத்தார்கள். குறைந்தது ஒருமணி நேரம் ஆகலாம் எனக்கான நேரம் வருவதற்கு. அதுவரையில் என்ன செய்வது? இங்கிருப்பவர்களின் முகங்களையும் அவர்களின் அசைவுகளையும் வேடிக்கை பார்க்கலாம், அல்லது சத்தமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கடிகாரத்தைப் பார்க்கலாம். அந்தக் கடிகாரத்தில் இப்போது 6 மணியாகிறது.
என் கண்கள் அலைந்து கொண்டே இருந்தன. பளபளக்கும் இந்த வெண்ணிற டைல்ஸில் என் முகம் பிரதிபலிக்கிறது. அதன் மீது மாஃப்பை வைத்து துடைத்துக் கொண்டிருக்கும் பெண்மணியின் ஒருகையில் அழுக்கு நீர் நிறைந்த வாளியும் மறுக்கையில் மாஃப்புக் குச்சியுமாய் இருந்தாள்.
டைல்ஸில் மாஃப்பை வைத்துத் துடைத்து எடுக்கும் போதும் வாளியின் நீரில் நனைத்து எடுக்கும் போதும் ஏற்படும் சத்தமும் டெட்டால் வாசனையையும் கடந்து என் கண்கள் நுழைவாயிலை நோக்கியிருந்தன.
வெள்ளை உடையில் முறைத்துக் கொண்டிருக்கும் நர்ஸின் அருகில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி, என் கண்களுக்கு தேவதையாகத் தெரிந்தாள். நான் அவளைப் பார்க்கும் போது அவளும் என்னைப் பார்த்தாள் நான் உடனே பார்வையை வேறு பக்கம் திருப்பினேன். அவள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அழகில்லைதான் ஆனால் இங்கிருக்கும் நோயாளிகளுக்கு மத்தியில் அவள் அழகாகத் தெரிந்தாள். என் பார்வை அங்கிருந்து தாவி அறையின் மையச்சுவரில் பொருத்தப்பட்டிருந்த டிவியில் விழுந்தது. அதில் ஓடிய காட்சியில், இரண்டு கதாபாத்திரங்கள் பேசிக் கொண்டிருந்தன. ஆனால் எந்த விதமான சத்தமும் என் காதுகளில் விழவில்லை. என் காதில் மட்டும் அல்ல இங்கிருக்கும் யார் காதுக்கும் டிவி ஓடும் சத்தம் கேட்க வாய்ப்பில்லை. உற்று கவனித்தால் கதாபாத்திரங்களின் உதடுகள் அசைவது மட்டும் நன்றாகத் தெரிந்தது.
என் பார்வை மீண்டும் அந்த பெண்ணிருக்கும் திசைக்குத் திரும்பியது. இப்பொழுது அந்தப் பெண்ணின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தவள் அந்தப் பெண்ணை முழுவதுமாக மறைத்திருந்தாள்.
எப்படியாவது “டோக்கன் நம்பர் 41” என்று அழைக்கும் வரையில் நேரத்தைக் கடத்த வேண்டியிருக்கிறது. ஆனால், இதுவரையில் “டோக்கன் நம்பர் 1″யே அழைக்கவில்லை, அவரும் என்னைப் போலவே காத்திருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன். இத்தனை பேர் காத்திருக்கும் இடத்தில் யாராக இருக்கும் அந்த முதலாம் நபர். அவரும் என்னைப் போலவே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை அவருக்கும் என்முகம் இப்போது வேடிக்கைப் பொருளாக ஆகி விட்டிருக்கலாம். நான்தான் கடைசி டோக்கன் என்று நினைத்திருந்தேன். ஆனால், எனக்குப் பிறகும் பலர் டோக்கனோடு காத்திருக்கின்றனர்.
நுழைவாயிலில் ஒலித்த ஃபோனின் சத்தம் எல்லோரையும் அந்த பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது. நர்ஸில் ஒருத்தி ஃபோனை எடுத்துக் காதில் வைத்துப் பேசினாள்.
