சிறு வயதில் என் பிறந்தநாளை கையில் ஒரு மதுக்கோப்பையுடன் நீச்சல் குளத்தில் நான்கைந்து அழகிகளுக்கு மத்தியில் கழித்த நினைவு இப்போதும் நிழல் போல் நினைவிருக்கிறது. அந்த அழகிகளை அழகிகள் என்று சொல்வது தவறு. அவர்கள் அழகிகளே இல்லை. பார்பி பொம்மைக்கும் அவர்களுக்கும் மிக மிகக் குறைந்த அளவே வித்தியாசங்கள் இருக்கும். சமயத்தில் அவர்கள் பார்பி பொம்மைகள் தானோ என்று கூட எனக்குத் தோன்றியிருக்கிறது. அவர்களுக்கு கொங்கைகள் சற்று பெரிது. நேற்று ஒரு அளவு, இன்று ஒரு அளவு, நாளை வேறொரு அளவு. எல்லாம் சிலிக்கானின் அற்புதங்கள். ஒடிந்து விடுவது போல் இடை. அதுவும் சிலிக்கான் தான். சிலிக்கான் இருப்பதாலேயே அவர்களை ரோபாட்டுகள் என்று சொல்லி விட முடியுமா? இயந்திர உறுப்புகளைக் கொண்ட மனிதர்களா? அல்லது மனித உறுப்புகளைக் கொண்ட இயந்திரங்களா? தெரியவில்லை. ஆனால், அப்போது அது முக்கியமாக இருக்கவில்லை. அது போன்ற தருணங்களில் அது முக்கியமாக இருப்பதுமில்லை தான்.
எனக்கும் அப்போது கைகள் இல்லை. கிருமி ஒன்று தொற்றி, பின் அது என் உடலெங்கும் பரவி, அதன் அகோர பசிக்கு உணவாக என் கைகளையே தின்றுவிட்டதால் வேறு வழியின்றி கைகளுக்கு பதிலாக உலோகக் கரங்கள் வைத்திருந்தேன். நானாவது பரவாயில்லை. சிலருக்கு மூளை மட்டும் தான் இருந்தது. எஞ்சிய அனைத்து உடல் உறுப்புகளும் இயந்திரங்களாக இருந்தன. வேறு சிலருக்கு உடல் இருந்தது. ஆனால் மூளையே இல்லை. வெறும் சிலிக்கான் சிப்புகளும், ப்ராசஸர்களும் தான். இப்படி அந்த வயதில் நான் பார்த்தவைகள்/பார்த்தவர்கள் அனைத்தும்/அனைவரும் முழுக்க மனித உடல்களாக இல்லை. பாதி அல்லது பாதிக்கும் மேல் இயந்திரமாக இருந்தது/இருந்தார்கள். சில சமயங்களில், குழப்பமாக இருக்கும். எது இயந்திரம், எது மனிதன் என்று.
அந்த அனுபவங்களை ஒப்பிடுகையில் எனது இருநூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாட்டம் சற்று வினோதமானது தான். உண்ண உணவில்லை. குடிக்க மதுக் கோப்பைகள் இல்லை. உட்கொள்ள மின்சாரங்கள் கூட இல்லை. ஆனாலும் எனக்குப் பசி இல்லை. உடலில் சோர்வில்லை. வயிற்றுக்குள் ஒரு விதை. அது வேர் விட்டு , கிளை விட்டு இலைகள் விட்டு செழித்து வளர்ந்திருந்தது. பசி எடுக்க எடுக்க நான் அதைத் தின்றேன். பதிலுக்கு அது தன் பசிக்கு என்னைத் தின்றது. நாங்கள் ஒருவரை ஒருவர் தின்று கொண்டோம். ஒருங்கே பிழைத்தோம்.
