எனக்கு அம்மா வேணும் (சிறார் கதை) – விழியன்

”எனக்கு உடம்பு சரியில்லை” என்றது மிக்கா. “சரி வா மருத்துவரைப் பார்ப்போம்” என்றது குக்கா. மிக்காவும் குக்காவும் பென்குயின்கள். அண்டர்டிகாவில் வாழ முடியாததால் அங்கிருந்து எல்லா பென்குயின்களும் வெளியேறிவிட்டன. மிக்காவும் குக்காவும் ஒரு மலையில் வசித்து வந்தனர். “இந்த ஊரில் மருத்துவர்கள் எங்கே இருப்பார்கள் எனத் தெரியவில்லை மிக்கா. வா தேடிப்போவோம்” என்றது குக்கா. தனக்கு இருந்த மூன்று முடியையும் சீவிக்கொண்டு கைப்பை ஒன்றினை எடுத்துக்கொண்டு கிளம்பியது மிக்கா.
மலையில் இருந்து மெல்ல கீழே இறங்கினார்கள். காடு ஒன்றிற்குள் நுழைந்தார்கள். வரும் வழியில் ஒரு சத்தம் கேட்டது. ஒரு புதருக்கு அருகே இருந்து சத்தம் வந்தது.
“மியாவ் மியாவ் மியாவ்”
ஒரு குட்டிப் பூனை அங்கே இருந்தது.
“நீ யாரு குழந்த. இங்க என்ன செய்ற?” என்றது குக்கா.
குட்டிப்பூனை இருவரையும் பார்த்தது. இருவரும் ஒன்று போலவே இருந்தார்கள். பென்குயின்களை பூனை பார்த்ததே இல்லை. பென்குயின்களின் முன்பகுதி முழுக்க வெள்ளையாக வழவழப்பாக இருந்தது.
“எனக்கு அம்மா வேணும்” என்றது குட்டிப்பூனை.
“உங்க வீடு எங்க இருக்கு?” எனக்கேட்டது குக்கா.
“எனக்கு அம்மா வேணும்”
சுற்றிலும் யாரையும் காணவில்லை. சரி எங்களோடு வா உன்னை உரிய இடத்தில் சேர்க்கின்றோம் என்றன குக்காவும் மிக்காவும். இரண்டு பென்குயின்களுக்கு நடுவே மெல்ல மெல்ல நடந்து வந்தது பூனை.
“உனக்கு பேரு வெச்சிருப்பாங்க இல்ல. என்ன பேரு?” – குக்கா
“எனக்கு அம்மா வேணும்”
”சரி சரி அம்மாகிட்ட போகலாம்” – மிக்கா
எதிரே ஒரு ஓநாய் வந்தது. ஓநாயைப் பார்த்ததும் பூனை மிக்காவுக்கு பின்புறம் ஒதுங்கியது. மெல்லிய குரலில் “எனக்கு அம்மா வேணும்” என்றது. ஓநாய்க்கு வணக்கம் வைத்துவிட்டு
“இந்த குட்டி யாரென்று தெரியுமா? இவங்க அம்மாவைத் தெரியுமா?” என விசாரித்தது குக்கா.
“அட இது பூனைக் குட்டி. இவங்க எல்லாம் நாட்டுல இல்ல வசிப்பாங்க. ஏன் குட்டிப்பூனை எப்படி மலைக்கு வந்த?” என விசாரித்தது ஓநாய்.
ஆனால் ஓநாயைப் பார்த்து பயந்ததால் மிக்கா குட்டிப்பூனையை தழுவியபடி “மிக்க நன்றி நாங்க குட்டியை சேர்த்திட்றோம்” என நன்றி தெரிவித்தது. ஓநாய் கடந்து சென்றது. ஓநாய் சென்றதும்.
“ஓ நீ பூனைக்குட்டியா? நாங்க கேள்விப்பட்டு இருக்கோம் ஆனா நாங்க பார்த்ததே இல்லை “ என்று சொன்னது மிக்கா.