“குட் ஈவ்னிங். ரங்கராஜ் ஆஸ்பிட்டல்” என்று சொல்லிய அவளின் தோரணையும் ரசிக்கும்படியாகத்தான் இருந்தது.
“பேஷண்ட் நேம் சொல்லுங்க சார்”..
“ம்”.. (நோட்டில் பெயரை எழுதிக் கொண்டிருந்தாள்)
“வயசு…ம்”…
“62 வது டோக்கன் சார்… தேங்க்யூ சார்”… என்று சொல்லி ஃபோனை வைத்துவிட்டாள்…
எனக்கு முன்பு இருந்த பெரியவர் எழுந்து அந்த நர்ஸை நோக்கி நகர்ந்தார். பெரியவரின் கால் தடம் வெண்ணிற டைல்ஸில் பதிந்ததைப் பார்த்ததும் என் கண்கள் அன்னிச்சையாக மாஃப்பைப் போட்டுத் துடைத்த அந்த பெண்ணைத் தேடின. அவள் தென்படாததால் கண்கள் மீண்டும் பெரியவரிடம் சென்றன..
பெரியவர் இப்போது நுழைவாயிலில் இருக்கும் நர்ஸிடம்…
“டாக்டர் எப்பமா வருவாரு…?”
“கிளம்பிட்டார் தாத்தா.. இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திடுவாரு.” என்று சொல்லி விட்டுக் கையில் இருந்த கைபேசியில் பார்வையைப் புதைத்துக் கொண்டாள்.
இப்போது மீண்டும் என் பார்வை டிவியின் பக்கம் விழுந்தது. அதில் நாயகனும் நாயகியும் நடனமாடிக் கொண்டிருந்தனர். இசையில்லாமல் அவர்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்க்க சிரிப்பு வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்த நேரம், “நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்களா?” நர்ஸ் என்னைக் கடந்து அமர்ந்திருந்தவரிடம் பேசினாள். அவர்கள் பேசுவதை பார்க்கையில் அவர் இங்கே ரெகுலர் கஸ்டமர் என்று தோன்றியது.
அதற்குள்ளாக, நர்ஸில் ஒருவள் டோக்கனோடு இருப்பவர்களை அழைத்து வெய்ட், பீபி, மற்றும் சிலருக்கு தெர்மாமீட்டரை அக்குளிலும் வாயிலும் வைத்து காகிதத்தில் குறித்துக் கொண்டிருந்தாள்.
இப்போது அந்தக் கடிகாரத்தில் 6.31 ஆகியிருந்தது. அமைதியான சூழலில் கடிகாரத்தின் முட்கள் நகர்வது நமக்குக் கேட்கும். ஆனால், இந்த டிஜிட்டல் கடிகாரத்தில் “டிக் டிக்” ஒலி கேட்கவில்லை. என்னைப் போலவே என் அருகில் இருப்பவரும் அந்த டிஜிட்டல் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு தன் கையில் இருக்கும் வாட்ச்சையும் பார்த்து பின் நுழைவாயிலைப் பார்த்தார். அப்போது நுழைவாயிலின் வெளிப்பகுதி இருட்டியிருந்தது. அந்த இருள் உள்ளே நுழையாமல் இங்கே “எல் ஈடி” பல்புகளின் வெளிச்சம் பளீர் என்று படர்ந்திருந்தது.
இருட்டிலிருந்து உள்ளே நுழைந்தால், வலது பக்கத்தில் நீல நிற மேசை இருந்தது. அந்த மேசையின் உள் பக்கம் நர்ஸ்கள் அமர்ந்திருந்தார்கள். வலது பக்கத்தில் கண்ணாடி கதவுகளைக் கொண்ட அறையிருந்தது. அந்தக் கண்ணாடி அறையினுள்ளிருந்து மணி ஒலித்ததைக் கேட்டு, விரைந்து உள்ளே சென்ற நர்ஸ் ஒருத்தி பரபரப்பாக வெளியே வந்து “டோக்கன் நம்பர் ஒன்” என்று கத்திச் சொன்னதைக் கேட்டு டோக்கன் நம்பர் ஒன் எழுந்து உள்ளே நுழைந்தார்.