அதற்குப் பிறகு எனக்கு நோய் இல்லை. பிணி இல்லை. வலி இல்லை. அவ்வளவு ஏன்? உடம்பே பாதி இல்லை. பாதி மனிதனாகவும், மீதி தாவரமாகவும் இருந்தேன். மூச்சு விட ஆக்ஸிஜன் தேவையென்று கூட இல்லை. கார்பன் டை ஆக்ஸைடு இருந்தால் கூட போதும்.
அக்காலகட்டங்களில் நாள், கிழமை, காலை, மாலை, மதியம் முன்மாலை, பிற்பகல் என்பதெல்லாம் முற்றிலும் அற்றுப் போயிருந்தது. வெறும் பகல், இரவு தான். அதுவும் கூட நீண்ட பகல், நீண்ட இரவு. இரவு வந்தால் பகல் முடிந்துவிட்ட கணக்கு. பகல் வந்தால் இரவு முடிந்துவிட்ட கணக்கு. இரவு வரும் வரை இருப்பது பகல், பகல் வரும் வரை இருப்பது இரவு. அவ்வளவுதான். சில நேரங்களில் பகல் அளவுக்கு நீண்டதாக இரவு இருக்கவில்லை. வேறு சில நேரங்களில் இரவு அளவிற்கு பகல் நீண்டதாக இருக்கவில்லை. எதிலும் ஒரு ஒழுங்கில்லை. அல்லது ஒழுங்கற்றதே பேரொழுங்காக இருந்தது.
அப்படியேவாவது இருந்திருக்கலாம்.
அதற்குப் பின்னான ஒரு இரவில் அது துவங்கியது. என்னளவில் அது ஒரு கரி இரவு. பெயருக்கேற்றார்போல் அந்த இரவுக்குப் பிறகு பகலே இல்லை. இரவு நீண்டு விட்டிருந்தது. எந்தளவிற்கு நீண்டிருந்ததெனில், அடுத்து வெளிச்சமே வரவில்லை. வரும் வரும் எனக் காத்திருந்து நான் இருளுக்குள்ளேயே மூழ்கிப் போனேன். எங்கும் இருள். எதிலும் இருள்.
ஒருவேளை பகல் வந்திருக்கலாம். அதை நான் கவனிக்காமல் இருந்திருக்கலாம். தெரியவில்லை. ஆயினும் இருட்டியே இருந்தது. ஒருவேளை அதுதான் பகலோ? பகலுக்கு நிறம் தேய்ந்து விட்டதோ? பகலும் கருப்பாகிவிட்டதோ? அப்படியானால் கருப்பாக்கியது யார்? எது? தெரியவில்லை. உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் சூரியனற்ற அந்த வெளியில் தொடர்ந்து, நிற்காமல் பேய் மழை பெய்தது போல் என்னைச் சுற்றி எங்கும் நீர்.
ஆம். நீர் தான். அப்படியானால், கண்டிப்பாக மழையாகத்தான் இருக்க வேண்டும். இல்லையில்லை. மழையாகவும் இருக்கலாம்.
நீர்.
நீர்.
எங்கும் நீர்.
என்னைச் சுற்றிலும் நீர். ஆனால், எனக்கு மூச்சு முட்டவில்லை. சீராகத்தான் சுவாசித்தேன். ஆதலால், நான் அதை ஒரு கொடிய கனவென்றும், அடுத்த கணமே விழித்து விடுவோம் என்றும் தான் எண்ணியிருந்தேன். நம்பியிருந்தேன். ஆனால், அடுத்த கணம் என்ற ஒன்று வராததைப் போலவே இருந்தது. அல்லது அக்கணமே அடுத்தடுத்த கணங்களுக்கு தன்னை நீட்டித்துக் கொண்டது போல் இருந்தது. அல்லது காலமே ஸ்தம்பித்து விட்டது போலவுமிருந்தது. எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் என்னால் சுவாசிக்க முடிந்தது. அந்த நீருக்குள்ளும். அது எப்படி? எனக்கு நீச்சல் தெரியாது. ஆயினும் நான் மூழ்கவில்லை. அது எப்படி சாத்தியம்?