“எனக்கு அம்மா வேணும்”
நடுக்காட்டில் இருந்தார்கள். மரம் ஒன்றில் கழுகு அமர்ந்து இருந்தது. பல ஊர்களுக்குச் செல்லும் பறவை என்பதால் அதனிடம் உதவி கேட்டன
“அழகு கழுகே, எங்களுக்கு இரண்டு உதவிகள் செய்ய வேண்டும். ஒன்று. இந்த குட்டிப் பூனையை அதன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும். இரண்டு ஒரு நல்ல மருத்துவரிடம் எங்களை அழைத்துச் செல்ல வேண்டும்”
“பூனைக்குட்டியே, நீ எந்த ஊரில் வசிக்கின்றாய்?” என்று கம்பீர குரலில் காடே அதிரும் குரலில் கேட்டது கழுகு.
“எனக்கு அம்மா வேணும்” என்று மட்டும் சொன்னது பூனை.
தான் பறந்து சென்று எங்காவது பெரிய பூனை சின்னப் பூனையை தேடிக்கொண்டு இருக்கான்னு பார்த்துவிட்டு வருகின்றேன் என்று கழுகு பறந்தது.
“பசிக்குதா குட்டிப்பூனை? நீ என்ன சாப்பிடுவ?”
“எனக்கு அம்மா வேணும்”
மரம் ஒன்றில் கீழே தொங்கும்படி இருந்த பழங்களை எடுத்து பூனைக்கு கொடுத்தது குக்கா. வாயில் பழத்தின் மீதி ஒட்டி இருந்ததை துடைத்துவிட்டது மிக்கா. எந்த திசையில் செல்வது எனத் தெரியாமல் மூவரும் நின்றுகொண்டு இருந்தார்கள். சிறிது நேரத்தில் கழுகு பறந்து வந்தது.
“குட்டிப்பூனையின் பெயர் கனி. அதனுடைய அம்மா அதோ கிழக்கு காட்டில் தேடிகிட்டு இருக்காங்க. நான் தூக்கிப்போய் அதனோட அம்மாகிட்ட விட்டுட்றேன்” என்றது கழுகு. ஆனால் குட்டிப்பூனை பயந்தது.
“எனக்கு அம்மா வேணும்”
கனி பயப்படுவதை உணர்ந்த குக்காவும் மிக்காவும் அம்மா பூனை இருக்கும் திசையைக் கேட்டன. அந்த திசையில் நடக்க ஆரம்பித்தன. குட்டிப் பூனை கனிக்கு அண்டார்டிக்காவின் கதைகளை சொல்லிக்கொண்டு வந்தது மிக்கா. வெகு தூரம் நடந்ததும் தூரத்தில் “மியாவ் “ என்ற சத்தம் கேட்டது
“அம்மா…” என்றது கனி.
கனியின் அம்மா கண்ணீர் மல்க நின்றுகொண்டு இருந்தது. ஓடிப்போய் அம்மாவை கட்டித்தழுவியது கனி. அம்மாவும் அழுதது. மிக்கா குக்காவுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தது. ஆளுக்கு ஒரு செர்ரி பழத்தினை அன்பு பரிசாக கொடுத்தது கனியின் அம்மா.
“மிக்கா, உனக்கு உடம்பு சரியில்லை என கழுகு சொன்னது. மருத்துவரைப் பார்க்க வேண்டுமா? அழைத்துச் செல்லவா?” எனக்கேட்டது கனியம்மா.
மிக்கா சிரித்தது.
“உங்க முகத்திலும் கனியின் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்த்ததும் என் உடம்பு சரியாகிவிட்டது” என்றது மிக்கா.
இரண்டு பூனைகள் ஒரு திசையிலும் இரண்டு பென்குயின்கள் ஒரு திசையிலும் பிரிந்தன.
“அம்மா. எனக்கு குக்கா மிக்கா வேணும்”
அதனைக் கேட்டதும் குக்காவும் மிக்காவும் ஓடிச்சென்று கனியை கட்டிக்கொண்டன.