காத்திருந்தவர்கள் அனைவரும் அசைந்து நெளிந்து ஆசுவாசமாய் மூச்சு விட்டோம். இரண்டாவது டோக்கன்காரர் அதற்குள் எழுந்து தயாரானார், சற்று நகர்ந்து அந்த கண்ணாடி அறைக்கு அருகில் சென்று நின்றார். அவரைப் பார்த்து மூன்றாவது டோக்கன்காரரும் தயாரானார்.
எனது பின் வரிசையில் இருந்தவர் கைபேசியில் சத்தத்தை அதிகமாக வைத்துக் கொண்டு, “யூடியூபில்” எதையோக் கேட்டுக் கொண்டிருந்தை நிறுத்தச் சொல்லி விட்டுக் கடந்தாள் ஒரு வெள்ளை தேவதை.
இரண்டு பேர், சட்டையைப் பேண்டுக்குள் விட்டுக் கொண்டு, கழுத்தை இறுக்கி தொங்கி மின்னிக் கொண்டிந்த டையும், கையில் “GM Pharma” என்ற எழுத்துகள் பதிந்த பையுடன் நுழைவாயிலில் நின்று பேசிக் கொண்டிருந்த நேரம், இரண்டாவது டோக்கன்காரர் உள்ளே சென்றிருந்தார். அந்நேரம் கண்ணாடி அறையின் இடது பக்கத்திலிருந்த மருந்தகத்தில் சீட்டை நீட்டிக் கொண்டிருந்தார் முதல் டோக்கன்காரர். என் கண்கள் கையில் இருந்த டோக்கனைப் பார்த்து. பிளாஸ்டிக்கினால் ஆன அட்டைப் போன்ற வடிவத்தின் மேல் 41 என்ற எழுத்து பதிந்திருந்தது. சிறைச்சாலைகளில் கைதிகளுக்குக் கொடுக்கும் உடையில் எண் பதிந்திருக்குமே அதுபோல இங்கேயும் எனக்கு இந்த எண் — சம்மந்தம் இல்லாமல் மனம் எதையோ யோசித்துக் கொண்டிருந்தது.
போனில் சார்ஜ் இருந்திருந்தால் நானும் என் நேரத்தை அதனுள் நுழைத்துக் கடந்திருப்பேன். அடுத்தமுறை வரும்போது அப்படி நடக்காமல் சார்ஜ் பேக்கோடு வர வேண்டும். அப்போது பின்னால் இருந்த பத்தாவது டோக்கன்காரர் உடலை நெளித்து மெலிதாக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தார். அவரின் அருகில் இருந்தவள் மூனாவது டோக்கன்காரரிடம், “அடுத்து நாங்க போறோம்”… “கொஞ்சம் உதவி பண்ணுங்க”… “வயித்து வலியால துடிக்கிறாரு”.. “பிளீஸ் கொஞ்சம் உதவி பண்ணுங்க” என்று கேட்டுக் கொண்டிருந்தாள் ஆனால் மூன்றாவது டோக்கன் காரர் மசிவதாக இல்லை.
“என்னமா… எனக்கும் தான்மா.. வலி தாங்கல.” மழுப்பலாகச் சொல்லி விட்டு அங்கிருந்து நழுவினார்.
இப்போது நான்காவது டோக்கன்காரர் எழுந்து அந்தப் பெண்ணிடம் தன்னுடையை டோக்கனை கொடுத்து விட்டு அவர்களுடைய பத்தாவது டோக்கனை வாங்கிக் கொண்டு, சுற்றி எல்லோரையும் பார்த்து சட்டைக் காலரைத் தூக்கி விட்டு பின் நிமிந்து உட்கார்ந்து கொண்டார்.
எனக்கு முன்னே அமர்ந்திருந்த பெரியவர், அந்த வயற்று வலியால் நெளிந்தவரின் அருகில் நின்று கொண்டு “என்னமா ஆச்சு” என்று நோயைப் பற்றி விசாராரித்தவுடன், அந்த பெண் காத்திருந்தவள் போல கண்ணை கசக்கிக் கொண்டு கரைந்தாள்.