வேர் விட்டு, கிளைகள் விட்டு, இலைகள் விட்டு வளர்ந்ததின் உபயத்தினாலா? சரியாக சொல்லத் தெரியவில்லை. ஒரு விதமாக அரைகுறையாக அழிந்த நியாபகம் போல் இருந்தது. எத்தனை முயன்றும் அந்தக் காட்சிகளை முழுமையாக நினைவடுக்குகளிலிருந்து மீட்க முடிந்திருக்கவில்லை.
ஏதோ ஒரு பாழும் கிணத்துக்குள் விழுந்து விட்டதைப் போல உணர்ந்தேன். என்னைச் சுற்றிலும் நீர். பசிக்கவில்லை. கண்விழிப்பு இல்லை. பிரக்ஞை இல்லை. ஆனால் நான் இருந்தேன். நான் இருந்தேனா? எதனுள் இருந்தேன்? எதுவாக இருந்தேன்? எப்படி இருந்தேன். இருந்தேன் என்றால் ஏன் உணர்வே இல்லை?
அடுத்த கணம் எனக்கு முயங்கத் தோன்றியது. நரம்புகள் விரைத்தன. அவைகள் நரம்புகள் தானா? அல்லது வெறும் நார்களா? நார்கள் தான் நரம்பாகிவிட்டனவா? அல்லது நரம்புகள் நார் போல் உறுத்துகின்றனவா? என்னால் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஏனெனில், நான் தான் இப்போது பாதி மனித உடலும் மீதிக்கு தாவரமாகவும் இருந்தேனே. இன்னும் சொல்லப்போனால், எத்தனை சதம் மிருகமாகவும், எத்தனை சதம் தாவரமாகவும் இருந்தேன் என்பதைக் கூட என்னால் கணிக்க முடிந்திருக்கவில்லை.
ஆனால் என்னைச் சுற்றி நீர் தான் இருந்தது. முயங்க வேண்டிய அகத்தூண்டல் அடைந்தேன். இப்போது பெண்கள் போல் பொம்மைகளோ, பொம்மைகள் வடிவில் பெண்களோ தேவைப்படவில்லை. அதனாலேயே நான் மிருகமாகவே இல்லையோ என்று கூட தோன்றிற்று.
பெண்களோ, பெண் போன்ற தோற்றம் தரும் சிலிக்கான் பொம்மைகளோ இல்லாமலே முயங்க மனம் உந்தியது. அது எப்படி? அப்படியானால் நான் யாராக இருக்கிறேன்? எதுவும் விளங்கவில்லை. இருக்கிறேன் என்ற மட்டும் தான் ஊர்ஜிதமாகத் தெரிந்தது.
என்னைச்சுற்றி வெறும் நீர் தானிருந்தது. அது போதுமானதாகத் தோன்றியது. இருநூற்றைம்பது ஆண்டுகளில் முயங்க எனக்கு நீர் போதுமானதாக இருப்பது எங்ஙனம்? நான் என்னவாகிவிட்டேன்? நீரையே கட்டியணைத்து வெறித்தனமாக முயங்கினேன். உடல் இறுக, உச்சம் தொட, நீருடன் முயங்கி உயிர்ச்சத்தை நீருக்குள் பீய்ச்சினேன். அது நீருக்குள் நுழைந்து நீர் கருவுற்றது. கரு பிண்டமானது. பிண்டம் நீராலாகியிருந்தது. நீரே பிண்டம். பிண்டமே நீர்.
பிண்டத்தை கையில் ஏந்தினேன். பிண்டம் நீர் போலவே இருந்தது. ஒருவேளை நீர் தானோ? நீரைத்தான் பிண்டம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறேனோ? என் கையிலிருந்த நீர் மூழுக்க நீராக இல்லை. முதலில் அது கையே இல்லை. அதில் இருந்ததுவும் ஒரு விதமாக வழவழப்பாக இருந்தது. நீர் எப்படி வழவழப்பாக இருக்கும்? வழவழப்பாக இருப்பின் அது எப்படி நீராக இருக்க முடியும்? நீரின் தன்மைகளைத்தானே கொண்டிருக்க முடியும்?
நான் கண்களை உருட்டி இருட்டில் பார்த்தேன். இருட்டு தான் தெரிந்தது. ஒருவேளை என் கண்களில் பார்வை போய்விட்டதோ? அப்படிக் கூட இருக்கலாம். பிண்டத்தை பரபரவென நீருக்குள்ளாகவே பிய்த்துப்போட்டேன். சிறிது நேரத்துக்குப்பிறகு மீண்டும் தட்டுப்பட்டது. நான் அப்படியே விட்டுவிட்டேன். பின் எனக்கு உறக்கம் வந்தது. மெல்ல மெல்ல நினைவு தப்பியது. அது கனவாக இருக்க வேண்டும் என்று மனதார விரும்பினேன்.
எனக்கு நினைவு தப்பியபோது பூகம்பத்தில் சிக்கி இரண்டு பாறைகளுக்கிடையில் அகப்பட்டவன் போல் உணர்ந்தேன். நீர் முழுவதும் ஐஸ்கட்டியாக மாறிவிட்டால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது. மிதமிஞ்சி குளிர்ச்சியாக இருந்தது. அதீத குளிரில் சுரணையே இல்லை. ஒருவேளை நானே இல்லையோ என்னவோ? அந்த விதமான குளிர்ச்சியை ஒருமுறை பூமியிலிருந்து சந்திரன் செல்லும் விண்வெளிப்பயணத்தின் போது உணர்ந்திருந்தது என் உடலின் நினைவடுக்குகளில் பொதிந்திருந்தது. அந்த இன்பச் சுற்றுலா சுமார் இருநூறு வருடங்களுக்கு முன் நடந்த ஒன்று. இந்தக் குளிர், அந்தக் குளிரையும் விட அதிகமாக இருந்தது. நான் மீண்டும் நித்திரையில் ஆழ முற்பட்டேன். முன்பொரு காலத்தில் பனியுகம் வந்ததாகப் படித்திருக்கிறேன். பூமி முழுவதும் குளிர்ந்து பல லட்சம் ஆண்டுகளாக வெறும் பனிக்கட்டியாக இருந்ததாம். அது போலொரு பனியுகம் மீண்டும் வந்துவிட்டதைப் போலிருந்தது. அது உண்மை தான் எனில், பனியுகம் அப்படியே நீடித்து விடப் போவதில்லை என்பது தீர்மானமாகத் தெரிந்தது. இயற்கையில் நேர் கோடுகளுக்கு எப்போதுமே இடமில்லை.
ஒன்று மட்டும் தீர்மானமாகத் தெரிந்தது. எனக்குப் பார்வை போய்விட்டது. கிளையாகிவிட்ட கைகளால் என் முகத்தில் துழாவிப் பார்த்தேன். எத்தனை மென்மையான உடல் உறுப்பு அது. ஆனால், அது இப்போது மென்மையாக இல்லை. கல் போன்று ஆனால், ஜில்லென்று இருந்தது. கண் என்றால் அப்படியா இருக்கும்? எனக்கு நினைவு தெரிந்து அப்படி இல்லை. எத்தனை நேரம் பார்வையற்று இருந்தேன் என்று தெரியவில்லை. என் அனுமானம் சரியாகத்தான் இருக்க வேண்டும். பனிப்பாறைகளினிடையே சிக்கிக் கொண்டு விட்டேன்.