“இந்த மாசத்துக்கான டார்கெட்டவாச்சும் முடிக்கனும்”. GM Pharma பேகை வைத்திருந்தவர்கள் என்னைக் கடந்து காலியாக இருந்த இருக்கையில் அமர, பார்த்து வந்த நர்ஸ் ஒருத்தி… “ஏன் சந்துரு சார் வரலயா இன்னைக்கு”
“புரடக்ஸன் யூனிட்ல ஒரு மீட்டிங்… சோ சார் அங்க போயிட்டார்”
“மேடம் கொஞ்சம் சீக்கரம் எங்கள சார்ட அனுப்பிச்சீங்கன்னா… நல்லா இருக்கும்”
“சார்… சார்ட்ட சொல்லியிருக்கேன்.. மேக்சிமம் சீக்கரமா கூப்பிட்டுடுவார்”
“ஓகே மேம்.. தேங்க்ஸ்”
“வெல்கம் சார்” என்று சொல்லி விட்டு நகர்ந்தாள்.
மணி இப்போது 7.20 ஐக் கடந்திருந்தது. ஒரு சிறுவன் தன் அம்மாவிடம் ஃபோனைக் கேட்டு அடம் பிடித்தான். அவனின் கண்களை மிகப் பெரிய கண்ணாடி மறைத்திருந்தது. அவனைக் கடந்து அந்தப் பெண்ணைப் பார்த்தேன். அவளின் கை விரல்கள் ஃபோனில் வேகமாக டைப் செய்து கொண்டிருந்தன.
இந்த சலசலப்பிற்குள் வெள்ளைச் சட்டையோடும் கருப்பு பேண்டோடும் வந்த நபர் எனக்கு மிகவும் பரிச்சியமானவர், நானும் அவரும் ஒரே அலுவகத்தில்தான் பணிபுரிந்தோம்.
என்னைப் பார்த்து ஒரு சிரிப்பை உமிழ்ந்துவிட்டு வந்து பேசுகிறேன் என்று சொல்லி விட்டு உள்ளே போனார். அதற்குள்ளாக, “என்னுடையதுதான் மூனாவது டோக்கன். ஆனா அவங்கள உள்ள அனுப்பறீங்க?” என்று நுழைவாயிலில் இருந்த நர்ஸிடம் ஒருவர் கேட்டார்.
கண்பார்வையைத் திருப்பாமல் எதையோ தேடுவதைப் போல தன் முன்னிருந்த மேசையில் பார்வையும் கையையும் விட்டுத் துழவிக் கொண்டே…
“சார்… அவர் ஸ்பீடு டோக்கன் வாங்கியிருக்காரு”
“ஸ்பீட் டோக்கன்னா?”
“ஸ்பீடு டோக்கன்னா நமக்கு ரொம்ப அவசரம்னா… எத்தன பேர் காத்துகிட்டு இருந்தாலும், 200 ரூபா கொடுத்து ஸ்பீடு டோக்கன் வாங்கிட்டா டைரக்ட்டா உள்ள போய் டாக்டர பாக்கலாம்.. ”
“ஓஹோ… இங்க நாங்க எல்லாம் மதியத்திலே டோக்கனப் போட்டு… சீக்கிரம் வந்து இங்க இவ்ளோ நேரம் வெயிட் பண்றது எல்லாம் வேஸ்டா?” என்று சொல்லிவிட்டு எந்த பதிலையும் எதிர்பாக்காமல் கண்ணாடி அறையின் அருகே சென்று நின்று கொண்டார்..