துரதிருஷ்டவசம் என்னவெனில், மனிதனாக இருந்த நான், பாதி உடலைத் தாவரமாக்கினேன். பின் நீராக்கினேன். அதன் பின் நீரில் நீரால் ஒரு பிண்டத்தை உருவாக்கினேன். அந்த நீரோடு சேர்ந்து நானும் குளிர்ந்து பனிப்பாறையாகிவிட்டோம்.
இதிலிருந்து எப்படி மீள்வது? மீண்ட பனியுகம் என்றேனும் முடிந்தே ஆக வேண்டும் என்றுதான் தோன்றியது. அந்தக் காலம் வரை ஒரு டார்டிகிரேட் போல நீள் உறக்கத்தில் இருந்துவிட்டால் போதும் என்று தோன்றியது. பூமி மீண்டும் உயிர்களைத் தோற்றுவிக்கத் தயாராகும் வரை நீள் உறக்கத்திலேயே இருந்துவிட்டால் போதும். மரபணு இருக்கிறது. பனிப்பாறைதனில் என் மரபணு உறைந்திருக்கிறது. டார்வின் இருக்கிறான். அது போதும். பனிப்பாறையாக, நீர் குளிர்ந்த பனிப்பாறையாக, நீருக்குள் பொதிக்கப்பட்ட ஆர்கானிக்காக இப்போதைக்கு நீடித்துக் கொண்டிருந்து விட்டால் போதும். எப்போது பூமியில் சாதகமான சீதோஷ்ண நிலை மீண்டாலும் மீண்டும் துளிர் விடும் முனைப்பை மட்டும் கொண்டிருந்தால் போதாதா?. பூமியில் உயிர்கள் முதன் முதலில் ஒரு விண்கல் மூலமாக அப்படித்தான் தோன்றின எனும் போது அந்த மாயாஜாலம் இன்னுமொரு முறை இதே பூமிக்கிரகத்தில் நடந்திடாதா? அந்த நம்பிக்கை எனக்கிருந்தது. கண்களை மூட வேண்டிய தேவைகள் இன்றி, பனிப்பாறைகளினிடையில் நீள் உறக்கத்தில் ஆழ்ந்தேன்.
எத்தனை காலம் இப்படி இருந்தேன் என்று நினைவில் இல்லை. நான் கண் விழித்தபோது வானில் எண்ணற்ற நிலாக்கள் தோன்றின. நான் சரியாகத்தான் பார்க்கிறேனா என்பது ஊர்ஜிதமாகத் தெரியவில்லை. என் கை, கால்களை நகர்த்த முடியவில்லை. ஒரு வேளை கை கால்களே இல்லையோ என்று கூட தோன்றியது. உற்று கவனித்தபோது ஒரு மரத்தைப் பார்த்தேன். அதன் கிளைகளெங்கும் வெறும் கண்களாக இருந்தன. வெறும் மனிதக் கண்கள். மனிதக் கண்களே செடிகளாக, பூக்களாக, இலைகளாக, காய்களாக, கனிகளாக இருந்தன.
நீள் உறக்கத்தில் ஆழும் முன் நடந்தவைகள் அரைகுறையாக எனக்கு நினைவுக்கு வந்தன. முதலில் பரிபோனது என் பார்வைதான். பின் நீராகினேன். அதன் பின், குளிர்ந்து பனிக்கட்டியாகிப்போனேன். அதன் பின், விண்வெளிப் பயணத்திலிருப்பது போலொரு உணர்வு. அதன் பின் பனியுகத்தில் ஆழ்ந்த உணர்வு. அப்படியானால், பூமி அழிந்துவிட்டதா? எப்படி ஊர்ஜிதம் செய்வது? என்னால் என் உடல் உறுப்புகளை நகர்த்த முடியவில்லை. உடல் உறுப்புகள் இருக்கும் உணர்வே கூட இல்லை.
பனியுகம் துவங்கும் முன் பாதி மனிதனாகவும், மீதி தாவரமாகவும் இருந்தேன். இப்போது எனக்கு கண்கள் இருக்கின்றன. அதில் பார்வையும் இருக்கிறது. ஆனால், பார்வை மட்டும் தான் இருக்கிறது. முழுவதும் கண்களாகவே இருக்கிறேன். இது வினோதமாக இருக்கிறது. இங்கே டார்வின் வினோதமாக இருக்கிறான். அப்படியானால், இது வேறு கிரகமாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால், பூமி அழிந்துவிட்டதா?. பல கோடி துண்டுகளாக சிதறிவிட்டதா?. அந்தத் துண்டுகளில் ஒன்று பிரபஞ்ச வெளியில் வழுக்கி வேறொரு புதிய உலகம் அடைந்துவிட்டதா?. அந்த விண்கல் மூலம் என் விழிகள் மட்டும் தாவர இயல்புகளோடு பிறழ்ந்து இந்தப் புதிய உலகை அடைந்து விட்டதா? முதன் முதலில் இது போலொரு விண்கல் மூலமாக உயிர் பூமியை வந்தடைந்தது போல. ஒரே ஒரு வித்தியாசம் தான்.
இந்த கிரகத்தில் டார்வின் வெகு வினோதமாக இருக்கிறான். என் கண்களை மட்டும் தாவர அம்சங்களுடன் பிறழ்ந்திருக்கிறது இந்தப் புதிய உலகம். எனக்கு கண்கள் இருக்கின்றன. ஆனால் கண்களே உடலாகவும், கிரகமாகவும் இருப்பது தான் வினோதமாக இருக்கிறது. என் கண்களே இப்படி என்றால், என் இதர உடல் உறுப்புகள் எந்தெந்த உலகங்களில் என்னென்னவாக இருக்கின்றனவோ?
நான் சற்று யோசித்துப் பார்க்கிறேன். மரபணுக்கள் பிறழ்வது குறித்து நான் பூமியில் இருந்தபோது படித்திருக்கிறேன். ஆனால் ஒரு சில குணாதிசயங்கள் மாறித்தான் கேள்வியுற்றிருக்கிறேன். பார்த்திருக்கிறேன். ஆனால், இந்தப் புதிய உலகில் பிறழ்வு அப்படி இல்லை. இது இந்தப் பிரபஞ்சம் குறித்தும், அதன் விஸ்தீரணம் குறித்தும் என்னை ஆச்சர்யத்துடன் சிந்திக்க வைக்கிறது. ஒரு வேளை, பூமிக்கு வர நேர்ந்த அந்த முதல் விண்கல் இந்த கிரகத்திற்கு முதலில் வந்து பின் இங்கிருந்து பூமிக்கு சென்றிருப்பின் என்னாகியிருக்கும்? கண்களே உலகமாகப் பார்த்த எனக்கு, பூமியில் மனித உடல்கள் கேளிக்கையான ஒன்றாக, வினோதமான ஒன்றாக இருந்திருக்குமோ? இந்தப் புதிய உலகில் நான் எப்போதும் எல்லாவற்றையும் பார்த்தபடியே இருக்கிறேன். ஒற்றை நிலாவா, கோடிக்கணக்கான நிலாக்களா என்பது குழப்பமாக இருக்கிறது. ஆனால், அது என் குழப்பம் மட்டும் தான். என் போன்ற கோடிக்கணக்கான கண்களின் கூட்டு குழப்பம் தான். நாட்கள் செல்லச்செல்ல நாங்கள், அதாவது கண்கள் காட்சிகளை இந்தப் புதிய உலகின் நிமித்தம் மாற்றிக் கொள்ளக் கூடும். இந்தப் புதிய இயற்கையுடன் இணைந்து சும்மா வெறுமனே பார்த்தபடியே இருக்க இந்தக் கண்கள் பழகி விடக் கூடும். எனது கைகள், கால்கள், இதர உறுப்புகள் வெவ்வேறு உலகங்களில் வெவ்வேறு விதமாக பிறழ்ந்திருக்கக் கூடும். எப்படிப் பிறழ்ந்தாலும், அந்த எல்லா உலகிலும், அந்த உறுப்புகள் அந்த புதிய உலகின் நிமித்தம் தங்களை தகவமையச் செய்திருக்கக்கூடும்.