காத்திருந்தவர்களிடம் சிறிய சலசலப்பு ஏற்பட்டது. உள்ளே சென்ற சேது சாரும் நானும் முன்பு ஒரே நிறுவனத்தில் வேலை செய்தோம். இப்போது அந்த நிறுவனத்தை விட்டு வந்து இரண்டு ஆண்டுகளாகிறது. அந்த அலுவலகத்தில் எனக்கு இவர்தான் சீனியர். இன்னும் அவர் அந்த நிறுவனத்தில்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த நிறுவனத்தில் உயரிய பதவியில் இருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இவரின் செய்கை பிடிக்காமல் இவரின் காதுபடவே இவரைத் திட்டித் தீர்த்திருக்கிறார்கள்.
மடிப்புக் கலையாமல் இஸ்திரி செய்த சட்டையை பேண்டுக்குள் விட்டுக் கொண்டு எப்படி வருகிறாரோ அப்படியே வீடு திரும்புவார். “மடிப்புகலையாத மங்கூஸ்”, “வெசப்பூச்சி” எனப் பல பெயர்களைக் கொண்டு இவரை மற்ற ஊழியர்கள் அழைத்துக் கேட்டிருக்கிறேன். ஒரு குண்டூசியை நகர்த்தினாலே பெரிய காரியத்தை நிகழ்த்தி விட்டதாக பீத்திக் கொள்வார். சக ஊழியர்களிடம் சாதி பார்த்தே பழகுவார். ஐந்து நிமிடத்தில் செய்து முடிக்கும் வேலையை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் விவாதிப்பார். எது எப்படியோ இப்போது நான் அவரிடம் வேலை செய்யவில்லை. சாமியே வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் தர விட மாட்டார் என்பது போலத்தான் இவர் பூசாரியாகவே இருந்திருக்கிறார் பலருக்கு.
இந்த 200 ரூபாய்க்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிக்கலாம். சம்மந்தம் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், இவரைப் பார்த்தவுடன் அந்த நாட்களின் நினைவுகள் மேலெழுகிறது.
சேது சாரின் தலமையில் கீழ்தான் நான் வேலை செய்தேன். ஆனால், அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார். நாங்கள் எல்லோரும் செய்யும் வேலையை அவர் செய்ததாகச் சொல்லி மனம் கூசாமல் பாராட்டை வாங்கிக் கொள்வார். கடப்பாரையை முழுங்கியதைப் போல எப்போதுமே விரைப்பாக இருப்பார்.
அந்த அலுவலகத்தை சுத்தப்படுத்தும் ரேவதி அக்காவை, வயதில் சிறியவர்கள் கூட ” ரேவதி ” என்று பெயர் சொல்லியே அழைப்பார்கள். அதிலும் ஒரு சிலர் அது இது என்று கூட பேசிக் கேட்டிருக்கிறேன்.ஆனால், எனக்கு அப்படி அழைக்கப் பிடிக்கவில்லை. நான் ‘ரேவதி அக்கா’ என்று அழைத்த உடன் கண்கள் பூக்க என்னைப் பார்த்தாள். அன்றில் இருந்து என்னைத் தனியாகப் பார்க்கும் போது, “வணக்கம் தம்பி” என்றும் மற்ற ஊழியர்களோடு என்னைப் பார்க்கும் போது “வணக்கம் சார்” என்றும் சொல்லி விட்டுப் போவார். ஒருமுறை நானும் சேது சாரும் ஒன்றாகப் பேசிக் கொண்டே சென்ற போது, எங்களுக்கு எதிரே வந்து கொண்டிருந்த ரேவதி அக்கா என்னைப் பார்த்து, “வணக்கம் சார்” என்று சொல்லி விட்டுச் சென்றார்.
அப்போது என்னோடு பேசிக் கொண்டு வந்தவர் திடீரென்று பேச்சை நிறுத்தி விட்டார், முகம் வெளிறி இருந்தது. “நான் என்ன ஆச்சு சார்?” என்று கேட்டதற்கு அவர் சற்று இடைவெளி விட்டு ஒன்றுமில்லை என்றார். நானும் ஏதோ உடல் உபாதையாக இருக்கலாம் என்று அப்போது நினைத்திருந்தேன். அத்றகான பதில் எனக்குத் தாமதமாகவே கிடைத்தது.
இரண்டு நாள்கள் கழித்து நானும் அவரும் வழக்கம்போல, அவர் பேச நான் கேட்டுக் கொண்டு சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிரே வந்த ரேவதி அக்கா அவருக்கு முதலில், “வணக்கம் சார்” என்று சொல்லிவிட்டுப் பிறகு எனக்கு “வணக்கம் சார்” என்று சொல்லி நகர்ந்தாள். அப்போது இவரின் முகம் சாதனை உணர்வில் மிதந்திருந்தது. சிரிக்கச் சிரிக்க பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு ரேவதி அக்காவை அங்கே பார்க்க முடியவில்லை அலுவலகத்தின் கணினி முன்னேயே நேரம் கழிந்தது. இனம் புரியாத ஒவ்வாமை உணர்வுடனே அங்கே இருந்தேன்.
அதிகாரமும், நாம் செய்யும் வேலைகளுக்காக அவர்கள் கொடுக்கும் பதவிகளும் வெறும் வெற்றுக்கூடு அதை வைத்து ஏற்றத்தாழ்வுகளை நிகழ்த்துவதில் எனக்கு உடன்பாடில்லை. சில நாட்கள் கழித்து எதேச்சையாக ரேவதி அக்காவைப் பார்க்க நேர்ந்தது. எப்படி இருக்கீங்க என நலம் விசாரித்தேன். அக்காவும் என்னை பதிலுக்கு விசாரித்து முடித்த பிறகு, “தம்பி கோச்சிக்காத பா.. அன்னைக்கு உன் கூட இருந்த சாருக்கு முதலில் வணக்கம் வச்சதுக்கு… ”
“இதுல என்னக்கா கோச்சிக்க இருக்கு..” என்றேன்.
இல்ல தம்பி அன்னைக்கு.. அவர் கூட நீங்க வரும்போது உங்களுக்கு வணக்கம் சொன்னேன் இல்லை… அதுக்கப்பறம் என்ன கூப்ட்டு
அவர் பேசினார்… எனக்கு 200 ரூபா கொடுத்து அவர பாக்கும் போது வணக்கம் சொல்லனம்னு.. சொன்னார்..
அவர்கிட்ட பதில் பேசும் அளவிற்கு எனக்கு தைரியம் இல்ல தம்பி
“நான் எதும் நினைக்க மாட்டேன் கா”.. என்று சொல்லி விட்டுக் கடந்தேன்.
அதன் பிறகு அவரின் முகத்தைப் பார்க்க எனக்கு அருவருப்பாக இருந்தது, உடன் சிரிப்பும் வந்தது. இப்போது திடீர் என்று அவரைப் பார்க்கும் போது அந்த சம்பவம் என் நினைவில் இருந்து முன்னே வந்து விழுந்தது. இப்போது அந்த அழுக்கு வாளியில் எடுத்துப் பிழியும் மாஃபின் அழுக்கு நீர் நினைவுக்கு வருகிறது.
உள்ளே இருந்து அவர் வரும் போது நாம் இங்கே இருக்கக் கூடாது என்று நினைத்து எழுந்து வேறு இடத்தைப் பார்த்து உட்கார்ந்தேன்.
இப்போது அந்த நான்காவது டோக்கனை வைத்திருக்கும் வயித்து வலிக்காரர் வாய் விட்டுக் கத்தவே ஆரம்பித்து விட்டார். காத்திருந்த நோயாளிகள் எல்லோரும் அந்த வயித்துவலிக்காரரைப் பார்த்தார்கள்.
“இதோ போய்டலாங்க” என்று சொல்லித் தோளில் கையை வைத்து விட்டுத் தனது கலங்கிய கண்களோடு கண்ணாடிக் கதவைப் பார்த்தாள். அந்தக் கண்ணாடிக் கதவில் ஒரு புகைப்படம் ஒட்டப்பட்டிருந்தது அதில் ஒரு குழந்தை தன் வாயின் மீது விரலை வைத்திருக்கிறது. அதன் கீழே ” silence please” என்ற வாசகம் எழுதப் பட்டிருந்தது.
அருமை