ஆனால், பூமியில், மனித உயிர்களின் நிமித்தம் இயற்கையை வளைப்பது நடந்தது. அப்படித்தான் பூமியில் இயற்கையின் இருப்பு, வாழ்வாதாரம் குலைந்தது. உடல் உறுப்புகள் குலைந்தபோது, செயற்கை உறுப்புகள் செய்து கொண்டார்கள் மனிதர்கள். செய்து கொண்டு மீண்டும் தங்களின் நிமித்தமே பூமியின் இயற்கையைத் துய்த்தார்கள். அதற்கு நான் மட்டுமே ஆதாரமாக எஞ்சியிருக்கிறேன். இதையெல்லாம் கூட்டாக யோசிக்குங்கால், எனக்கு ஒன்று புரிகிறது. ஒரு கிரகத்தில் மரபணுப் பிறழ்வுகள் எவ்விதம் நடக்கின்றன என்பது அந்தக் கிரகத்தின் தலையெழுத்தையே நிர்ணயிப்பதாகத்தான் அமைகிறது. ஒவ்வொரு மனித உடலுமே பூமியின் மூச்சை நிறுத்திவிடக்கூடிய ஒரு பிறழ்வுதான். ஆனால், இந்த பூமி, பூமியின் இயற்கை தனது மூச்சையே நிறுத்தி விடக் கூடிய பிறழ்வைத்தான் மனித மரபணுக்களுக்கு தந்து கொண்டிருக்கிறோம் என்பதை துவக்கம் முதலே அறிந்தே தான் இருந்திருக்கிறது. ஆயினும் அந்தப் பிறழ்வுகளை அது தொடர்ந்து அனுமதித்தும் தான் இருந்திருக்கிறது. தன் வயிற்றில் எட்டி உதைக்கும் சிசுவைப் போதரவாகக் காப்பாற்றிப் பிரசவித்து உயிர் தரும் தாய் போல.
ஆனால் இப்போது அந்த மகோன்னத கிரகம் இல்லை. இனி அது போல் ஒரு கிரகம் கிடைக்குமா தெரியவில்லை. ஒரு மகோன்னத கிரகத்திற்குத் தகுதியில்லாத மனித இனம் தன் பொருட்டு இயற்கையை அழித்தபோது, துவக்கத்தில் அந்த இயற்கை ஏனைய உயிர்களைத்தான் ஒவ்வொன்றாக பலி கொடுத்து. இப்படியெல்லாம் யோசிக்கையில், பூமி மனித இனத்தை தன் செல்லப்பிள்ளையாகவே துவக்கத்திலிருந்தே நடத்தியிருக்கிறது என்று தான் தோன்றுகிறது. மாறாக, தாயின் வயிற்றை கிழித்து வெளியேறும் சிசுவைப் போல் மனித இனம் பூமிக்கிரகத்தையே தன் பொருட்டு சாகடித்திருக்கிறது என்பதை உணர்கையில் ஆற்றாமை மிகுத்தது எனக்கு.
நான் அண்ணாந்து வானத்தைப் பார்த்தேன். வானம் பல கோடி வானமாகத் தெரிந்தது. நான் அதையே வெறித்தேன். இந்தக் கிரகத்தில் இருந்துகொண்டு என்னால் அதை மட்டும் தான் செய்ய இயலும். மனிதன் என்கிற மாபெரும் சல்லிப்பயலுக்கு அது போதும் என்று தான் தோன்றியது.